அலெக்ஸின் நாள்

நண்பர் அலெக்ஸின் மகள் எழில் இனிமையின் திருமணம் நிகழ்ந்த புகைப்படம் இன்று வந்தது. நீண்டநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை பரவசம் ஏன் ஏற்படுகிறது என்று மெய்யாகவே எனக்குப் புரியவில்லை. பயல்கள் சொல்வதுபோல நான் ஒருவகை ‘பூமர்’ தானோ என எண்ணிக்கொண்டேன்.
நாம் அடையும் சில பரவசங்களை ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட நம்மால் ஊகித்துவிட முடியாது. ஒரு பதின்பருவத்துப் பையன் என்றோ ஒருநாள் தன் மகனையோ மகளையோ கையில் ஏந்தும் போது அடையப்போகும் பேரின்பத்தை அப்போது கற்பனை செய்ய முடியாது .அது போலவே நாம் முதிய தந்தை எனும் நிலையில் கனியும்போது நம் மகளுக்கும் மகனுக்கும் நிகழும் திருமணம் நமக்கு அத்தனை பேரின்பத்தை நமக்கு அளிக்கும் என முன்னர் எண்ணியிருக்கவே மாட்டோம்.
எழில் இனிமை அலெக்ஸுடன் இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தாள். அந்தப் புகைப்படங்களில் அலெக்ஸ் ஒரு குடும்பத் தலைவராக மகிழ்ச்சியுடன் தன் மனைவி, மகன், மகளுடன் இருந்து கொண்டிருந்தார். அப்படங்களையே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் மாண்டவர்களின் உடல்களை, முகத்தைப் பார்ப்பதே இல்லை. ஆகவே அவர்கள் இறந்தார்கள் என என் மனம் நம்புவதுமில்லை. அலெக்ஸ் என்றும் உடன் இருப்பதாகவே உணர்கிறேன். என் நண்பர்கள் எவரும் இறப்பு வழியாக என்னை விட்டுச்செல்வதில்லை. அநேகமாக எல்லா நாட்களிலும் உடன் இருப்பவராகவே இத்தனை ஆண்டுகளில் அலெக்ஸ் நீடித்திருக்கிறார்.
அலெக்ஸ் கொஞ்சிக்கொண்டே இருந்த சிறுமியாக எழில் இனிமையை எனக்குத் தெரியும். அவள் இனி மும்பை வாசி. அலெக்ஸின் இடத்தில் இருந்தும் என்னால் எழில் இனிமையை வாழ்த்த முடியும் என்று தோன்றுகிறது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
