அமெரிக்காவின் வேரும் நீரும்
சென்ற அக்டோபர் 8 அன்று காலை சான் ஃப்ரான்ஸிஸ்கோ வந்து இறங்கினேன். இலையுதிர்காலத்தில் அமெரிக்கா வருவது சென்ற சில ஆண்டுகளாகவே வழக்கமாக ஆகிவிட்டிருக்கிறது. வழக்கமான பூன் இலக்கிய- தத்துவ முகாம். அது மெல்ல உலகம் முழுக்க பரவி வருகிறது. ஐரோப்பாவில் சென்ற ஜூலையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தத்துவ முகாம். வரும் நவம்பரில் பிரிட்டனில். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் விஷ்ணுபுரம் சார்பில் ஒரு இந்து தத்துவ வகுப்பு நடத்தும் திட்டம் விவாதத்தில் உள்ளது.
இம்முறை அமெரிக்காவில் கூடுதலாக ஒரு பயணநோக்கமும் உண்டு. என் அறம் கதைகளின் ஆங்கில மொழியககமான Stories of the True அமெரிக்காவில் வெளியாகியுள்ளது, அதை வாசகர்களிடையே கொண்டுசென்று சேர்ப்பதற்கான நூலறிமுக நிகழ்வுகள். ஒரு பெரிய பதிப்பகம் தமிழில் இருந்து ஒரு நூலை வெளியிடுவது முதல்முறை. இந்நூல் பெறும் வரவேற்பே வரவிருக்கும் நூல்களுக்கான வழித்திறப்பாக அமையும். தமிழிலிருந்து குறைந்தது 20 ஆசிரியர்களின் நூல்களை அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா கொண்டுவர எண்ணம் உள்ளது. அதன்பொருட்டே அடுத்த கோடையில் தமிழ் நவீன இலக்கிய மாநாட்டையும் இங்கே கூட்டவிருக்கிறோம்.
சாரதா -பிரசாத் இல்லத்து சந்திப்புவிமான நிலையத்திற்கே நண்பர் சாரதியும் அவர் மகள் மதுராவும் Stories of the True நூலின் ஒரு பிரதியுடன் வந்திருந்தனர். அந்நூலில் கையெழுத்திட்டு மதுராவுக்கு அளித்தேன். அது ஓர் அழகிய தொடக்கம். அமெரிக்கப்பதிப்பு நூலை நான் அப்போதுதான் பார்த்தேன், இந்தியாவில் எனக்கு பிரதி வந்துசேரவில்லை. மதுரா என் நூலில் சில கதைகளை படித்திருந்தாள். சாரதாவின் பதின்பருவ மகள் அஞ்சலியும் நூலை படித்திருந்தார். இம்முறை சட்டென்று நான் செல்லும் இல்லங்களிலெல்லாம் பதின்பருவத்தினர் என் வாசகர்களாக இருப்பதைக் காண்கிறேன். நான் விரும்பிய தொடக்கமே இதுதான்.
சாரதாவின் இல்லத்தில் ஒரு நண்பர் சந்திப்பு. பிரசாத் முன்னெடுப்பில் அங்கே ஒரு மாதாந்திர இலக்கியக் கூடுகையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்த்ததற்கு மேலாகவே தொடர்ச்சியாக அதில் வாசகர்களும் நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். அன்று அசோகமித்திரனின் நான்கு கதைகளைப் பற்றிய விவாதம். நான் என் கோணத்தையும் சொன்னேன். அனைவருமே விவாதத்தில் பங்குகொண்டதும், வெவ்வேறு கோணங்களில் கதைகளை ஆராய்ந்ததும், எவரும் தலைப்புவிட்டுப்பேசாமலிருந்ததும் சிறப்பாக இருந்தது. அந்த நண்பர்சந்திப்பை மேலும் எப்படி முன்னெடுக்கலாம் என ஒரு சிறு ஆலோசனை உரையை ஆற்றினேன்.
அன்று காலையில் சான் பிரான்ஸிஸ்கோவின் அருகே சான் மட்டேயோ (புனித மத்தேயூ) நகரின் புகழ்பெற்ற புத்தகக்கடையான Barnes and Noble ல் ஒரு நூலறிமுகச் சந்திப்பு. நான் அதை அத்தனை பெரிய தனிக்கட்டிடம் என நினைத்திருக்கவில்லை. ஏறத்தாழ எழுபதுபேர் வரை வந்திருந்தார்கள். முகப்பிலேயே நிகழ்வு. அஞ்சலி என் நூலில் இருந்து அவருக்கு உகந்த ஒரு பகுதியை வாசித்தார். (உலகம் யாவையும்). தூய அமெரிக்க உச்சரிப்பில் அதைக் கேட்க ஏதோ அன்னிய நூல் போலிருந்தது.
