ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…
அமெரிக்கா வந்து இப்போது சான் பிரான்ஸிஸ்கோவில் இருக்கிறோம். இந்த முறை நூலறிமுக நிகழ்வுகள்தான் தொடர்ச்சியாக நிகழவுள்ளன. என்னுடைய அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True நூலின் அறிமுக நிகழ்வுகள் இவை.
இவற்றின் முழு விவரங்களை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தொடர்புக்கு vishnupuramusa@gmail.com மற்றும் contact@vishnupuramusa.org ஆகிய மின்னஞ்சல்களின் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
Farrar, Straus and Giroux போன்ற ஒரு மதிப்பு மிக்க பதிப்பகம் வழியாக ஒரு தமிழ் நூல் வெளிவருவது மிக அரிய ஒரு நிகழ்வு. அதை தமிழுக்கான ஒரு வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெள்ளை யானை நாவலின் மொழியாக்கமான The White Elephant வெளிவரவுள்ளது. அடுத்து உடனே ஏழாம் உலகம் நாவலின் மொழியாக்கமான The Abyss வெளிவருகிறது.
Stories of the True மற்றும் The Abyss இரண்டுமே அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் குழும விருதுக்கான சர்வதேச அளவிலான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றவை. (Alta AMERICAN LITERARY TRANSLATORS ASSOCIATION) அமெரிக்காவில் இந்நூல்கள் வெளியாக இதுவே காரணம். அவ்விருது விழாவில்தான் தமிழ் என்னும் மொழி இருப்பதே அமெரிக்க இலக்கியவாசகர்களுக்குத் தெரியாது என்னும் திகைக்கச்செய்யும் தகவலை அறிந்தோம். பல லட்சம் தமிழர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தும்கூட நமக்கான பண்பாட்டு வெளி இங்கே இல்லை. நாம் ஒரு தலைமறைவுச்சமூகமாகவே இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தமிழ் விழாக்களோ, அரசியல் விருந்தினரோ அந்த வெளியை உருவாக்க முடியாது. சீரிய இலக்கியம் மட்டுமே அந்த வெளியை உருவாக்கமுடியும். அதற்கு அமெரிக்கா மதிக்கும் நவீனத் தமிழிலக்கியம் இங்கே வந்துசேரவேண்டும். அதைத்தான் அன்று உணர்ந்தோம். இன்று அதற்கான ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அதையே விரிவாக்கம் செய்ய முயல்கிறோம்.
இந்நூல்களின் வெற்றி என்பது மேலும் தமிழ்நூல்களை இங்கே கொண்டுவர வழியமைக்கும். அதற்கான பெருமுயற்சியில்தான் நவீனப்படைப்பாளிகளை இங்கே கொண்டுவந்து, ஓர் அமெரிக்க- தமிழ் நவீன இலக்கிய மாநாட்டை நடத்தும் முயற்சியில் இருக்கிறோம். விஸா பிரச்சினைகளால் அது கொஞ்சம் தாமதமாகிறது.
நடுவே திரு பப்ளிஷர்ஸ் என்ற பேரில் லண்டன் மையமாக்கி ஒரு தமிழ்ப்பதிப்பகம் தொடங்கும் முயற்சியில் உள்ளோம். பதிவு, அலுவலக இடம் அமைத்தல், ஊழியர் தேர்வு முடிந்துவிட்டது. நவீனத்தமிழிலக்கிய நூல்களை லண்டன் வழியாக உலக இலக்கியம் நோக்கிக் கொண்டுசெல்வது எங்கள் நோக்கம். அதற்குரிய தமிழ் நூல்களை தெரிவுசெய்துகொண்டிருக்கிறோம். எனக்கு அமெரிக்கா அளிக்கும் ஏற்பை தமிழ் நவீன இலக்கியத்திற்கு பயன்படுத்துவதே திட்டம்.
அமெரிக்காவில் வெளியாகும் மொழியாக்க நூல்களுக்கு அமெரிக்காவில் வாழும் அந்தந்த மொழியினர் அளிக்கும் முதற்கட்ட வாசிப்புதான் அடித்தளம். உதாரணமாக, ஒரு கொரிய நூல் வெளிவந்தால் அமெரிக்கா வாழ் கொரியர்கள் சில ஆயிரம் பிரதிகள் வாங்கிவிடுவார்கள். கொரியா, துருக்கி, ஹங்கேரி போன்ற நாடுகளே அவர்களின் நூல்களை அவ்வாறு முன்னிறுத்துகின்றன. வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் அவர்களின் மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களை வாங்கி அவை மேலும் வெளிவர வழியமைக்கிறார்கள்.
