ஙப் போல் வளை – அனுபவங்கள்
ங போல் வளை. கடிதம்
அனலோனை வாழ்த்தும் வேதச்சொல்லை உரைத்தபடி மென்விறகை முதல் அடுப்பில் அடுக்கிவிட்டு சிக்கிமுக்கியை உரசி எரியெழச் செய்தான். எரி தயங்கியபடி கொழுந்தெழுந்து நின்றாட அதை நோக்கியபின் வலவன் ஒரு சிறிய பாளையை எடுத்து அப்பால் நாட்டினான். தீக்கொழுந்து காற்று இல்லாத அறைக்குள் என அசைவிலாது நின்று சுடர்கொண்டது. அடுத்த அடுப்பை அவன் பற்றவைத்தபோது வலவன் அத்தழலாட்டத்தை நோக்கி பிறிதொரு இடத்தில் ஒரு தட்டியை நிறுத்தினான், அந்தக் கணக்கு என்ன என்று அறிய சம்பவன் கூர்ந்து நோக்கினான். எவ்வகையிலும் அதை புரிந்துகொள்ள முடியவில்லை.
அனைத்து அடுப்புகளும் எரியத் தொடங்கியபோது அடுப்புக்கு ஒன்று என காற்றுத்தடுப்புகள் நின்றிருக்க தழல்கள் காற்றால் தொடப்படாமல் எரிந்தன. அவர்களின் ஆடைகளையும் குழல்களையும் கலைத்து அளைந்து சென்ற கானகக் காற்று அத்தழல்களை அறியவேயில்லை என்று தோன்றியது.
வெண்முரசு, நீர்க்கோலம் (49).
சம்பவன் முதல் முறை சமைக்கப் போகிறான். அதுவும் அரச குடிகளுக்கு. சிறு தவறென்றால் தலை போகும் அபாயம் உண்டு. அவர்கள் இருப்பதோ கரவுக்காடு. புதிதாக கூரை மட்டுமே என்று அமைக்கப்பட்ட அடுமனை. காற்று, அடுப்புத்தழலை வெம்மைகொள்ளச் செய்யாதே, சுற்று சுவர் எழுப்ப காலமும் இல்லை என சம்புவன் கலங்கி நிற்கையில், வலவன் (பீமன்) பாளையை வைத்து தழல்களை, கானகக் காற்று அறியாமல் எறியச்செய்தான்.
ஆம், வலவன் போலவே, என்னுள்ளும் சுடரை நின்றாட வைத்திருக்கும் குருஜி சௌந்தர் அவர்களின் ஒரு பாளை தான் ‘ஙப் போல் வளை – ஒரு யோகப்புத்தகம்.
மரபார்ந்த யோக மாணவனான எனக்கு, பஞ்ச கோஷங்கள், பஞ்ச பிராணன், நாடிகள், த்ரயக் தனாவ் எனப்படும் மூன்றடுக்குப் பதற்றங்கள், வாழ்வின் ஆறு நிலைகள், தமோகுணத்தின் ஐந்து நிலைகள், யோகத்தின் எட்டு அங்கங்கள், சங்கல்பம், சித்தாகாசம், முக்குணங்கள், என முதல் இருபது அத்தியாயங்களை படித்ததும், ஒருவருட யோக கல்வியின் பாடத்திட்டம் நிறைவடைந்தது போல இருந்தது.
BKS ஐயங்கார் அவர்கள் எழுதிய ‘நலம் தரும் யோகம் ( Lights on Yoga , Lights on Pranayama)’ தான் ‘ஙப் போல் வளை‘ எழுத உந்து சக்தியாக இருந்ததாக குருஜி பதிவிட்டுள்ளார். அந்த பதிவிலே “யோகமரபு சொல்லும் ஆசனங்களும் , பிராணாயாமங்களும் மட்டுமே இதில் (நலம் தரும் யோகம்) பேசப்படுகிறது, தாரணை , தியானம் போன்றவை பற்றிய மேலோட்டமான பார்வையை முன்வைக்கிறார். அதுசார்ந்த பெரும்பாலும் பயிற்சிகளை இந்த நூலில் கொடுக்கவில்லை என்பது அதன் முக்கியத்துவம் கருதி மிகக்கவனமாக கையாளப்பட்டிருக்கிறது.
