அறிவியக்கத்தின் தொற்றுநோய்க்கிருமிகள்.
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் பாசிச எதிர்ப்பு, அதை ஒட்டி எழுத்தாளர்களின் பங்கு ஆகியவற்றை பற்றி எழுதிய கட்டுரை பார்த்தேன் .உங்கள் கூற்றிலேயே கூட ஓர் அறிவு ஜீவி என்பவன் ஃபாசிச அரசியலுக்கு எதிரான ஒரு செயல்பாட்டுடன் களத்தில் நின்றாக வேண்டும் என்றும் அதுவே நேர்மை என்றும் ஒரு தொனி உள்ளது. நான் தொடர்ச்சியாக தமிழில் எழுத முயன்று கொண்டிருப்பவன். இன்னமும் என்னுடைய படைப்புகள் போதுமான அளவுக்கு வெளிவரவில்லை. நான் நிறைவடையுமளவுக்கு ஏதும் எழுதவுமில்லை. ஆனால் என் ஆர்வம் என்பது சில குறிப்பிட்ட உளவியல் சிக்கல்களில் மட்டும்தான் உள்ளது. அவை நானே அடைந்தவை . இந்த நூற்றாண்டின் சிக்கல்கள் அவை.
நான் அந்த உளவியல் சிக்கலின் சமூகப் பின்னணி ,அரசியல் பின்னணி ஆகியவற்றைப் பற்றி மட்டும் தான் நான் கவலை கொள்கிறேன். அதையே யோசிக்கிறேன். அதைவிட அந்த உளவியல் சிக்கல்களை சரியான மொழியில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான சவாலில்தான் என் மனம் உள்ளது. இதுவரைக்கும் நான் அதில் வெல்லவில்லை .ஆனால் ஒவ்வொரு நாளும் அதற்காக முயன்று கொண்டே இருக்கிறேன். என்னுடைய தவம் என்பது அதுதான். நான் இதை விட்டு விலகும் ஒவ்வொரு கணமும் என்னுடைய இலக்கியத்தை நானே அழிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும் . நான் ஃபாசிச எதிர்ப்புக்கு செயல்படவேண்டும் என்று சொல்வது ஒருவகையில் என்னுடைய தனித்தன்மை கொண்ட தேடலையும், என் கலை சார்ந்த தவிப்பையும் உதறி விடவேண்டும் என்றுதான் பொருள்படுகிறது அல்லவா?
நான் அரசியல்விவாதங்களுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.
(எம்)
*
அன்புள்ள எம்,
நீங்கள் கேட்பது ஒரு முக்கியமான சிக்கல்தான். நான் என்னுடைய அக்கட்டுரையில் அல்லது வேறு கட்டுரைகளில் ஒருவர் உறுதியாக ஏதேனும் அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றோ, ஏதேனும் அரசியல் தரப்பை சார்ந்து செயல்பட வேண்டும் என்றோ, அரசியல் களத்தில் ஏதேனும் வெளிப்படுத்தியாக வேண்டும் என்றோ, அல்லது குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தாக வேண்டும் என்றோ ஒருபோதும் சொல்வதில்லை. முற்றிலும் அரசியல் இல்லாமல் இருப்பதும், அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா நிலையிலும் செயல்படுவதும் அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் இயல்வதே என்றும், அது மிக அவசியமானது என்றும் நான் நினைக்கிறேன். அரசியலின்மை என்பது அறிவியக்கத்தில் மிகமிக முக்கியமான ஒரு நிலைபாடுதான். அப்படி அரசியலின்மை எனும் நிலைபாடு எடுத்த பல மாபெரும் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் உண்டு. பெரும்போர்கள், அடக்குமுறைகளின்போதுகூட அத்தகைய நிலைபாடு எடுத்த பலநூறு மேதைகள் வரலாற்றில் உண்டு.
அறிவியக்கம் செயல்படுவது எப்படி, அறிஞர்களின் உள்ளம் இயங்கும் வழி என்ன, கலைஞர்களின் அகம் ஓடும் முறை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கலாம், ஆனால் எல்லாருக்கும் அப்படி இருக்க வேண்டிய தேவையில்லை என்பதையே தொடர்ந்து சொல்லி வருகிறேன். சில படைப்பிலக்கியவாதிகள் வாழ்வின் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே மிக ஆழமாக தொடர்ந்து, வாழ்நாள் முழுக்க ஆராய்ந்து ஊடுருவிச் செல்பவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ப தங்கள் அகமொழியையும் நடையையும் உருவாக்கும் தவத்திற்கு அப்பால் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இருப்பதில்லை. அந்த தவத்திற்கான உரிமையை அவர்களுக்கு வழங்கும் சமூகம் மட்டும்தான் மெய்யான கலைப்படைப்புகளை உருவாக்க முடியும்.
