அடித்தளத்தை அமைத்துக்கொள்ளுதல்
நலமாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் நடந்த தோல்பாவைக்கூத்து நிகழ்வுக்கு முன் தமிழ் விக்கி பக்கத்தைப் படித்துவிட்டுச் சென்றேன், பார்த்து முடித்ததும் பின்னர் அ.கா.பெருமாள் , அவர் குறிப்புகளின் வழியே படித்து தோல்பாவைக் கூத்து பற்றிய புரிதலை அடைந்தேன். தமிழ் வீக்கி இல்லாமல் சரியாக இந்த நூல்களையும் , ஆளுமைகளையும் சரியாகத் தேடி அடைவது கடினம் என்றே நினைக்கிறேன். என் புரிதலை பின்னால் இரு பதிவுகளில் குறித்திருக்கிறேன். நன்றி.
முத்து,
பெங்களூர்
https://muthuvishwanathan.blogspot.com/2025/09/1.html
https://muthuvishwanathan.blogspot.com/2025/09/2.html
அன்புள்ள முத்து,
இன்று தமிழ் விக்கியின் இடம் என்பது வாசிப்பவர் எவராலும் மறுக்கமுடியாத ஒன்றாக நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. அதற்கு எதிரான கசப்புகள், வசைகள் எல்லாமே பழங்கதைகள். அந்த வகையான கசப்புகள் எழாத எந்த ஒரு பெருஞ்செயலும் இங்கே இதுவரை நிகழ்ந்ததில்லை.
அண்மையில் ஒருவர் அவருடைய தாத்தாகூட ஒரு தமிழறிஞர்தான் என்றும், அவரைப்பற்றிய அதிகாரபூர்வப் பதிவு ‘அரசு கலைக்களஞ்சியத்தில்’ உள்ளது என்றும் சொல்லி அதைக் காட்டினார். அது தமிழ்விக்கி பதிவு. நான் புன்னகைத்ததுடன் சரி.
தமிழ்விக்கியின் பதிவிலுள்ள மூன்று அம்சங்கள்தான் அதன் மதிப்பை உருவாக்குகின்றன.
ஒன்று, அதன் ஆசிரியர்குழு. சோதிக்கப்பட்டு வெளியிடப்படும் செய்திகள் என்னும் நம்பிக்கை. இன்று பிற ஊடகங்களில் செய்திகள் அப்படி சரிபார்க்கப்படுவதில்லை. ஆசிரியர்கள் உள்ள நிறுவனங்களில்கூட பலசமயம் இந்தவகையான செய்திகள் எளிய துணை ஆசிரியர்களின் பொறுப்புகளுக்கு விடப்படுகின்றன. அவை பிற தளங்களில் இருந்து வெட்டி ஒட்டப்படுகின்றன. (இன்று பலர் தமிழ் விக்கியில் இருந்தே எடுக்கிறார்கள்) தமிழ்விக்கி செய்திகள் பெரும்பாலும் நூல்களில் இருந்தே எடுக்கப்படுகின்றன. அந்நூல்களும் இணையநூலக தளங்களில் உள்ளவைதான். அவற்றை வாசித்து எழுதத்தான் ஆளில்லை. எங்கள் பதிவுகளை எழுதுபவர்கள் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள். எவரோ அல்ல. எங்கள் பதிவுகளில் அந்நூல்களுக்கான இணைப்புகளும் இருக்கும்.
இரண்டு, தமிழ்விக்கி பதிவுகளின் கட்டமைப்பு. தெளிவான பகுப்புகளுடன் அமைந்துள்ள அதன் செய்திவரிசைகள். எல்லா கட்டுரைகளுக்கும் ஒரே கட்டமைப்பு இருக்கும். ஆகவே தகவ்ல்களைத் தேடி எடுப்பது மிக எளிது. செய்திகள் பிற செய்திகளுடன் சீராக இணைக்கப்பட்டிருப்பது இன்னொரு வசதி. அந்த இணைப்பு அந்த பேசுபொருளில் தேர்ச்சிகொண்ட ஆய்வாளர்களால் கவனமாகச் செய்யப்படுகிறது. ஒரு வாசகன் ஒரு பதிவில் இருந்து இன்னொன்றுக்குச் சென்றுகொண்டே இருக்கலாம். முழு வரலாற்றையும் அறியலாம். கல்கி என்னும் ஒரு பதிவில் இருந்து நீங்கள் அவர் வரலாற்றை எழுதிய சுந்தா வரை செல்லமுடியும்.
