வெளியேறும் வழி

என்னுடைய காணொளிகளில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் ஒரு கரு என்பது ‘அருஞ்செயல்களை ஆற்றுதல்’  ‘செயல்களின் ஊடாக விடுதலை அடைதல்’ என்பதுதான். இதை இந்த நூற்றாண்டில் திரும்பத் திரும்பச் சொல்வதற்கான சில காரணங்கள் உள்ளன.

இரண்டு நூற்றாண்டு முன்பு வரை நாம் ஒவ்வொருவரும் நம் பிறப்பால், சூழலால் நமக்குரிய செயல்களுடன் இணைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொருவரும் அவரவர் சாதிக்குரிய செயல்களைத்தான் செய்ய முடிந்தது. ஆகவே எதைச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொழிலும் இல்லறமும் மிகமிக இளமையிலேயே தொடங்கின. எவருக்கும் அவர்களின் வாழ்க்கை இன்னொரு வகையாக அமைந்திருக்கலாம் என்னும் எண்ணமே உருவாகவில்லை.

அது ஓர் அடிமைத்தனம். ஒருவர் ஒரு நிலப்பகுதிக்கு, ஓர் அரசுக்கு, ஒரு கிராமத்துக்கு, ஒரு சாதிக்கு, ஒரு குலத்துக்கு, ஒரு குடும்பத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக இருந்தார். அந்த நூற்றாண்டுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். ஏனென்றால் அதற்கு முந்தைய யுகம் என்பது பழங்குடிக் காலம். பழங்குடிகளாலான நிலப்பரப்பு என்பது நில்லாது அலையும் புள்ளிகளால் ஆன ஒரு பரப்பு போல. ஒவ்வொரு பழங்குடியும் தங்கள் இயல்பில் தங்களுக்கு உகந்த செயல்களை செய்து கொண்டிருந்தன. இன்னொன்றை விலக்கின. ஒன்றோடொன்று பூசலிட்டுக் கொண்டிருந்தன. அந்த நிலையற்ற சமூகப் பெரும் பரப்பை உறைய வைத்து, நிலையான சமூகப் பரப்பாக ஆக்க வேண்டிய கட்டாயம் நிலவுடைமைச் சமூகத்தில் உருவாகி வந்தது.

நிலவுடைமைச் சமூக அமைப்பு ஒவ்வொன்றையும் அதன் அதன் இடத்தில் பொருத்தியது. அவை புனிதமானவை என்றும், மாற முடியாதவை என்றும், மாறக்கூடாதவை என்றும்  வகுத்தது. மனிதர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டார்கள். அந்த அமைப்பின் நன்மைகளும் தீமைகளும் பல. நன்மை என்பது நிலையான ஒரு சமுதாயம் உருவாகியது என்பது. உற்பத்தி, வினியோகம் ஆகியவை நிலைகொண்டன. அரசுகள் உருவாயின. ராணுவம் உருவாகியது. நெறிகள் பிறந்தன. அறங்களும் உருவாயின.

அந்த அமைப்பின் அடிப்படை அலகான தனிமனிதன் ஒரு கருங்கல் கட்டிடத்தின் சுவரிலுள்ள கல் உறுதியாக பதிக்கப்பட்டவன். ஆகவே தனிமனிதர்கள் அலைக்கழிவுகள் இல்லாமல் வாழ்வின் மீளாச்சுழற்சியையே நாட்கள் எனக்கொண்டு வாழ்ந்தனர். அதன் தீமை என்பது ஒவ்வொருவரும் தங்கள் தனியுள்ளங்களை ரத்துசெய்து அந்த அமைப்பில் பொருந்தியாகவேண்டும் என்பது. தனித்தன்மை என்பதே அனுமதிக்கப்படவில்லை என்பது. மீறல்களின் விளைவு அழிவு என்பதாகவே இருந்தது அன்று.

ஆனால் ஒருவர் தனக்கான சொந்த தேர்வுகள், தேடல்கள் கொண்டவர் என்றால் அவர் அந்த அமைப்பை விட்டு உதறி மேலெழுந்து முன் செல்லவும் வாய்ப்பு இருந்தது. அவ்வாறு முன்சென்றவர்கள் துறந்தோர் என்று அறியப்பட்டார்கள். எல்லாக் காலகட்டத்திலும் அவ்வாறு பல லட்சம் பேர் தங்கள் சாதியை, குடியை, ஊரைத் துறந்து  சென்று கொண்டிருந்தார்கள். இந்து மரபு அவ்வாறு துறந்து செல்வதை ஆன்மிகப்பயணமாக ஏற்றுக்கொண்டது. நம் குடிகளில் இல்லத்தையும் சாதியையும் ஊரையும் தொடர்ந்து காசிக்கு சென்றவர்கள், கயிலைக்கு சென்றவர்கள் எப்போதும் இருந்து கொண்டிருந்தார்கள்.

