அரசியலின்மை, அரசு, தேர்தல்
அன்புள்ள ஜெ.,
அரசியலின்மை குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். கட்சியரசியல், ஜனநாயகஅரசியல், அரசியலின்மை இதுவே படிநிலை. நாம் இன்னும் கட்சியரசியலையே தாண்டவில்லை. சில நூறு வருடங்களில் ஜனநாயக அரசியல் அமைந்தாலே ஆச்சரியம். சிறந்த ஜனநாயக அமைப்புடன் விளங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நமக்கு மோசமான தலைவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் சிஸ்டத்தின் மீது வெறுப்புற்று மக்கள் “நோட்டா” விற்கு வாக்களிப்பதோ தம்முடைய வாக்கைச் செலுத்தாமலிருப்பதோதான் (வேறு யாராவது செலுத்திவிட வாய்ப்புண்டு. அதற்கு நோட்டாவே பரவாயில்லை) அரசியலின்மையை நோக்கி எடுத்துவைக்கும் முதலடி என்று எடுத்துக்கொள்கிறேன். அப்படி ஒரு தேர்தலில் “நோட்டா” வெற்றிபெற்றால், யார் அரசமைப்பார்கள்? நீங்கள் கூறுகிற அரசாங்கம் (Government) இல்லாத அரசமைப்பு (Governance) நடைமுறையில் சாத்தியமா? இதில் நமக்கு முன்னோடி நாடுகள் ஏதும் உண்டா?அன்புடன்,கிருஷ்ணன் சங்கரன்அன்புள்ள கிருஷ்ணன்
நான் பேசிக்கொண்டிருப்பது ‘அரசியலின்மை’ அல்ல. அதிகார அரசியலின் எல்லைகள் பற்றி மட்டுமே. அதற்கு மாற்றாக நுண்ணலகு அரசியல் என்ற ஒன்றை முன்வைக்கிறேன்.
அதிகார அரசியலின் இயல்புகளாக நான் சொல்வன:
அது அதிகாரநோக்கம் கொண்டிருக்கும். அந்த அதிகாரத்தை சமூகத்திலுள்ள சாதி, மதம், தொழில்குழுக்கள், வணிகக்குழுக்கள் உட்பட பல்வேறு அதிகாரச்சக்திகளை சமரசப்படுத்துவதன் வழியாகவே அடைய முடியும்.அந்த அதிகாரத்தை அடைந்தாலும் அரசாங்கம் என்பது தொடர் சமரசம் வழியாகவே செயல்பட முடியும். ஆகவே அதற்கு நிறைய எல்லைகள் உள்ளன. ‘புரட்சிகர’ ‘தலைகீழ்’ மாற்றம் எதையும் எந்த அரசும் உருவாக்க முடியாது. முழுமையான மாற்றத்துக்காக புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்றும் சக்திகள்கூட உடனடியாக பல அதிகாரச் சக்திகளுடன் சமரசம் செய்துகொள்வதையே நாம் வரலாற்றில் காண்கிறோம். ஆகவே அதிகார அரசியலில் செயல்படும் தரப்புகளின் ‘கொள்கைகளை’ நம்பி கட்சிகட்டிக் களமாடுவது அசட்டுத்தனம். அதை அரசியல் செயல்பாடு என நம்புவது அறிவின்மை. அது கட்சிகட்டி வெறுப்பிலாடும் கீழ்மை மட்டுமே. அது எந்த வகையிலும் எந்த மாற்றத்துக்கும் உதவாது. அப்படி கட்சிகட்டுவதனால் உங்களுக்கு தனிப்பட்ட லாபம் இருக்குமென்றால் அதைச் செய்வது ஒரு தொழில். அதை இலட்சியவாதச் செயல்பாடு என காட்டிக்கொள்ளவேண்டாம்இதனால் நான் ஜனநாயகத்துக்கோ கட்சிசார்ந்த அரசியலுக்கோ தேர்தலுக்கோ எதிரானவன் அல்ல. அவை நாம் அடைந்த உரிமைகள். ஜனநாயகம் இல்லாத நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் கொண்டுள்ள ஜனநாயகத்தின் உண்மையான மதிப்பு நமக்குப் புரியும்.
ஒரு நல்ல ஜனநாயக அரசு எல்லா அதிகாரத்தரப்புகளையும் சமரசம் செய்து அதிகாரத்தில் நீடிக்கும். ஆகவே உடனடியான தடாலடி மாற்றங்களை உருவாக்க முடியாது. ஆனால் அது நல்லெண்ணம் கொண்டதாக இருக்கும் என்றால், நீண்டகால கனவுகள் கொண்டிருக்கும் என்றால், படிப்படியாக பொருளியல் வளர்ச்சியையும் சமூகமாற்றத்தையும் உண்டு பண்ண முடியும்.