மூன்று, தமிழ்விக்கியின் மதிப்பிடு. இன்று தமிழில் ஒருவரைப் பற்றிய தகவல்களைவிட அவரது பங்களிப்பு என்ன, இடம் என்ன என்று அறிவதே கடினம். அதற்கு எவரிடமும் கேட்கவும் முடியாது. தமிழ்விக்கி எவரையும் நிராகரிப்பதில்லை. ஆனால் மொத்த வரலாற்றில் ஒவ்வொரு ஆளுமையின் பங்களிப்பையும் வகுத்துரைக்கிறது. பிற இடங்களில் அனைவரைப் பற்றியும் ஒரே வகையான பாராட்டுரைகள்தான் கிடைக்கின்றன. இந்தச்சூழலில் கருத்துத்தரப்பு இல்லாத, ஆனால் ஒட்டுமொத்த வரலாற்றுப்பார்வை கொண்ட, ஒரு மதிப்பீடு என்பது அரிதானது.
அண்மையில் ஓர் இலக்கியவிழாவின் ஒருங்கிணைப்பாளர் எங்கள் தளமே எழுத்தாளர்களை கண்டுபிடிக்க உதவுகிறது என்றார். ஏனென்றால் மிகக் கறாரான மதிப்பீடுடன் இங்கே எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். வெறும் புகழ்மொழிகள் இல்லை. அந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே எழுத்தாளர்களை அழைக்க முடியும்.
எங்கள் பதிவுகள் விரிந்துகொண்டே செல்கின்றன. நாட்டாரியல் கலைகள், ஆலயங்கள், இஸ்லாமிய இலக்கியம், தமிழகத்தில் பணியாற்றிய ஐரோப்பியர் ஆகியவற்றைச் சார்ந்து நிறைய பதிவுகள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னும் பலமடங்கு விரிவாக்கமும் செய்யவேண்டியுள்ளது.
இது ஒரு தீராப்பணி. ஒரு கலைக்களஞ்சியம் என்பது ஒரு மொழியும் பண்பாடும் தன் அடித்தளத்தை கட்டி எழுப்பிக்கொள்ளும் செயல்பாடுதான். வலுவான கலைக்களஞ்சியத்தொகுப்பு மீதுதான் உண்மையான அறிவியக்கச்செயல்பாடு நிகழமுடியும். இன்றுகூட தமிழில் ஓர் அறிஞர் பற்றிப் பேசுபவர்கள் கலைக்களஞ்சியத்தில் விரிவான பதிவு இருப்பதை அறியாமல் மிக எளிய செய்திகளை நினைவிலிருந்து எழுதிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். அதுதான் அடித்தளமில்லா செயல்பாடு என்பது.
இதில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் உண்மையில் தமிழுக்குப் பங்களிப்பாற்றுவதை மட்டும் செய்யவில்லை. அவர்கள் இதில் ஈடுபடுவதன் வழியாக தமிழ்ப்பண்பாடு, வரலாறு பற்றிய தங்களுடைய தகவலறிவை விரிவாக்கம் செய்துகொள்கிறார்கள். தங்களுக்கான அடிப்படைக்கட்டுமானத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த தகவல்களின் அடிப்படைக்கட்டுமானம்தான் அவர்கள் சிறந்த கட்டுரைகளையும், புனைவுகளையும் எழுதுவதற்கான அடிப்படையாக அமைகிறது. ஓரிரு ஆண்டுகளுக்குள் இதில் செயல்பட்டவர்களின் அறிவுத்தளம் எந்த அளவுக்கு முன்னோக்கிய பாய்ச்சலை அடைந்துள்ளது என்பதைக் காண்கையில் என் எண்ணம் மேலும் உறுதியாகிறது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


