அமெரிக்காவின் சிறுவர்களிடம்
தெற்கு கலிபோர்னியா பல்கலை கழகத்தில் பல்கலை மாணவர்களைச் சந்தித்தபின் தெற்கு கரோலினாவில் நிகழவிருந்த பள்ளிச்சந்திப்பைப் பற்றிய ஆர்வம் கூடிவிட்டது. கல்லூரியில் நிகழ்வில் பங்கெடுத்த மாணவர்கள் அனைவருமே இலக்கிய ஆர்வமும் வாசிப்பும் கொண்டவர்கள். அது கல்லூரி நிகழ்வு அல்ல, கல்லூரிமாணவர்கள் கல்லூரியில் தாங்களாகவே நிகழ்த்திக்கொள்ளும் கலாச்சார நிகழ்வு. அதில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெவ்வேறு ஆசிய, ஆப்ரிக்க, தென்னமேரிக்க நாடுகளைச் சேர்ர்தவர்கள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள் பாதிக்குமேல்.
அங்கே சந்தித்த மாணவர்களின் உணர்ச்சிகரமான ஏற்பும், உரையாடலும் ஒரு அகக்குழப்பத்தையே என்னில் உருவாக்கியுள்ளது. மெய்யாகவே நான் அவர்களை புரிந்துகொள்ளவில்லையா? அவர்களிடமிருந்து மிக அப்பால் என் பிம்பங்களுடன் நின்றிருக்கிறேனா?
தெற்குகரோலினாவில் Colleton County High School அரங்கில் நான் சந்திக்கவிருந்தது பள்ளி மாணவர்களை. அவர்களுக்கு இங்குள்ள கல்விமுறையால் இலக்கியம், வாசிப்பு எல்லாம் அறிமுகமாகியிருக்கும். ஆனால் தீவிர இலக்கியம், உலக இலக்கியம், இலக்கியத்தின் இலட்சியம் மற்றும் செயல்முறை ஆகியவை அறிமுகமாயிருக்கும் என்று சொல்லமுடியாது. என் உச்சரிப்பு அவர்களுக்கு புரியுமா என்பதும் பெரிய கேள்விதான். ஆகவே கொஞ்சம் பதற்றமும் இருந்தது.
ஆனால் எனக்கு எப்போதுமே இந்திய கல்விநிலையங்கள்மேல் தவிர்க்கவே முடியாத அவநம்பிக்கை இருப்பதுபோலவே அமெரிக்கக் கல்விநிலையங்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் உண்டு. ஆசிரியர்களால் உருவாக்கப்படும் கட்டுப்பாடு அங்கே இல்லை. ஆனால் இயல்பாகவே அயலவர் மேல் உருவாகும் கவனிப்பும், தற்கட்டுப்பாடும் உண்டு.
ராலேயில் நாகர்கோயில் பி.டி.பிள்ளை கல்யாண மண்டப உரிமையாளர் பி.டி.பிள்ளையின் மகள் ரெமிதா சதீஷின் இல்லத்தில் ஒரு விருந்து. ரெமிதா என் கதைகளை மொழியாக்கம் செய்து ஜக்கர்நாட் பதிப்பகம் சார்பில் வெளிவரவுள்ளது. அங்கே மலையாளப்பாடல்களை நண்பர்கள் பாடினார்கள். நண்பர் ராஜன் சோமசுந்தரத்தின் காரில் ஆறுமணிநேரம் பயணம் செய்து தெற்கு கரோலினா வந்தோம். வால்டர் பரோவில் நண்பர் ஜெகதீஷ்குமார்- அனு இல்லத்தில் தங்கினேன். ஜெகதீஷ்குமார்தான் என் சிறுகதைகளை ஆங்கிலத்தில் A Fine Thread and other stories: Short stories என்ற பேரில் மொழியாக்கம் செய்தவர்.
பள்ளி எல்லா அமெரிக்கப் பள்ளிகளையும்போல கிட்டத்தட்ட விமானநிலையங்களுக்குரிய பாதுகாப்புடன் இருந்தது. நன்கு சோதனையிட்டே உள்ளே அனுப்பினார்கள். பள்ளி மிக உயர்தரமான கட்டமைப்பு கொண்டது. வகுப்பறைகள், உள்விளையாட்டுக் கூடங்கள், சிறிய மற்றும் பெரிய நிகழ்ச்சிக்கூடங்கள். பெரிய கூடத்திலேயே சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களை மட்டுமே சந்திப்புக்கு அழைத்திருந்தனர். ஆனால் ஏறத்தாழ இருநூறு மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆங்கில ஆசிரியை டாக்டர் டக்கர் என்னை பேட்டி எடுத்தார். என் கதையுலகம், ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள என் Stories of the True நூல் ஆகியவை பற்றிய கேள்விகள். என் உச்சரிப்பு புரிகிறதா என உறுதிசெய்தபின் பேசினேன்.முதலில் என் வேடிக்கையான பதில்களுக்கு ஓர் ஆரவாரமான வரவேற்பு இருந்தது. ஆனால் தொடர்ந்து நான் இலக்கியம் என்னும் ஆழ்ந்த செயல்பாடு அளிக்கும் விடுதலை பற்றிப் பேசியபோது ஆழ்ந்த கவனம் இருப்பதை உணர முடிந்தது.