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தபின் வந்த இரண்டு ஆட்சியாளர்கள் அவ்வகையில் உண்மையான பொருளியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். ஒருவர் நேரு. இன்னொருவர் பி.வி.நரசிம்மராவ். நேரு இந்தியாவின் பொருளியலுக்கான அடிப்படைக் கட்டமைப்பை மிகக்குறைவான வரிவசூல் இருந்த காலகட்டத்திலேயே உருவாக்கினார். அவர் உருவாக்கிய அணைக்கட்டுகளே இந்தியாவில் உணவுப்பஞ்சத்தைப் போக்கின. அவர் காலகட்ட சாலைகள், துறைமுகங்களே தொழில் வளர்ச்சியை உருவாக்கின.
அதன்பின் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொருளியலில் இருண்டகாலம் என நான் நினைக்கிறேன். கட்சிச்சார்பற்ற எவரும் அதை மறுக்கப்போவதில்லை. அதிகாரக்குறுங்குழு ஆட்சி, மைய அதிகராக்குவிப்பு ஆகியவற்றால் இந்தியப்பொருளியல் தேங்கிக்கிடந்தது.
அந்தத் தேக்கத்தை உடைத்து இந்தியாவை விடுவித்து, காலத்துக்கு உகந்த அடுத்தகட்ட பாய்ச்சலை உருவாக்கியவர் பி.வி.நரசிம்மராவ். அவருடைய சமரசங்கள் பெரியவை. சாதனைகள் இன்று கண்கூடாகத் தெரிகின்றன. இந்தியாவில் தனியார்த்துறை எழுச்சி வேலைவாய்ப்புச்சந்தையை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கியது. இந்தியாவின் அடிப்படை வறுமை அவரால் குறைந்தது. நான் அதை கண்கூடாக கண்டுணர்ந்தவன்.
நல்ல நோக்கம் கொண்டு தொடங்கி, எதையும் முழுமையாகச் சாதிக்கமுடியாத இரு ஆட்சியாளர்கள் என்று மொரார்ஜி தேசாய் மற்றும் ராஜீவ் காந்தியைச் சொல்வேன். அவர்களின் ஆட்சிக்காலம் பலவகையான சிக்கல்களுக்கு உள்ளானது. நரசிம்மராவின் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவராக மன்மோகன் சிங் முக்கியமானவர், ஆனால் அரசியல் விருப்புறுதியற்றவர், ஆகவே சீர்திருத்தங்களில் ஊழல்படியவிட்டவர் என அவரை மதிப்பிடுகிறேன்.
இன்றைய ஆட்சியாளர் பற்றி எனக்கு பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. எனக்கு கண்கூடாகத் தெரிபவை மிகச்சிலவே. வட இந்தியாவில் நிகழ்ந்துள்ள சில மெல்லிய மாற்றங்கள். குறிப்பாக வீடு, கழிப்பறை வசதிகளில். அவை நரசிம்மராவின் சீர்திருத்தங்களின் விளைவாகக்கூட இருக்கலாம். வடகிழக்கில் நிகழ்ந்துள்ள அரசியல்மாற்றங்கள், பொருளியல் மாற்றங்கள். ஆனால் பத்தாண்டுக்கால ஆட்சிக்குச் சாதனையாகச் சொல்ல இவை போதாது என நினைக்கிறேன்.
ஆகவே ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதென்பது வாக்காளரின் கடமை. அதற்குத்தேவையான அளவு அரசு, ஆட்சி பற்றி தெரிந்திருப்பது அவசியம். அவர்களின் எல்லைகள், தகுதிகள், அவர்கள் என்ன செய்யமுடியும், என்ன செய்தார்கள் என்பது பற்றி நமக்கு ஒரு தெளிவு இருக்கவேண்டும். ஒரு யதார்த்தபுத்தி தேவை. அந்த புரிதலுடன் நமக்கான ஆட்சியாளர்களை வாக்களித்துத் தேர்வுசெய்வது நம் கடமை. அவர்கள் செய்யும் பிரச்சாரங்களை நம்பி, கொள்கைப்பிடிப்பு கட்சிச்சார்பு என நிலைபாடு எடுத்து ஆண்டுமுழுக்க கூச்சலிட்டுக்கொண்டே இருப்பது அறிவுமழுங்கிய செய்கை. அவர்களை ரட்சகர்கள், தலைவர்கள் என்றெல்லாம் நம்புவது பேதைத்தனம்.