முதல் கேள்விகளை அஞ்சலி எழுப்பினார். இன்றைய உலகச்சூழலில் உலகம் யாவையும் கதை முன்வைக்கும் ஓருலகம் என்னும் கொள்கைக்கு என்ன இடம்? நான் இவ்வாறு பதில் சொன்னேன். அமெரிக்கா என்பது வணிகத்தின், தொழிலின், தேசியவாதத்தின் நிலம் மட்டுமல்ல என்றேன். அது ‘எக்ஸெண்டிரிக்கு’களின் நிலமும் கூட. எல்லைகளை மீறிச்சென்றுகொண்டே இருப்பவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள்தான் அமெரிக்காவை உருவாக்கியவர்கள். அவர்களில் ஒருவர்தான் உலகம் யாவையும் கதையின் நாயகன்.
சென்ற நூற்றாண்டில் உலகை காலனியாக்கிச் சுரண்டியது ஐரோப்பா. ஆனால் அதே ஐரோப்பாதான் உலகுக்கே ஜனநாயகத்தை, மானுட உரிமையுணர்வை உருவாக்கி அளித்தது. இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்கள், குறிப்பாக காந்தி, அந்த இரண்டாவது ஐரோப்பாவையே ஏற்றுக்கொண்டனர். அதேபோல நான் அந்த இரண்டாவது அமெரிக்காவையே முன்வைக்கிறேன். அந்த அமெரிக்கா அழியாது. அது உலகின் ஒளியென என்றுமிருக்கும். அவ்வாறு பல கேள்விகள்.
சான் மட்டாயோஅன்று மாலையே சாக்ரமண்டோ நகரிலுள்ள சின்மயா மிஷன் கூடத்தில் இன்னொரு இலக்கிய உரை மற்றும் சந்திப்பு. நண்பர் அண்ணாத்துரை அதை ஏற்பாடு செய்திருந்தார். இளையதலைமுறையைச் சேர்ந்த மூன்றுபேர் கதைகளைப் பற்றிப் பேசினர். தமிழில் சிறப்பாகப் பாடினர். தமிழில் பேச்சைத் தொடங்கினார்கள். ஆனால் தொடர்ந்து அமெரிக்க ஆங்கிலத்தில் கதைகளைப் பற்றிப் பேசினர். சிவநேயன், சமீக்ஷா, அம்ருதா பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.உணர்ச்சிகரமாகவும் ஈடுபாட்டுடனும் அவர்கள் பேசியது எழுத்தாளனாக மனநிறைவூட்டும் அனுபவம். அதன்பின் நான் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். நூல்களில் கையெழுத்திடும் நிகழ்வு.
நாங்கள் நடத்தவிருக்கும் தமிழ் நவீன இலக்கிய மாநாடு அடுத்த கோடையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிகழவுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன என்பதை கேள்விகளுக்குப் பதிலாகச் சொன்னேன். சென்ற அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்க (ஆல்டா) விருதுவிழாவுக்கு அவ்விருதுக்காக சர்வதேச அளவிலான இறுதிப்பட்டியலில் இருந்த என் மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா வந்தபோது அவர்களுக்கு தமிழ் என்னும் மொழி இருப்பதே தெரியவில்லை என்பது தெரியவந்தது.
தமிழ் மாநாட்டுக்கு நன்கொடை செக், சாக்ரமண்டோகிட்டத்தட்ட ஏழுலட்சம் தமிழர்கள் அமெரிக்காவில் இருக்கிறோம். தமிழுக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்கென இங்கே ஓர் இடம் இல்லை. அந்த இடத்தை அரசியல் வழியாக, கொண்டாட்டங்கள் வழியாக அடைய முடியாது. நவீன இலக்கியம் மட்டுமே அதை உருவாக்கி அளிக்கும். அதுவும் தரமான நவீன இலக்கியம். நாம் வெற்றுப்பெருமை பேசினால் நம் வாரிசுகளே நம்மை பொருட்படுத்த மாட்டார்கள். நம் பலவீனங்களை, இருளை நாம் ஒளிக்கவேண்டியதில்லை. ஏனென்றால் அவற்றையெல்லாம் அமெரிக்கக் கல்விமுறையே நம் வாரிசுகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறது. அந்த இருளில் இருந்து நாம் மீண்டகதையை, நம் பண்பாட்டிலுள்ள அடிப்படையான ஒளியை நாம் முன்வைக்கவேண்டும். அத்தகைய கதைகள் உள்ள தொகுதியே Stories of the True.
