மானுட மட்காக்குப்பைகள்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய காணொளிகளில் முதியோருக்கான ஆலோசனைகள் நிறைவே உள்ளன. உங்களிடம் பல முதியவர்கள் அதைப்பற்றி பேசி இருப்பார்கள் என்பதனால்தான் நீங்கள் இதைப் பற்றி கூடுதலாகப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக தமிழகத்தில் இந்தத் தலைப்பை இந்த கோணத்தில் பிற எவரும் பேசுவதுபோலத் தெரியவில்லை. நீங்கள் திரும்பத் திரும்ப ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுக்கான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி வருகிறீர்கள். ‘நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்த விஷயம் இன்று தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான நெரேஷனை அடைந்திருக்கிறது. அது இரண்டு பக்கம் கொண்டது. அதாவது பெற்றோரை குழந்தைகள் கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களை முதியோர் விடுதியில் விட்டு விடக்கூடாது, முதியோர் விடுதியில் இருக்கும் பெற்றோர் மிகப் பரிதாபகரமானவர்கள், அங்கே பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டுசென்று சேர்ப்பது என்பது ஒரு பெரிய கொடுமை, இந்தியாவில் பெற்றோரை குழந்தைகள் முதியோர் விடுதிளுக்கு தள்ளிவிட்டு தங்களுடைய தொழிலை வாழ்க்கையும் பார்ப்பதற்கு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் – இது ஒரு பக்க நெரேஷன்.
அதேபோல பெற்றோர் தன்னுடைய இளமைக்காலத்தை முழுக்க குழந்தைகளுக்காகவே செலவழிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படி குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பெற்றோர் அனைவ்ரும் தியாகிகள் என்கிறார்கள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களாம். ஒருவர் செய்யும் தியாகமே அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறதாம். தியாகம் என்பது ஒரு உயர்ந்த பண்பு நிலையாம். இதெல்லாம் இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு நெரேஷன்களும் ஒன்றை ஒன்று சரியாக நிரப்புகின்றன. அதாவது பெற்றோர் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும், பிள்ளைகள் பெற்றோருக்காக வாழ வேண்டும், ஒட்டுமொத்தமாக யாரும் தங்களுக்காக வாழ கூடாது, தங்களுக்கான மகிழ்ச்சியோ லட்சியமோ கொண்டிருக்ககூடாது. அது தான் தியாகம். இதைத்தான் ஒவ்வொரு பட்டிமன்றப் பேச்சாளரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் சீரியல் அனைத்திலிருந்தும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை நம்பித்தான் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்தார்கள். அதாவது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று நம்ப வைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான வாழ்க்கைக்காக தங்களுடைய எல்லாவற்றையும் அவர்கள் தத்தம் செய்தார்கள். விளைவாக அவர்கள் வாழவே இல்லை. பிள்ளைகளை வளர்த்து அவர்கள் கையில் இருந்து பறந்து சென்றதும் அவர்கள் முதலில் பெருமை அடைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வாழ்க்கை இழந்துவிட்டதாகதான் உணர்கிறார்கள்.
அந்த இழப்பு உணர்வு இருந்தால் பிள்ளைகள் மேல் ஒரு மறைமுகமான கசப்பு உருவாகிறது. பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ்வது பிடிக்காமல் ஆகிறது. பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் அவர்களைப் போலவே தங்களுடைய வாழ்க்கையை தங்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமாகச் செலவழித்து இருந்தார்கள் என்றால் இவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கிறது என்பதைப் பார்ப்பது இந்தப்பெற்றோருக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை.
இன்றைய பெற்றோர் இமோஷனல் பிளாக்மெயில் செய்வதற்காக தங்களுடைய தியாகத்தை ஒரு பெரிய அடையாளமாக காட்டுகிறார்கள். தங்களுடைய தியாகத்தால்தான் பிள்ளைகள் வளர்ந்தார்கள், ஆகவே அந்த பிள்ளைகள் அதை எப்போதும் உணர்ந்து இருக்க வேண்டும், எந்த நிலையிலும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் – என்றுசொல்லும் பெற்றோர்கள் ஏராளமாக உள்ளனர். தாங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் வாழ்ந்தோம், ஆகவே தன் பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு முதியோர் ஏராளமாக உள்ளனர். ஒரு நாசகாரக் கூட்டமாக இந்தப் பெற்றோர் இன்றைக்கு மாறிவிட்டிருக்கிறார்கள்.
