பனை எழுக விழா- ஸ்டாலின்
மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
பனைத்திருவிழா ஊழியரகத்தில் நடத்த திட்டமிட்ட நாள் தொட்டு உள்ளுற ஒரு உற்சாகமும் பெரும் பொறுப்பும் இருந்து கொண்டே இருந்தது.
குமரப்பா,நேரு,காமராஜர், ஜூனியர் மாட்டின் லூதர் கிங் எல்லோரும் வந்து நின்ற இடத்தில் நாம் உண்மையும் சத்தியமும் மட்டுமே நம்பி செயலாற்றும் பனை சார்ந்த செயல்பாட்டாளர்களை
கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டோம்.அவர்களுக்கு இயன்ற அங்கீகாரம் அளிக்க விருது வடிவம் தேர்ந்தெடுத்தோம்.
பனையையும் பனை சார்ந்த பொருட்களையும் தொடர்ந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக திட்டமிட்டோம். பனை விதை நாற்றுப்பண்ணை உருவாக்கம் மற்றும் பனை கைவினை பொருட்கள் கண்காட்சி முடிவானது.
மூன்று மாதங்களாக ஆற்றிய அத்தனை உழைப்பும் நவம்பர் 4 அன்று கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
அவர்களின் பிரார்த்தனையும் மண்ணில் சாய்ந்த நெடும்பனை ஜெகந்நாதன் ஆசியுடன் அரங்கேறியது.மூன்று அடுக்கு முறைகளில் மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான பனை விதைகளை புதைத்து விதை நாற்றுப்பண்ணை துவங்கினோம். அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்களின் பைபிள் வசனம் தாங்கிய பிரார்த்தனையுடன் எங்கள் எல்லோர் நெஞ்சில் எல்லாம் வடலியாக நிற்கும் பனை தூதுவன் மித்தரனை சுடும் கண்ணீரோடு எண்ணி கொண்டோம்.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், அரவிந்த் கண் மருத்துவமனை துவக்கிய கரங்களில் ஒன்றான
நாச்சியார் அம்மா, 80 வயதை தொட்ட சர்வோதய ஊழியர்கள் (வினோபா,குமரப்பா அவர்களுடன் களத்தில் நின்றவர்கள்), மீண்டும் பழனிதுரை அய்யா, சி. மகேந்திரன் அய்யா
தமிழகத்தின் எல்லா திசைகளிலும் இருந்து வந்து சேர்ந்த
14 பனை செயல்பாட்டாளர்கள் அவர்களின் முன்னோடியான பனை மீட்பர் காட்சன் சாமுவேல் அவர்கள்.
சிவராஜ் அண்ணா,சத்யா அக்கா, பூமி அண்ணா, யுவராஜ் அண்ணா என தியாக துறவிகள் ஒரு புறம் காந்திகிராம் பல்கலைக்கழக துணை வேந்தர் பஞ்சநாதம், வேளாண்துறை சேர்ந்த முக்கிய அதிகாரிகள்,10,000 பனை விதை சேகரித்து அளித்த நண்பர்கள்.
100க்கும் அதிகமான இளையோர்கள்,பொதுமக்கள்,பனைசார்ந்த ஆர்வலர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடி, அந்த
ஊழியரக வளாகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை குறிப்பாக இளையோர் கரங்கொண்டு
நட்டோம்.
பனை செயல்பாட்டாளர்கள் ஒவ்வொருக்கும் விருது தயாரிக்கும் பணி மற்றும் மேடையலங்காரம் அமைக்கும் பணி
ஆனந்த பெருமாள் அண்ணா எடுத்து கொண்டார்கள். மிகுந்த நேர்த்தியும் பனை போலவே கடின சிரத்தையும் கொண்டு விருது தயாராகி வந்ததை நிகழ்வின் முதல் நாள் இரவில் நடுநிசியில் பார்த்தேன், ஒவ்வொரு விருந்தினரை அழைத்து கண்டு திரும்பி வரும் போது அந்த சிறிய தூக்கணா ங்குருவி கூடு எப்படி தயாராகுமோ அப்படி தயார் ஆனது.