அதன் பின் பௌத்தம் துறவை நிறுவனப்படுத்தி பிறப்படிப்படையில் உருவாக்கப்பட்ட அடையாளங்களில் இருந்து விலகிச்செல்ல வழிகாட்டியது.  அதன்பின் சமணமும் துறவை முன்னிறுத்தியது. நிலவுடைமைக்கால மனிதனுக்கு இருந்த முக்கியமான விடுதலை வழி என்பது துறவு. ஒவ்வொரு மனிதனையும் அந்த அமைப்பு முற்றிலும் கவ்விச் சிறை பிடித்துக் கொண்டிருந்தாலும் இப்படி ஒரு விடுதலைக்கான வழியையும் அது கொண்டிருந்தது. எந்த ஒரு சிறையும் ஒரு விடுதலை வழியையும் வைத்திருக்கும்.

முதலீட்டியம் (Capitalism) இங்கே உருவானபோது அது மனிதனை உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படை அலகாக மட்டுமே பார்த்தது. அதாவது உழைப்புச் சந்தையில் ஒவ்வொரு மனிதனும் விற்பனைப் பொருளாக மட்டுமே இருக்க வேண்டும், நுகர்வுத்தளத்தில் வெறும் ஏற்போர் மட்டுமாகவே இருக்க வேண்டும் என வகுத்தது. அந்த இரு நிலைகளிலும் அவரிடம் தனக்கான நிபந்தனைகள் எதுவும் இருக்கலாகாது. சாதி, மதம், ஊர் போன்ற எந்த வகையான கட்டுப்பாடுகளுக்கும் எதிரானதாகவே முதலீட்டியம் உள்ளது. முதலீட்டியம் உருவாக்கும் விடுதலை என்பது இதுதான்.

சென்ற நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்த ஒவ்வொரு எளிய அடித்தள மனிதனும் இரண்டு வழிகளில் ஒன்றையே தேர்ந்தெடுத்தான். ஒன்று தொழிலாளியாக ஆவது, இன்னொன்று ராணுவ வீரனாக ஆவது. அவை இரண்டும் இரண்டு வேறு வகையான சுரண்டல்களே என்றாலும் அவருடைய முந்தைய அடிமைத்தனத்திலிருந்து அவை பல வகையிலும் மேம்பட்டதாக இருந்தன. தொழிலாளர்கள் உரிமைகளைக் கோரி போராட முடிந்தது. கல்வி வழியாக தங்கள் வாரிசுகளை அடுத்த நிலைநோக்கிச் செலுத்தவும் முடிந்தது.

இவ்வாறாக இன்றைய மனிதன் உருவாகி வந்திருக்கிறான். இன்றைய மனிதன் ஓர் உழைப்பவன், ஒரு நுகர்வோன் மட்டுமே அதற்கு அப்பால் அவனுக்கு ஆளுமை என எதுவும் இல்லை. நேற்றைய நிலவுடைமைச் சமூகம் ஒவ்வொருவரையும் சாதிக்குள், குலத்திற்குள், குடும்பத்திற்குள், ஊருக்குள் கட்டிப் போட்டது என்றால் இன்றைய முதலீட்டியம் ஒவ்வொருவரையும் அது உருவாக்கி வைத்திருக்கும் உற்பத்தி-நுகர்வு என்ற சுழற்சிக்குள் கட்டிப் போடுகிறது. முந்தைய அமைப்பைவிட இது மேலானது என்பதில் ஐயமில்லை. இதில் பிறப்பு அடிப்படையில் எவரும் அறுதியாக வரையறுக்கப்பட்டு விடுவதில்லை. ஆயினும் இதில் உள்ள சிறைப்படல் என்பதை நாம் உணராமல் இருக்கிறோம்.

இன்று ஒவ்வொரு உழைப்பாளியும் ஒரு நுகர்வோராக இருப்பதன் பொருட்டு உழைக்கிறார். உழைத்தவற்றை நுகர்வுக்கே அளிக்கிறார். இது ஒன்றை ஒன்று நிரப்பும் ஒரு வட்டம். சிக்கிக்கொண்டால் சுழன்றுகொண்டே இருக்கவேண்டியதுதான். இதைப்பற்றி மார்க்ஸியர், இருத்தலியர் வெவ்வேறு வகையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கான காரணங்களை ஆராய்ந்துள்ளனர். நான் அந்த விவாதங்களுக்குள் செல்லவில்லை.

இன்று நமது அன்றாட வாழ்க்கையிலே நாம் பார்க்கலாம் என்பதை மட்டும் முன்வைக்கிறேன். இன்று நாம் பெற்றுக் கொண்டிருக்கும் கல்வி என்பது இன்றிருக்கும் உற்பத்தி அமைப்பின்  ஒரு பகுதியில் நம்மைப் பொருத்திக்கொண்டு, அதற்கான பங்களிப்பை வழங்கி, அதன் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நம்மைத் தயாரிக்கிறது. கூடவே நம்ம இன்றைய நுகர்வுக்கும் பழக்கி அதற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்பவராக மட்டுமே பயிற்றுவிக்கிறது. அவ்வாறாக வெறும் நுகர்வோனாக நம்மை மாற்றிக் கொள்ளவும் அது நம்மை பழக்கப்படுத்துகிறது.

