கைகோத்து முன்செல்லுதல்…
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விருது 2025 ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டதை ஒட்டி பல ‘கருத்துக்கள்’ பேசப்பட்டதை என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். வேடிக்கையாக இருந்தது, அதில் எல்லா ‘தரப்புகளும்’ இருந்தன. ஒன்று, ரமேஷ் பிரேதன் என் நண்பர் ஆதலாலும், அவர் என் விஷ்ணுபுரம் நாவலை புகழ்ந்தமையாலும் நான் அவருக்கு இந்த விருதை அளிக்கிறேன் என்பது. இன்னொன்று, ரமேஷ் பிரேதன் என் எதிரி ஆகையால் அவரை சமாதானப்படுத்த இந்த விருதை அளிக்கிறேன் என்பது.
இந்த வகையான வம்புகள் இலக்கியச்சூழலில் ‘சுட்டசட்டிச் சட்டுவம்’ ஆக புழங்குபவர்களால் எழுப்பப்படுபவை. இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரிகள் நினைவிலிருக்கும். அவ்வப்போது சில படைப்புகளை வாசிப்பவர்களும் இவர்களிலுண்டு, ஆனால் எந்தப் படைப்பையும் உள்ளுணர்வது இவர்களால் இயல்வது அல்ல. ஆனால் எல்லா வம்புகளையும் அறிந்திருப்பார்கள். வம்புகளுக்காக ‘ஆலாய்’ பறப்பார்கள்.
ஒரு நோக்கில் இவர்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இது இலக்கியம், அழகுணர்வை நுண்மையாக்கவும் ஆன்மிகமான முன்னகர்தலுக்காகவும் உள்ள ஒரு துறை. இந்த துறையில் ‘பால் நிறைந்த பசுவின் மடியிலும் குருதியே குடிக்கும்’ உண்ணி போல வாழ்வதில் என்ன பொருள்?
ஆனால் இன்னொரு வகையில் அவர்களுக்கும் ஒரு பங்களிப்பு உள்ளது. இலக்கியவாதிகளை தங்கள் வம்புகள் வழியாக பேசிப்பேசி நினைவில் நிறுத்துகிறார்கள். சுந்தர ராமசாமி ஒருமுறை அதைச் சொன்னார். பெரும்பாலான புதிய வாசகர்கள் எளிய வம்புகள் வழியாகவே இலக்கியத்துக்குள் வருகிறார்கள். எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் பெயர்களை கேள்விப்படுகிறார்கள். ஏனென்றால் வம்புகளின் பிரச்சாரத்திறன் அதிகம். அவை வைரஸ் போல. பரவுவதற்காகவே உருவானவை அவை.
இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். எழுதவருபவர்களுக்கு அது உதவலாம். ‘இலக்கியநட்பு’ என ஒன்று உண்டு. தமிழ் இலக்கிய உலகம் என்பது மிகச்சிறியது. இங்கே நமக்கு பெரிய அளவில் வாசகர்களோ, புகழோ பணமோ அமையப்போவதில்லை. ஆனால் இலக்கியத்தில் செயல்படும் ஒருவர் நல்ல நட்புகளை உருவாக்கிக் கொண்டால் நல்ல பொழுதுகள், நல்ல நினைவுகள் அமையக்கூடும். இறுதியில் இலக்கியத்தில் இருந்து ஈட்டிக்கொள்வது முதன்மையாக அதுவே.
என் நாற்பதாண்டுகால இலக்கிய வாழ்க்கையில் எனக்கிருக்கும் இனிய நினைவுகள் மூத்த படைப்பாளிகளுடனான உரையாடல் தருணங்கள்தான். நாஞ்சில்நாடன் உட்பட என் மூத்த படைப்பாளிகளுடன் இரவுபகலாக உரையாடிய நாட்கள் இன்றும் நினைவில் சுடர்கின்றன. என் தலைமுறைப் படைப்பாளிகளுடனான நட்புகள் இப்போது மிக அழுத்தமானவையாக ஆகியுள்ளன. இளையதலைமுறைப் படைப்பாளிகளுடனான அரட்டைகள் ஊக்கமூட்டும் நிகழ்வுகள். நான் ஒரு அழியாச்சரடில் இருக்கிறேன் என உணரும் பொழுதுகள் அவை. அவற்றையே நான் முதன்மையாகக் கருதுகிறேன், எதன் பொருட்டும் அவற்றை இழந்துவிடலாகாது என்பதில் குறிப்பாகவும் இருக்கிறேன்.