இவ்வாறு மொழியாக்க நூல்களை வாங்குவதற்கான முதன்மைக் காரணம் தங்கள் தாய்மொழியை அறியாத தங்கள் குழந்தைகளுக்கு மொழியாக்கங்கள் வழியாக தங்கள் பண்பாட்டை அறிமுகம் செய்வதுதான்.தங்கள் நாடுகளின் நவீன இலக்கியங்களின் மொழியாக்கங்களை வாசிக்கும் கொரிய, துருக்கி குழந்தைகள் அந்தப்பண்பாடுகளை ஆழமாக அறிந்துகொள்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டை அறிய தகவல்களை அறிந்துகொள்வது உதவாது. உணர்வுரீதியான ஆழ்ந்த புரிதலை இலக்கியமே அளிக்கமுடியும். பண்பாட்டுக்குள் சென்று வாழும் அனுபவத்தையே இலக்கியம் அளிக்கிறது. பெருமைபேசும் பண்பாட்டுப் பிரச்சாரத்தால் எப்பயனும் இல்லை. ஒரு பண்பாட்டின் வெற்றியையும் தோல்வியையும் முன்வைக்கும் நவீன இலக்கியப்படைப்புகளே அமெரிக்காவின் நவீன இளைய தலைமுறையை கவரமுடியும்.
அத்தகைய ஒரு கவனத்தை தமிழ்ப்பண்பாட்டின் மேல் அமெரிக்கத் தமிழ்க்குழந்தைகளுக்கு அளிக்க முதன்மையான நூல் அறம் என முடிவுசெய்தே அதை முதலில் கொண்டுவந்தோம். அது ஒரு பண்பாட்டுப் பிரச்சார நூல் அல்ல. பெருமைபேசும் நூல் அல்ல. தமிழ்ப்பண்பாட்டின் அவலம், தேக்கநிலை எல்லாமே அதில் உள்ளன. ஒரு சராசரி அமெரிக்கக்குழந்தை அவ்வாறு இனம், சாதி உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளையும் பிற சமூகப்பிரச்சினைகளையும் ஏற்கனவே அறிந்திருக்கும் என்பதை அமெரிக்கக் கல்விமுறையை கவனிக்கும் எவரும் அறிந்திருப்பார்கள். அக்குழந்தைகளிடம் எதையும் ஒளிக்கமுடியாது. ஆனால் அறம் கதைகள் அந்த எதிர்மறைச்சூழல்களிலும் வென்று மேலெழுந்த தமிழின் அறவுணர்வை முன்வைப்பவை.
ஆகவேதான் தமிழில் மிக அதிகமாக விற்ற சிறுகதைத்தொகுதியாக இன்று அறமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இருபதாயிரம் பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கும் அந்நூல் இரண்டு லட்சம் பிரதிகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதே அளவு இந்தியாவில் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அந்நூல் ஏற்பு பெற்றுள்ளது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளையோர் அக்கதைகளை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்வதை கண்டுகொண்டிருக்கிறேன்.
பல நண்பர்கள் ஆங்கில நூலை வாங்கி பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் தோழர்களுக்கும் பரிசளிக்கிறார்கள். நூறு நூல்கள் வரை மொத்தமாக வாங்கி பரிசளித்தவர்களும் உள்ளனர். ஏனென்றால் அறம் ஒரு பெரிய தொடக்கம். அது நம்மை நம் மாண்புகளுடன் அறிமுகம் செய்யும் படைப்பு.
சிறிய எளிய காழ்ப்புகளின் ஓசை எந்தப் பெருமுயற்சிக்கும் எதிராக ஒலிக்கும். ஆனால் தமிழ்விக்கி போன்ற எங்கள் முன்னெடுப்புகள் எல்லாமே எளிய பாகுபாடுகளை கடந்து தமிழுக்கான பெரும்பணியாகவே இன்று நிலைகொள்கின்றன. இந்த முயற்சியும் அவ்வாறே அனைத்துத் தமிழிலக்கியத்திற்கும், தமிழ்ப்பண்பாட்டுக்கும் கொடையாக அமையும் என உறுதியளிக்கிறோம். பெரிய தருணங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை உணரும் ஆர்வலர்களையே நம்பியிருக்கிறோம்.
எப்போதுமே நம்பிக்கையுடன் முழுத்தீவிரத்துடன் முயல்வதே எங்கள் வழி. அதையே இம்முறையும் செய்கிறோம். நண்பர்களின் முழு ஒத்துழைப்பை கோருகிறோம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