எண்ணிப்பாருங்கள், ஒருவர் இன்று வாங்கும் ஊதியத்தில் பெரும்பகுதி அடிப்படைப் பொருட்கள் முதல் செல்பேசிகள், கார்கள், இல்லங்கள், துணிமணிகள் மற்றும் பொருள்களை வரை வாங்குவதற்குச் செலவிடப்படுகிறது. அந்த ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யும் அமைப்பின் ஒரு பகுதியாகவும் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரைப்போன்றவர்கள் உற்பத்தி செய்ய அவரைப்போன்றவர்கள் நுகர லாபம் மட்டும் வேறெங்கோ செல்கிறது. அந்த லாபம் கோடீஸ்வரர்களை, அரசியலை உருவாக்குகிறது. அதிகாரத்தை உருவாக்குகிறது. அந்த அதிகாரம் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.

இந்தச் சுழற்சியில் சிக்கிக்கொண்டதை உணரும் ஒருவனுக்கு ‘நான் செய்ய வேண்டியது என்ன!’ என்னும் பெரும் திகைப்பு உருவாவது இயல்புதான். ‘நான் இதற்காக மட்டுமே பிறந்தவன்தானா?’ என்ற தவிப்பு அவனுக்கு எழுகிறது. சென்றகால நிலவுடைமை அமைப்பின் வாழ்க்கைச்சூழலில் பிறந்த ஒருவனுக்கு ‘என் வாழ்க்கை இந்த உழைப்புக்காகத்தானா? நிலத்துடனும் குலத்துடனும் இணைந்துள்ள மீள முடியாத இந்தப் பொறியில்தான் நான் வாழ்ந்து மடிய வேண்டுமா?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் அவன் ஒரு கணத்தில் ஆடையைக் கிழித்து ஒரு துண்டை கோவணமாகக் கட்டிக்கொண்டு ஊரை விட்டு விலகிச் செல்ல முடிந்தது. துறவியோ பிட்சுவோ ஆக முடிந்தது. இன்று அதே கேள்வி மீண்டும் எழுகையில் அதற்கான வேறொரு பதிலைத் தேட வேண்டி இருக்கிறது.

இன்று அவ்வாறு துறந்து செல்பவர்கள் உண்டு. எழுபதுகளில் ஐரோப்பாவில் நவீன நுகர்வும் நவீன உழைப்பும் உருவாகத் தொடங்கி, அன்றைய மனிதனை அழுத்தியபோது ஒவ்வொரு தெருவிலும் அனைத்தையும் துறந்து வெளியேறியவர்கள் அமர்ந்திருந்தனர். இன்றும் அங்கே அவர்கள் அமர்ந்திருப்பதை பார்க்கிறேன். போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள், உழைப்புக்குப் பதிலாக தெருவில் பட்டினி கிடந்து சாகவும் தயாராகிறார்கள். பாடியே வாழ முடிவெடுக்கிறார்கள். நிலையின்றி அலைந்து திரிகிறார்கள். அப்படி ஓர் உதிரிக் கூட்டத்தை நவீன முதலீட்டியம் உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அவர்களை நேற்றைய துறவிகளின் இன்றைய வடிவம் என்றால் ஒருவகையில் அது சரிதான்.

நேற்றைய துறவிகளுக்கு அந்த மதங்கள் சில கொள்கைகளையும் நெறிகளையும் உருவாக்கி அளித்தன. அவை அந்தச் சமுதாயத்தால் ஏற்கப்பட்டன. ஒருவன் தனக்கு உணவு மட்டுமே போதும் என்று சொல்வான் எனில் அதை அளித்தாக வேண்டும் என்று இந்திய சமுதாயம் நம்பியது. ஆகவே இங்கு பிச்சைக்காரர்கள் எப்படியோ பேணப்பட்டார்கள். துறந்து சென்றவர்கள் எவரும் பட்டினியால் இறக்க நேரிடவில்லை. இந்தியா பெரும்பஞ்சத்தில் அழிந்து கொண்டிருந்த போது கூட இங்கே பிச்சைக்காரர்கள் எவரும் பட்டினியால் இறக்கவில்லை என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இன்றைய சூழலில் இந்தத் துறவு ஏற்கப்படுவதில்லை. அது இன்று மனிதர்கள் வெறும் குப்பைகளாக ஆவதாகவே பொருள்படுகிறது.

இந்தச் சூழலில் மரபான துறவு என்பது ஒருவகையில் பொருத்தமற்றதாக உள்ளது. அந்த துறவை மேற்கொள்வது என்பது இன்னொரு வகையான அமைப்புக்குள் சென்று சிக்கிக் கொள்வதாகவும் பல சமயம் மாறுகிறது. அப்படியென்றால் இன்று இருக்கும் ‘வெளியேறும் வழி’ என்ன? இந்த சுழற்சியில் இருந்து வெளியேற விரும்புபவர் என்ன செய்ய முடியும்?

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.