“வாழ்க்கைபற்றி பேசுவது என்னும் குற்றம்”
   
அன்புள்ள ஜெ
நீங்கள் எழுதிய ரமேஷ் பிரேதனின் அஞ்சலிக்குறிப்பு பற்றிய விவாதங்களைக் கண்டேன். அதில் ஒரு பகுதி உங்கள் மேல் தனிப்பட்ட காழ்ப்பு கொண்ட சில்லறை எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் என்றுமே ஒரு பொருட்படுத்தத்தக்க எழுத்தை உருவாக்கிவிட முடியாது. வாழ்க்கை முழுக்க அவர்களால் முகநூல் வம்புகளில்தான் ஈடுபட முடியும். அதிலும் இதேபோல ஏதாவது முக்கியமான ஆளுமைகளை இழிவுசெய்யும்போது அவர்களுக்கு எதிரான அரசியல்கும்பல் வந்து ஆதரவு தெரிவிக்கும். தங்களுக்கு வாசகர்கள் இருப்பதாக இவர்கள் ஒரு போலி ஆறுதலை அடைவார்கள். எஞ்சியவர்கள் உங்கள் மேல் தீராத காழ்ப்பு கொண்ட வழக்கமான கூட்டம். பெரியாரிஸ்டுகள் முதல் கம்யூனிஸ்டுகள், இந்துத்துவர்கள் என எல்லா தரப்பினரையும் எதிரிகளாக ஆக்கி வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் முக்கியமான இன்னொரு அம்சம் உண்டு. அதைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன். நீங்கள் சுந்தர ராமசாமி பற்றி சு.ரா.நினைவின் நதியில் எழுதியபோதுகூட இதேபோல எதிர்ப்புகள் வந்தன. அப்போது சமூகவலைத்தளங்கள் இல்லை என்பதனால் அதெல்லாம் சிறுவட்டத்திற்குள் நின்றன. அதற்கான காரணம்தான் முக்கியமானது. இங்கே ஒருவர் மாண்டால் அவரைப்பற்றி மிகச்சம்பிரதாயமான, தேய்ந்துபோன சில சொற்றொடர்களைத்தான் சொல்லவேண்டும்.
அதை எப்படி வேண்டுமென்றாலும் புகழலாம். எந்த பொய்யை வேண்டுமென்றாலும் சொல்லலாம். எல்லாவகை சைக்கோபன்ஸிக்கும் இடமுண்டு. பகுத்தறிவு முற்றிப்போய் ‘திரும்பிவா தலைவா!’ என்று கதறலாம். அதெல்லாம் இயல்பாகத்தான் கொள்ளப்படும். ஆனால் உண்மையில் அவர் வாழ்ந்த விதத்தைச் சொல்லக்கூடாது. அவருடைய கஷ்டங்களைச் சொல்லக்கூடாது. அந்தக் கஷ்டங்களைக் கடந்து அவர் சாதனைகளைச் செய்ததைக்கூடச் சொல்லக்கூடாது. மறைந்தவரின் ரசனை, மறைந்தவருடனான உரையாடல்கள் எதையுமே சொல்லக்கூடாது.
ஏன் நம்மவர்கள் மிகமிகச் சம்பிரதாயமான விஷயங்களைப் பேசுகிறார்கள்? காரணம் இதுதான். எது சொன்னாலும் நம்மவர் புண்படுவார்கள். அவமானப்படுத்திவிட்டார், இழிவுபடுத்திவிட்டார் என்று பொங்குவார்கள். சுந்தர ராமசாமி மறைந்தபோது அவரைப்பற்றி எவ்வளவு அஞ்சலிக் கட்டுரைகள் வந்தன என்று ஒருமுறை எழுதியிருந்தீர்கள். எல்லாமே வெறும் வார்த்தைகள். அவருடன் பழகியபோது நிகழ்ந்த ஒரு அனுபவத்தைக்கூட எவரும் எழுதவில்லை. ஒரு நினைவைக்கூட பகிரவில்லை. ஜெயகாந்தனின் மறைவுக்குப்பின்னரும் அதேபோல மிகச்சாதாரணமான பொதுவான சொற்றொடர்கள்தான் சொல்லப்பட்டன.
எவரைப்பற்றியும் எதுவுமே சொல்லக்கூடாது என்பதுதான் தமிழ்மனநிலை. பொய்யான புகழ்மொழி தவிர எதைச்சொன்னாலும் அதனை அவமதிப்பாகவே நினைப்பார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ்.ஜார்ஜின் நூலை நீங்கள் எழுதியபோதும் இதேபோல உணர்ச்சிக்கொந்தளிப்பு எழுந்தது ஞாபகமிருக்கிறது. தமிழில் நீங்கள் எவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதினாலும் அவமதிப்பு என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் வேறு எவருமே எந்த எழுத்தாளர் பற்றியும் எதுவுமே எழுதியதில்லை. அத்தனை பேரைப் பற்றியும் நீங்கள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். தமிழில் காமராஜ், அண்ணாத்துரை, பெரியார், எம்.ஜி.ஆர், கருணாநிதி எவரைப் பற்றியும் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு இல்லை. வெறும் புகழஞ்சலிகள் மட்டுமே உள்ளன.
   
நீங்களே இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் கேரளப்பின்னணியில் இருந்து வருகிறவர். நான் 26 ஆண்டுகள் கொல்லம், எர்ணாகுளம் பகுதிகளில் வங்கியில் வேலைபார்த்தவன். அங்கே இந்தவகையான அசட்டுத்தனமான சம்பிரதாயப்பேச்சு இல்லை. அஞ்சலிக்கூட்டத்திலேயே மறைந்தவரின் பலவீனங்களைப் பேசுவார்கள். மென்மையாகவும் நட்பாகவும் நையாண்டிகூட செய்வார்கள். ஈ.எம்.எஸ் மறைந்தபோது அஞ்சலிக்கூட்டத்தில் அவரைப்பற்றி அன்பான கேலியுடன் பேசியதைக் கேட்டிருக்கிறேன். இங்கே நினைத்தே பார்க்கமுடியாது.
இது ஏன் என்றால் இறந்தவர்கள் எல்லாம் தெய்வமாகிவிட்டார்கள் என்ற பழைய நம்பிக்கை இப்போதும் ஆழ்மனதில் வேறு வடிவங்களில் இருப்பதனால்தான். சுந்தர ராமசாமிக்கு நடிகை சரிதாவை பிடிக்கும் என்று சு.ரா.நினைவின் நதியில் நூலில் நீங்கள் எழுதினீர்கள். அதை சுந்தர ராமசாமிக்கு வேண்டியவர்கள் அவருக்கான அவமதிப்பு என்று கொந்தளித்ததைப் பற்றி ஒருமுறை சொன்னீர்கள். அது ஏன் என்றால் அவர் ‘தெய்வத்திரு’ ஆகிவிட்டார் என நினைப்பதனால்தான்.
தமிழ்மக்களின் இந்த மனநிலையை நீங்கள் உணரவில்லை. ஓர் அந்நியராகவே நிற்கிறீர்கள். ஆனால் அந்த தூரம்தான் உங்களுக்கான சுதந்திரம், தனித்தன்மை ஆகியவற்றை அளிக்கிறது.
நட்புடன்
ரா. கிருஷ்ணகுமார்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 


