காதலின் மழை
A Season of Good Rain அழகான காதல் திரைப்படம்.

வசந்தகாலத்தில் உரிய நேரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உள்ளது. அதனைத் தனது கவிதையிலும் கவிஞர் து ஃபூ குறிப்பிடுகிறார். ஒரு ஆணும் பெண்ணும் எப்போது, எங்குச் சந்திக்கிறார்கள் என்பது காதலில் முக்கியம் என்பதையே படம் விவரிக்கிறது.
கொரிய இளைஞரான டோங்-ஹா ஒரு கட்டிடக் கலைஞர். சீனாவில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு தனது நிறுவனம் சார்பாகச் செங்டு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டங்களை மேற்பார்வையிட வருகிறார். இவரது சீனப்பயணத்தில் தான் படம் துவங்குகிறது.

செங்டு நகரில் கவிஞர் து ஃபூவின் நினைவிடம் மற்றும் பூங்கா உள்ளது. அதன் வழிகாட்டியாக உள்ள இளம்பெண் மேயை தற்செயலாகச் சந்திக்கிறார்.
மே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவள். அந்த நாட்களில் அவர்களுக்குள் காதலிருந்தது. படிப்பை முடித்தபின்பு டோங் ஹா அவளைச் பிரிந்துவிடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகத் தனது பழைய தோழியைச் சந்திக்கும் டோங் ஹா தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் மே தன்னை விரும்புகிறாளா என அவருக்குச் சந்தேகம் உள்ளது. அவளுக்கோ டோங் ஹாவிற்குத் திருமணமாகிவிட்டதா இல்லையா என்ற சந்தேகம். அவர்கள் ஒன்றாகப் படித்த நாட்களைப் பற்றி உரையாடுகிறார்கள். தான் ஆசையாகப் பரிசளித்த சைக்கிளை அவள் என்ன செய்தாள் என்று டோங் கேட்கிறார். அதை விற்றுவிட்டதாக மே சொல்கிறாள். அதனைக் கேட்டு டோங் வருத்தமடைகிறார்.
சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக உள்ள மேயின் வாழ்க்கை டோங்கின் வருகையால் திசைமாறுகிறது. விடுமுறை எடுத்துக் கொண்டு அவருடன் மகிழ்ச்சியாகச் சுற்றுகிறாள். மேயின் இந்த மாற்றம் நினைவக ஊழியர்களை வியப்படை வைக்கிறது.

படிக்கும் காலத்தில் டோங் ஹா கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். து ஃபூ நினைவிடத்தில் அந்த ஆர்வம் மீண்டும் துளிர்விடுகிறது. தனது பழைய காதலைப் புதுப்பித்துக் கொள்ளவும் மேயின் இப்போதைய மனநிலையை அறிந்து கொள்ளவும் டோங் ஹா முயலுகிறார்.
அவர்களின் சந்திப்பும் அதில் நடைபெறும் சுவாரஸ்ய நிகழ்வுகளும் மிகவும் அழகாகப் படமாக்கபட்டுள்ளன. கடந்தகாலத்தை மறந்துவிட்டதைப் போல மே நடிக்கிறாள். ஆனால் டோங் ஹா தனது பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு கல்லூரி நாட்களில் எடுத்த புகைப்படங்களைப் பெறுகிறார். இனிமையான அந்த நாட்களின் சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
வசந்தகால மழையைப் போல அவர்களுக்குள் காதல் துளிர்க்க ஆரம்பிக்கிறது. ஆனால் மே ஏதோ ஒரு மனத்தடை கொண்டிருப்பதை டோங் ஹா உணருகிறார். முடிவில் அந்த உண்மையை அறிந்து கொள்ளும் போது அதிர்ச்சியடைகிறார். பிரிந்த காதலர்கள் மறுபடியும் சந்தித்துப் பழகி நெருக்கமாகும் பழைய காதல்கதை என்றாலும் நிஜமான உணர்வுகளுடன் நிஜமான உரையாடல்களுடன் படம் சிறப்பாக உருவாக்கபட்டிருக்கிறது

விமான நிலையத்தில் டோங் ஹாவை வழியனுப்ப வந்த மே இன்னும் ஒரு நாள் தங்கிப்போகலாம் என்று சொன்னவுடன் டோங் மகிழ்ச்சியோடு திரும்பி வருவதும் அதனைத் தொடர்ந்த அவர்களின் உரையாடலும் நிஜமான காதலின் வெளிப்பாடாகவுள்ளன
அது போலவே பனிக்கரடியின் விளையாட்டுத் தனத்தைக் காணும் காட்சியும், இரவு உணவிற்குப் பிறகு நடனமாடுவதும், சாலையில் நடந்து வீடு திரும்பும் போது மே நடந்து கொள்ளும் விதமும் ரசிக்கத்தக்கவை. காற்றில் பறக்கவிரும்பும் மலரைப் போலவே மே நடந்து கொள்கிறாள். மழையை எதிர்கொள்ளும் நிலத்தைப் போலிருக்கிறான் டோங்.
படத்தில் டோங் ஹாவின் காதலும் து ஃபூ வின் கவிதையும் இணைகின்றன. மூங்கில் காடுகள் நிறைந்த அழகான துஃபுவின் நினைவிடம். அவரது பழைய குடியிருப்பு.அருங்காட்சியகம் எனச் சீன அரசு கவிஞரை எப்படிக் கொண்டாடுகிறது என்பதையும் படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஹர் ஜின்-ஹோ இயக்கியுள்ள இப்படம் 2009ல் வெளியானது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 669 followers
