ஹெக்கோடு நீனாசம் கலையிலக்கிய விழா

சென்ற ஆண்டு என் நண்பரும் கன்னட எழுத்தாளருமான விவேக் ஷான்பேக் என்னை அழைத்து கர்நாடகத்தில் ஷிமோகா அருகே ஹெக்கோடு என்னும் சிற்றூரில் இருக்கும் நீனாசம் என்ற அமைப்பின் இலக்கிய விழாவுக்கு விருந்தினராக நான் செல்ல முடியுமா என்று கேட்டார். ஆனால் அந்த நாட்களில் நான் அமெரிக்காவில் இருப்பது போல பயணத்திட்டம் போடப்பட்டிருந்தமையால் என்னால் செல்ல முடியவில்லை. என் வருத்தத்தை தெரிவித்தேன்.

ஆகவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நான் என்னை முறைப்படி அழைத்து, நாட்களையும் தெரிவித்து விட்டார். என்னுடைய பயணத்திட்டத்தை அதற்கு ஏற்ப அமைத்துக் கொண்டேன். ஆனால் சென்ற ஆகஸ்ட் முதலே என் ஒவ்வொரு நாளும் நெருக்கடியாகச் சென்றுகொண்டிருந்தது. ஹெக்கோடு சென்றால் அங்கிருந்து வந்து இரண்டு நாள் இடைவெளியில் நான் அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கும். அதற்குள் செய்து முடிக்க வேண்டிய திரைப்படப் பணிகள், எழுத வேண்டிய பணிகள் மிச்சம் இருந்தன. ஆகவே அங்கு செல்வது என்பது ஒரு சுமையாக ஆகிவிடுமா என்ற ஒரு சஞ்சலம் எழுந்து கொண்டே இருந்தது.

செப்டம்பர் 18 ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியது முதல் தொடர்ச்சியாக மூன்று நாள் இடைவெளியில் வெவ்வேறு ஊர்களிலாக பயணத்தில் இருந்து கொண்டிருந்தேன். ஆனால் நடுவே ரமேஷ் பிரேதனின் இறப்பும் அதை ஒட்டிய உளஅழுத்தமும் ஹெக்கோடு செல்வது ஒரு பெரிய விடுதலையாக இருக்கும் என்று எண்ண வைத்தன. உண்மையில் அந்த விழா என்னை எல்லாவகையிலும் மீட்டுக்கொண்டு வந்தது. மீண்டும் இங்கே செய்வன அனைத்திலும் முழுமையாக என்னை ஆழ்த்திக்கொள்ளச் செய்தது.

கோவையில் இருந்து செப்டெம்பர 30ஆம் தேதி காலை விமானத்தில் பெங்களூர் சென்று, அங்கிருந்து ஷிமோகாவுக்கு சென்றேன். ஷிமோகாவுக்கு கார் வந்திருந்தது. அங்கிருந்து சாகர் என்ற ஊருக்கு சென்று அவர்கள் ஏற்பாடு செய்த ஒரு விடுதியில் தங்கினேன். சாகர் ஒரு மிகச்சிறிய ஊர். மலைநாடு என கன்னடர் அழைக்கும் மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதி. மழைநாடு என்றும் அழைக்கலாம். தென்னகத்தில் மிக அதிகமாக மழைபெய்யும் பகுதி. மழைக்குளிர், ஈரம் எப்போதும் உண்டு. கோடையில் நன்றாக வியர்க்கும். இப்பகுதிக்கு நாங்கள் பெரும்பாலும் ஆண்டுக்கு ஒரு முறை மழைப்பயணம் வருவதுண்டு. ஆனால் நான் நீனாசம் அமைப்புக்கு வருவது முதல்முறை. 1986ல் ஜி.சங்கரப்பிள்ளை இந்த இடத்தைப் பற்றிச் சொன்னார். அதன்பின் பலர் சொல்லியிருக்கிறார்கள். வரவேண்டுமென்ற திட்டம் இருந்தது. இப்போதுதான் வர முடிந்தது.