இந்நூலில் பதினோரு வகையான அசைவுகளை கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசனங்களை குறிப்பிடுகிறார். இவை அனைத்துமே நிச்சயமாக ஒரு தேர்ந்த யோக ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளவேண்டியவை, ஏனெனில் யோகத்தின் பக்கவிளைவுகளை நாம் பெரிதாக பேசுவதில்லை, அதன் பலன்களை மட்டுமே விதந்தோதி பெருமையை சொல்லி கேள்விப்படுகிறோம், தவறான யோகப்பயிற்சிகளால் உடலளவில் பாதிப்படைந்து அறுவைசிகிச்சை வரை தங்களை கொண்டு சென்றவர்கள் பதிமூன்று சதவிகிதம் பேர் உலகம் முழுவதுமே அவதிக்குள்ளாகின்றனர். என்பதையும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டிய நேரமிது.” என்று கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, ‘ஙப் போல் வளையில்‘, ஆசனங்கள், பிராணாயாமங்கள், தாரணை, தியானம், யோகம்–தாந்திரீகம்–ஆயுர்வேதம் இணைவு ஆகியவற்றுடன் யோகத்தின் பக்கவிளைவுகளை குறித்தும் எழுதியுள்ளார்.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் நிலப்பகுதியில் பிடிக்கப்பட்ட போது, தன்னிடம் இருந்த நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை மென்று விழுங்கி அழிக்க முயற்சி செய்ததாக செய்தி படித்திருப்போம். மிக் – 21 விமானத்தில் பறந்தாலும், நான்காக மடித்து பாக்கெட்டில் வைக்கும் அளவு ஒரு வரைபடத்திற்கான தேவை இருக்கிறது.
தகவல்களால் நிரம்பியிருக்கும் இன்றய உலகில், யோகா குறித்து, பொது அறிதலுக்கான அப்படையான ஒரு வரைபடமாகவும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். மரபார்ந்த குருகுலத்தில் பதினெட்டு ஆண்டுகள் பயின்று, இந்த நூற்றாண்டுக்கான, தேவையை அறிந்து, முழு நேர யோக ஆசிரியராக பயிற்சி வழங்கி வரும் குருஜியின் அனுபவ அறிவு நம்பகமானது.
இதில், நமக்கான யோக பள்ளியை தேர்ந்துடுப்பது எப்படி, அளவான பயிற்சியின் அவசியம், காலத்திற்கு ஏற்ற கருவி, சர்வலோக நிவாரணி எனும் மாயை, அமானுஷ்ய கருத்துக்களை கையாள்வது, தங்கள் இனம்/நாடுதான் தொடர்புபடுத்துவது, ஆதாரமற்ற தகவல்களால் காலத்தால் பின்னோக்கி செல்வது, என பல தகவல்களையும் எழுதியுள்ளார்.
மனித வாழ்வை, ஐந்து கோஷங்களாக வகைப்படுத்தி, அவற்றை ஒருங்கிணைத்து அடையப்பெறும் விடுதலை நிலை குறித்தும், அதன் வழி, உடல், உயிராற்றல், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கிடைக்கும் தீர்வும், விடுதலையும் குறித்த யோக தத்துவங்களை விளக்கி. அதன் தொடக்கமாக, ஒவ்வொருவரும், தனக்கான நாற்பது நிமிட பயிற்சி திட்டம் தயாரிப்பது குறித்த விளக்கத்தை நான் மிகவும் முக்கியமாக கருதுகிறேன்.
அது, “Start a little, do a little” ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி தடைகளை தாண்டி தொடர் சாதகனாக இருக்க கூறிய அறிவுரை. காந்தியின் நிரூபிக்கபட்ட வழி.
சென்ற மாத வகுப்பில், திறந்த வானின் கீழ், சிறிய கூடாரத்தில், நிம்மதியாக உறங்கி எழுந்ததும், யானைப்பதத்தின் ஒலியாய் நானறியாமல் இருந்த பயிற்சியின் பலனை அறிந்து கொண்டேன். குருஜியிடம் சென்று சொன்னேன், “யோகா எனக்கு வேலை செய்கிறது”.
இரண்டாண்டுகளுக்கு முன்பு, வீட்டிலிருந்து கிளம்பி பயம், பதட்டத்துடன், நித்யவனம் யோக முகாம் வந்ததையே, ஒரு சாதனையாக கடிதம் எழுதிய நான், ஆழ்ந்து உறங்கியிருக்கிறேன், முற்றிலும் புதிய இடத்தில்.
உடல், உயிராற்றல், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய தீர்வும், விடுதலையும் குருஜியின் வழிகாட்டலின் படி யோகம் கொடுத்துருக்கிறது. இந்த படத்திட்டத்தையும், அதன் பயிற்சி புத்தகம் போல இருக்கும், ஙப் போல் வளையையும் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
ஆம்! நல்லாசிரியரின் துணை கொண்டு, இனி யோகம் பயில்வோம்.
சக்தி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