அக்கருத்துக்கள் இன்று அமெரிக்காவுக்கு மிகப்புதியவை. அமெரிக்காவில் எழுத்து- வாசிப்பு இரண்டுமே ஒருவகையான வணிகம் – அறிவுச்செயல்பாடு என்ற அளவிலேயே உள்ளன. அதில் ஓர் இலட்சியவாதம் உள்ளது, அது ஒரு தொண்டு என்பது அவர்கள் அறியாத செய்தியாக இருக்கலாம். எழுதுவது என்பது மொழியினூடாக நிகழும் ஒரு கனவு என்று சொன்னேன். ஒருவர் இன்றைய தரப்படுத்தலுக்கு எதிராக தன் சொந்த அகத்தை தன் மரபிலிருந்து, தன்னைச்சூழ்ந்துள்ள வாழ்வில் இருந்து திரட்டிக்கொள்ளவேண்டியதைப் பற்றிச் சொன்னேன்.
நான் தமிழில் தொடர்ச்சியாகப் பேசிவரும் கருத்துக்கள்தான். அவற்றைப் பேசப்பேச வழக்கமான உணர்ச்சிகரத்துக்கு ஆளானேன். இயல்பான சொற்றொடர்கள் அமைந்தன. ஆனால் பேச்சுக்குப் பின் மாணவர்கள் திரண்டு வந்து என்னைச் சந்தித்து உணர்ச்சிகரமாகப் பேசியபோது அவர்களிடம் அது ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியிருப்பதை உணரமுடிந்தது. அது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. குறிப்பாக நான்கு மாணவர்கள் தேடிவந்து மிகுந்த கொந்தளிப்புடனும் ஈர்ப்புடனும் இலக்கியம் பற்றிப் பேசினர். அவர்களிடம் விரிவாகப் பேச நேரமில்லை. ஆனால் அவர்கள் விடுவதாகவுமில்லை. தொடர்ச்சியாக பேசிக்கொண்டும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் இருந்தனர். அவர்களை இந்தியாவுக்கு, வெள்ளிமலைக்கு வரும்படி அழைத்தேன்.
இலக்கியச்செயல்பாட்டின் அகநிகழ்வுகள், அதனூடாக ஒருவர் தனக்கென ஓர் சுயத்தை உருவாக்கிக்கொள்வது, ஓர் இலட்சியவாத வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வது ஆகியவையே இளைஞர்களின் கேள்விகளாக இருந்தன. உண்மையில் அமெரிக்க இளைஞர்களிடமிருந்து வரும் இந்த எதிர்வினை என் மதிப்பீடுகளுக்கு மாறானது. அமெரிக்க இளையதலைமுறை நடைமுறைநோக்கு, நுகர்வு, கேளிக்கை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது என்பதே என் உளப்பதிவு. அவர்களுக்கு அறிவுத்தகுதி அதிகம், ஆகவே ஓர் அலட்சியமும் இருக்கும் என்பது என் எண்ணம். அவ்வாறன்றி அவர்கள் புதிய கருத்துக்களுக்குத் திறந்திருப்பதும், அவர்களிடமிருந்த இலட்சியத்தாகமும் நானறியாத இன்னொரு அமெரிக்காவைச் சந்தித்த திகைப்பை அளித்தன.
பிலிப்பைன்ஸ் பின்னணி கொண்ட ஜூரிஸ் Juris Kian Ramirez என்னும் இளைஞர் “Writing as a form of pleasure is the blissfull thing to have in this world.” This locked in my mind upon listening to one of his responses on student’s questions. Lots of learnings shared and at the same time lots of curiosities answered. என்று முகநூலில் எழுதியிருந்தார். இவர்களை சிறுவர்கள் என்றே சொல்லவேண்டும், இன்னமும் உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள்தான். ஆனால் தீவிர இலக்கிய வாசகர்களுக்குரிய தேடல் கொண்டிருந்தார்கள்.
