ரமேஷ் நினைவும் விருதுகளும்

அன்பு மிகு ஜெமோ அவர்களுக்கு வணக்கம்.

நலந்தானே..?

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார்.வருத்தமானது.இந்த நிலையில் எனக்குள் சில சந்தேகங்கள் அல்லது கேள்விகள்.பொதுவாகவே இதுபோன்ற இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முன்பு படைப்பாளி இறந்துவிட்டால் அவரின் வாரிசுக்கு அந்தப் பரிசை விருதை வழங்குவதுதானே முறை. மரபும் கூட. அவருக்கு ஒரு பொண்ணு இருக்கும்போது அந்த விருது தோகை ஏன் அவருக்கு நீங்கள் வழங்கவில்லை? 

அடுத்து, இலக்கியப் பரிசு விருது என்பதே நிறைய நல்ல படைப்புகள் எழுதியவர்கள் அல்லது நிறைய எழுதியும் கவனிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு வழங்குவது தானே முறை. இப்படி தகுதியான எவ்வளவு எழுத்தாளர்கள் இளம் படைப்பாளிகள் உட்பட தமிழகத்தில் இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் பரிசீலிக்காமல் ஒன்றிரண்டு படைப்புகள் எழுதிய யாருக்கும் தெரியாத ஐவருக்கு ரமேஷ் பிரேதனின் ஐந்து இலட்சம் ரூபாயை ஆளுக்கு ஒரு இலட்சம் என எதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ன அளவுகோல் அல்லது தகுதியின் அடிப்படையில் இவர்களை வி.பு. வாசகர் வட்டம் அல்லது நீங்கள் தேர்வு செய்தீர்கள்? இவர்கள் ஆரம்பகட்ட எழுத்தாளர்கள். இன்னும்  ஆகச் சிறந்த படைப்புகளை அவர்கள் இன்னும் எழுதவுமில்லை.

விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றியுடன் 

தங்கள் அன்புமிக்க 

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.

அன்புள்ள ஃபிர்தௌஸ்

மிகத்தொலைவில், வேறொரு சூழலில், வேறொரு பெருஞ்செயலில் இருக்கிறேன். ஆனாலும் முகநூல் சர்ச்சைகளை எவரோ சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ரமேஷ் 12 ஆண்டுகள் படுக்கையில் இருந்தபோது, மூன்றுமுறை சாவின் விளிம்பை தொட்டபோது உருவாகாத அக்கறை இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகியிருப்பதுகூட நல்லதுதான் என நினைக்கிறேன்.

அனைத்தும் ரமேஷின் விருப்பத்தை ஒட்டியே நிகழ்கிறது. ஆகவே அதில் மாற்றுக்கருத்து தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை. ரமேஷ் தொடர்ச்சியாக அவருடைய சாவு குறித்து சொல்லிவந்தார், நான் அவரிடம் அதைப்பேச தயங்கினேன் என்றாலும் அவர் தன் விருப்பத்தை அனைவரிடமும் தெளிவாகத் தெரிவித்திருந்தார். அதன்படியே அனைத்தும் செய்யப்படுகின்றன. அவருடைய இறுதிச்சடங்கு உட்பட.

அவர் மறைந்தால் விருதுத்தொகை மற்றும் அவருடைய வீடு ஒத்திக்கு எடுக்கப்பட்டதற்கு அளிக்கப்பட்ட தொகை உட்பட அனைத்தையும் கொண்டு பல்கலை ஒன்றில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு மொழியியல், சமூகவியல் மற்றும் இலக்கியத்தில் ஆய்வுசெய்யும் மாணவர் ஒருவருக்கான உதவித்தொகை வழங்கப்படவேண்டும் என்பதே அவருடைய முதல் கோரிக்கை. அல்லது விருதுத்தொகை இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

குறிப்பாக எழுதத் தொடங்கும் படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்படவேண்டும் என்பது ரமேஷின் எண்ணம். ‘விருது வழியாக எழுத்தாளர் கவனிக்கப்படவேண்டும், கவனிக்கப்பட்ட பின் விருது எதற்கு?’ என்பது ரமேஷின் கருத்து. ‘எனக்கு 30 வயதில் விருது அளிக்கப்பட்டிருந்தால் உண்மையில் மகிழ்ந்திருப்பேன், மற்ற விருதுகள் எல்லாம் பணம் மட்டுமே’ என்று பிரபஞ்சன் விருது பெற்றதை ஒட்டி நான் வாழ்த்தியபோது குறிப்பிட்டார்.

