எழுத்தின் தவம்
(ஓர் இளம்படைப்பாளிக்கு எழுதிய கடிதம்)
அன்புள்ள …,
உங்களுடைய கடிதம் கண்டேன். எழுதும்போது இருக்கும் தன்னம்பிக்கையின்மை, ஒரு பெரும்படைப்பை உண்மையிலேயே எழுதிவிட முடியுமா என்னும் அச்சம், அது உருவாக்கும் தாழ்வுணர்ச்சி, அதன் விளைவான சோர்வு, அதிலிருந்து தப்ப தன்னைத்தானே மையத்திலிருந்து விலக்கிக் கொண்டு வெவ்வேறு கலைவடிவங்களுக்குள் செல்ல முடியுமா என்று செய்யும் முயற்சி – என்று உங்களுடைய கொந்தளிப்பையும் தவிப்பையும் எழுதியிருந்தீர்கள்.
நீங்கள் சொன்னது சரி. உங்களிடம் நான் எதிர்பார்ப்பது தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளை மட்டும்தான். அது வெறும் நம்பிக்கை அல்ல, உங்களை மதிப்பிட்டு அறிந்து கொள்ளும் எதிர்பார்ப்புதான். நீங்கள் எவர் என நான் அறிவேன். உங்களால் சாதனை என்று சொல்லத்தக்க ஒரு படைப்பையாவது எழுதிவிட முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஆனால் ஒரு சாதனைப் படைப்பை எழுதுவதற்கு அதை மட்டுமே எழுதுவேன் என்று ஒருவன் திட்டமிட முடியாது. ஒரு படைப்பு சாதனையாக வெளிவருவது அவன் கையில் இல்லை. ஒருவன் தன்னை அறிவுத்தொகை என்ற மாபெரும் ஏரியின் ஒரு சிறு மடை எனவே கருத வேண்டும். அதனூடாக வெளிவருவது அவனுடையது அல்ல. அவன் ஒரு கருவி மட்டுமே. நம் வழியாக எத்தனை எழுத்து வெளிவருகிறதோ அத்தனை தூரம் நாம் அதை உறுதியாக உணர்வோம்.
எழுத்தாளன் எழுத்தைத் தன்னுடையது என்று நினைத்தான் என்றால், தன் சாதனை என்று பெருமிதம் கொண்டான் என்றால், அதன் தோல்விகளும் தன்னுடையவை என எண்ணினான் என்றால், அவன் ஒருபோதும் அதன் பேருருவை அறியமுடியாது. உண்மையில் தன்னை ஒரு மிகச் சரியான கருவியாக ஆக்கிக் கொள்வதற்காகவே எல்லா எழுத்தாளர்களும் போராடுகிறார்கள். தன்னியல்பாக அந்த வளர்ச்சி நிகழ்ந்து, ஒரு கட்டத்தில் அது இயல்வதாகிறது.
இலக்கிய இயக்கத்தில் இருக்கும் பேரின்பம் என்பது நாம் ஒரு மகத்தான விஷயத்திற்காக இடைவெளியின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற தன்னுணர்வுதான். அந்த இலக்கிய தவத்தில் உள்ள தோல்விகள், அது அளிக்கும் தன்னம்பிக்கைக் குறைவு. சோர்வு ஆகியவை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். தேவைக்குமேல் பெரிய கனவைக் காண்கிறோமோ என்று தயக்கமும், பெரும்படைப்பு ஒன்றை எழுதிவிட வேண்டும் என்பது மொத்த வாழ்க்கைக்கும் மீதான ஒரு எடையாகவும் அழுத்தமாகவும் ஆகிவிட்டதோ என்ற சஞ்சலமும் எழாத எந்த எழுத்தாளரும் இலக்கியத்திற்குள் செயல்பட முடியாது.
உண்மையில் இலக்கியத்துக்குள் நுழையும் தொடக்க காலத்தில் இருக்கும் பெரும் கனவும், அதை ஒட்டிய அகக்கிளர்ச்சியும், மெல்ல மெல்ல வடியத் தொடங்குவது நாம் பெரும் படைப்புகளை படிக்கத் தொடங்கும்போதுதான். அவற்றைப் படிக்கப் படிக்க நம் தன்னம்பிக்கை குலைகிறது. நாம் சோர்வுறுகிறோம். நாம் தற்காலிகமாக எழுதாமலும் ஆகிவிடலாம். ஆனால் எதையுமே படிக்காமல், பொய்யான தன்னம்பிக்கையுடன், எதையோ ஒன்றை எழுதி தங்களையே சிறுமைப்படுத்திக் கொள்ளும் சில்லறை எழுத்தாளர்களின் ஆணவத்தை விட அந்தச் சோர்வும் தயக்கமும் மேலானது. புனிதமானதும்கூட.