பொதுவாக மாணவர்களில் இருநூறு பேரில் ஐந்துபேர் இலக்கியத்திற்குரியவர்கள் என்பது என் கணிப்பு. ஏனென்றால் இலக்கியம் என்பது உலகியலில் எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கது அல்ல. அதை உணர ஒரு அகநகர்வு தேவையாகிறது. ஆனால் இந்தப் பள்ளிநிகழ்வுக்குப் பின், அடுத்த வகுப்புக்கான நேரம் பிந்தியிருந்தபோதிலும்கூட, மேடையை ஒட்டிய இடுங்கிய இடத்தில் காத்திருந்து என்னை சந்தித்த அத்தனை இளைஞர்களிடம் நான் கண்டது இலக்கியத்தின் எதிர்காலத்தைத்தான். இலக்கியமென்னும் இலட்சியவாதச் செயல்பாடு ஒருபோதும் காலாவதியாகாது என்னும் உணர்வை அடைந்தேன்.
இது எனக்கு ஒரு குழப்பத்தை அளித்தது. கல்லூரி மாணவர்களைச் சந்திப்பதில் இந்தியாவில் எனக்கு இருக்கும் தயக்கம் பிழையானதா? உண்மையில் இந்தியாவிலும் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இலக்கியம் பற்றிய மெய்யான ஆர்வமிருக்க வாய்ப்பு உண்டா? இந்தியச் சூழலில் மாணவர்கள் அறிவுச்செயல்பாடு பற்றிய அறிமுகமே இல்லாதவர்கள். ஓர் எழுத்தாளர் அவர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டால் அவர்கள் அவனைப் பற்றிய எந்த மதிப்பும் வெளிப்படுவதில்லை. அவர்களுக்குள் எங்கோ சிலர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்காக பொழுதை வீணடிக்கலாமா? என் எப்போதைய குழப்பம் இது.
இந்த பள்ளிமேடையில் நான் பேசிய ஒரு சொல்கூட பொதுவான பார்வையாளர்களுக்குப் புரிவது அல்ல. ஒவ்வொரு அரைநூற்றாண்டிலும் சர்வதேச அளவில் மையப்பேசுபொருள் மாறிவிட்டிருப்பதைச் சொன்னேன். முந்தைய அரைநூற்றாண்டில் அந்த பேசுபொருள் விடுதலை என்பதுதான். அதற்குமுன் சமத்துவம். ஆனால் இன்று தனித்தன்மை, சுயம் என்பதே. பின்நவீனத்துவம் சுயம் என்பதை மறுத்து அது ஒரு கட்டுமானமே என்றது. அது விழுமியங்களை ‘கட்டுடைத்தது’. விளைவாக எஞ்சியது வெறும் சொற்கள், சொற்களை ஆராயும் ஒரு கருவி- அவ்வளவுதான். அதற்கு எதிரான ஒரு பயணமே இன்றைய அவசியம் என்று சொன்னேன்.
அதேபோல மொழியாக்கம் பற்றிய கேள்விக்கு நாம் சாம்ஸ்கியை மேற்கோள் காட்டி ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு எதையும் மொழியாக்கம் செய்யமுடியும் என்றும், எப்படியும் இலக்கியம் கற்பனை வழியாகவே பொருள்கொள்ளப்படுகிறது என்றும், எந்தப் படைப்பையும் நம் கற்பனையால் சென்றடையமுடியும் என்றும் சொன்னேன். அக்கருத்துக்களை இங்கே ஒரு நல்ல கல்லூரியில்கூடச் சொல்லமுடியாது.
நிகழ்வுக்குப் பிந்தைய உரையாடலில் ஆசிரியை ஒருவரும் தன் புனைவெழுத்து முயற்சி பற்றிப் பேசினார். அவரிடம் எப்படி எழுத்தை ஒருவர் அடிப்படையில் தனக்க்கு மட்டுமான ஒரு அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே வைத்திருப்பது என, எந்த வாசிப்பும் கிடைக்காத நிலையிலேயே அது ஓர் அகவிடுதலைக் கருவியாக அமைய முடியும் என பேசினேன்.
அமெரிக்கப் பள்ளியின் ‘மூட்’ என்பதே விந்தையானது. ஜெகதீஷ்குமார் பேச வந்தபோது “மிஸ்டர் கூமா!” என ஒரே ஆரவாரம். ஆனால் அது நட்பான வரவேற்பு. அவர் அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர். அதே வரவேற்புதான் எனக்கும். ஆனால் உரையின்போது மிக ஆழ்ந்த கவனமான முகங்களையே கண்டேன். அமர்வதில் ‘மரியாதை’ எல்லாம் இல்லை. ஆனால் இந்தியப் பள்ளிகளில் நான் வழக்கமாகச் சந்திக்கும் வெற்று விழிகள் ஒன்றுகூட இல்லை.
அமெரிக்கா வந்து தொடர்ச்சியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பயணத்தின் பேருவகை என்பது இந்த இளைஞர்களைச் சந்திப்பதுதான். இவர்களை மட்டுமே கொண்டு ஒரு நிகழ்வை இங்கே உருவாக்கவேண்டும் என்னும் பெருங்கனவை உருவாக்கிக்கொண்டேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