ஹெக்கோடு எட்டு கிமீ அப்பால் இருந்த்து. அதை ஒரு குக்கிராமம் என்று தான் சொல்ல வேண்டும். அங்கு தங்குமிடங்களோ உணவகங்களோ கிடையாது. அங்குதான் நாடக மேதை ஆகிய கே.வி.சுப்பண்ணா பிறந்தார். சுப்பண்ணா நாடகத்திற்காக உலக அளவில் புகழ் பெற்றவர். காந்தியவாதி. சிவராமகாரந்த, பி.வி.காரந்த், பிரேமா காரந்த், கிரீஷ் கர்னாட், ராமகிருஷ்ண ஹெக்டே போன்ற பலருக்கு அணுக்கமானவர். அவருக்கு அவருடைய நாடகப் பணிகளுக்காக மகசேசே விருது கிடைத்துள்ளது. அவர் தன் சொந்த கிராமத்தில் உருவாக்கிய ஒரு கலைமையம் தான் நீனாசம்.  அதன் முழுப்பெயர் நீலகண்டேஸ்வரா நாட்யசேவா சங்கம். நீனாசம் என்பதற்கு நீ, நான், இணைப்பு என்றும் பொருளுண்டு.

1940களில் கே.வி.சுப்பண்ணாவும் அன்றைய இளைஞர்களும் அவருடைய பூர்வீக இல்லத்தின் அருகே இருந்த ஒரு சிறு கட்டிடத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கி இலக்கியச் சந்திப்புகளை நடத்தினர். 1949ல் அங்கிருந்து அசோகா வார இதழ் என்னும் செய்தி – இலக்கிய இதழை தொடங்கி நடத்தினர். அப்போதுதான் நீனாசம் அமைப்பு உருவானது. அதில் சிவராம காரந்த் இருந்தார். 1957ல் அக்‌ஷரபிரகாசனா என்னும் பதிப்பகத்தை கே.வி.சுப்பண்ணா தொடங்கி இலக்கிய நூல்களை வெளியிடலானார். 800 நூல்களுக்கு மேல் இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1967 முதல் நீனாசம் சித்ரசமாஜா என்னும் திரைப்படக்கழகம் நிறுவப்பட்டு திரைரசனை பயிற்றுவிக்கப்பட்டது. நீனாசம் ஒரு முதன்மையான நாடகப்பள்ளியாகவும் செயல்படுகிறது.

இன்று கே.வி.சுப்பண்ணாவின் மகன் கே.வி. அக்‌ஷரா நீனாசம் அமைப்பை முன்னின்று நடத்துகிறார். இந்தியாவிலும் பிரிட்டனிலும் நாடக்கலை பயின்ற அக்ஷரா நாடகக் கோட்பாட்டு நூல்கள், மொழியாக்கங்கள், மேடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றினூடாக கன்னட நாடக இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியவர். அக்ஷராவின் மகன் இன்று அடுத்த தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார். மூன்று தலைமுறைகளாக நீனாசம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக மக்களின் ரசனை வாசிப்பு ஆகியவற்றில் நீனாசம் அளித்த பங்களிப்பு என்பது பிறிதொரு அமைப்பை சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு மிகப்பெரியது.

நீனாசத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்திய அளவிலான கலை-இலக்கிய விழா நிகழ்கிறது. சென்ற ஆண்டு என் ‘யானை டாக்டர்’ நாடகத்தை அங்கே அரங்கேற்றினார்கள். இந்த ஆண்டு என்னுடைய நாடகமொன்று அரங்கேற இருப்பதாக சொன்னார்கள். அங்கு செல்வதுவரை அது ‘உலகம் யாவையும்’ என்ற சிறுகதையை ஒட்டிய நாடக ஆக்கம் என்று எனக்கு தெரியாது.

ஒன்றாம் தேதி காலையிலேயே பெங்களூரில் இருந்து சுசித்ரா வந்துவிட்டார். ஈரோடு கிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் அன்று மதியம்தான் வந்தனர். இந்தியாவின் வெவ்வேறு நாடகப்பள்ளிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து நீனாசம் விடுதிகளில் தங்கியிருந்தார்கள். நீண்டகாலமாக அனைவரையும் அங்கே தங்கவைப்பதே வழக்கமாக இருந்தது. நீனாசம் அமைப்பு பழைய மலைநாட்டு பாணியிலான ஓட்டுக்கட்டிடங்கள் கொண்டது. அறைகள் எளிமையானவை. இருவரை ஓர் அறையில் தங்கவைப்பார்கள். அஷிஷ் நந்தி முதல் ராமச்சந்திர குகா வரை இந்தியாவின் முதன்மையான சிந்தனையாளர்கள் அப்படி சிறிய அறைகளில் கூட்டமாக தங்கி இலக்கிய – நாடக நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.