அந்தத் தளர்ச்சியும் தன்னம்பிக்கை இழப்பும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதி என்றே கொள்ளத்தக்கவை. இந்தப் பயணத்திலிருந்து ஒருவர் முன்செல்வதற்கான வழியும் அதுதான். அது ஒன்றும் உங்களுக்கு மட்டும் உரியதல்ல. நல்ல படைப்பாளிகள் அனைவருக்குமே அந்த தன்னம்பிக்கையின்மையும் சோர்வும் தொடக்கத்தில் உண்டு. அதைக் கடந்து வராமல் எவரும் எழுத முடியாது. பலசமயம் செயற்கையான தன்னம்பிக்கையை ஊதிப் பெருக்கிக்கொண்டு இளம்படைப்பாளிகள் அந்த சோர்வை கடந்து வருகிறார்கள்.
என் இருபத்தாறு, இருபத்தேழு வயதுகளில் காசர்கோட்டின் கடலோரத்தில் ஓர் இருண்ட தனி வீட்டில் தன்னந்தனியாக தங்கி, பிரிட்டிஷ், ருஷ்யப்பேரிலக்கியங்களை இரவும் பகலும் என படித்துக் கொண்டிருந்த காலங்களை நினைவு கூர்கிறேன். அப்போது அந்தப் பேரிலக்கியங்களின் முன் என்னை வெறும் தூசியாக உணர்ந்தேன். என்னால் ஒருபோதும் ஒரு பேரிலக்கியத்தை எழுதிவிட முடியாது என்று அவநம்பிக்கை உருவாக்கிய சோர்வு என்னை பல நாட்கள் கண்ணீர் மல்க வைக்கும் துயருக்குத் தள்ளி இருக்கிறது. காசர்கோட்டின் கொந்தளிக்கும் கடற்கரையில் நின்று நெஞ்சில் கை வைத்து விம்மிய நாட்கள் உண்டு.
ஒரு முறை அங்கே என்னை சந்திக்க வந்த கோணங்கியிடம் “ஒரு பத்தியையாவது இந்த கடல் பொருட்படுத்தும்படி எழுதிவிட என்னால் முடியுமா?” என்று நான் கேட்டேன்.
கோணங்கி அவனுக்கே உரித்தான ஒரு மொழியில் “அவரவர் கடல்! அவரவர் கடல்” என்றான். அதன்பின் அந்தக் கடற்கரையின் மென்மணலில் சேரனின் தந்தை மகாகவி எழுதிய ஒரு வரியை ஒரு குச்சியால் எழுதினான். “சிறுநண்டு கடலோரம் படம் ஒன்று கீறும், சிலநேரம் அதை வந்து கடல் கொண்டு போகும்!” அதை கடல் அழித்தது.
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் நான் எனக்கான ஒன்றை எழுதிவிட வேண்டும் என்றும், அது எந்த வகையிலும் பொருட்படுத்த முடியாதது என்றாலும் பரவாயில்லை என்றும் நினைக்கலானேன். எழுதி தூர வீசிவிடலாம், எவரும் படிக்கவேண்டாம், படித்தால்தானே அதன் மதிப்பு அல்லது மதிப்பின்மை வெளிப்படும், எனக்கு நான் வெளிப்பட்டுவிட்டேன் என்று திருப்தி இருந்தால் போதும் என்று முடிவு கட்டினேன். அந்த உணர்வுடன் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் எழுதிக் கொண்டே இருந்தேன்.
எனக்கான சவால்கள் மிகச் சிக்கலானவை. நான் வீட்டில் மலையாளம் பேசும் குடும்பத்தைச் சார்ந்தவன். வெளியே நாங்கள் கேட்டுப் பழகிய தமிழோ வட்டார வழக்கு மட்டும்தான். வெளியே நான் படித்த உரைநடை என்பது வணிக இலக்கியத்தின் தமிழ். தீவிர இலக்கியங்கள் பலவற்றை நான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலுமே வாசித்தேன். தமிழில் தீவிர இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கும் போது அதில் இருந்த மொழியும் நடையும் எல்லாமே மையத்தமிழ் நாட்டை சேர்ந்தவை, எனக்குரியவை அல்ல என்று தோன்றியது. ஆகவே எனக்கான சொந்த மொழியை உருவாக்கிக் கொள்ளாமல் நான் எழுதவே முடியாது என்ற சூழல் இருந்தது.