உடனடியாக பல்கலைக்கழக அறக்கட்டளை அமைப்பது இயலாதென்பதனால் இளம்படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு புதிய நிதி கண்டடையப்பட்டு அந்த அறக்கட்டளையும் அமைக்கப்படும். அவருடைய இறுதிநாட்களில் அவருடைய சகோதரிகள் உடனிருந்தனர். அவர் தங்கியிருந்த இல்லம் அவருக்காக அவர் சகோதரியிடமிருந்து ஒத்திக்கு எடுக்கப்பட்டது. அந்த தொகை அவர்களிடமே இருக்கட்டும் என முடிவெடுக்கப்பட்டது.

தன் படைப்புகள் எல்லாமே அச்சில் வரவேண்டும், எழுதி முடிக்கப்படாதவைகூட வெளியாகவேண்டும் என்பது அவருடைய இன்னொரு விருப்பம். (எந்தப் படைப்பையும் எழுதி முடிக்க முடியாது, ஆகவே முடிவடையாத படைப்பு என்பதும் இல்லை என்பது அவருடைய கருத்து)

*

விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நாங்கள் தொடர்ச்சியாக விருதுகள் வழங்கி வருகிறோம், படைப்பாளிகளுக்கு மேடை அமைத்து அளிக்கிறோம். முக்கியமான அனைவருக்கும் இடமளிப்போம், விருதுகளும் அளிப்போம். அவர்களில் சாதனை செய்த படைப்பாளிகள் உண்டு, சாதனை செய்யப்போகும் இளம் படைப்பாளிகளும் எப்போதும் உண்டு.

‘நிறைய நல்ல படைப்புகள் எழுதியவர்கள்’ அல்லது ‘நிறைய எழுதியும் கவனிக்கப்படாமல் இருப்பவர்கள்’ ‘தகுதியான எழுத்தாளர்கள்’, ‘இளம் படைப்பாளிகள்’ என பலரைச் சொன்னீர்கள். கண்டிப்பாக இருப்பார்கள். நாங்கள் கவனித்தவர்களில் எங்களுக்கு முக்கியமானவர்கள் என பட்டவர்களில் சிலருக்கு இப்போது விருது வழங்குகிறோம். இன்னும் பலருக்கு எதிர்காலத்தில் மேடை அமைத்து அளிப்போம், விருதுகளும் அளிப்போம். ஏனென்றால் நாங்கள் இலக்கியவாசகர்களின் பெருங்குழுமம்.

இதேபோல நீங்களும் நீங்கள் தகுதியானவர்கள் என கருதுபவர்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி முன்னிறுத்தலாமே. அனைவரும் இதைச் செய்யலாமே. எவ்வளவு நல்ல விஷயம் அது!

விஷ்ணுபுரம் விருதுகளில் விஷ்ணுபுரம் விருது, தமிழ்விக்கி– தூரன் விருது இரண்டும் சாதனை செய்த மூத்தவர்களுக்கானவை. ஆனால் குமரகுருபரன் விருது சாதனை செய்யவிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கானது. குமரகுருபரன் விருதுபெற்ற பலர் ஒரு நூல் மட்டுமே எழுதியவர்கள்.

இளம்படைப்பாளிகளுக்கான அத்தகைய பரிசுகள் உலகமெங்கும் உள்ளன. அவ்வகையிலேயே இந்த விருதுக்கும் படைப்பாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு படைப்பாளியை அவர்களின் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு, பிறருக்குச் சுட்டிக் காட்டுவதே இவ்விருதுகளின் நோக்கம். அவர்கள் தொடர்ச்சியாக எழுத அது ஊக்கமாக அமையும். அவர்களை பிறர் கவனித்து, தொடர்வதற்கும் அது வழிவகுக்கும். முதல்படைப்பிலேயே அகிலன் விருது பெற்று, அவ்விருது வழியாக அறியப்பட்டவன் நான். அதன்பின் எல்லா ஆண்டுகளிலும் தேசியவிருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். இளம்படைப்பாளிகளுக்கான சம்ஸ்கிருதி சம்மான் விருது உட்பட.