மரபான கட்டிடக்கலையில் அமைந்த ஐம்பதாண்டு பழைய கட்டிடங்கள். ஒருவகையில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேச அந்த ‘உள்ளூர்த்தன்மை’யும் எளிமையும் உதவியது. அத்துடன் மிகப்பெரிய சர்வதேச இலக்கியவிழாக்களில் பொதுவாகத் தென்படாத தீவிரமான இளைஞர்கள் நிறையப்பேர் இருந்தனர். இலக்கிய உரையாடல்கள், சட்டென்று வெடிக்கும் ஆங்காங்கே பாடல்கள் என ஓர் இலக்கியக் கலைச்சூழல் எங்கும் இருந்தது. அண்மையில் விஷ்ணுபுரம் விழாவுக்கு நிகரான ஓர் உண்மையான ஆர்வத்தையும் தீவிரத்தையும் நான் கண்டது நீனாசத்தில் மட்டும்தான். அநேகமாக எல்லா ஆண்டும் இனிமேல் அங்கே செல்வேன் என்று நினைக்கிறேன்.

அசோக்

மூன்று நாட்கள் அங்கே இருந்தேன் அங்கு நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் கலந்து கொண்டேன் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கன்னடத்தில் நிகழ்ந்தன. ஆனால் எனக்கு கன்னடம் ஓரளவு புரிந்தது. நான் கன்னடத்தை காஸர்கோட்டில் கேட்டு பழகியிருந்தேன். வெவ்வேறு கன்னட இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தேன். அவர்கள் ஆங்கிலம் வழியாகவும் கன்னட மொழியாக்கங்கள் வழியாகவும் என்னை அறிந்திருந்தார்கள். கன்னட இலக்கிய விமர்சகர் டி.பி.அசோக் என் படைப்புகள் மேல் மிகப்பெரிய ஈடுபாடு கொண்டவராகவும், ஆங்கிலத்தில் வெளிவந்த என் படைப்புக்கள அனைத்தையும் படித்தவராகவும் இருந்தார். செல்லுமிடங்களில் எல்லாம் என் படைப்புகளை அறிமுகம் செய்கிறேன் என்றார்.

முதல் நாள் மாலையில் ஒரு நாடகம் நிகழ்ந்தது புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டக் அவர்களின் சிறுகதை ஒன்றை ஒட்டிய நாடகம். அவருடைய தொகுப்பின் முதன்மைக்கதை. ஆனால் மிகச்சுமாரான படைப்பு அது. அப்பட்டமான ஒரு ‘டிவிஸ்ட்’ மட்டுமே கொண்டது. மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை. மருமகள் மாமியாரை வெறுக்கிறாள், கூட இருக்கக்கூடாது என்கிறாள். வெறுத்துப்போன மகன் மறுமணம்செய்ய திட்டமிடுகிறான், தனக்கல்ல, தன் அம்மாவுக்கு. அம்மா அதற்கு ஒப்புக்கொள்கிறாள், மருமகள் கதறி அழுகிறாள். விகடன் போன்ற ஓர் இதழில் வெளிவரும் ஒரு விடம்பன கதை அது. அந்த கதையை இரண்டு மணி நேர நாடகமாக ஆக்கியிருந்தார்கள். நடிப்பு, அரங்க அமைப்பு, ஒலி, ஒளி எல்லாமே அபாரமாக இருந்தால்கூட உள்ளடக்கம் என்பது பலவீனமானதாக இருந்ததனால் அது சலிப்பூட்டியது.

அது கர்நாடக அளவிலான நாடகப்போட்டிக்காக தயாரிக்கப்பட்ட நாடகம். அந்த தொகுப்பு இஸ்லாமிய அடையாளம், பெண்ணிய அரசியல் என பல காரணங்களுக்காக விருது பெற்ற ஒன்று. அதே காரணத்தால் அது நாடகவிருதையும் பெறக்கூடும். அந்த நாடகத்தை அரங்கினர் ரசிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ரசிக்கிறார்கள் என்றால் அரங்கினரின் தரம் மிகச் சாதாரணமானது என்று முடிவுசெய்யலாம் என எண்ணினேன். ஆனால் மறுநாள் அந்த நாடகத்தைப் பற்றிய விவாதம் நகர்ந்த போது ஒவ்வொருவரும் அந்த நாடகத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து, ஏறத்தாழ நாங்கள் உணர்ந்த எல்லாவற்றையுமே அங்கு கேள்விகளாக முன்வைத்தார்கள். அது அந்த அரங்கு பல மடங்கு மேடையை விட மேலானது என்ற எண்ணத்தை உருவாக்கியது.  