இந்த உண்மையை நாம் இன்று சொல்லியாக வேண்டும். ஏனெனில் இந்த உண்மை நிறைய குடும்பங்களில் வன்முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நிறைய குடும்பங்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனெனில் இந்தப் பெற்றோரை என்ன செய்வது என்பது அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய சவால். இந்த பெற்றோரை அவர்கள் தங்களுடன் வைத்திருக்க முடியாது. இந்த பெற்றோரை வேறு எங்காவது அனுப்பவும் முடியாது. இந்தப் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்யலாம், ஆனால் இந்தப் பெற்றோர் சொல்லும்படி வாழ்க்கை அமைத்துக் கொண்டால் இந்த நூற்றாண்டின் மொத்த வாய்ப்புகளையும் இழந்து விட வேண்டி இருக்கும். சொந்தமாக அகப்பயணமோ புறப்பயணமோ இருக்காது. சாதனைகளோ மகிழ்ச்சிகளோ இருக்காது. இன்னும் ஒரு படி மேலே சென்று இந்தப் பெற்றோர் இன்று பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையிலும் தலையிட்டு அழிக்கிறார்கள்.
இந்தச் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் அவரவர்களுக்காகத்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் சொல்வது முக்கியமானது. கடமையைச் செய்வது என்பது தியாகம் அல்ல. கடமையை செய்தாக வேண்டும். அதற்காக மொத்த வாழ்க்கையும் இழந்ததும், இழப்பதும் பிழையானது என்கிறீர்கள். அறியாமையால் அப்படி தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் அதை பிறவரிடமிருந்து திருப்பிக் கேட்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். முக்கியமான குரல் இது.
உங்கள் காணொளிகளில் ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். ‘உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்களா?’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த கேள்வி முக்கியமானது .அந்த கேள்வியை முன் வைப்பதற்காக உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
(என்னுடைய பெற்றோரும் இதை படிப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆகவே இந்த கடிதத்துடன் என் பெயரை சேர்க்க வேண்டியது இல்லை)
அ
அன்புள்ள அ,
நம் சூழலில் ஒவ்வொருவரிடமும் சில மதிப்பீடுகளை மரபு ஏற்றியுள்ளது. எந்த ஒரு மரபும் நீண்டகால நாகரிகத்தின் ஊடாக சில நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, அதைச்சார்ந்த உணர்வுநிலைகளை உருவாக்கி இருக்கும். அவற்றையே நாம் விழுமியங்கள் என்று சொல்கிறோம். விழுமியங்கள் என்பவை நாம் நம்பி ஏற்க வேண்டியவை, நிறைவேற்றப்படவேண்டியவை, கைமாறப்பட வேண்டியவை.
இந்த விழுமியங்களில் முதன்மையானதாக இருப்பது தியாகம். தியாகம் என்று சொல்லை மிக விரிவான பொருளில் உலகத்தின் எல்லா நாகரிகங்களும் பயன்படுத்தி இருப்பதை பார்க்கலாம். உண்மையில் அனைத்து உயிர்க்குலங்களிலும் அது காணப்படுகிறது. தேனீக்கூட்டில் இன்னொரு பூச்சி வந்துவிட்டது என்றால் உடனடியாக அந்த பூச்சி மேல் பாய்ந்து அதை கொன்றுவிட்டு தாங்கள் உயிர்விடும் போர்த்தேனீக்களின் செயலை தியாகம் எனலாம். எறும்புகளில் பாக்டீரியாக்களில் கூட அப்படிப்பட்ட தியாகம் உள்ளது.
அந்த தியாகத்தின் ஊடாகவே அந்த ஒட்டுமொத்த அமைப்பு கட்டிக் காக்கப்படுகிறது. ஆகவே பழைய சமூகங்களில் போர்வீரனின் தியாகம் என்பது மிகப்பெரிய அளவிலே போற்றப்பட்டது. அவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். வழிபடப்பட்டார்கள். பண்பாடு நமக்குக் கிடைக்கும் தொடக்க காலத்திலேயே நடுகற்கள் நமக்கு உள்ளன. நவீன சமுதாயத்தை உருவாக்கிய அடிப்படை விழுமியங்களில் ஒன்று வீரத்தியாகம் என்று சொல்லலாம். இன்றும் கேள்விக்கு அப்பாற்பட்டு அது கொண்டாடப்படுகிறது.
அடுத்ததாக, ஒவ்வொரு உயிரும் அடுத்த தலைமுறைக்காக செய்யும் தியாகத்தை சொல்ல வேண்டும். ஒரு தெருநாய் குட்டி போட்டபின் ஒரு மாதத்தில் அதை பார்த்தால் தியாகம் என்பதன் மதிப்பென்ன என்று தெரியும். ஐந்து குட்டிகள் போட்ட நாய் அதன் மொத்தத் தசையையுமே குட்டிகள் உறிஞ்சி எடுத்துக் கொள்வதை உணர்ந்துதான் இருக்கின்றது. அது இரவு பகலாக உணவு தேடி, நரகலை உண்டு, அலைந்து திரிந்து மெலிந்து சொறிபிடித்து மறையும். தந்தை உருவாகி வந்த விலங்குச் சமூகங்களில் தந்தையின் தியாகமும் அதற்கிணையானது என்பதை கொரில்லாக்களில் காணலாம். பறவைகளில் கூட இருவாச்சியில் (கிரேட் ஹார்ன்பில்) தந்தையின் தியாகத்தைக் காணலாம். இத்தகைய தியாகங்கள் வழியாகவே குடும்பம் என்னும் அமைப்பு நிலை நிறுத்தப்படுகிறது.