இளமையில் நான் இலக்கிய அளவுகோல்களை மிகக்கடுமையாக வைத்திருந்தேன். அவற்றை அவற்றை நண்பர்களிடையே பகிர்ந்துகொண்டேன். ஒருவரை ஒருவர் விமர்சித்துத்தான் வளர்ந்தோம். ஆனால் அதன் எல்லையையும் அறிந்திருந்தேன். அந்தத் தன்னுணர்வு மிக முக்கியமானது. அவற்றை இப்படிச் சொல்லலாம்.
ஒரு விமர்சனம் அந்தப் படைப்பாளிக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டும். அது வளரும் நிலையிலேயே இயல்வது. ஒரு குறிப்பிட்ட வகையில் எழுதி நிலைகொண்டுவிட்ட படைப்பாளியை அதன் பின் இன்னொரு எழுத்தாளர் விமர்சிக்கக்கூடாது.ஒரு படைப்பாளி அவருக்கான ஓர் எல்லையை உருவாக்கியிருப்பார். உணர்வுரீதியான எல்லை அது. அதை நண்பராக நாம் அறிவோம். அந்த எல்லையைக் கடந்து விமர்சிக்கக்கூடாது. அது அவரது இருப்பை, வாழ்க்கையின் சாரத்தை நாம் மறுப்பதாக ஆகிவிடும். அவரை அது கடுமையாக புண்படுத்தலாம்.ஒரு படைப்பாளி தனக்கான அழகியலை, வாழ்க்கைப் பார்வையை உருவாக்கிக்கொண்டிருக்கலாம். இன்னொரு இணைப்படைப்பாளியின் படைப்பை அதைக்கொண்டு மதிப்பிட்டு நிராகரிப்பது பிழையாக ஆகிவிடக்கூடும்.இவை எனக்காக நானே வகுத்துக்கொண்டவை. பிறர் இதைப் பரிசீலிக்கலாம்
இந்த மூன்று நெறிகளும் நீண்டகால நட்புக்கான அடிப்படைகள். வள்ளுவர் சொல்வதுபோல ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்’ தான் புலவரின் வழியாக இருக்கமுடியும். ஆகவே எல்லாச் சந்திப்புகளும் இனிதாக அமையவேண்டும் என நான் கவனம் கொள்வதுண்டு. சில சமயம் சிலர் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கலாம். அரிதாகப் பல கசப்புகளும் உருவாகியிருக்கலாம். என்னை அவர் முழுமையாகவே ஏற்காதவராகக்கூட இருக்கலாம். ஆயினும் நேர்ச்சந்திப்புகள் இனிதாக அமையவேண்டும் என கவனம் கொள்கிறேன். நட்பை முறித்துக்கொண்டு செய்யும் விமர்சனங்களால் பயன் ஏதுமில்லை.
நான் ஏதேனும் வகையில் இலக்கியத்திற்குப் பங்களிப்பாற்றுபவர்கள் பற்றி தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களோ கடும்கருத்துக்களோ சொல்வதில்லை என்பதை வாசகர்கள், நண்பர்கள் உணரலாம். மிகமிக அரிதாகச் சீற்றத்துடன் ஏதேனும் சொல்ல நேரிடும், அது எழுத்தாளர் என்னும் குணாதிசயத்தின் தனிச்சிக்கல். ஆனால் உடனடியாக அதற்கு மன்னிப்பு கோரியுமிருப்பேன். என்னை கடுமையாக தாக்கி, வசைபாடி வரும் எழுத்தாளர்கள் உண்டு. அவர்களைப் பற்றிக்கூட நான் கண்டனங்களை எழுதியதில்லை. நேர்த்தொடர்பை முறித்துக்கொண்டதுமில்லை. அதைப்பற்றி என் நண்பர்கள் கேட்பதுண்டு. “அவர்கள் எழுத்தாளர்கள், அந்தக் காரணமே போதும்” என்று நான் சொல்வதுண்டு.
எந்த எழுத்தாளராயினும் அவர்களின் துயர்களில் உடனிருக்கவே முயன்றிருக்கிறேன். அந்தத் தருணத்தில் விலகியதே இல்லை. அவர்கள் எனக்கு எதிராகப் பேசியதை பொருட்படுத்தியதுமில்லை. தமிழில் எந்த எழுத்தாளர் ஒரு விருதுபெற்றாலும் அவரைப்பற்றி பாராட்டுகளை, ஆய்வுக்கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். ஒரு விடுபடுதல்கூட இந்த ஆண்டுவரை இல்லை.
