ரமேஷ், தமிழிலக்கியச்சூழல்.
ஜெ,
என்னுடைய உணர்வுகளை கூறவிளைகிறேன். ஏதோ சொல்லிவிட்டால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இலக்கியத்தையும் அதைப் படைக்கும் படைப்பாளின் வாழ்வையும் விலக்கி பார்ப்பது சரியானதாக பலரும் எண்ணக்கூடும்.ஆனால் படைப்பாளி தன்னுடைய அன்றாடத்தில் தன்நிறைவு இல்லாமல் எவ்வளவு தூரம் கலையில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
கலை இலக்கியம் சார்ந்து இயங்குகிறவர்கள் வாழ்வு குறித்து நமக்கு கிடைக்கும் சித்திரங்கள் பெரும்பாலும் சாமானியனுக்கு அச்சம் தருவாதாகவே இருக்கின்றன. இதற்கு நமக்கு அண்மையிலான உதாரணம் ரமேஷ் பிரேதன். அவருடைய அறைக்குள் ஒரு விருந்தினராக சென்று சில மணித்துளிகளை கழித்து வரும் எவராலும் நான் கூற விளைவதை புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை என்றே கருதுகிறேன். ஒரு அறைக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வாழ்வு எத்தனை கொடூரமானது. அதற்குள் நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கான நெஞ்சுரம் எப்படி சாத்தியமானது?.
மாதம் தோறும் சில பத்தாயிரங்களை சம்பாதிக்க வேண்டிய இளைஞனால் கலை இலக்கியத்தில் ஆர்வம் இருந்தும் பங்கேற்க முடியாத சூன்ய வாழ்வுதான் இங்கு நிலவுகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பொருளாதார நிறைவு தரும் தன்நம்பிக்கை எதற்கும் ஈடாது என்பது சமகாலச் சூழல்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடலாலும் முடக்கப்பட்டவர். அவரால் தன்னை தற்காத்துக்கொள்ள காலம் ஒருவழியும் கொடுக்கவில்லை. அதை ஈடுகட்டுவது அத்தனை சுலபம் இல்லை. பெற்றவர்களை பராமரிக்கும் கடமையில் கூட ஒரு கணம் சினந்துவிடுகின்றது மனது என்பதை மனசாட்சி கொண்ட எவரும் மறுத்துவிட முடியாது. அது மனித இயல்பு. ரமேஷ் போன்ற ஒரு கலைஞனை தொடர்ந்து எதிர்கொண்டு – ஆதரித்து கலையில் எல்லைவரை பயணிக்க வைத்தல் உச்சமான சாகசப் பயணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனை அரவணைத்து அவருக்கான ஒரு பாதுகாப்பான சூழலை கட்டமைத்தல் இதில் முதன்மையானது. அதற்கு பொருளாதாரம் தான் அடிப்படை. அதில் தான் அத்தனையும் தங்கியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், அவருடைய நண்பர்கள் ஏற்படுத்திய பாதுகாப்பான சூழல் ரமேஷ் பிரேதனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அதற்கு பிறகு சாத்தியமானவை யாவும் மிகுதியானவை என்றும் சொல்ல இயலும்.
அடுத்து பதிப்பாளர், எழுத்தாளர் ஜீவகரிகாலனை குறிப்பிட வேண்டும். தனது கலையை தமிழ் சமூகத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல சமரசமற்ற ஒரு உறவு அவசியமாக ரமேஷ் அவர்களுக்கு அவசியமாகின்றது.
புத்தகங்கள் தமிழ் சமூகத்தில் எத்தகைய பங்காற்றுகின்றன என்பது இன்னும் பிடிபடாத நிலமைதான் நீடிக்கின்றது. இதில் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் கலையை ஆழமாக புரிந்து கொள்ளுதல் சற்று கடினமானது. அதற்கு ஒரு நீண்ட பயணம் இருக்கிறது. அதை ஒரு பதிப்பகம் முன்னெடுத்து செல்ல வேண்டியது கட்டாயமாகும். யாவரும் அதைதான் செய்தது.தொடர்ந்து செய்யவேண்டும் என்பது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் விருப்பமாக இருந்ததை அவருடைய உரையாடல்கள் வழியே நானும் அறிந்து கொண்டேன். அந்தப் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய தார்மீகப்பொறுப்பு ஜீவகரிகாலனுக்கு உண்டு.