அவ்வாறு ஏதேனும் ஒரு உளவியல், தத்துவச் சிக்கலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும் ஓர் எழுத்தாளிடம் சென்று சமகால அரசியலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்பதை அடிப்படை அறிவுள்ள வாசகர் எவரும் செய்ய மாட்டார்கள். நகுலன் வாழ்ந்த உலகம் வேறு. தி.ஜானகிராமன் உழன்ற உணர்வுநிலைகள் வேறு. அவர்களிடம் சென்று நெருக்கடி நிலைபற்றி உங்கள் கருத்து என்ன, நீங்கள் ஏன் போராடவில்லை என்று எந்த நுண்ணுணர்வுள்ள வாசகனும் கேட்டதில்லை. அவர்களின் அறவியல் என்ன என்பதை எந்த வாசகனும் அறிந்திருப்பான். ஆனால் இன்றைய அரசியல் அல்லக்கை கூசாமல் அதை மட்டுமே கேட்பான். இதுதான் இந்தக் காலகட்டத்தின் பேரவலம்.
இதேபோல அறிஞர்களிலும் ஒருவகை தனிமைப்பாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட அறிவுத்தளத்தில் மட்டுமே தன் முழுக்கவனத்தையும் குவித்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிஞர்கள்தான் ஏதேனும் ஒரு களத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகிறார்கள். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒரு குறிப்பிட்ட வகையான தேடலை மேற்கொள்பவர் மட்டும்தான் வரலாற்றாய்வில் ஏதேனும் சாதிக்க முடியும். அறிவியலில் வெல்ல முடியும். அதன் விளைவு தெரிய பல ஆண்டுக்காலம் ஆகலாம், ஒருவேளை அவர் வாழ்நாளில் அது தெரியப்படாமலும் போகலாம். அவருக்கு பெயரோ புகழோகூட கிடைக்காமலாகலாம். அந்த அர்ப்பணிப்புதான் அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை.
ஒரு கல்வெட்டைத் தேடி பத்து ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட செப்பேட்டைப் புரிந்து கொள்வதற்காக ஐந்து ஆண்டுகள் ஒவ்வொரு நாளையும் செலவிட்டவர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவை அவதானிப்பதிலேயே வாழ்க்கையை முடித்தவர்கள் உண்டு. அவர்களால் தான் அறிவியக்கம் வாழ்கிறது. ஒரு நூலுக்கு உரை எழுதுவதற்காக ஏழாண்டுகளில் ஒவ்வொரு நாளிலும் எட்டு மணி நேரத்தை செலவிடுபவர்கள் உண்டு. அவர்களிடம் சென்று அவர் உடனடியாக அந்தந்த காலகட்ட அரசியலுக்கு கருத்துச் சொல்ல விட்டால் அவர்கள் ஃபாசிச ஆதரவாளர்கள், அரசாங்க அதிகாரத்திற்கு ஆதரவாளர்கள் என்று சொல்பவர் அறிவியக்கத்தை அழிக்கும் நஞ்சு மட்டுமே.
பலசமயம் அறிஞர்கள் சமகால அரசியல் – அதிகாரத் தரப்புடன் சமரசம் செய்துகொண்டு தங்களது ஆய்வை முன்னெடுத்திருப்பதைப் பார்க்கலாம். இன்று தமிழ் விக்கி பதிவுகள் போடும்போது ஒன்று தெரிகிறது, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழறிஞர்களில் பெரும்பங்களிப்பை ஆற்றிய பெரும்பாலானவர்கள் அன்றிருந்த பிரிட்டிஷ் அரசுடன் சமரசம் செய்து கொண்டவர்கள். அன்று தேசிய விடுதலை இயக்கம் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது கூட அவர்கள் அதில் பங்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. மாறாக அவர்கள் தங்களுடைய தமிழ் ஆய்வு பண்பாட்டாய்வுகள் மட்டுமே ஆழ்ந்திருந்தார்கள். உதாரணங்கள் – ஆ.சிங்காரவேலு முதலியார், உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை, தமிழ்வேள் உமாமகேஸ்வரனார், பாண்டித்துரைத்தேவர் போல பலநூறுபேர். அவர்கள் எல்லாம் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று முத்திரையடித்து இழிவுசெய்வது எவ்வளவு பெரிய மடமை!
அதேபோன்றுதான் பின்னர் சுயமரியாதை இயக்கமும் திராவிட இயக்கமும் இங்கே பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது கூட இங்கிருந்த கணிசமான தமிழ் அறிஞர்கள் அவற்றில் எந்த வகையிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய ஆய்வுகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலருக்கு அந்த தரப்பில் உடன்பாடு இருந்தது. அந்தந்த காலகட்டத்தில் அரசியலுடன் இணைந்து சத்தம்போட்ட இரண்டாம்நிலை அறிஞர்கள் பதவிகளை அடைந்தனர். செத்தபின்னரும் அரசால் முதன்மைப்படுத்தப்பட்டனர். பல பெரும் சாதனையாளர்கள் அவர்களின் அரசியலின்மையாலேயே மறக்கப்பட்டனர். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போது அவர்களுடைய அந்த சாதனைகள்தான் பண்பாட்டுத்தளத்தில் ஓங்கி நின்றிருக்கின்றன. அன்று அவர்கள் எளிய சுயலாபங்களுக்காகவோ, சூழலின் அழுத்தத்திற்காகவோ தங்கள் ஆய்வுகளை இரண்டாம்பட்சமாகக் கருதி அரசியலுக்கும் சென்றிருந்தார்கள் என்றால் அவர்களின் பங்களிப்பு என்று எதுவும் எஞ்சியிருக்காது.