அந்நூல் அமெரிக்காவில் எனக்கு உருவாக்கியளிக்கும் வெளிச்சத்தை அனைத்து நவீன இலக்கியத்தை நோக்கியும் ஈர்க்கும் முயற்சியே எங்கள் இலக்கிய மாநாடு. அதை நியூயார்க்கில் நடத்துவது இங்குள்ள பண்பாட்டின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டே. அதற்கு இங்குள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் ஒத்துழைப்பும் தேவை. அவர்கள் நடத்துவதுபோன்ற பெருவாரியான மக்கள் பங்கேற்குள்ள விழாக்கள் வேறொருவகையில் தேவைதான். அவை தமிழ்ச்சமூகத்தை ஒருங்கிணைக்கின்றன. ஆனால் இவையே நம் பெருமிதங்களை உலகறியச்செய்பவை. எளிய அரசியலை கடந்து இந்த வகையான முயற்சிகளை அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் ஆதரிக்கவேண்டும் என்று கோரினேன்.
நியூயார்க் விழாவுக்காக எங்களுக்கு சாக்ரமண்டோ தமிழ் அமைப்புகள் சார்பாக வாக்களிக்கப்பட்ட தொகையை அளித்தனர். ஓர் அலங்காரச் செக் ஆக அந்த தொகை அளிக்கப்பட்டது. அது மிக மனநிறைவூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது.
அங்கிருந்து நேராக வால்நட் கிரீக் வந்து நண்பர் பிரமோதினி- விஸ்வநாதன் இல்லத்தில் தங்கினேன். அது மறுநாள் அங்கே ஒரு நாவல் பயிலரங்கு. மானசா பதிப்பகம் சார்பில் சென்னையில் நிகழ்ந்த நாவல் பயிலரங்கின் அதே வடிவம். ( Manasa Lit Prize ) பெண்களுக்கான நாவல்போட்டிகளை மானசா பதிப்பகம் அறிவித்துள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்களும் கலந்துகொள்ளலாம்.
காலை பத்து முதல் மாலை 5 வரை பயிற்சி நடைபெற்றது. நாவல் வடிவங்களை பொதுவாக மூன்றாகப் பிரிக்கலாம். சிறியநாவல், பெருநாவல் மற்றும் மாற்றுநாவல். பின்னிரண்டுக்கும் வடிவம் இல்லை. வடிவ இலக்கணம் உடையது சிறிய நாவல் மட்டுமே. அதன் வடிவ வரையறை, எழுதும் முறை ஆகியவற்றை கற்பித்தேன். முப்பத்தைந்துபேர் கலந்துகொண்டனர்.
நாவல் பயிலரங்கு குழுவினர்மறுநாள் நண்பர் ஶ்ரீராமின் காரில் லாஸ் ஆஞ்சல்ஸ் நோக்கி பயணம். மேற்குக் கடற்கரை ஓரமாகவே முழுநாளும் காரில் சென்றோம். உடன் ஓவியர் அருண் இருந்தார். கடற்கரையை தொட்டும் விலகியும் பல ஊர்கள் வழியாகச் சென்ற அந்தப் பயணம் அழகியது. இலையுதிர்காலம் அமெரிக்காவில் மென்மையான குளிரும், சுடர்விடும் வானொளியும் கொண்ட அழகிய பருவம். எப்போதுமே ஒரு மாலைநேர மனநிலை நீடிக்கும். பசிபிக் கடல் ஆழ்ந்த நீலமும், அலையில்லா பெருவிரிவுமாக உடன் வந்துகொண்டே இருந்தது.
பல இடங்களில் கடல் உள்வளைந்து சிறிய குடாக்களாகியிருந்தது. மலைகளின் விளிம்புகளில் இருந்து நேரடியாக கடல் நோக்கி இறங்கியது நிலம். ஓரிடத்தில் யானைச் சீல்களும், கடற்சிங்கங்களும் கரையில் கரிய கடற்பறவைகளுடன் ஊடுகலந்து நெளிந்துகொண்டிருந்தன. நீர்நிறைந்த தோற்கலங்கள் போல ஒரு கணமும், மிகப்பெரிய குழந்தைகள் போல மறுகணமும் தோன்றச்செய்தன அவை. கரையில் அவை புழுக்களை போலத் தவழ்ந்தன. நீரில் துள்ளி அம்புகள் போல எழுந்து விழுந்து மூழ்கி மீண்டும் சீறிக்கிளம்பின.