அப்படி நம்புவதும் அதற்கேற்ப நாள்தோறும் கூச்சலிட்டுக்கொண்டே இருப்பதும் அரசியல் அல்ல, வெறும் உணர்ச்சிகர மூடத்தனம். கட்சித்தொண்டர் என்பவர் ஒருவகை அடிமை. அந்த அடிமைகளில் படித்தவர்களும் உண்டு. அவர்கள் அதை அரசியல் என நம்புகிறார்கள். அது அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு மண்டையைக்கொடுத்த அடிமைத்தனம். அதற்கு எந்த சமூகப்பங்களிப்பும் இல்லை. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
உதாரணமாக, இன்று ஒரு மாநிலத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்றால் சாதாரணமாக பத்தாயிரம்கோடி ரூபாய் ஒரு கட்சிக்குத் தேவை. பிரச்சாரம், வாக்காளர்களுக்கு லஞ்சம் எல்லாம் சேர்த்து. ஒரு மாநில அரசு ஆட்சியில் இருக்கையில் மாநிலத்தேர்தல், மையத்தேர்தல் என இரண்டு தேர்தல்களைச் சந்திக்கவேண்டும். ஆட்சிபோகுமென்றால் மேலும் இரு தேர்தல்களை. ஆகவே நான்கு தேர்தல்களுக்கான பணம் இல்லாமல் ஆட்சியை முடிப்பது தற்கொலை.
ஆக, நாற்பதாயிரம் கோடி ரூபாயை திரட்டாமல் ஒரு மாநில அரசு பதவியிறங்க முடியாது. அந்த நிதியை முழுக்கமுழுக்க மாநிலத்தின் தொழில்துறையில் இருந்து உறிஞ்சவேண்டும். திமுக, அதிமுக எதுவானாலும். இதுவே மைய அரசுக்கும். அது பற்பல மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவேண்டும், மையத்தேர்தல்களைச் சந்திக்கவேண்டும். ஆகவே அதன் உறிஞ்சுதல் லட்சம்கோடிகளில் இருக்கும்.
இச்சூழலில் இன்று ‘ஊழலற்ற’ ஆட்சி என ஒன்று இருக்கக்கூடுமா? அது சாத்தியமே இல்லை. ஆனால் பொதுக்கட்டுமானங்களில், மக்களுக்கான பணிகளில் நிகழும் கடைமட்டம் வரையிலான ஊழலை ஓர் அரசு கட்டுப்படுத்தலாம். அமெரிக்காவிலும் உயர்மட்ட ஊழல் உண்டு, அது பிரச்சாரத்தையே போர் என கொண்டிருக்கும் ஜனநாயகத்தில் தவிர்க்கமுடியாது. அங்கே மக்களுக்கான சேவைகளில் ஊழல் இல்லை. மொத்தக் கட்சியும் ஊழல் செய்வதில்லை.
ஆகவேதான் நான் தொண்டர்களை ஐயப்படுகிறேன். ஒரு ‘தொண்டர்கட்சி’ அதன் அத்தனை தொண்டர்களுக்கும் ஊழல்செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி அளிக்கவேண்டியுள்ளது. விளைவாக கட்சி பத்தாயிரம்கோடியை ஊழல் செய்து ஈட்டியதென்றால் கட்சித்தொண்டர்கள் பத்துமடங்கு ஈட்டிக்கொள்ளவேண்டியுள்ளது. எண்ணிப்பாருங்கள் இன்று திமுக, பாஜக போன்ற கட்சிகள் எத்தனை லட்சம் தொண்டர்களை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக ஈட்டும் வருமானம் என்ன? இந்தியாவின் மாபெரும் வேலையளிப்பு அமைப்பு ரயில்வே அல்ல, தபால்துறை அல்ல, இந்தக் கட்சிகள்தான்
கட்சித் தொண்டர்கள் என்று இந்திய அரசியலில் இல்லாமலாகிறார்களோ அன்றுதான் இங்கே பொதுச்சூழலில், மக்கள்பணிகளில் ஊழல் இல்லாமலாகும். உலகம் முழுக்க ஆரோக்கியமான ஜனநாயக அரசியலில் தொண்டர் என்னும் இந்த வர்க்கம் இல்லை.
நான் சொல்லும் கட்சியரசியல் இது. ஆட்சியை கணித்துக்கொள்ளுங்கள். குடிமகனாக நின்று வாக்களியுங்கள். அவ்வளவுதான் நம் பணி. கட்சிகள் உருவாக்கும் பிரச்சார மாயைக்கு அடிமையாகி கட்சிச்சார்பு எடுத்து அக்கட்சி என்ன செய்தாலும் ஆதரிப்பது என்னும் நிலையை எடுப்பதும், அக்கட்சியின்பொருட்டு ஆண்டுமுழுக்க வெறுப்பைக்கூச்சலிடுவதும் அறிவுத்தற்கொலை. அது அரசியலே அல்ல.
அரசியலில் ஈடுபடவேண்டும் என்றால் அது அதிகார நோக்கம் அற்ற அரசியலாக இருக்கட்டும். அது சமூகத்தில் கருத்துமாற்றத்தை நுணுக்கமாக உருவாக்கும் அரசியலாக இருக்கட்டும். அதுவே நுண்ணலகு அரசியல்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