இவ்விரு அடிப்படைத் தியாகங்களுக்கும் மேலாக ஒவ்வொரு தனிமனிதரும் செய்தாக வேண்டிய பல தியாகங்களை விழுமியங்கள் என்ற வடிவில் நம் சமூகம் நமக்கு அறிவுறுத்துகிறது. விருந்தினருக்கு உணவு ஊட்டுவது என்பது அதில் ஒரு தியாகம். மகாபாரதத்தில் ஒரு கதை. பலநாள் பட்டினி நோன்பு இருந்து உயிர்விடும் தருவாயில் சற்று உணவைப் பெற்ற ஒரு முனிவர் அங்கே வந்த இன்னொரு முனிவருக்கு விருந்தூட்டும் பொருட்டு அந்த உணவை அவருக்கு அளித்து தான் உயிர் துறக்கிறார். அந்த உணவின் மிச்சம் விழுந்த் இலையில் புரண்டதனால் ஒரு கீரி தன் உடலை பாதி பொன்னாக்கிக் கொண்டது. எஞ்சிய உடலை பொன்னாக்கும் பொருட்டு அது யுதிஷ்டிரர் அளித்த மாபெரும் வேள்வி விருந்தின் எச்சில்மேல் புரண்டது. உடல் பொன்னாகவில்லை. மாபெரும் ராஜசூய வேளவியை விட அந்த முனிவர் அளித்த எளிய கொடை பெரிது என்று மரபு கூறுகிறது.
மூன்றாவது வகைமை என்பது மாமனிதர்களின் தியாகம். தலைவர்கள் தங்கள் குடிகளுக்காக தியாகம் செய்கிறார்கள். தியாகம் வழியாகவே தலைவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். காந்தி தலைவராக ஆனது அவருடைய தியாகத்தினூடாக மட்டுமே. தலைமைப் பண்பு என்பது ஒரு பெரும் தியாகமாகவே கொள்ளப்படுகிறது. சான்றோர் தங்களுடைய அனைத்தையும் பிறருக்காக அளிப்பவர்கள் என்றும், என்பும் உடையார் பிறர்க்கு என்று அதைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார்.
விழுமியங்கள் மேல் அவநம்பிக்கை கொள்ளும் ஒரு சமூகம் காலப்போக்கில் தன்னுடைய கட்டுக்கோப்பை இழக்கும். ஆகவே தியாகம் என்னும் விழுமியம் என்பது நம்முடைய மரபு நமக்கு கற்பித்தது. ஆனால் இன்று வாழ்க்கைச்சூழல் மாறுவதை ஒட்டி அந்த விழுமியம் மாற்றப்படவில்லை. வாழ்க்கையின் அடிப்படை வசதிகளுக்காகவே போராடிக் கொண்டிருந்த ஒரு சூழலில் குடும்பத்துக்காக தியாகம் செய்வது என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. ஒரு குடும்பத் தலைவனின் ஒற்றை வருமானத்தில் ஏழெட்டு பேர் கொண்ட குடும்பங்கள் வாழ்ந்த ஒரு காலம் தமிழகத்தில் இருந்தது. அன்று குடும்பத் தலைவன் தனக்கென எதுவும் செய்யாமல் தன்னுடைய கடைசித் துளி உழைப்பையும் அந்த குடும்பத்திற்காக அளித்து ஒரு தியாகியாக வாழ்வது என்பது ஒரு வகையில் நியாயப்படுத்தப்பட்டது. அவர் தன் கடமையை தான் செய்கிறார், ஆனாலும் அது தவிர்க்கமுடியாத தியாகமும் கூட. அப்படி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, அவை கொண்டாடவும் பட்டன (உதாரணம், ஆறிலிருந்து அறுபது வரை)
அந்தச்சூழல் இன்று இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்று ஒருவர் தன்னுடைய முழுவாழ்க்கையையும் குடும்பத்துக்காக அளிக்க வேண்டிய தேவை இல்லை. கடமையை முழுமையாகச் செய்தபின்னர் அவர் தனக்கெனவும் கனவும், செயலும் கொண்டிருக்க முடியும். இன்றைய குடும்பங்களில் பெண்கள் தங்கள் கணவர்கள் குடும்பத்திற்காக மட்டுமே உயிர்வாழவேண்டிய ஒருவகை அடிமைகள் என பல நினைக்கிறார்கள்.பல குழந்தைகள் தங்கள் பெற்றோர் தங்களுக்காக மட்டுமே வாழவேண்டிய அடிமைகள் என நினைக்கிறார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்னை என்பவர் தங்களால் கடைசிச்சொட்டு வரை உறிஞ்சி எடுக்கப்படவேண்டிய ஒரு வளர்ப்பு மிருகம். தியாகம் என்னும் விழுமியம் இன்று அடிமைமுறை – இரக்கமற்ற சுரண்டல் என ஆகியுள்ளது. அதற்கு நம்மை அளிக்கவேண்டியதில்லை. இன்னொருவர் நமக்காக வாழவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றால் மிகமிகக் குரூரமான சுரண்டல் ஒன்றை நிகழ்த்துகிறோம் என்றே பொருள்.