ஆனால் சில சிக்கல்கள் உண்டு. சில படைப்பாளிகள் மிகமிகக் கடுமையான உள்வாங்குதல் கொண்டவர்களாக இருப்பார்கள். மிக எளிய நகைச்சுவைகளைக்கூட ஆழமான புண்படுத்தலாக எடுத்துக்கொள்வார்கள். எப்போதுமே பிறரை ஐயப்படுபவர்களாகவும், எச்சரிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களின் இயல்பு. அவர்களை விட்டு தேவையான இடைவெளிவிட்டு புழங்குவதே நல்லது. தெரியாமல் சிலசமயம் எல்லைகள் மீறப்படுமென்றால் மன்னிப்பு கோரிவிடலாம். அப்படியும் செய்துள்ளேன்.
அதேபோல எந்நிலையிலும் குறையாத காழ்ப்பும் கசப்பும் மட்டுமே கொண்ட சிலர் உண்டு. பெரும்பாலும் அவர்கள் கனவுகள் கொண்டிருந்த, இயலாமையாலோ வாழ்க்கைப் போக்குகளாலோ தோற்றுப்போன படைப்பாளிகள். அத்தோல்வி பற்றி அவர்களே நன்கு அறிந்தவர்கள். அவர்கள் நிரந்தரமான பொறாமையும், புழுங்குதலும், அதன் விளைவான வம்புகளும் பூசல்களும் கொண்டிருப்பார்கள். அவர்களையும் ஒன்றும் செய்யமுடியாது. உள்ளூர அவர்களுக்காக வருத்தமே கொள்கிறேன். அதிகபட்சம் நம் உலகில் அவர்கள் இல்லை என கொள்வதே நாம் செய்யக்கூடுவது.
அதேபோல சாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களைப் பற்றிக்கொண்டு கடுமையான எதிர்நிலையில் இருப்பவர்கள் உண்டு. அவர்களில் சிலர் நல்ல வாசகர்களாகவும் இருக்கலாம். எழுத்தாளர்கள்கூட அவர்களில் உண்டு. அவர்களுடன் நமக்குச் சந்திப்புப் புள்ளியே இல்லை. என் வரையில் அவர்களை முழுக்க விலக்கிவிடுவதை மட்டுமே செய்கிறேன். இலக்கிய விமர்சனம், எதிர்வினை என்றபேரில் அவர்கள் செய்வது பலசமயம் தங்கள் சொந்த அழுக்குகளை அள்ளி வைப்பதையே. அவர்களுக்கும் நமக்கும் தொடர்பு இருக்க முடியாது. தவிர்ப்பதே நல்லது. அல்லது ‘மனிதனுக்கு மனிதன்’ என்னும் குறைந்தபட்சம் தொடர்பை மட்டும் கொள்ளலாம்.
அப்படியென்றால் கருத்தியல் முரண்பாடுகள்? கருத்தியல் முரண்பாட்டால் காழ்ப்பும் கசப்பும் கொண்டிருப்பதும், அதனடிப்படையில் கடும் தாக்குதல்களைச் செய்வதுமெல்லாம் இலக்கியவாதிகளின் இயல்பு அல்ல என நான் நினைக்கிறேன். அது அரசியலின் வழி, அரசியலின் மனநிலை. அப்படி கருத்தியல் சார்ந்த காழ்ப்பு கொண்டிருக்கும் ஒருசிலர் சிலவற்றை எழுதவும் கூடும், ஆனால் அவர்கள் முதன்மையாக அரசியல் நம்பிக்கையாளர்கள் தான்.
நான் எல்லா தரப்பைச் சார்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகளையும் சந்தித்துள்ளேன். (பலசமயம் தனிப்பட்ட சந்திப்புகள்). அவர்களிடம் ஒருவரோடொருவர் இந்தவகையான காழ்ப்பும் கசப்பும் இருப்பதில்லை. முற்றிலும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒரே இடத்தில் சிரித்துப்பேசிக் கொண்டிருப்பவர்களாக பார்த்துள்ளேன். ஏனென்றால் உண்மையான அரசியல் என்ன, அது செயல்படும் முறை என்ன என்று அவர்களுக்குத் தெரியும். காழ்ப்பும் கசப்பும் எல்லாம் தொண்டர்களின் நிலையில், அடித்தளத்தில் நிகழ்வன மட்டுமே. அவர்கள்தான் அடித்துக்கொண்டு சாகிறார்கள். அந்த மூளைச்சலவை அவர்களிடமே நிகழ்கிறது.