இரண்டாம் நாள் காலை அமர்வில் முந்தையநாள் நாடகத்தைப் பற்றி உரையாடலுக்குப் பிறகு 11 மணிக்கு அசோக் என்னைப் பற்றிய 40 நிமிட அறிமுக உரை ஒன்றை ஆற்றினார். என் முக்கியமான கதைகள், என் இலக்கிய வாழ்க்கை, என் வாழ்க்கை வரலாறு  பற்றிய மிக தீவிரமான ஓர் அறிமுக உரை. கன்னடத்தில் அதன் பிறகு இருபது நிமிடங்கள் நான் ஆங்கிலத்தில் ஓர் உரையாற்றினேன். எந்த திட்டமிடலும் இல்லாமல்தான் சென்றேன். அங்கே கூடியிருந்த நாடகக்காரர்கள், முந்தைய நாளின் நாடகம் ஆகியவை அந்த உரைக்கான கருவை அளித்தன.

இன்றைய சூழலில் கலை – இலக்கியத் துறைகளில் செயல்பட வேண்டியவர்கள் கடைக்கொள்ள வேண்டிய மூன்று எதிர்நிலைகளை பற்றியது அந்த உரை.

முதல் எதிர்நிலை அதிகாரத்திற்கு எதிரானது. குடும்பம், சமூகம், அரசு, கல்விக்கூடம் ஆகியவை நம்மை ஒருவகையாக வரையறை செய்கின்றன. அவற்றுக்கு எதிராக ஒவ்வொரு கணுவிலும் நாம் வளரவேண்டியுள்ளது.இரண்டாவது எதிர்நிலை,  நம்மை ஒவ்வொரு நாளும் சராசரிப் படுத்திக் கொண்டே இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு எதிரானது. இன்றைய ஊடகங்களுக்கு நம்மை சராசரிப் படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது, ஏனெனில் ஒரு நுகர்வோர் என்பது ஒரு சராசரிநிலை. நம்மை ஒரு நுகர்வுச் சராசரியாக மாற்றும் முயற்சியைத்தான் இன்றைய அனைத்து ஊடகங்களும். செய்கின்றன. சமூக ஊடகங்கள் வழியாக நாமே நம்மை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அந்த ஊடகங்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு நமக்கு இல்லை என்றால் நாம் அந்த பிரம்மாண்ட ஒட்டுமொத்தத்தில் கலந்து விடுவோம்.மூன்றாவது எதிர் நிலை என்பது சிந்தனைக் களத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் துருவப் படுத்தல்களுக்கு எதிராக நாம் கடைக்கொள்ள வேண்டியது. நம்மை ஏதேனும் ஒரு தரப்புடன் இணைத்துக்கொண்டு அதன் ஒற்றைநிலையை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லா தரப்பும் நம்மிடம் சொல்கின்றன. அதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் நாம் நமக்கான பாதையை தெரிவுசெய்யவேண்டும். உண்மை எப்போதும் நுணுக்கங்களிலேயே உள்ளது.நடிகர்கள் ஶ்ரீகாந்த், ஆகாஷ்

அதன் பிறகு கேள்வி பதில். பெரும்பாலான கேள்விகள் மகாபாரதத்தை ஒட்டியதாக அமைந்தன. ஏறத்தாழ இரண்டு  மணி நேரத்திற்கு மேல் அந்த உரையாடல் நீடித்தது. வினாக்கள் பல கன்னடத்தில் இருந்தாலும் நான் புரிந்துகொள்ள முடிந்தது, நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். நிகழ்வுக்குப் பின்னர் என்னைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தனர். மதியச்சாப்பாட்டின் போதும் கேள்விகள் தொடர்ந்தன. அன்று முழுக்க பேசிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.

