செயற்கைநுண்ணறிவு தெய்வ உருவங்களை வழிபடலாமா?

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,  

வணக்கம்.

சமீபத்தில் ஹிந்து தமிழ் பத்திரிக்கையில் AI படங்களை ஆன்மீக கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதே போல் மக்களும் வீட்டில் மற்றும் whatsapp போன்றவற்றில் AI தெய்வ படங்களை பயன்படுத்துகிறார்கள். சில படங்களை இணைத்துள்ளேன். 

ஆன்மீக விஷயங்கள் தெரிந்தவர்களுக்கு இது சரியான தெய்வ உருவங்கள் இல்லை என்பது தெரியும். பொது மக்களும் , இளைய தலைமுறையினரும் இவைகள் தான் சரியான தெய்வ உருவங்கள் என்று நம்பி கொண்டிருப்பார்கள். 

இதை பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.  

நன்றி.

இப்படிக்கு,

ராஜாராம், 

கோவை.

அன்பிள்ள ராஜாராம்,

இதே கேள்வி முன்பு காலண்டர்கள் வெளியான போது உருவாகியிருக்கிறது. ராஜா ரவிவர்மாதான் முதன்முதலாக தெய்வ உருவங்களை அன்றைய பாணியில் தைலவண்ண ஓவியங்களாக வரைந்தவர். அந்த ஓவியங்களுக்கு அவர் நம் சிற்ப மரபையோ அல்லது ஓவிய மரபையோ முன்னுதாரணமாகக் கொள்ளவில்லை. மாறாக உயிருள்ள மனிதர்களை ‘மாடல்களாக’ கொண்டார். பெரும்பாலும் அரண்மனைப்பெண்டிரே லட்சுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களுக்கான மாதிரிகள். (அதிலும் ஒரே பெண் தமயந்தி, பாஞ்சாலி, லட்சுமி, சரஸ்வதி என எல்லா முகங்களாகவும் மாறியிருப்பது தெரியும்).

அத்துடன் உடைகள், தோற்றம் ஆகியவற்றை அவர் அன்று புகழ்பெற்றிருந்த பார்ஸி நாடகத்தில் இருந்து எடுத்துக்கொண்டார். லட்சுமியும் சரஸ்வதியும் நான்கு கைகள் கொண்டிருந்தாலும் நன்கு தைக்கப்பட்ட ஜாக்கெட் போட்டிருந்ததும், புடவை சுற்றியிருந்ததும் அதனால்தான். பின்புலச்சூழல் பெரும்பாலும் பார்சி நாடகங்களின் திரைச்சீலைகளைப் போலவே இருந்தது.

ரவிவர்மா ஆப்டோன் அச்சகம் ஒன்றை மும்பையில் நிறுவி, அந்த ஓவியங்களை காலண்டர்களாக அச்சிட்டு விற்கத் தொடங்கினார். விளைவாக இல்லங்களில் அப்படங்களை வாங்கி வைத்து வழிபடத் தொடங்கினார்கள். இந்தியா முழுக்க அந்த அலை பரவியது. தொடர்ந்து பல அச்சகங்கள் ஓவியர்களை வைத்து தெய்வங்களை வரைந்து அச்சிட்டு விற்க ஆரம்பித்தனர்.தமிழ்நாட்டில் சிவகாசியில் அச்சகங்கள் உருவாயின, நாம் இன்று பூஜையறையில் வைத்திருக்கும் பல ஓவியங்கள் (குறிப்பாக கைகூப்பும் முருகன்) ஓவியர் கொண்டையராஜூ வரைந்தவை.

உண்மையில் இந்தியாவில் வீட்டில் படங்களை வைத்து வழிபடும் பொது மரபே கிடையாது. வீட்டில் தெய்வங்களை வைத்து வழிபடுவது குருவிடமிருந்து தெய்வத்தையும் உபதேசத்தையும் பெற்றுக்கொண்ட சிலருக்கு மட்டுமே உரியதாக, ஒருவகையில் தனிப்பட்ட வழிபாடாகவே இருந்தது. உதாரணமாக, ஶ்ரீவித்யா உபாசனை செய்பவர்கள் அதற்கான இயந்திரங்களை இல்லத்தில் வழிபட்டார்கள். சாலகிராமங்கள் சிலரால் வழிபடப்பட்டன. சிவதீட்சை எடுத்துக்கொண்டவர்கள் சிவலிங்கங்களை வழிபட்டனர். சில இல்லங்களில் குடும்பதெய்வங்கள் இருந்தன. அவற்றுக்கு குறிப்பிட்ட நாட்களில் பூஜை செய்தனர். ஆனால் வீட்டிலேயே பூஜையறை இருப்பதும், படங்களை வைத்து பூஜைகள் செய்வதும் முன்பிருந்ததில்லை.

