ரமேஷ் – அஞ்சலிகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் ரமேஷ பிரேதன் அவர்களுக்கு செய்த உதவிகள், அவருடைய இறுதி நாட்கள பற்றி எழுதிய அஞ்சலிக்குறிப்புகளைப் பார்த்தேன். ஓர் எழுத்தாளர் இங்கே எப்படி வாழ்ந்தார், எப்படி மறைந்தார் என்பதை உள்ளபடி பதிவு செய்திருக்கிறீர்கள். அது ஒரு வரலாற்று ஆவணம். எழுத்தாளன் இங்கே கைவிடப்பட்டதில்லை, அவனுடன் எழுத்தாளர்கள் உடன் இருந்தார்கள், அவர்கள் மட்டும்தான் இருந்தார்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டும். அதை வருங்காலச் சந்ததியினருக்கு மட்டுமின்றி, எழுத்தாளர்களாக உருவாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கும் உணர்ச்சிகரமாகவும் வலுவாகவும் கடத்தியாக வேண்டும்.
உங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. உங்களுக்கு அமைப்பு சார்ந்த உதவியவர்கள் அனைவருக்கும் நீங்களும் உங்கள் அமைப்பும் செய்தவை தெரிய வேண்டும் என்பதற்காக இதை எழுதியிருக்கிறீர்கள் என்று முதலில் நினைத்தேன். ஆனால் அனைவருக்கும் இது தெரிந்தாக வேண்டும் என்பதும், எதிர்காலத்திலும் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களுடன் இருக்கவேண்டும் என்பற்கான ஒரு அறிவிப்பாக இது அமைய வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.
இங்கே முகநூலில் பல நூறு குரல்கள் ஒவ்வொரு நாளும் வம்புக்கென்று அலைந்து கொண்டிருக்கின்றன. எழுத்தாளர் நோயுற்றால், சாகக்கிடந்தால் இவர்களிடமிருந்து 10 காசு தேறாது. அவன் ஒரு நூல் எழுதினால், அல்லது விருது பெற்றால் ஒரு வார்த்தை எழுதமாட்டார்கள். ஆனால் அவன் வாழ்க்கையை வைத்துக்கொண்டு வம்பு வளர்ப்பதற்கும், செத்தால் அதன் வழியாக மேலும் வம்புகளை உருவாக்கிப் பதிவு தேற்றுவதற்கும் மட்டுமே இவர்கள் முன்வருவார்கள். இப்போதும் உங்களை வசைபாடி பதிவு போடும் சிலரை கவனித்தேன். ஒரு படைப்பாளியின் சாவின் போதுகூட வம்புகளுக்கும், வழக்கமான காழ்ப்புகளுக்கும் அப்பால் யோசிக்க முடியாத இவர்களெல்லாம் என்ன வகையான மனிதர்கள் என்ற திகைப்புதான் ஏற்பட்டது.
ரமேஷ் பிரேதனின் உடன் நின்றவர் அத்தனை பேருமே எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என்பதைப் போல தமிழ் எழுத்து உலகம் பெருமைப்படத்தக்க செய்தி ஏதுமில்லை. அந்த பெருமிதம் உங்களுடைய குறிப்பிலும் இருந்தது. நன்றி.
அன்புடன்
எம்.பாஸ்கர்.
