வருகை, கடிதம்.
அன்புள்ள
ஜெ
,
ஒரு வருடத்திற்கு மேலாக உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். இவ்வருட விஷ்ணுபுர விழாவில் அனேகமாக அதற்கான வாய்ப்புகள் அமையும் என்ற எண்ணம் சற்று ஆறுதலாக உள்ளது. எனக்கு 18 வயது, நான் பங்குக்கொள்ளும் முதல் விஷ்ணுபுர விழாவும் இதுவே.
தினமும் எப்படியாவது உங்களைப்பற்றிய, உங்கள் படைப்புகளைப் பற்றிய பேச்சு தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும், நீங்கள் எழுதிய கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல், வெண்முரசு போன்ற பெரும் படைப்புகளை வாசிக்காதவன் நான். விஷ்ணுபுரம், காடு, கடல், இரவு, அறம் மட்டும்தான் இதுவரை நான் வாசித்தவை, நிறைய கட்டுரைகளை உங்கள் இணையத்தில் தினமும் வாசித்து வருகிறேன். சமீபத்தில் திசைகளின் நடுவே, குமரித்துறைவி நூல்களை வாங்கினேன்.
நண்பரும் நானும் டிசம்பர் குளிரில் பின் தொடரும் நிழலின் குரலை ஒன்றாக வாசிக்க முடிவெடுத்துள்ளோம். அதைத் தொடர்ந்து ஜனவரியில் நான் மட்டும் வெண்முரசை ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசைப் பற்றிய வாசகர் கடிதங்களே மிகப்பெரிய பிரமிப்பையும், தீராக்கனவையும் என்னுள் உருவாக்குகின்றன. எப்படியாவது அனைத்து நூல்களையும் வாங்கி படிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் உள்ளேன், இணையத்திலோ kindle-இலோ படிப்பது எனக்கு பெரிதாக உவப்பளிக்கும் காரியம் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன், வெண்முரசை வாங்குவதற்கு ஒரு திட்டம் பகுத்தேன். பணம் நிறைய தேவைப்படும் என்பதால் ஒரு பகுதி நேர வேலைக்கு செல்ல முன்னரே தீர்மானித்தேன், அது கிடைத்தும் விட்டது. இப்பொழுது வாங்குவது மட்டுமே மிச்சம்.
காவியம் நாவலின் அச்சு வடிவத்திற்கும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன்,
இன்சொல்.
அன்புள்ள இன்சொல்,
உங்களைப் போன்று மிக இளம் வயதிலேயே தீவிரத்துடன் கிளம்பி வருபவர்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை எனக்கு காட்டுகிறார்கள். நான் பேச விரும்புவது முதன்மையாக அவர்களுடனேயே. அநேக ஒவ்வொரு நாளும் அவ்வாறு ஒரு வாசகரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் ஒருவரும் எனக்கு மிக இனியவர்களே.
இன்று நம்மைச் சூழ்ந்து கொள்ளும் ஊடகப் பெருக்கத்தால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு, தூசுப்பரப்பாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் கூர்ந்த நீண்ட வாசிப்பை நாடுபவர்கள் மிக அரிதாகவே உள்ளனர். அந்த அரியவர்களே நம்முடைய இலக்கு .அவர்களே இணைத்துக் கொண்டு என் கனவுகளை நான் முன்னெடுக்க முடியும்
விழாவுக்கு வாருங்கள். நம் சந்திப்போம்.
ஜெயமோகன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