மதிய அமர்வில் என் ‘உலகம் யாவையும்’ நாடகத்தை என்.வி.ஶ்ரீகாந்த், ஜி.ஆகாஷ் ஆகியோர் நடித்தார்கள். ஶ்ரீகாந்த் நீனாசம் அமைப்பின் நடிப்புப் பயிற்றுநர். ஆகாஷ் அவருடைய மாணவர். உலகம் யாவையும் கதையை எப்படி நாடகமாக நடிக்க முடியும் என்று எண்ணினேன். இரண்டு பேர் மட்டுமே வெவ்வேறு கதாபாத்திரங்களாக மாறி உணர்ச்சிகரமாக நடித்தது நாடகம் என்பது நடிப்பு மட்டுமே என்னும் என் நம்பிக்கையை உறுதிசெய்தது. என்  படைப்பை நாடகமாக, அல்லது இன்னொரு கலை வடிவில் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே மிக முக்கியமானது. ஏனெனில் நான் எழுதிய கதையை நான் படிக்கையில் அதந் பிழைகளும் அதன் தொழில்நுட்பமும் மட்டுமே எனக்கு தெரிகின்றன. அந்த அணுக்கமே எனக்கு தடையாகிறது.  ஆனால் இன்னொரு வடிவம் வழியாக அது என்னை நோக்கி வரும்போது அது முற்றிலும் புதிய ஒன்றாக, வெறும் ஒரு கலைப்படைப்பாக மட்டுமே இருக்கிறது.

உலகம் யாவையும் நாடகம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. காரி டேவிஸ் உக்கிரமான அனுமவம் வழியாக உலகக்குடிமகனாக உருமாறும் அந்த தருணத்தை – நடித்த போது மெய்யாகவே எனக்கு அகம் சிலிர்த்து கண்ணீர் மல்கியது. அதன் பிறகு நாடகத்தைப் பற்றிய மீண்டும் மகாபாரதத்தை பற்றியும் மீண்டும் ஒரு மணி நேர உரையாடல் நிகழ்ந்தது.

மகாநிர்வாணம் என்னும் மராட்டிய நாடகம் தமிழிலும் புகழ்பெற்றது (அது தமிழினி வெளியீடாக வந்துள்ளது) அதன் ஆசிரியர் சதீஷ் அலேகரைச் சந்தித்து நாடகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த ஜனவரியில் புனேயில் நிகழவிருக்கும் நாடகவிழாவில் விருந்தினராக என்னை அழைத்தார். நான் வருவதாக ஒப்புக்கொண்டேன்.

சதீஷ் அலேகருடன். சதீஷ் அலேகர்

அந்த ஒரு நாளில் மட்டும் மேடையில் நாலரை மணி நேரம் பேசியிருந்தேன். மேடைக்கு வெளியே ஆறு மணி நேரத்திற்கு மேல் பேசி இருப்பேன் என்று நினைக்கிறேன். தொடர்ந்து புதிய வாசகர்கள், இளம் படைப்பாளிகளிடம் பேசிக்கொண்டே இருந்தேன். அவர்கள் அனைவருக்கும் என்னிடம் பேசுவதற்கு ஏதோ ஒன்று இருந்தது. அத்தகைய தீவிரமான வாசகர்களை நான் பெரிய தேசியநிகழ்வுகளில் பார்த்ததில்லை. அவை பெரும்பாலும் சம்பிரதாயச் சொற்கள், தொடர்பு உருவாக்கங்கள், குடி மட்டுமே. இந்திய இலக்கிய விழாக்களில்  ஆங்கிலத்தில் பேசுவார்கள். சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களே அதிகம் பேசுவார்கள். அவர்கள் பெரும்பாலும் மேலோட்டமானவர்கள், தேய்வழக்குச் சொற்களையும் வழக்கமான கருத்துக்களையுமே மிக வேகமான ஒரு உச்சரிப்புடன் பேசுவார்கள். தயங்கி தயங்கி பேசவரும் ஒரு புதிய வாசகனிடம் இருக்கும் ஆத்மார்த்தமும் உண்மையான கேள்வியும் அவர்களிடம் இருப்பதில்லை.

இன்றைய கல்விக்கூடங்களில் இலக்கியம் எனக் கற்பிக்கப்படுபவை பெரும்பாலும் அரசியல் சரிநிலைகளும் அரசியல் கருத்துக்களுமாக இருக்கின்றன. அல்லது இலக்கிய கோட்பாடுகள். மிக அரிதாகவே மெய்யான இலக்கிய ஆர்வமும், கலைசார்ந்த புரிதலும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான கலையார்வம் கொண்ட இளைஞர்களுக்கு இருக்கும் சிக்கல் என்பது அவர்களின் மெய்யான கேள்விகளுக்கு கல்லூரிகளில் இடமில்லை என்பதே. என்னிடம் வந்த ஐயங்கள் இலக்கிய வடிவங்களின் நுட்பங்கள் சார்ந்தவை. அல்லது கலைப்படைப்புக்கும் தங்களுடைய உளநிலைக்குமான நுணுக்கமான உறவு சார்ந்த கேள்விகள்.    