விஷ்ணுபுரம் இலக்கியமேடையிலேயே எப்போதும் மிக இளம்படைப்பாளிகள் மேடையேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் எழுத வரும்போதே கவனிக்கப்படவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.இளம்படைப்பாளிகளை முன்னிறுத்தும் அத்தகைய விருதுகள், மேடைகள் ஏன் அவசியம் என சென்ற குமரகுருபரன் விருது விழாவிலேயே விளக்கியிருந்தேன். இதெல்லாம் இலக்கியவாசகர்களுக்கு தெரிந்தவை.  

அழகியமணவாளன்

இத்தகைய விருதுகளை அளிக்கும் தகுதி கொண்ட இன்னொரு அமைப்பு இன்று தமிழ்ச்சூழலில் இல்லை. எங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு இலக்கியத்தில்  தொடர்கவனம் கொண்ட பிறரையும் நான் கண்டதில்லை. ஒருவர் இந்த விருது விஷயத்தில் கருத்து சொல்வாரென்றால் ‘நீங்கள் ஏற்கனவே படித்து விவாதித்து முன்வத்த படைப்பாளிகள் எவர்? என்பதே என் கேள்வியாக இருக்கும்.

அனைத்தையும் வாசிப்பவர்கள் அடங்கிய அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். கிட்டத்தட்ட உலகம் எங்கும் ஒரேசமயம் 30 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் இணைய அரங்குகளில் ஆண்டு முழுக்க அனைத்து இலக்கிய நூல்களையும் விவாதிப்பவர்கள் நாங்கள். அந்த கவனம் மற்றும் உரையாடலின் விளைவாகவே எழுத்தாளர்கள் விருதுகளுக்குத் தெரிவாகிறார்கள். ஆகவேதான் இந்த விருதுகள் மதிப்புள்ளவை ஆகின்றன.

எங்கள் அரங்குகளுக்கு அழைக்கப்படுபவர்களில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் என மூன்றுவகையினர் உண்டு. இந்த விருதுகளிலும் அந்த விகிதம் பேணப்பட்டுள்ளது.எங்கள் விருதுகள் பெறுபவர்களை பற்றிய கச்சிதமான அறிமுகம் தமிழ்விக்கியில் உள்ளது. அவற்றை வாசிப்பவர்கள் மட்டுமே இலக்கியம்பேசும் தகுதி கொண்டவர்கள்.

மொழியாக்கம் மற்றும் ஆய்வுத் துறைகளில் மிகமுக்கியமான தொடக்கத்தை நிகழ்த்திய இருவருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.அவர்களின் நூல்களை வாசகர் எவரும் வாசித்துப் பார்க்கலாம். அவை நீண்டகால உழைப்பின் விளைவுகள், அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட மிகமுக்கியமான தொடக்கங்கள் என்பதை அறிவுத்தகுதி கொண்டவர்கள் மறுக்கமாட்டார்கள். முகநூலில் சதா அரசியலும் சினிமாவுமாகச் சலம்பும் கூட்டம் நடுவே இத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆய்வுச்செயல்பாடு என்பது மிகமிக அரிதான ஒன்று.

சஜு

சஜு அ.கா.பெருமாள் அவர்களால் கண்டடையப்பட்டவர். ஆற்றுமாடன் தம்புரான் என்னும் அவருடைய நூல் இளையதலைமுறையினரால் செய்யப்பட்ட நாட்டாரியலாய்வுகளில் முதன்மையானது. கள ஆய்வின் வழியாக அசல் தரவுகளை சேகரித்து நேர்த்தியாக எழுதப்பட்ட ஆக்கம். கொட்டடிக்காரன் என்னும் அவருடைய நூல் நாட்டுப்புற தாளவாத்தியக்காரராக அவருடைய வாழ்க்கை பற்றிய சித்திரம். நாட்டாரியல் பதிவு என்னும் வகையிலும் முக்கியமானது.