அந்தப் புதுப்பழக்கம் உருவானதும் மதஆசிரியர்கள் அதை கண்டித்தனர். பின்னர் நெறிப்படுத்த முயன்றனர். அச்சிட்ட ஓவியங்களை வழிபடக்கூடாது என்ற கடுமையான கண்டனம் வந்தது. பின்னர் குறிப்பிட்ட சில இலக்கணங்களுடன் இருந்தால் வழிபடலாம் என்னும் வழிகாட்டுதல் உருவானது. காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி திரும்பத் திரும்ப இதை விளக்கியிருக்கிறார். அவர் கூற்றுப்படி, தெய்வங்களுக்குரிய அடையாளங்கள் கொண்ட படங்களை இயல்பாக வீட்டில் வழிபடலாம்.

அதாவது முருகன் என்றால் வேல், மயில்,சேவல்கொடி அபயக்கரம் இருக்கவேண்டும்.ஆனால் வேலின் நுனி முருகனின் முகத்துக்குக் கீழே இருக்கவேண்டும். அபயக்கரத்துக்கு கீழேதான் ஆயுதம் இருக்கவேண்டும். பள்ளிகொண்ட பெருமாள் என்றால் கண்டிப்பாக தாயார் உடனிருக்கவேண்டும். சிவன் என்றால் சோமாஸ்கந்தராக குடும்பத்துடன் இருக்கலாம். அல்லது பார்வதி, நந்தியுடன் இருக்கலாம். தனியாக சிவன் இருக்கும் யோகசிவனை வீட்டில் வழிபடலாகாது. இப்படி பல நெறிகள். காலப்போக்கில் அவை ஓர் ஒழுங்குக்கு வந்தன.

சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று சந்திரசேகரர் சொல்கிறார். அப்படி வழிபடுவதாக இருந்தால் முறைப்படி அச்சிலை நிறுவப்படவேண்டும். சிலை இருந்தால் அது ஒரு கோயிலாகவே கருதப்படவேண்டும். உறுதியாக இரண்டுவேளை முறையான பூஜையும், நைவேதியமும் செய்யப்பட்டாக வேண்டும். எந்நிலையிலும் இல்லறத்தார் வாழும் இல்லங்களில் சிவலிங்கம் நிறுவப்படக்கூடாது. இப்படிப் பல நெறிகள். (ஆனால் இன்று உணவகங்களில் சிவலிங்கம் நிறுவப்பட்டு பிளாஸ்டிக் மாலைகள் போடப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.)

வழிபாட்டு உருவங்களை ஏன் இப்படி ‘சீரியஸாக’ எடுத்துக் கொள்கிறோம்? அவை கலைதானே? இது ஒரு நல்ல கேள்வி. உண்மையில் ஆயிரமாண்டுகளாகவே இந்த வேறுபாடு நம் மரபில் உள்ளது. தூண்களிலுள்ள சிலைகள் கலைவெளிப்பாடுகள். அவை கதைகளைச் சொல்கின்றன. தத்துவங்களை உணர்த்துகின்றன. ஆனால் வழிபாட்டுருவங்கள் அல்ல. அவற்றில் கலைக்குரிய சுதந்திரம் உள்ளது. பார்வதியுடன் பகடையாடி தோற்று குழம்பி அமர்ந்திருக்கும் சிவனையே நாம் எல்லோராவில் காண்கிறோம். காலண்டர் ஓவியங்களையும், இன்றைய செயற்கை நுண்ணறிவு ஓவியங்களையும் அப்படி பழைய தூண்சிலைகலைப்போல, கலைவெளிப்பாடாக எடுத்துக்கொள்ளலாம்.

கலையை எவரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முயன்றால் கலை ஒட்டுமொத்தமாக அழியும். கலையை எவர் கட்டுப்படுத்துவது, எவருக்கு அதிகாரம் என்னும் கேள்வியும் எழுகிறது. ஆகவே ஏ.ஐ. ஓவியங்கள் இயல்பாக உருவாகி பெருகிக்கொண்டே இருப்பது இன்றைய காலகட்டத்தின் போக்கு என்றே கொள்ளவேண்டும். அதற்கு முன்னரே டிஜிட்டல் ஓவியங்களில் தெய்வங்கள் பலவாறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டன. மிக வண்ணமயமான, மிக நாடகீயமான தெய்வச்சித்தரிப்புகள் அவற்றில் உள்ளன.