அதற்கப்பால் அரசியல் அடிமட்டத்தினருக்கு அரசியல் நிலைபாடு என்பது ஓரு தன்னடையாளம். அவர்களுக்கென வேறு தன்னடையாளம் ஏதுமில்லை. அவர்கள் எவ்வகையிலும் ஆளுமை என எதையும் உருவாக்கிக் கொள்ள முடியாதவர்கள். அரசியல் நிலைபாட்டை அல்லது சார்புநிலையை அவர்கள் ஆளுமையாக கற்பனை செய்துகொள்கிறார்கள். அதில் பற்றை விட வெறுப்பே ஓங்கியிருக்கும். எவர் எதிரிகள் என வகுத்தாலொழிய தான் யார் என்பதை வகுக்க முடியாது. ஆகவே எப்போதும் எதிர்ப்பு, காழ்ப்பு, வசை மனநிலையிலேயே நீடிப்பார்கள்.
ஆனால் அது அவர்களின் மெய்யான அடையாளம் அல்ல. அது ஒரு பாவனைதான். அது பாவனை என்பதனாலேயே மிகையாக்கிக் கொள்கிறார்கள். எல்லா மிகைகளும் பொய்யே. ஆகவேதான் சட்டென்று அவர்கள் எதிர்நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஓர் இடதுசாரி சட்டென்று வலதுசாரி ஆகும்போது நாம் துணுக்குறுகிறோம். ‘எப்படி தீவிரமாக இருந்தான்’ என வியக்கிறோம். அந்த மிகையான தீவிரம்தான் அவர் எதிர்நிலைக்குச் செல்லவும் காரணம். ஏனென்றால் அது ஒரு பாவனை. நான் அரசியல்சார்பு சார்ந்து எழும் எல்லா மிகைவெளிப்பாடுகளையும் சம்பந்தப்பட்டவரின் பரிதாபகரமான நடிப்பாகவே நினைக்கிறேன். ஆகவே அவற்றை பொருட்படுத்துவதில்லை.
இக்காரணத்தால் சமூகவலைத்தளங்கள் வழியாக நட்பு உருவாகவே முடியாது என நான் நினைக்கிறேன். அங்கே ஒவ்வொருவரும் அவரவருக்கான பாவனைகளை புனைந்து முன்வைக்கிறார்கள். பாவனைகளை கொண்டு மோதிக்கொள்கிறார்கள். நட்பு செலுத்துகிறார்கள். அது ஒரு நடிப்புமேடை மட்டுமே.
இதற்கு அப்பால் நாம் நம் தலைமுறையின் சிறந்த உள்ளங்களுடன் நீடித்த நல்ல நட்பை பேணிக்கொள்ள முடியும். அதை சூழ்ந்துள்ள சிறிய உள்ளங்களால் தாளமுடியாது. நம்பவும் முடியாது. ஆனால் அது சாத்தியமே. அதன் இனிமைகளும் பல. அவர்களுடனான உரையாடலில் நம்முள் திறக்கும் புதியவாசல்கள் பிற பொழுதுகளில் நிகழ்வதில்லை.
இன்று எண்ணிக்கொள்கையில் என் மறைந்த நண்பர்களின் முகங்கள் நினைவில் எழுகின்றன. வே.அலெக்ஸ் பற்றி இன்று முழுக்க எண்ணிக்கொண்டே இருந்தேன். இன்று எழுதுபவர்களிடையே அத்தகைய உறவு உருவாகவேண்டும் என எண்ணிக்கொள்கிறேன். எழுத்தாளர்களாகிய நாம் நம் காலகட்டத்தின் உதாசீனத்தை, ஏளனத்தை எழுத்தாளர்களாக இணைந்து எதிர்கொண்டு முன்செல்ல வேண்டியுள்ளது. ரிக்வேதத்தின் புகழ்பெற்ற உவமை.
“கற்கள் நிறைந்த நதி  ஓடிக்கொண்டிருக்கிறது
தோழர்களே, கைகோத்து இந்த நதியை தாண்டுங்கள்
உங்கள் சங்கம் வலுவுடையதாகுக
உங்கள் சொற்கள் அழியாது வளர்க!”
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers
 

 
   
   
   
   
  
