பட்டம் , கடிதம்.
அன்பு நண்பர் ஜெ,
வணக்கம்.
தொடர்ச்சிியான பயணங்கள், தொடர்ந்த செயற்பாடுகள், தொடரும் எழுத்து மற்றும் உரைகள் என நீங்கள் ஊக்கமாக இயங்கிக் கொண்டேயிருப்பதையிட்டு நிறைவும் மகிழ்ச்சியும். நம் தலைமுறையில் நானறிந்து இத்தனை ஊக்கமுடன் இயங்குவோர் குறைவு. தங்களுடைய தொழில்துறையில் அப்படி இயங்குவோர் உண்டு. அவர்களுடைய உலகம் வரையறைப்பட்டது என உணர்கிறேன். அது அவர்களுக்குப் பேருலாகமாக இருக்கலாம். அப்படி அவர்களால் உணரப்படலாம். ஆனால், நீங்கள் அதற்கப்பால் பன்முகத்தன்மையில் இயங்கும் – முன்னகரும் ஆளுமை. என் நண்பர்களிடத்திலும் நான் கலந்து கொள்ளும் இலக்கிய நிகழ்வுகளிலும் உங்களுடைய இந்தப் பன்முக இயக்கத்தையும் அதில் நீங்கள் அடைந்தும் மீறியும் செல்லும் நிலைகளையும் சொல்லியும் பேசியும் வருகிறேன். எழுதியும் உள்ளேன்.
இப்போது தட்சசிலா பல்கலைக்கழகத்தினால் ‘மதிப்புறு முனைவர்‘ பட்டம் உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. முழுத்தகுதியும் சிறப்பும் கொண்டவர் நீங்கள். உங்களுடைய உரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல, நவீனத் தமிழ் இலக்கிய மரபுக்கு கிடைத்திருக்கும் ஒரு ஆரம்பமாகவும் அடையாளமாகவும் இந்த மதிப்புறு பட்டம் அமைந்துள்ளது என்பது உண்மையே. இதை ஆழ்ந்து கவனிக்கும்போது, நீங்கள் எப்படி இந்தப் பட்டத்தை ஏற்பதற்கு எப்படி ஆழமாக யோசித்தீர்களோ, அந்தளவுக்கு பல்கலைக்கழகத்தினரும் இதைக்குறித்து ஆழ்ந்து சிந்தித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். உங்களுடைய எழுத்துகளின் வாசகரான திரு தனசேகரன், தக்ஷசிலா பல்கலையின் தாளாளர் என்ற அடிப்படையில் இதற்கு முன்யோசனைகளை வைத்திருந்தாலும் பல்கலைக்கழகம் ஒரு உயர் கல்வித்துறை நிறுவனம் என்ற வகையில் ஆழமாகவே சிந்தித்திருக்கும். இன்னும் சற்று அழுத்திச் சொல்வதாக இருந்தால், அடிப்படையில் தனசேகரன் உங்கள் வாசகர் என்பதால், தவறுகளோ, மதிப்பிறக்கமோ உங்களுக்கும் தங்கள் பல்கலைக்கழகத்துக்கும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் உங்கள் கவனம் கொண்டிருப்பார் – கொண்டிருப்பார்கள் என எண்ணுகிறேன். இதை அவர்கள் அந்த நிகழ்வில் இணைத்துக் கொண்ட ஏனைய ஆளுமைகளான லெய்மா போவே (Leymah Gbowee), பி.டி உஷா ஆகியோரின் தெரிவிலிருந்தும் புரிந்து கொள்ள முடியும்.
எண்ணங்கள் சிறப்பான செயலூக்கமாக அமைவதன் அடையாளம் இது. நிறைந்த மகிழ்ச்சி. நிறைந்த அன்பு. பெரும் பெருமை.
குறிப்பு – தந்தையார் பாகுலேயன்பிள்ளையைப் பற்றிச் சிறிய புன்னகை உணர்வோடு நீங்கள் குறிப்பிட்டது நெகிழ்வை உண்டாக்கியது. அதில் இருந்த மெல்லிய நகைச்சுவைக்கு அப்பால் திரண்டிருந்த உணர்வு பெரிது. அது வேறான ஒன்று. இந்தக் கணத்தில் கொண்ட அந்த எண்ணங்கள்… என் தந்தையாரை நினைவில் எழுப்புகின்றன. அவர்களுடைய கனவுகளுக்கு மறுதிசையில் சென்றவர்கள் நாங்கள் என்பதாலா அல்லது அவர் உங்களை இந்த உயரத்தில் பார்த்து உவகை பெறுவார் என்ற நிறைவினாலா?
எங்கள் குடும்பத்தின் அன்பும் மகிழ்ச்சியும்.
அருண்மொழியையும் குழந்தைகளையும் (இன்னும் நமக்கு அவர்கள் குழந்தைகள்தான்) அப்போடு கேட்டதாகச் சொல்லுங்கள்.
நிறைந்த அன்புடன்,
கருணாகரன்
அன்புள்ள கருணாகரன்,
இன்று காலை தற்செயலாக உங்களை எண்ணிக்கொண்டேன், தமிழ்விக்கி பதிவுகளை திருத்தும்போது. உங்கள் கடிதம் மகிழ்ச்சி அளிக்கிறது.
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
என் செயல்பாடுகளுக்கான அடிப்படை ஊக்கம் என்பது அதை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன், என் வெற்றியும் நிறைவும் அதிலுள்ளது என்பதுதான். ஏற்புகள் என்பவை மேலும் செயல்படுவதற்கான துணைச்சக்திகள். இந்தப் பட்டமும் அவ்வாறே.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