விருது பனை மரத்தின் இலை மற்றும் கடினமான தண்டு கொண்டு மிகு மிகு நேர்த்தியும் மெனக்கெடலும் கொண்டு தயாரானது.கூட்டு உழைப்பின் பலனை இந்த நிகழ்வின் வழியாக இன்னும் தீவிரமாக நம்புகிறோம்.
பனை மீட்பர் அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்கள் பனை குறிப்பிட்ட இனத்துக்கோ, மதத்திற்கும் மட்டும் அல்ல மாநிலம் கடந்து,தேசம் கடந்து, கண்டம் கடந்து இந்த உலகத்திற்கு உரியது பனை என்று வெகு தீர்க்கமாக சொன்னார்கள்.அதற்கான தரவுகளையும் முன்வைத்தார்கள் அவர்களின் முப்பது ஆண்டுகால பனை மரம் சார்ந்த தீவிரமான தேடுதல் வழியே
கண் தெரியாத பனையேறி முருகாண்டி ஐயா இராமநாதபுரத்தில் இருந்து மனைவியுடன் வந்திருந்தார்கள். 8வயதில் தன் தாத்தா போல் தானே பனை மரம் ஏற கற்று கொண்டவர்.அதன் பொருட்டு அவர் பெற்ற விழுப்புண்களை காட்டினார். உச்சந்தலையில் நான்கு முறை பெற்ற குளவிக்கடி பெரும் வலி கொண்டது என தன் இயல்பு மாறாத சிரிப்புடன் சொன்னார்.
இன்றும் பனை மரம் ஏற தவிக்கும் அவர் மனதிற்கு இந்த விருதும் அரவணைப்பும் நல்வழி செய்யும்.100 நாள் வேலை காரணமாக ஊரில் இப்போது அதிகமாக பனை மட்டை வெட்ட கூப்பிட மறுக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். பனை ஓலை பொருட்கள் செய்வது குறைந்து போயிற்று என்றார்.
பால்மா மக்கள் கூட்டமைப்பு சார்ந்த பால்ராஜ் சார், தமிழகத்தில் முதல் முறையாக பனம் பழசாறு(பனம் பழ ஸ்குவாஷ்) என்னும் ஆரோக்கிய பானம் உருவாக்கி இருக்கிறார்கள்.அவர்களுடன் தீவிரமாக மக்களிடம் இந்த பொருட்களை கொண்டு சேர்க்கும் ஜேக்கப் சார் மற்றும் இரு நண்பர்கள் வந்து இருந்தனர்.
மார்த்தாண்டத்தில் பால்மா பனை பொருட்கள் பெயரில் இன்னும் அதிக பனை பொருட்கள் தயாரிப்புடன்,வயது முதிர்ந்த பனையேறிகளுக்கு பென்ஷன் அளிப்பது, பனையில் இருந்து தவறி விழுந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குகிறார்கள், பனையேறி அய்யா அவர்கள் எழுதிய பனையோடு உறவாடு நூல் வெளியிட்டு உள்ளார்கள்.
உசிலம்பட்டி அருகே இருந்து தொடர்ந்து செயல்படும் பனையேற்றம் அமைப்பை சேர்ந்த குருவம்மாள் அக்கா அவர்கள் மிக முக்கியமானவர்கள்.பனை சார்ந்த கைவினை பொருட்கள் தாயரிப்பு மற்றும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதனை வழிநடத்தும் சாமிநாதன் அண்ணா மற்றும் இளவேனில் இன்னும் நிறைய இளம் மனங்கள் தீவிரமா செயல் புரிகிறார்கள்.
பனையேறியான விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் பாண்டியன் அவர்கள் தொடர்ந்து பனை சார்ந்த மக்களின் நல்வாழ்வு அடிப்படை உரிமை, பாதுகாப்பு பல வழிகளில் செயல்படுகிறார்கள்.அவரின் குடும்பத்தினருடன் இணைந்து செயல்புரிகிறார்கள், பனையை பாதுகாக்க தொடர் பயணம் செய்து வருகிறார் பெரும் நண்பர்கள் கூட்டத்துடன்.