அழகிய மணவாளன் இன்று கேரளத்திலும் கதகளிச் சூழலில் அறியப்பட்டவர். அவர் எழுதிய கதகளி பற்றிய கட்டுரைகள், மலையாள அழகியல் கோட்பாட்டு மொழியாக்கங்கள் மிகமுக்கியமான பங்களிப்புகள், அகழ் இதழில் அவற்றைப் பார்க்கலாம். அவருடைய நாவல் என்னும் கலைநிகழ்வு என்னும் நூல் வெளிவந்துள்ளது. கல்பற்றா நாராயணன் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவுள்ளது. கலை சார்ந்த அவருடைய பார்வையை அறிய அவருடைய பேட்டியை  பார்க்க “I unconsciously longed for an alternative cultural space”

செல்வக்குமார்

புனைவிலக்கியத்துறையில் ஒரு முக்கியமான படைப்பையேனும் எழுதியவர்களை தேர்வுசெய்து, அவர்களில் இருந்தே பரிசுக்குரியவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அனேகமாக வெளியாகும் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கும் விஷ்ணுபுரம் நண்பர்களின் பரிந்துரையில் இருந்தே இத்தேர்வு நிகழ்ந்தது. புனைவிலக்கியம் சார்ந்த எல்லா வகைமைகளிலும் ஒவ்வொருவர் என தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

செல்வகுமார் பேச்சிமுத்துவின் கௌளிமதம் அண்மையில் கவனிக்கப்பட்ட நாவல். வட்டாரவழக்கு சார்ந்த யதார்த்தச் சித்திரங்கள் தமிழிலக்கியத்தின் முக்கியமான புனைவு வகை. அதில் பூமணி, சோ.தர்மன், கண்மணி குணசேகரன், இமையம் வகையிலான எழுத்து இது. ராக்கம்மா என்னும் ஒரு கிராமப்பெண்ணின் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியைச் சித்தரிக்கும் படைப்பு அது. செல்வகுமார் முக்கியமான படைப்பாளி என்பதற்கான சான்று.

அசோக் ராம்ராஜ்

தேவி லிங்கம் எழுதிய நெருப்புஓடு பொற்கொல்லர்களின் வாழ்க்கையை சித்தரிப்பது. சிறிய உலைக்கலம் நெருப்போடு எனப்படுகிறது. அங்கே உருகும் வாழ்க்கை என அம்மக்களின் இன்றைய நிலையைச் சித்தரிக்கும் முக்கியமான ஆக்கம் இது. பெண்களின் படைப்புகளில் வழக்கமாக உள்ள குடும்பச் சிக்கல், தன் வரலாற்றுத்தன்மை ஆகியவற்றுக்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக் களத்தின் நுணுக்கமான சித்திரங்களை அளிக்கும் இந்நாவல், அந்த தகவல்களை கவித்துவக் குறியீடுகளாக விரித்தெடுப்பதும்கூட.

தமிழில் எழுதப்படாத சமூகங்களின் வாழ்க்கை புனைவுக்குள் வருவதென்பது சென்ற கால்நூற்றாண்டாக நிகழும் குறிப்பிடத்தக்க இலக்கியப்போக்கு. ஜோ.டி.குரூஸ் போன்று அதற்கான முன்னுதாரணங்கள் பல. இன்னும் பல களங்கள் இதில் திறந்துகொள்ளவேண்டும். தேவிலிங்கத்தின் நாவல் அவ்வகையில் மிகக்குறிப்பிடத்தக்கது.

தேவி லிங்கம்

தமிழில் எப்போதுமே மொழியிலும் வடிவிலும் சோதனைகள் செய்யும் எழுத்துமுறை இருந்துவந்துள்ளது. அதில் வெற்றிகளும் தோல்விகளும் உண்டு என்றாலும் அவ்வகை எழுத்து தமிழின் முக்கியமான கூறு. அதைச் சார்ந்தவை அசோக் ராம்ராஜின் ரித்னாபூரின் மழை, கடைசி அர்மீனியன் என்னும் இரு தொகுதிகளும். 

இலக்கிய வாசகர்கள் இந்நூல்களை வாசித்துப்பார்க்கலாம்.  

 ஜெ

விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம்

விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.