ஆங்கிலத்தில் வாஜ்பாயின் வரலாற்றை (Believer’s Dilemma) எழுதிய அபிஷேக் சௌதுரி வந்து அறிமுகம் செய்துகொண்டார். என் உரையாடல் தன்னை பெரிதும் கவர்ந்ததாகச் சொன்னார். டெல்லியின் இலக்கியவாதிகள் எப்போதும் சமத்காரமாக, கணக்குகளுடன் பேசுவார்கள். எவரையும் பகைகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒருவரின் நூல் பற்றி இன்னொருவர்தான் மதிப்புரை எழுதவேண்டும். என்னிடமிருந்த நேரடியான தீவிரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார். அவரிடம் அரசியல், இலக்கியம் பற்றி மிக விரிவாக பேசிக்கொண்டிருந்தேன்.

அபிஷேக் சென்னையில் பயின்றவர். பொருளியல் பயின்றபின் எழுத்தாளராக ஆனார். வாஜ்பாய் பற்றிய அவருடைய நூல் இன்று மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது, அது இந்தியாவில் எழுதப்படும் வழக்கமான துதிவரலாறு அல்ல. வசைவரலாறும் அல்ல. மேலைநாட்டு வரலாற்றாசிரியர்களின் பாணியில் கறாராக எல்லாம் உண்மைகளையும் திரட்டி முன்வைக்கும் வகையான வரலாறு. வாஜ்பாயின் தனிவாழ்க்கை, அவருடைய தோல்விகள் எல்லாமே விரிவாக பேசப்பட்ட நூல் அது.

மலைநாட்டின் நினைவாக எஞ்சியிருக்கும் ஒன்று, அங்குள்ள காபியின் சுவை. இந்தியாவின் எந்தப் பகுதியிலு சிக்கரி சேர்க்கப்படாத காபி கிடைப்பதில்லை. சிக்கரி என்பது ஒரு இமையமலைக் கிழங்கு. அதை காபிப்பொடியுடன் சேர்க்கிறார்கள். அது கசப்புச்சுவை கொண்டது. (முதல் உலகப்போரின்போது பிரேசிலில் இருந்து காப்பி வரவேண்டியிருந்தமையால் பிரிட்டிஷ் அரசு முப்பது சதவீதம் சிக்கரியை காபியில் சேர்த்தாகவேண்டும் என ஆணையிட்டது. அதுதான் அரசாணை – decree . கும்பகோணம் டிகிரி காபி என்பது அந்த அரசாணைப்படி தயாரிக்கப்பட்டது) அந்தக் காபிச்சுவை தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பழகிவிட்டது. சிக்கரி காபி கெட்டியான பாலுடன் இணைந்தால்தான் ஓரளவு சுவையாக இருக்கும். எனக்கு அது பொதுவாகப் பிடிக்காது. நான் நல்ல காபியின் ரசிகன். மலைநாட்டு பகுதியில் அசல் காபி கிடைக்கும். எந்தச் சிறு கடையிலும் டீ சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இந்தியா உற்பத்தி செய்யும் காபியில் பெரும்பகுதி இங்கேதான் உருவாகிறது. சாகர் நகரில் காரந்த் உணவகத்தில் ஒரு காபி விலை ரூ பத்து மட்டுமே. ஆனால் ஷிமோகா விமானநிலையத்திற்குள் ரூ.360.

அபிஷேக்கும் நானும் சுசித்ராவும் ஜோக் அருவியைச் சென்று பார்த்தோம். பல நூறு பேர் சூழ்ந்திருந்து பார்க்கையிலும் தனக்கான தனிமேடையில் தன்னில் தானே நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் நடனக் கலைஞனைப் போல அது அங்கு நின்று கொண்டிருப்பதாகப்பட்டது. மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி பெங்களூர் வழியாக திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வந்து சேர்ந்தேன். ஜோக் அருவியும் நீனாசமும் எல்லாம் இணைந்த ஒரு கலவைச்சித்திரம் எஞ்சியிருந்தது. படிமங்கள் இப்படித்தான் திரள்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.