அனில் குப்தா சாரின் சோத் யாத்திரையின் வழியே நாங்கள் அறிந்த வெங்கட் சார், பனை மரம் ஏறும் கருவியை மிக நேர்த்தியான முறையில் இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கி உள்ளார்.அவரின் மகன் ஶ்ரீவர்தன் தந்தையுடன் இணைந்து இந்த கருவி தயாரிப்பு மட்டும் அல்லாமல் பனை மரம் ஏறியும் காண்பிக்கிறார்.ராஷ்டிரபதி பவனில் தன் தந்தை ஜனாதிபதி கரங்களால் விருது பெற்றதையும் அதன் சாட்சி புகைப்படம் அங்கு இருப்பதையும் பூரித்து சொன்னார்.
வெங்கட் சார் பனை செயல்பட்டாளர் விருதினை கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்கள் கரங்களினால் பெற்ற பிறகு தமிழகத்தில் முதல் முறையாக எனக்கு இப்படி ஒரு அங்கிகாரம் முதல் முறையாக கிடைத்துள்ளது என்று மனம் திறந்து சொன்னார்.
வாணி அக்கா இரவெல்லாம் தூங்காமல் பனை மர ஓலையில் வித விதமாக அலங்காரங்கள் மாலைகள் செய்து கொண்டே இருந்தார்.அக்காவின் உளத்தீவிரம் மற்றும் தொடர் கற்றல் வழியே கடினமான பனை ஓலை கைவினை பொருட்கள் தயாரித்து அவற்றை பாதுகாத்து ஆவணப்படுத்தும் காட்சன் சாமுவேல் பாதரின் பணியை சிரமேற்கொண்டு செயலாற்றி இருக்கிறார்கள்.
இந்த பனைத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் பனை ஓலை கைவினை பொருட்கள் குடுவை, வித விதமான தொப்பிகள், மாலைகள், பாய், கூடை, அலங்கார பெட்டிகள், கிலுகிலுப்பை முக்கிய சாட்சியாக இடம் பெற்று இருந்தது.
ஆனந்த் பெருமாள் அண்ணா ஒரு புறம் முழு மேடை அலங்காரமும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை ஓலை,மட்டை, பனை விதை இவற்றை கொண்டே தயாரித்து இருந்தார். அத்தனை பனை செயல்பாடுகளுக்கும் அளித்த விருது அவரின் கை படவே உருவானது.
பாட்டியின் கரங்களால் ஆனந்த பெருமாள் அண்ணா விருது பெற்ற போது கிரிஜா அக்காவை நன்றியோடு நினைத்து கொண்டேன், ஒவ்வொரு முறையும் பனை சார்ந்த பொருட்களை தேடி சேகரித்து மீள் உருவாக்கம் செய்து வருகிறார்கள்.பீடி சுற்றும் தொழிலாளர்கள் பலரினை பனை சார்ந்த தேர்ந்த கைவினை கலைஞர்களாக மாற்றி உள்ளது இவர்களின் கவின் கலைக்கூடம்.
அரச்சலூர் பூபதி அண்ணா நண்பர்கள் மற்றும் நன்செய் நண்பர்கள் குழுவுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.இணைந்து பணியாற்றுவது போல் நெருக்கடியான ஒன்று இல்லை என்று சிவராஜ் அண்ணா அடிக்கடி சொல்லுவார்.அப்படி ஒன்றை சாத்தியாமாக்கிய இந்த நண்பர்கள் நாளை நிச்சயம் பெரும் சக்தியாக உருவெடுப்பார்கள்.
பதநீர் சேகரிக்கும் குடுவை இன்று தமிழகத்தில் இதனை தயாரிக்க இருக்கும் ஒற்றை நபர் தங்கப்பன் அய்யா தான், அவர் கற்றுக்கொடுத்து பலர் இதனை தற்போது செய்து வருகிறார்கள். 8 வயதில் தன் தாத்தா தனக்கு முதலில் கற்றுக்கொடுத்த இந்த பின்னலை 66 வயதிலும் அதே குழந்தைமை தன்மை மாறாமல் வந்திருந்த இளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்தார்.மார்த்தாண்டத்தில் அய்யா மற்றும் அவரின் மகன் வந்து இருந்தனர்.
