நம் குழந்தைகள் நம்மை அறிய… கடிதம்
ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…
அன்புள்ள ஜெ,
உங்கள் நூலறிமுக நிகழ்வு பற்றிய கட்டுரையைக் கண்டேன். நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் அப்பட்டமான உண்மை, அமெரிக்காவில் மட்டும் அல்ல ஐரோப்பாவிலும் இதுதான் நிலைமை. நம்மவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் பற்றி ஏதும் தெரியாது. அவர்கள் என்ன படிக்கிறார்கள், எந்த மனநிலையில் இருக்கிறார்கள் எதுவுமே தெரியாது. இந்தியாவில் அவர்களுக்குத் தெரிந்த சினிமா, அரசியலுக்கு அப்பால் எதையுமே தெரிந்துகொள்வதில்லை. அதே குண்டுச்சட்டி வாழ்க்கை. ஆகவே எல்லா அபத்தங்களும் உண்டு.
இங்கே ஒரு குழந்தையிடம் தமிழ்ப்பெருமிதம், இந்து மதப்பெருமிதம், சாதிப்பெருமிதம் எதையுமே சொல்லக்கூடாது. ஏனென்றால் இங்கே உள்ள கல்விநிலையங்களில் அந்தவகையான குறுக்கல் வாதங்களுக்கு நேர் எதிரான கல்விதான் அளிக்கப்படுகிறது. இனவாதம், சாதிமுறை ஆகியவற்றைப் பற்றி ஆரம்பநிலைப் பள்ளியிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். அவற்றுக்கு எதிரான மனநிலை குழந்தைகளிடம் உண்டு. நாம் அவர்களிடம் தமிழ்ப்பெருமிதம் பேச ஆரம்பித்தால் தமிழ்ச்சமூகத்தின் சாதிமுறை, தீண்டாமை, பெண்ணடிமை முறை ஆகியவை பற்றி அவர்கள் நம்மிடம் கேட்பார்கள். நான் சங்ககாலத்தில் சாதிமுறை இல்லை என்று சொல்ல ஆரம்பித்தேன். என் பதினைந்து வயதுப்பெண் மறுநாளே சங்ககால சாதிமுறை பற்றி ஜார்ஜ் எல் ஹார்ட்டின் புத்தகத்தை கொண்டுவந்து காட்டிவிட்டாள்.
இந்தவகையான குழந்தைகளிடம் நாம் உண்மையில் ‘சென்ஸிபிள்’ ஆக பேசுவதுதான் முக்கியம். நம்மை அவர்கள் பாமரர்கள் என்று நினைத்துவிடக்கூடாது. நாம் தமிழகத்தில் நாம் கற்ற செய்திகளையோ அல்லது முகநூலில் படிப்பவற்றையோ சொன்னால் கேலிக்கூத்தாகிவிடும். அது நம்மவர்களுக்குத் தெரிவதில்லை. சாதி, பெண்ணடிமை எதையும் ஒளிக்க வேண்டியதில்லை. நம்மூர் பட்டிமன்றப் பேச்சாளர்கள், அடிதடி கிரிஞ்ச் சினிமா, அரசியல் எதையும் அவர்களிடம் பேசமுடியாது. நாம் ‘பிரிமிட்டிவ் பீப்பிள்’ ஆகிவிடுவோம்.
அந்த வகையில் அறம் தொகுதி பற்றி நீங்கள் சொன்னது சரிதான். நான் அதிலுள்ள பல கதைகளை சென்ற ஆண்டே வாசித்துக் காட்டியுள்ளேன். அந்தக் கதைகள் அவர்களுக்கு அளித்த நெகிழ்வும் தீவிரமான உணர்ச்சிகளும் மிக ஆச்சரியமானவை. அந்தக் கதைகள் எதையும் ஒளிக்கவில்லை, எந்த பெருமையையும் பேசவில்லை என்று அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் அவை அபாரமான மனிதர்களை அறிமுகம் செய்கின்றன. தமிழ்ப்பண்பாட்டின், அல்லது இந்தியப் பண்பாட்டின் மகத்தான முகமும் அறிமுகமாகிறது.
உங்கள் நூல் போல இன்று இந்தியாவையும் தமிழகத்தையும் நம் பிள்ளைகளிடம் கொண்டுசெல்ல இன்னொரு புத்தகம் இல்லை. அப்படி கொண்டுசெல்வது நம் கடமை. இல்லையேல் நம் குழந்தைகள் நம்மை அறியாமலேயே ஆகிவிடுவார்கள்.
ராஜேந்திரன் மாதவராஜ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