தியாகம் உயர் விழுமியமே. ஆனால் தியாகத்தை விட பெரிய உயர்விழுமியம் என்பது ஒருவர் தன்னை அறிவார்ந்தும், ஆன்மிகமாகவும் முன்னகர்த்தி தன் ஆளுமையை முழுமை செய்துகொள்வது. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான ஆன்மிகப் பயணங்களை நம்முடைய மரபு கூறுகிறது. ஒன்று மெய்ஞானம் நோக்கிய பயணம். அறிந்தும் உணர்ந்தும் ஒருவர் தன் ஆன்மிக விடுதலை நோக்கி பயணம் செய்யவேண்டும். அந்த ஞானவழி என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் தளத்தில் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அனைத்தையும் துறந்து ஞானத்தின் பொருட்டு சமூகத்தில் இருந்தே வெளியே செல்பவர் ஓர் உச்ச நிலையில் இருக்கிறார். இல்லறத்தில் இருந்து கொண்டு, மிகச்சிறிய அளவிலேனும் தன்னை ஞானத்திற்கு ஒப்படைப்பவர் ஞானப் பாதையில் தானும் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
இரண்டாவது பயணம் நற்செயல்கள் வழியாக ஒருவர் அடைவது. புண்ணியம் என அது வகுக்கப்பட்டுள்ளது. இறைச்சேவை மற்றும் மானுடச்சேவையினூடாக அடையும் விடுதலை அது. ‘யாவர்க்கும் ஆம் இறைவர்க்கொரு பச்சிலை’ என தொடங்கும் திருமூலர் பாடலின் சாரமே அதுதான். ஒவ்வொருவருக்கும் அவர் தளத்தில் செய்ய இயலும் நற்செயல், அறச்செயல் என சில உள்ளன. அவற்றை செய்தே ஆகவேண்டும்.
கடமைகள் இரண்டுவகை. உலகியல் கடமைகள் மற்றும் ஆன்மிகக்கடமைகள். நாம் உலகியல் கடமைகளை மட்டுமே செய்பவர்களாக இன்று இருக்கிறோம். அதை மட்டும் செய்தால் நாம் நல்லவர்கள் என்றும் சான்றோர்கள் என்றும் நினைக்கிறோம். நான் சந்திக்கும் ஒவ்வொரு முதியவரும் தங்கள் பிள்ளைகளுக்குத் தாங்கள் செய்தவற்றை தாங்கள் நிகழ்த்திய பெரிய வாழ்க்கைச் சாதனையாக கூறுகிறார்கள். அது உலகியல் கடமையைச் செய்தல் மட்டுமே. அதற்கப்பால் அவர்களுக்கென ஆன்மிகநாட்டம், அறிவுநாட்டம் ஏதும் இல்லை. அந்த வெறுமையையே பெரும்பாலானவர்கள் முதுமையில் உணர்கிறார்கள். அது கசப்பாக ஆகிறது. அதை பிள்ளைகள் மேல் சுமத்துகிறார்கள். தானும் கசந்து பிள்ளைகள் வாழ்க்கையையும் கசப்பாக ஆக்குகிறார்கள்.
இந்த ‘பயனற்ற முதியோர்’ இன்று இந்திய சமூகத்தின் மாபெரும் சுமை. நவீன நாகரீகம் உருவாக்கிய நுகர்வோர் கலாச்சாரம் இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் குப்பைமலைகளை உருவாக்கியுள்ளது, அது உலகுக்கே பெரிய தீங்கு என்கிறார்கள். அதற்கிணையானது இந்த மானுடக்குப்பைக் குவியல். இதை எப்படி என்ன செய்வது என்பது இன்று மிகப்பெரிய சவால்தான். நவீன மருத்துவத்தின் வழியாக இந்த குப்பைகள் எளிதில் மட்காமல் நீண்டகாலம் நீடிக்கின்றன என்பது அச்சவாலை இன்னமும் கடினமாக ஆக்குகிறது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