ஶ்ரீராம்- சிவப்ரியா இல்லத்தில் நண்பர்கள் வந்து சந்தித்தனர். நான் இந்துவா கட்டுரையின் தொடக்கக் கேள்வியை எழுப்பிய காளிராஜ் இங்குதான் இருக்கிறார். அக்கட்டுரை ஆங்கிலம் வழியாகவும் இன்று இந்தியாவெங்கும் புகழ்பெற்றுள்ளது. (நான் இ துவா?) காளிராஜ் அவர் மகளுடன் வந்து சந்தித்தார். அவர் மகளும் என் நூலை ஆங்கிலத்தில் வாசித்திருந்தார். அருணுடன் அருகே உள்ள கடற்கரைக்கும் குன்றுகளுக்கும் சிறிய பயணங்கள் மேற்கொண்டோம்.
யூனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியாவில் ஒரு நிகழ்வு. ஐம்பது பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பெரும்பாலும் வெவ்வேறு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை பூர்விகமாகக் கொண்டவர்கள். இந்தியர்களும் உண்டு. ஆனால் அனேகமாக அனைவருமே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்கக் குழந்தைகள்.
மாணவிகள் ஶ்ரீநிதியும், பெக்கியும் என்னை அறிமுகம் செய்து என் நூல் பற்றிக் கேள்விகள் கேட்டனர். அதன்பின் பங்கேற்பாளர்களிடமிருந்து கேள்விகள். ஒரு மணிநேரம் கேள்விபதில், அதன்பின் நூல்களில் கையெழுத்து. அமெரிக்காவில் ஒரு பல்கலையில் ஒரு நூலறிமுக நிகழ்வுக்கு அத்தனைபேர் வந்திருந்தது மிக அரிய நிகழ்வு என்றனர். நான் ஓர் அயல்நாட்டு எழுத்தாளன் என்னும் கவற்சியே காரணம் என நினைக்கிறேன்
கேள்விகள் பெரும்பாலும் இன்றைய அமெரிக்க இளம்தலைமுறையின் வினாக்கள். முதன்மையாக ‘வேர்’ குறித்தது. நான் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில், ஒரு பண்பாட்டில் மாறாத்தொடர்பு கொண்டிருப்பதே வேர் என நினைக்கவில்லை என்று பதில் சொன்னேன். நம் கற்பனைக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட கடந்தகால ஆழத்துடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பே வேர் என்பது. அது ஆழ்படிமங்களாக நம் கனவில் நீடிக்கவேண்டும். வேர் எங்குமாகலாம். உலகம் முழுக்க வேர் பரவியிருக்கலாம். என் வேர் கன்யாகுமரியில் மட்டுமல்ல இமைய மலையில் கூடத்தான். அதைப்போலவே மௌண்ட் சாஸ்தாவும் எனக்கு புனிதமானது, ஆழமானது என்றேன்.
இந்நூற்றாண்டு நம்மை சராசரிப்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றேன். உலகம் முழுக்க அந்தச் சராசரித்தன்மை பரவிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மூலையையும் சென்றடைகிறது. உலகமே ஒரே முகம் கொள்கிறது. இன்று நாம் கொள்ளவேண்டிய முதன்மை எதிர்ப்பு என்பது நம்மை எளிய சராசரிகளாக ஆக்கும் ஊடகங்கள், இலக்கியங்கள் ஆகியவை. எனவே எவை புகழ்பெற்றவையோ அவற்றை ஐயப்படவேண்டும். எவை அனைவராலும் முன்வைக்கப்படுகின்றனவோ அவற்றை கடந்து செல்லவேண்டும்.
வேர் என்றும் தனித்தன்மை என்றும் இரண்டு சொற்களாகச் சொல்லப்பட்டாலும் அவை ஒன்றே. நம்மை நாமாக நாமே வகுத்துக்கொள்வது. நம்மை இன்னொரு உலகளாவிய பெரும் சக்தி வகுத்துக்கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பது. அது தொழில்நுட்பமோ, கல்வியோ, சமூகமுறைமையோ, அரசியலோ எதுவானாலும். ஆகவே எல்லாவகையான கிறுக்குகளும் உயர்ந்தவையே என்பதே என் எண்ணம் என்று நான் சொன்னேன். நாம் இன்று முன்வைக்கவேண்டியது நம் பண்பாட்டின் அசல்சுவையை. அதை மேற்குக்காக எளிமையாக்க வேண்டியதில்லை. அவர்களிடம் எது சென்று சேருமோ அதைச் சொல்லவேண்டியதில்லை. அவர்கள் சற்று முயன்று நம்மை நோக்கி வரட்டுமே.
