சாதிமறுப்புக்காக ஒரு திருமணம்!

வணக்கம் ஜெ,

இந்தக் கடிதத்தை பிரசுரித்தால் என் பெயரை நீக்கிவிடுங்கள். இல்லையேல் நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள்.

நான் ஏழு ஆண்டுகளாக சாதி பார்க்காமல் திருமணம் செய்துகொள்வதற்கு என் பெற்றோர்களிடம் மன்றாடிக் கொண்டு இருக்கிறேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

என் தாய், மேட்ரிமோனி தளங்களின் மூலம் கூட சாதி மறுப்பு திருமணங்கள் பெரிதளவில் நடப்பது இல்லை என்றார்; முடிந்தால் சோதித்துப் பார்க்கச் சொன்னார். அதிர்ச்சி ஊட்டும் வகையில் அவரின் கூற்று உண்மையாக உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக மேட்ரிமோனி தளங்களில் பணம் செலுத்தி எனக்கே வரன் பார்த்தேன். பலர் ‘caste no bar’ என்று போட்டிருந்தாலும் உண்மையில் சாதிக்குள் தான் வரன் பார்க்கிறார்கள். குறிப்பாக அதி நவீன பெண்கள். ஒரு நல்ல வரன் கூட அமையவில்லை.

உடல்நலம், சம்பளம், அழகு போன்றவற்றில் எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆண்கள், பெண்கள் இருவரும் கொண்ட சிறந்த நட்பு வட்டம் இருந்தும், காதல் செய்ய வாய்ப்புகள் இருந்தும்,  காதல் செய்ய விருப்பம் இல்லை. இரு பக்க பெற்றோர் சம்மதத்துடன் சாதி பார்க்காமல் ஏற்பாட்டுத் திருமணம் செய்ய கொள்ளவே விருப்பம். ஆனால் அது நடக்காது போல் தெரிகிறது.

சாதி அற்ற தமிழ்ச் சமூகத்தை உருவாக்க குறைந்தபட்சம் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்காவே சாதி மறுப்புத் திருமணம் செய்ய முயற்சிக்கிறேன்.

உங்கள் அறிவுரையைக் கோருகிறேன்.

அன்புள்ள அ

உங்கள் கருத்துக்கள் இளமைக்குரிய முதிர்ச்சியின்மை கொண்டவை. இளமையில் நாம் இரண்டுவகையான மாயைகளால் ஆட்கொள்ளப்படுகிறோம். ஒன்று,  நான் பிறர்போல் இல்லை என்று நமக்கும் பிறருக்கும் நிரூபிக்கவேண்டும். அதற்காக எதையாவது புதியதாகச் செய்யவேண்டும். இரண்டு, நமக்கு நம் சூழலும் மரபும் அளித்துள்ள வரையறைகளை சிறையெனக் கருதுவதும், அவற்றை உடைத்து மீறிச்செல்வதுதான் விடுதலை என கருதுவதும்.

பெரும்பாலான இளைஞர்கள் வாழ்க்கைசார்ந்த பல முடிவுகளை இந்த இரண்டு மனநிலைகளைச் சார்ந்து எடுக்கிறார்கள். வேலை, திருமணம், வாழ்க்கையிடம் என பலவற்றை. ஆனால் இளமையின் அந்த வேகம் நடைமுறை யதார்த்தத்தால் மட்டுப்படும்போது உண்மை தெரிகிறது. வாழ்க்கை இன்னொன்று என புரிகிறது. பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையில் பெரியவர்கள் கட்டாயப்படுத்தி திருமணம், வேலை எல்லாம் ஏற்பாடு செய்துவிடுவார்கள். அந்த மீறும் துடிப்பு அடங்கிவிடும். பின்னர் திரும்பிப்பார்த்து ‘நல்லவேளை தப்பித்தேன்’ என ஏங்குவார்கள்.

ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும். 

ஒன்று, தன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்கு. அதையே நான் தன்னறம் என்கிறேன். நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல், அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றன. ஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும். 

இரண்டு, நம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள். ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டு. அவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது. 

எவரும் எந்த உறவிலும், அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாது. எவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது. அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை. அது ஆன்மாவை அழிக்கும் செயல். எவரும் தன் அறிவார்ந்த மலர்ச்சி, ஆன்மிக முன்னகர்வு ஆகியவற்றை எந்நிலையிலும் விட்டுவிடக்கூடாது. பெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ, கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ.