ஒரு கோடி பனை விதைப்பை தமிழகம் எங்கும் முன்னெடுத்து நடத்தி செல்லும் கிரீன் நீடா ராஜவேலு அண்ணா விருது பெற்றது பெரும் நிறைவு.பனம் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மிக ருசியான இனிப்பு பானம் (Lemurian foods)
ஒன்றை ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்து சேர்த்த கலை கதிரவன் அவர்கள் இந்த விருது பெற்று கொண்டார்கள்.இளையோர் எல்லோரையும் கவர்ந்திழுத்தது அவரின் இந்த தயாரிப்பு அதன் வடிவமைப்பு.
லாப்டி மற்றும் குக்கூ உறவுகள் எல்லோரும் இரவு பகலாக பணியாற்றினோம். பூமி அண்ணா, சத்யா அக்கா,காந்தி அண்ணா மற்றும் மார்டின் அண்ணா,இளங்கோ அண்ணா,சண்முகம் அண்ணா,மலர் அக்கா, மேலும் குமரன் அண்ணா நண்பர் பிரசாந்த், வாணி அக்கா நண்பர் செந்தில் கார்த்தி இருவர் உழைப்பு ரொம்ப ரொம்ப பெரியது.
வினோபா சீடர் விவேகானந்தன் அய்யா, காந்தியின் சீடர் குமரப்பா இவர்களின் புகைப்படங்களுக்கு தீபம் ஏற்றி தான் முழு நிகழ்வையும் நடத்தினோம்.சிவராஜ் அண்ணா, பாரதி,மோகன் எல்லாம் ஒரு வாரம் அங்கேயே தங்கி இருந்து எல்லாவற்றையும் இணைந்து பணியாற்ற வைத்தனர்.
பிப்ரவரி 12,ஜெகந்நாதன் அய்யாவின் நினைவு நாளான சர்வோதய தினம் அன்று நாம் உருவாக்கிய பனை விதை நாற்றுப்பண்ணையில் இருந்து ஆயிரம் ஆயிரம் நாற்றுகள் உருவாகி இருக்கும், அய்யாவின் ஆன்மா நிம்மதி கொள்ளும்.
இந்த நிகழ்வில் எனக்கும் பனை செயல்பாட்டாளர் விருது அளித்தது எனக்கு பெரும் ஆச்சர்யம் கலந்த சந்தோசம்,இந்த மூத்த ஆன்மாக்களின் ஆசியுடன் நீங்கள் சிவராஜ் அண்ணா காட்சன் சாமுவேல் பாதர் எல்லோரும் காட்டும் இலட்சியப்பாதையில் பாதையில் நிதர்சனத்தில் காலூன்றி நடக்கிறோம்.
நிகழ்வு எல்லாம் முடிந்த பின் விதை நாற்றுப்பண்ணையில் நீர் ஊற்றி விட்டு வரும் போது அங்கு இருந்த வளர்ந்த பனை மரங்கள் எல்லாவற்றையும் பார்த்தேன்,நிச்சயம் இது குமரப்பா,நேரு,காமராஜர்,கைத்தான்,ஜெகநாதன் அய்யா எல்லாம் விதையிட்டு அல்லது தொட்டு வளர்ந்த மரமாக இருக்கும்,காலையில் பனை விதைகளை நடும் போது அரவிந்த் மருத்துவமனையின் நிறுவனர் அவர்களின் தங்கை நாச்சியார் அம்மா சொன்னாங்க ,இந்த விதை எல்லாம் மரமாவதை நாங்கள் வானத்தில் இருந்து பார்ப்போம் என்று சிரித்து கொண்டே சொன்னார்கள்.
நிகழ்வின் மறுநாள் காலை அறக்கல்வி மாணவர்கள் சத்யா அக்காவுடன் இணைந்து பனை விதை நடவு ஊழியரகத்தில் மேற்கொண்டார்கள்,பனை எழுக என்று மனத்திற்குள் தீர்க்கமாக சொல்லி கொண்டேன்.
புகைப்படங்கள் : மோகன்
என்றும் உண்மையுடன்,
ஸ்டாலின்,குக்கூ காட்டுப்பள்ளி .
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