அந்த உரையாடலே சிறப்பாக அமைந்தது. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய தயக்கம் இருந்தமையால் என் சொற்றொடர்களை நிதானமாகவும், ஒன்றுக்கு இரண்டுமுறையும் சொன்னேன். ஆகவே ஒருவகையான ‘தீர்க்கதரிசனத்தன்மை’ அவற்றுக்கு வந்ததோ என எண்ணிக்கொண்டேன். என்னை ஒரு குலப்பாடகன், நான் பேராளுமைகளையும் விழுமியங்களையும் பாடுபவன் என்றே உணர்கிறேன் என்றேன்.
ஒரு பெண், இந்தவகை எழுத்து இதழியலில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றார். இதழியலும் இலக்கியமாக நோபல் கமிட்டியால் இரண்டுமுறை ஏற்கப்பட்டுள்ளது என்றேன். ஆனால் இதழியல் வெளியே இருந்து பார்ப்பது. இலக்கியம் உள்ளிருந்து பார்ப்பது, உள்ளே சென்று வாழ்ந்து அறிவது. நூறுநாற்காலிகள் கதை ‘அவன்’ என்று பேசவில்லை, ‘நான்’ என்றே பேசுகிறது என்றேன். அந்த தன்மயபாவனையே இலக்கியத்தின் அடிப்படை. வாசகனும் அதேபோல அந்த வாழ்க்கைக்குள் நுழைந்து வாழமுடிகிறது. அது அறியும் அனுபவம் அல்ல, வாழும் அனுபவம்.
நான் ஓர் எண்ணம் கொண்டிருந்தேன், இளையதலைமுறை ஒரு நிலம், ஒரு நாட்டுடன் தொடர்பற்றதாக உருவாகி வருகிறது என. குறிப்பாக அமெரிக்க இளையதலைமுறை. எதிர்கால உலகக்குடிமகன் அப்படிப்பட்டவன் என எண்ணியிருந்தேன். ஆனால் என் உரை முடிந்தபின் மாணவர்கள் பேசியபோது நேர்மாறாக ஒவ்வொருவரும் தங்கள் வேர்நிலம் குறித்த ஒரு புரிதல், தேடல் அல்லது ஏக்கம் கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
மொராக்கோ நாட்டுப் பெண் ஒருவர் நான் சொன்ன ‘அசல் சுவை’ என்பதை தன் நாட்டை வைத்து புரிந்துகொள்வதாகச் சொன்னார். வங்காளத்தில் இருந்து கிளம்பி அமெரிக்காவில் வேர்கொண்ட குடும்பத்து இளைஞர் ஒருவர் ‘வங்கத்தை தேடிக்கண்டடைந்து ஒரு தொடர்பை அடையவேண்டுமா என யோசிக்கிறேன்’ என்றார். அந்த கருத்துக்கள், அவற்றிலிருந்த உணர்ச்சிகரம் என் எண்ணத்தை நேர் எதிர்த்திசை நோக்கி திருப்பின.
ஶ்ரீநிதி, பெக்கிஆனால் ஓர் இளம்பெண் என்னிடம் “நீங்கள் வந்து அமர்ந்ததைக் கண்டதுமே இதோ எங்கள் இடம் என்ற எண்ணம் வந்தது” என்றதுமே நெகிழ்ந்து கண்ணீர் மல்கிவிட்டார். அவரை ஶ்ரீநிதி அணைத்துக்கொள்ள கண்ணீரைத்துடைத்துக்கொண்டு சிரித்து “நமக்கான ஓர் அடையாளம். நமக்கான குரல்” என்றார்.அவர் மிகநல்ல மாணவி என்றும், கல்லூரிப் பேரவை உறுப்பினர் என்றும் கேள்விப்பட்டேன். அந்த நெகிழ்வை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. அது எனக்கு அவர்களைப் பற்றிய என் புரிதலை வேறுவகையில் தொடங்கவேண்டும் என்னும் எண்ணத்தை உருவாக்கியது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