ஆனால் அடிப்படைக் கடமைகளைச் செய்தாகவேண்டும். அதாவது, அடிப்படையானவற்றை மட்டும். அவற்றைச் செய்வது அவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே. கடமை என்பது தார்மீகப் பொறுப்பு. எந்த பொறுப்பும் சுமை. எந்தச் சுமையும் வாழ்க்கை முழுமைக்குமானது அல்ல. எந்த பொறுப்பும் அதில் இருந்து எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வெளியேறும்பொருட்டே செய்யப்படவேண்டும்.

ஆக, மேலே சொன்ன  இரண்டு அம்சங்களின் சமரசமாகவே நம் முடிவுகள் அமையவேண்டும். ஒன்று நம் தன்னறம், இன்னொன்று, நம் சூழல். அப்படித்தான் நீங்கள் உங்கள் மணம் பற்றிய முடிவை நீங்கள் எடுக்கவேண்டும்.

சாதிபாரா திருமணம் செய்யவேண்டும், சரி. ஆனால் அது மட்டுமே திருமணத்துக்கான நிபந்தனயா என்ன? உங்கள் வாழ்க்கைத்துணை பற்றி வேறு கற்பனையே உங்களுக்கு இல்லையா? திருமணம்தான் வாழ்க்கையின் ஒரே இலக்கா? வாழ்க்கையின் மையச்செயல்பாடே அதுதானா?

சாதி பாராமலிருந்தால் எந்தப்பெண்ணையும் மணப்பீர்கள் என்றால் நீங்கள் திருமண உறவு பற்றி கொண்டுள்ள சித்திரம்தான் என்ன? அது ஒரு ‘show’, அதாவது பிறருக்கான ஒரு தோற்றம், அவ்வளவுதானே? ‘நீங்கள் சாதிபாராதவர்’ சரி. அந்த தோற்றத்தை காட்டிவிட்டீர்கள். பிறகென்ன? எஞ்சிய வாழ்நாள் முழுக்க ‘நான் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டேனாக்கும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பீர்களா? அதுவா ஒருவரின் வாழ்நாள் சாதனை?

உங்கள் இயல்பு என்ன, திறன் என்ன என்று வகுத்துக்கொள்ளுங்கள். அதற்குரிய ஒரு பெருங்கனவை உங்களுக்குரிய இலக்காக வகுத்துக்கொள்ளுங்கள். தொழில், குடும்பம் ஆகியவை எல்லாம் சிறுவாழ்க்கையே. மெய்யான வாழ்க்கை, அதாவது பெரிய வாழ்க்கை என்பது உங்களுக்கான அந்த இலக்கு நோக்கிய பயணம்தான். ஒவ்வொருநாளும் சிறிதேனும் அந்த இலக்கு நோக்கிச் செல்லுங்கள். அறிவார்ந்தும், ஆன்மிகமாகவும். அதுவே வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது.

அந்த இலக்குநோக்கிய வாழ்க்கையில் உங்களுக்கு பிசிறின்றி துணையாகும் பெண்ணை, அவர் எவராயினும் மணந்துகொள்ளுங்கள். அவருடன் இணக்கமான ஓர் உறவை உருவாக்கிக்கொள்ளுங்கள். அவ்வுறவு வாழ்க்கை முழுக்க நீடிக்கவேண்டும். ஆகவே மணமாவதற்கு முன் அவருடைய இயல்பு, அறிவுத்திறன் ஆகியவை உங்கள் இயல்பு, அறிவுத்திறன் ஆகியவற்றுடன் இணைந்துசெல்லுமா என்று பாருங்கள். 

நீங்கள் சாதிமறுப்பாளர் என்றால் அந்த தேர்வின்போது சாதியை எந்தவகையிலும் ஓர் அளவுகோலாகக் கொள்ளாமலிருக்கலாம். அவ்வளவுதான் நீங்கள் செய்யவேண்டியது. அது பெருமை அல்ல. அது ஒன்றும் ‘சமூகசேவை’யும் அல்ல. அது இயல்பான ஒரு நிகழ்வு, அவ்வளவுதான். சொல்லி அலையவேண்டிய ஒரு தனித்தகுதி அல்ல, சிறப்பான நிகழ்வும் அல்ல.

ஒருவர் திருமணம் செய்துகொள்ளவேண்டியது தன் அகவாழ்க்கையை இனிதாக, முரணற்றதாக அமைத்துக்கொள்ளும் பொருட்டுத்தான். இனிய குடும்பத்தை அடையும்பொருட்டுத்தான். குடும்பம் என்பதன் நோக்கமே அதுதான். சமூகசேவைக்காக, சமூகமாற்றத்துக்காக எல்லாம் திருமணம் செய்துகொள்வதாக நம்புவது அபத்தம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2025 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.