நாவல் பயிற்சி நிகழ்வு, கடிதம்
அன்புள்ள ஜெ.,
நான் அக்டோபர் மாதம் வால்நட் க்ரீக், கலிபோர்னியாவில் நாவல் எழுதும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். சிறுகதை கூட எழுத நான் இதுவரை முயற்சித்ததில்லை. எனவே இந்தப் பயிற்சியில் சேர மிகவும் தயங்கினேன். மேலும் இதுபோன்ற பயிற்சிகளில், நம்மை ஏதாவது எழுதச்சொல்லி, அதை அனைவரின் முன் வைத்துக் கருத்துக் கேட்பார்களோ என்ற பயமும் இருந்தது. இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த விசு அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்ததாலும், இவ்வகுப்பு, எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல, தீவிர வாசகனாவதற்கும் உதவும் என்றதாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வகுப்பில் சேர்ந்தேன்.
எனது தயக்கங்களுக்கும் கேள்விகளுக்குமான பதில்களை ஜெ. முதல் சில நிமிடங்களிலேயே தந்தார். நம்மிடமுள்ள தகவல்களை இணைத்து நினைவில் வைத்துக்கொள்ள அவற்றை ஒரு நாவலாக எழுதினால் மட்டுமே முடியும். தகவல்களை அப்படியே கட்டுரையாக எழுதினால் நுணுக்கமான தகவல்கள் மறைந்து போகும். இதுவே தகவல்களைக் கட்டுரையாக எழுதுவதற்கும் நாவலாக எழுதுவதற்கும் உள்ள பெரும் வேறுபாடு. நாம் நம்முடைய அன்றாட நிகழ்வுகளையே இவ்வாறு புனைவாக நாவல் வடிவில் எழுதிவைத்தால் அவை நன்றாக நினைவில் நிற்கும். இக்கருத்து என்னைப் பெரிதும் கவர்ந்தது. இவ்வகுப்பு ஒரு நாள் மட்டுமே நடப்பதால் எங்களை எதுவும் எழுதச்சொல்லப் போவதில்லை என்று ஜெ சொன்னதும் நிம்மதி அடைந்தேன். ஆனாலும் ஒரு நாவலின் கருவுக்கும் பேசுபொருளுக்கும் உண்டான வேறுபாட்டை விளக்கிவிட்டு ஏதாவது ஒரு கருவைப் பற்றி பத்து வரிகளில் எழுதச்சொன்னார். அதற்கு நான் என்னுடைய அன்றாட அலுவலக வேலையையே புனைவாகக் கருதி எழுதினேன்.
வகுப்பின் ஆரம்பத்தில் ஜெ சில விதிமுறைகளை விதித்தார். ஒன்று அவர் பேசும்போது அவரை மட்டுமே கவனிக்க வேண்டும், குறிப்பு எழுதக்கூடாது. குறிப்பு எழுதத் தனியே சில நிமிடங்கள் ஒதுக்கினார். இரண்டாவது, கேள்விகள் கேட்காமல் சொல்வதைக் கவனித்தல். முதலில் இது வித்தியாசமானதாகப்பட்டது. ஆனால் இதனால் மற்றவர்களுடைய தெளிவற்ற சிந்தனைகள் என்னைக் குழப்பாமலிருந்தன.
நாவலில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் விரிவாகப் பேசினார். ஆரம்பத்தில் இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்களிலிருந்தும் சிறுகதைகளிலிருந்தும் மேற்கோள் கொடுத்த ஜெ., பங்கு பெற்றவர்களின் முகக்குறிப்பறிந்து சினிமாக்களிலிருந்து குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தார்.
ஒரு மகத்தான எழுத்தாளரிடமிருந்து இவற்றைக் கற்கக் கிடைத்தது பெரும் வாய்ப்பென்றே நான் கருதுகிறேன். இந்த வகுப்பு தந்த ஊக்கத்தில் உடனடியாகச் செய்ய வேண்டியது என மூன்றை நினைத்திருக்கிறேன: தினமும் கொஞ்சம் எழுதுவது, வகுப்பில் எழுதிக்கொண்ட குறிப்புகளை விரிவாக எடுத்து எழுதுவது, மற்றும் நாங்கள் குழுவாகப் படித்த War and Peace நாவலை இப்பொழுது கற்றுக்கொண்ட கருத்துக்களுடனும், முறைகளுடனும் பொருத்திப் பார்த்து, குழுவில் விவாதிதிப்பது.
நன்றியுடன்
ரவி
பின்குறிப்பு: சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக மாதம் தோறும் தமிழில் உள்ள சிறந்த சிறுகதைகளைப் பற்றி விவாதிக்கிறோம். விவரங்களுக்கு vishnupurambayarea@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