பொதுவாக நுண்கலைக் கலைஞர்கள் தங்கள் கலைகளுக்குள்ளேயே மூழ்கியிருப்பதைக் காணலாம். அக்கலைகள் கடும் பயிற்சியை நிபந்தனையாக்குபவை. பிறிதில்லாத தவத்தை கோருபவை. அவர்களிடம் உன் அரசியலென்ன என்று கேட்கும் சமூகம் அக்கலைகளை அழிக்கிறது. முன்பு அதைச் செய்தவர்கள் ஃபாசிஸ்டுகள், நாஸிகள், ஸ்டாலினிஸ்டுகள். இன்று அதை ஃபாசிச எதிர்ப்பின் பெயரால் இந்த அரசியல் அல்லக்கைகள் செய்கின்றன.
இவர்களுக்கு எந்த ஒரு அறிவியக்கத்தையோ கலையையோ புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவு அல்லது நுண்ணுணர்வு கிடையாது. இவர்கள் தங்களுடைய கட்சி தங்களுக்கு அளிக்கும் ஒரு செயல்திட்டத்திற்கு அப்பால் எதையும் யோசிப்பவர்கள் அல்லர். அந்த செயல்திட்டம் மட்டுமே உண்மையானது என்றும், தேவையானது என்றும், அதைச் சார்ந்து மட்டுமே எவரும் செயல்பட வேண்டும் என்றும், அதை அண்டியிராமல் சுதந்திரமாகச் செயல்படும் அனைவருமே தங்களுடைய முழுமூச்சான எதிரிகள் என்றும், அவர்களை அவதூறு வசைப்பாடி அழிப்பது தங்களுடைய கடமை என்றும் நம்பும் கூட்டம் இது. சென்ற நூறாண்டுகளில் எவரெவெல்லாம் இவர்களால் இப்படி இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் ரத்தக்கண்ணீர் வரும். இன்றும் அதுதான் தொடர்கிறது.
இத்தனை தீவிரமாக ஓர் அரசியல் தரப்பின் குரலாக ஒலிப்பவர்கள் உண்மையில் அந்தக் கொள்கைக்கு விசுவாசமானவர்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் அந்த அரசியல் தரப்பு தன் எதிரித் தரப்புடன் ஒரு சமரசத்தை செய்து கொண்டு, இணைந்து அரசியலை முன்னெடுக்கும் என்றால் இவர்கள் எந்தக் கூச்சமும் இல்லாமல் உடனடியாக தாங்களும் அந்த நிலையை எடுத்துவிடுவார்கள். அப்படி என்றால் அதுவரைக்கும் அவர்கள் செய்த மிரட்டல்கள், அவதூறுகள் ஆகியவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? அவை உண்மையிலேயே கலையிலும் அறிவியக்கத்திலும் ஈடுபட்டிருக்கும் அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கு அளித்த உள நெருக்கடி, சோர்வு, செயல்களுக்கான தடை ஆகியவற்றிற்கு அப்பால் எந்த விளைவும் இல்லை.
இந்த அரசியல் சில்லறைகள் ஏதோ தங்கள் பிழைப்பை பார்க்கட்டும் என நினைக்கலாம். ஆனால் இவர்கள் தங்கள் அறிவுத்தவத்தை மேற்கொள்ளும் மெய்யான அறிஞர்களை, ஆய்வாளர்களை, கலைஞர்களை தங்கள் எதிர்த்திசையில் நிறுத்தி வசைபாடுகிறார்கள், இழிவு படுத்துகிறார்கள். அவர்களின் பொதுவெளி பிம்பத்தை சிதைத்து, அவர்கள் பொதுச்சமூகத்தினருடன் உரையாட முடியாதபடி முத்திரை குத்தி தனிமைப்படுத்துகிறார்கள். அதன் வழி அறிவியக்கம் பரவாதபடி செய்கிறார்கள். தங்களுடைய எளிய பிரச்சாரங்களுக்கு அப்பால் எந்த கருத்தும், கலையும் மக்களிடையே சென்று சேர இவர்கள் விடுவதில்லை. இவர்களின் பிரச்சார வல்லமை மிகப்பெரியது, எளிய ஒற்றைப்படைக் கூச்சல் ஆதலால் சாமானியருக்கும் எளிதில் சென்று சேர்வது. இவர்களின் இடைவிடாத தொடர்பிரச்சாரத்தை அறிஞர்களும் கலைஞர்களும் எதிர்கொள்ளவே முடியாது. இது இவர்கள் ஆற்றும் மிகப்பெரிய அழிவுப் பணி. இந்த தொற்றுநோய்க் கிருமிகளை அடிப்படை அறிவுள்ள இலக்கிய வாசகர், அறிவியக்கத்தில் ஆர்வம் கொண்டவர் முதன்மையாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