அன்புள்ள ஜே,
ரமேஷ் பிரேதன் அவர்களின் நினைவாக விருதுகள் அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்டீர்கள் .அந்த விருதுகளை முன்னரே உங்கள் தளத்தில் அறிவித்துவிட்டு, அதை விழா மேடையில் அளித்தால் அது வாசகர்களுக்கு அப்படைப்பாளிகளை முன்னரே அறியவும், அவர்களின் படைப்புகளை வாசித்துப் பார்க்கவும் வாய்ப்பாக அமையும். இப்போது சில விருதுகளில் இத்தகைய விருத்தாளர்களை அந்த மேடையில் ஒரு திடீர் அறிவிப்பாகச் சொல்வதென்பது ஒரு வழக்கமாக உள்ளது. அது ஒரு மேடைப் பரபரப்பை உருவாக்குமே ஒழிய இலக்கியத்திற்கு உகந்தது அல்ல. முன்னரே அவற்றை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
க.ரவிச்சந்திரன்
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதன் அவர்களின் இறுதி நாள் நிகழ்வு அவருடைய வாசகர்களாலும் நண்பர்களாலும் சிறப்புற நிகழ்த்தப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் நாட்டுக்கு வெளியே தொலை தூரத்தில் இருக்கிறேன். ஆயினும் அங்கே ஒரு எழுத்தாளருடன் அவனுடைய சக எழுத்தாளர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்து நின்றார்கள் என்பது எனக்கு ஓர் இலக்கியவாசகராக மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது. அவருக்கு அவருடைய நோய்க்காலத்தில் நீங்கள் உட்பட எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து உதவினார்கள் என்பதைப் போல பெருமிதம் ஊட்டும் எதுவும் இல்லை. ஓர் அமைப்பு நிதியளித்தது, அல்லது பொதுமக்கள் நிதி திரட்டி உதவினர் என்பதை விட இது பல படி மேலானது. அதை நீங்கள் வரலாற்று ஆவணமாக பதிவு செய்ததும் அவசியமானதே. இல்லையேல் ஓராண்டுகூட கடப்பதற்குள் எவரும் எதுவும் செய்யவில்லை என்ற வழக்கமான பாட்டை ஆரம்பித்திருப்பார்கள்.
உங்களுடைய அஞ்சலிக் குறிப்பில் உங்களுக்கும் அவருக்குமான அந்தரங்கமான உரையாடலின் பதிவு நெகிழ்ச்சியூட்டியது. ரமேஷ் நோயுற்று உதவிக்காக நம்பி இருந்தபோது கூட உங்களிடம் தனக்கு உதவும்படி கோரவில்லை. மாறாக ஆணை இடுகிறார், அதட்டிக் கேட்கிறார். உங்களுக்கிடையே இருந்த உரையாடலில் இருந்த கேலி, கிண்டல் எல்லாமே அழகானவை. கொடுப்பவர் எவ்வகையிலும் மேலே இல்லாத அந்த சமமான உறவும், அதிலுள்ள இயல்பான அணுக்கமும்தான் எல்லாவற்றையும் அழகாக ஆக்குகிறது. அவர் சாவைப்பற்றிப் பேசுகிறார். நீங்கள் அதை தவிர்த்து அவரை பகடி செய்துகொண்டே கடந்துசெல்கிறீர்கள்.
அவர் உங்களிடம் ‘விருதைக் குடுய்யா’ என்று கேட்ட அந்த உரிமைதான் நட்பின் மிக உச்சம் என்று நான் நினைக்கிறேன். அவர் உங்களை அழைத்து ‘யோவ் பணம் கொடு’ என்று கேட்டதை வாசிக்கும்போது எனக்கு கண்ணீர் மல்கியது. ஒருவர் இன்னொருவரிடம் தனக்கு முழு உரிமையும் உண்டு என்றும், பணம் அல்லது உதவி பெறுவது என்பது தன் உரிமை என்றும், அதைச் செய்வது மற்றவரின் கடமை என்றும் நினைக்கும்போதுதான் உண்மையான உறவு நிகழ்கிறது. இன்று உறவினரிடம்கூட அத்தகைய நெருக்கம் இல்லை. பெற்ற மகனிடம் பணம் கேட்கக்கூட ஆயிரம் முறை யோசிக்கவேண்டும். ஒரு கிண்டலுக்குக்கூட இடமிருக்காது. உங்கள் நட்பின் நெருக்கத்தை இன்றைய சுயநலத் தலைமுறை புரிந்துகொள்ளமுடியாது. அத்தகைய நட்புகளின் காலம் முடிந்துவிட்டது என்றுகூட தோன்றியது.
நான் உங்கள் கோரிக்கைப்படி ரமேஷுக்கு பணம் அனுப்பியுள்ளேன். 2023ல் ரமேஷை புதுச்சேரியில் சென்று பார்த்தேன். அவர் உங்களையும் கோணங்கியையும் ஒருமையில் பேசியது என்னுடன் வந்த நண்பருக்கு மரியாதைக் குறைவாக தோன்றியது. ஆனால் அந்த இயல்பான நட்பும் நெருக்கமும் எனக்கு பரவசமூட்டுவதாக இருந்தது. நீங்கள் எழுதிய அந்த நட்புப்பதிவுகள் ஒருவகையான காலப்பதிவுகள்.
மா.கிருஷ்ணராஜ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