நான் எழுதி எழுதி என் தடைகளைக் கடந்தேன். சுந்தர ராமசாமியிடம் நான் ஒரு முறை சொன்னதுபோல கதவுகளை மண்டையால் அறைந்து திறந்தேன். இன்று வெளிவந்திருக்கும் விஷ்ணுபுரத்தின் அளவுக்கு நேர் பாதிப் பக்கங்கள் கிழித்து வீசப்பட்டிருக்கின்றன. ரப்பரின் ஒரு முழு வடிவம் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. அன்று எழுதிய மூன்று நாவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரம் காலடிச் சுவடுகள் என்ற புத்தரின் வாழ்க்கை ஒட்டிய நாவல் அறுபது அத்தியாயங்களுக்கு மேல் சென்று இருக்கிறது. என் பழைய காகிதங்களில் அதன் சிலபகுதிகளை பின்னர் ஒருமுறை கண்டேன்.
எழுத்து எளிய ஒன்றல்ல. கலைக்கு வெளியே உள்ளவற்றை நாம் திரும்பத் திரும்பச் செய்து பழகி திறன் அடைய முடியும். கலைக்குள் செய்து செய்து பார்ப்பது என்பது நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ளுதல் மட்டுமே. நமக்கு அப்பால் அருவவமாக இருக்கும் ஒன்றுடன் நம் அகமொழியைச் சரியாகப் பொருத்திக் கொள்வது மட்டும்தான் அது. அந்தப் பொருத்தம் ஒரு தற்செயலாகவே நிகழும். ஆனால் இடைவெளி இல்லாமல் முயல்பவர்களுக்கு மட்டும்தான் அது இயல்வதாகிறது. அந்த முயற்சியை தான் ஒவ்வொரு கலைஞனும் செய்தாகவேண்டும் என்கிறேன்.
அது எனக்கு இயன்றது என் தொடக்க காலச் சிறுகதைகளில், குறிப்பாக திசைகளின் நடுவே என்ற கதை. அதிலிருந்து எனது இன்னொரு தொடக்கம் நிகழ்ந்தது. அந்த ஆண்டே நான்கு வெவ்வேறு வகை கதைகள். ஒரு கதையிலிருந்து ஒரு மொழிவடிவத்தை கண்டுகொண்டு அதையே வாழ்நாள் முழுக்க திரும்பத் திரும்ப எழுதுவது தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் வழியாக உள்ளது. ஆனால் நான் வெவ்வேறு வகையில் என்னை வெளிப்படுத்த வேண்டும் என முயன்றேன். திசைகளின் நடுவே போன்ற புராண மறு ஆக்கக் கதைகள், மாடன் மோட்சம் போன்ற வட்டார வழக்கும் அங்கதமும் கொண்ட கதைகள், படுகை போன்ற நாட்டாரியல் உருவகக்கதைகள், பாடலிபுத்திரம் போன்ற வரலாற்றுப் படிமக்கதைகள் என பல்வேறு வடிவங்களை நான் முயற்சி செய்திருக்கிறேன். அந்த எல்லா வடிவத்தையுமே தொடர்ந்து எழுதி முன்னெடுத்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையில் நான் வெளிப்பட்டு இருக்கிறேன்.
மாடன் மோட்சம் எழுதி நாற்பதாண்டு ஆகப்போகிறது. அது மொழியாக்கமாக, நாடகமாக உலகஅளவில் தொடர்ச்சியாக வெவ்வேறு மொழிகளுக்குச் சென்று கொண்டே இருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அக்கதை மீள்வாசிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின்போது ஆங்கில இதழ்களில் அதுபற்றிய கட்டுரைகள் வந்தன. ராமர் கோயில் நிகழ்வின்போது அது மீண்டும் வாசிக்கப்பட்டது. சபரிமலை விவாதங்களின்போது மறுபடியும் புதியதாக வாசிக்கபப்ட்டது. அண்மையில்கூட ஒரு விமர்சகர் ‘சமகாலத்தை எழுதிய பெரும்படைப்பு’ என ஆங்கிலத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த நித்யநிகழ்காலத்தை கலையில் நிகழ்த்துவதற்கே தவம் தேவையாகிறது.
கலையை கலைமகளிடம் அருள்பெறுதல் என்கிறோம். தெய்வம் வெளியே இல்லை. நம்முள் உள்ள கலையின் தெய்வத்தை வணங்கி, அர்ப்பணித்து, பலிகொடுத்து நாமே எழுப்பிக்கொள்வதுதான் தவம் என்பது. அந்த தவத்தை ஒருபோதும் அஞ்சலாகாது, தவிர்க்கலாகாது. அதற்கு தலை கொடுக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பை ஒவ்வொரு கலைஞரிடம் நான் எதிர்பார்க்கிறேன். தவம் என்பது வலியும் துயருமே. அதன் வழியாகவே நாம் ஆற்றல் அடைந்து முன்னெழுகிறோம்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