இதை எழுதும் போதும் என் மனம் சோர்வடைந்தும் பிறகு நம்பிக்கை கொண்டும் எழுதவைக்கின்றது. ஒரு நிலையில் நிற்கவில்லை. அதற்கு காரணம் தமிழ் இலக்கியச்சூழல்தான். இதை ரமேஷ் பிரேதன் போன்ற உடலாலும் உள்ளத்தாலும் நெருக்கடியை எதிர்கொண்ட கலைஞன் எப்படி எதிர்கொண்டிருப்பான் என்ற பதற்றம் என்னை பாடாய்ப்படுத்துகின்றது.அந்த தருணம் ஜெயமோகன் என்கின்ற பெயர் என்னுடைய தோளில் கைவைத்து நம்பிக்கை கொள் என்று அழுத்திச் சொல்கின்றது. தமிழ் சமூகம் குறித்து அவநம்பிக்கை கொள்ளாதே.விஷ்ணுபுரம் என்ற பெயரில் கூட அவர்களில் ஒரு பகுதியினர் திரண்டு வருவார்கள் என்று இலக்கிய வாழ்வு குறித்து யாவரும் அவநம்பிக்கை கொண்டு விடாமல் காத்து நிற்கின்றது.
– வாசு முருகவேல்
அன்புள்ள வாசு
உங்கள் குரலில் உள்ள சோர்வை புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் எழுதிய இதே உணர்வையும் கொந்தளிப்பையும் யுவன் சந்திரசேகரும், கீரனூர் ஜாகீர்ராஜாவும், எஸ்.ஜே.சிவசங்கரும் எனக்கு தெரிவித்தார்கள். குறிப்பாக உடல்நிலை குன்றி இருக்கையில் இத்தகைய நிகழ்வுகள் மிக ஆழமான பாதிப்பை உருவாக்குகின்றன.
இந்த வகையான சோர்வு எழுத்துச் செயல்பாட்டில் அவ்வப்போது தீவிரமாக வரும், எப்போதும் ஓர் எல்லையில் இருந்து கொண்டும் இருக்கும். ஆனால் இதை இன்னொரு கோணத்தில் பார்க்க நான் மிக இளமையிலேயே கற்றுக் கொண்டேன். ஏனென்றால் இன்று இருக்கும் வாசிப்போ, கவனமோ கூட சற்றும் இல்லாத ஒரு சூழலில் தான் முதல் பத்து ஆண்டுகளில் எழுதியிருக்கிறேன். இருநூறு பிரதிகள் மட்டுமே வாசிக்கப்படும் சிற்றிதழ்ச் சூழலில் எழுதியவன் நான். அதற்கு அப்பால் ஒரு வாசிப்பு எனக்கு அமையும் என்று அப்போது கற்பனை செய்ததும் இல்லை.
நீங்கள் சொன்ன இந்த விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். ரமேஷின் உடல்நிலை என்பது அவர் இலக்கியவாதி என்பதனால் அமைந்தது அல்ல. அது அவருடைய மரபணுக் குறைபாடு. அவர் ஓர் இலக்கியவாதி அல்ல என்றாலும் கூட இதே போன்ற உடற்சிக்கல், கைவிடப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து இருப்பார். ஆனால் அவருடைய வாழ்க்கை அப்போது என்னவாக இருந்திருக்கும்? இன்று அவருக்கு உருவாகி வந்துள்ள இந்த நட்பு வளையம் அமைந்திருக்குமா ? அவரது இறுதிநாளில் தமிழகத்தின் எழுத்தாளர்கள் எந்தெந்த ஊரில் இருந்தெல்லாம் கிளம்பி வந்தனர் என்று கண்டோமே. எளிய நிலையில் வாழ்பவர்கள்கூட கடன் வாங்கி பயணம் செய்து வந்திருந்தனர் அல்லவா?
நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தில் ரமேஷ் என்னிடம் உரிமையுடன் அதட்டி பணமும் விருதும் கேட்டதை பற்றி நெகிழ்வுடன் எழுதியிருந்தார். சாமானியர்களால் அந்த உறவைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களின் கணக்குவழக்கு உலகில், சம்பிரதாயப்பேச்சுக்களின் சூழலில் அத்தகைய ஒன்று இல்லை. எழுத்தாளர் என்பதனால் அமைந்த உறவு அல்லவா அது? நம் சூழலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்பவர் எப்போதும் ஒரு படி கீழே என்ற எண்ணம் உண்டு. அவர்களின் உலகில் அதுதான் விதி. இலக்கியத்தில் அது கிடையாது. அவர் என்னது இலக்கிய உறவு. நாங்கள் இருவரும் சேர்ந்து மகத்தான ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம் என்னும் உணர்வு இருவருக்கும் இருந்தது. ஆகவே நாங்கள் இருவரும் எந்நிலையிலும் எல்லா வகையிலும் இணையானவர்கள் மட்டுமே. அந்த அளவிலேயே அவர் என்னிடம் பழகி இருக்கிறார். அது எல்லா உரிமைகளும் உடைய நட்பு. அத்தகைய உறவு சுற்றமும் அவர்களுக்கு உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது அவருடைய இலக்கியம்தானே? அப்படி பார்த்தால் அவருக்கென ஒரு தனி வெளியுலகத்தை இலக்கியம் படைத்து அளித்திருக்கிறது அல்லவா?
அதேபோல ரமேஷ் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே அறைக்குள் ஒரே படுக்கையில் வாழ்ந்த மனிதர். ஆனால் பெரும்பாலான தருணங்களில் உற்சாகமாகவே இருந்தார். நான் அவரிடம் இறுதியாகப பேசும் போது கூட யுவன் சந்திரசேகர் போல ஒரு நெகிழ்வான விருது ஏற்பு உரையை மேடையில் பேசுவதா, அல்லது கோணங்கிபோல எவருக்கும் புரியாமல் உரையாற்றுவதா, எஸ்.ராமகிருஷ்ணன் போல கவித்துவமாகப் பேசுவதா, அல்லது என்னைப்போல எண் போட்டு அறுதியிட்டுப்பேசும் பாணியா என்று குரலால் நடித்துக்காட்டி நையாண்டி செய்து கொண்டிருந்தார். அவர்கள் மூவரையும் விழாவிற்கு அழைக்க வேண்டும் என்றார்.எஸ். ராமகிருஷ்ணன் வருவார் என்று எனக்கு தோன்றவில்லை என்று நான் சொன்னேன். நானே அவனுக்கு போன் செய்து அழைக்கிறேன் என்று சொன்னார்.
இந்த அகஉலகம் அவருக்கு அமைந்தது இலக்கியத்தால் அல்லவா?இலக்கியம் மட்டும் இல்லை என்றால் அத்த பன்னிரண்டு ஆண்டுகள் படுக்கையில் அவர் எப்படிப்பட்ட ஒரு பெரும் வதையை அனுபவித்திருப்பார்! இந்த மீட்பின் தேவதைபோல நமக்கு அருள் செய்யும் தெய்வம் வேறென்ன? அதற்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் அல்லவா? நாம் எழுத்தாளர்களாக இல்லை என்றால் தொழிலதிபர்களாகி பணம் ஈட்டியிருப்போமா? அரசியல்வாதியாகி பதவிகளை பெற்றிருப்போமா ?சினிமாவில் ஸ்டார் ஆகி இருப்போமா? இல்லையே. நாம் மிக எளிய ஒரு வாழ்க்கை அல்லவா வாழ்ந்து கொண்டிருப்போம்? அ நமக்கு இன்று இருக்கும் அனைத்தையும் அளித்தது இந்த தெய்வமல்லவா ? நமக்கு இன்றிருக்கும் கவனமே நமது முன்னோர்கள் அடையாதது என்ற எண்ணமே எப்போதும் எனக்கு உள்ளது
எனக்கு எப்போதும் அருள்செய்த தெய்வம் அது. என்னை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழச் செய்வது. ஒரு துண்டு தாளும் ஒரு பென்சிலும் இருந்தால் எங்கும் எப்போதும் என்னால் மகிழ்ச்சியாக இருந்து விட முடியும் என்று எனக்கு காட்டியது. ஆகவே நான் இதன் முழு பக்தன். இதற்குத் தலை கொடுக்க கடமைப்பட்டவன். எவ்வகையிலோ இதன் அடியாரெல்லாம் என் உறவினரே. நான் அவ்வடியார்க்கும் அடியான் என்றே உணர்கிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