இவற்றில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஒன்று உண்டு. சில மேலைநாட்டு ஓவியர்கள் இந்திய – இந்து தெய்வங்களை கொடூரமான தோற்றத்தில் வரைந்து புழக்கத்தில் விட்டுள்ளனர். பிள்ளையார் ஒரு கொடிய மனிதவிலங்குக் கலவையான பேய் போன்று எரியும் கண்களுடன் இருப்பதையும், கிருஷ்ணன் கொலைவெறியுடன் சீறிக்கொண்டிருப்பதையும் சில டிஜிட்டல் ஓவியங்களில் காண்கிறோம். (இந்தப்போக்கு இந்து தெய்வங்களுக்கு மட்டுமே . புத்தரோ மகாவீரரோ அப்படிச் சித்தரிக்கப்படுவதே இல்லை) இந்த ஓவியங்களை வரைபவர்களின் உளநிலையில் மதக்காழ்ப்பும் இனவெறியும் உள்ளன. இவை ஒரு திட்டத்துடன் பரப்பப்படுகின்றன.

நம் பண்பாட்டின் அடிப்படை உருவகங்களைச் சிதைக்கும், எதிர்மறையாக ஆக்கும் பொதுப்போக்கு இன்று ஓங்கியுள்ளது. எந்த நவீனத்துவத்தின் அடிப்படையிலும் அவற்றை நாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளலாகாது. நம் குழந்தைகளுக்கு அவற்றை அறிமுகம் செய்யலாகாது. ஏனென்றால் ஒரு பண்பாட்டின் அடிப்படைகளாகத் திகழ்பவை அதன் உருவகங்களே. அவை நம் பண்பாட்டின் ஆழத்தில் தோன்றி, பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து, நம் கூட்டுநனவிலியில் வாழ்பவை. அவற்றில் இருந்தே நாம் நம் நவீனக்கலையையும் நவீனச்சிந்தனைகளையும் உருவாக்கிக் கொள்கிறோம். அவை அழியுமென்றால் நாம் ஆழம் கலங்கியவர்கள் ஆவோம். நம் கலையும் இலக்கியமும் தத்துவமும் வெறும் நகல்களாக ஆகி அழியும். ஆகவே உருவகங்களைச் சிதைக்கும் முயற்சியை நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. எதிர்க்கவேண்டும் என்று சொல்லமாட்டேன். எதிர்ப்பதில் பொருளில்லை. ஆனால் நாம் அவற்றை எவ்வகையிலும் ஏற்கலாகாது.

ஏ.ஐ.ஓவியங்களை பழைய காலண்டர்களின் இன்றைய வடிவங்களாக ஏற்பதில் பிழையில்லை. அவை கலைவெளிப்பாடுகளாக (போலிக்கலையாக இருந்தாலும்) கொள்ளப்படலாம். அவை காலண்டர் ஓவியங்களுக்குச் சொல்லப்பட்ட அதே  தெய்வங்களுக்குரிய இலக்கணத்துடன் இருக்கும் என்றால் வழிபடுவதிலும் பிழை இல்லை.

வழிபாட்டு ஓவியங்களுக்கு இந்த நெறிகளைச் சொல்லலாம்.

அவை அந்தந்த தெய்வங்களுக்குரிய அடையாளங்கள் கொண்டிருக்கவேண்டும். பெருமாள் என்றால் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றுடன், பீதாம்பரத்துடன், சீதேவி மற்றும் பூதேவி உடனிருக்க, சேஷனின் நிழலில் தோற்றமளிக்கவேண்டும். சிவன் என்றால் மானும் மழுவும் ஏந்தி, பிறையும் கங்கையும் சூடி திகழவேண்டும்.இலக்கண மாறுபாடு இருக்கலாகாது. உதாரணமாக நீலநிற ஆடை அணிந்த பெருமாள் வழிபடப்படக் கூடாது. நீலம் தமோகுணம். சிவப்பு ஆடை அணிந்த பெருமாளும் வழிபாட்டுக்குரிய வடிவம் அல்ல. அது உக்கிரமான ரஜோ குணம். மஞ்சளாடையே பெருமாளுக்குரியது. அந்த இலக்கணங்கள் பேணப்படவேண்டும். அதுவே எல்லா தெய்வங்களுக்கும்.வழிபாட்டு ஓவியங்களிலுள்ள பாவனை முக்கியமானது. அருள்புரியும் பாவனை இருந்தாகவேண்டும். ஆயுதங்கள் அடக்கமானவையாக இருக்கவேண்டும். உக்கிரமான பாவனைகள், விசைகொண்ட நடனநிலை ஆகியவற்றைக் கொண்ட உருவங்கள் வழிபாட்டுக்குரியவை அல்ல.ஓவியங்களை வழிபட இல்லறத்தாரின் அன்றாட வணக்கமுறைகளே போதும். சிலைகள் மட்டுமே இருவேளை பூஜை, நைவேத்தியம் போன்ற முறையான வழிபாட்டுக்குரியவை.

ஜெ

.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2025 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.