சிகண்டி – மலர்விழி மணியம்

சிகண்டி நாவலை வாசித்து முடித்த பொழுது என் தோழி பிரேம்மாயா அவர்கள் ஓஷோ அவர்களின் சில வரிகைகளை என்னிடம் பகிர்ந்தார்கள். அவை கீழ்கண்டவாறு,

“ஆதாம் தன் ஏதேன் தோட்டத்தை விட்டு, வெளியேறி, அலைந்து, திரிந்து பாதையைத் தவறவிட்டு, பின்னர் ஒரு காலத்தில் மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்புகிறான், வெகுதூரம் சென்றுவிடுகிறபோது ஆதாமாக இருப்பவன் மீண்டும் வீட்டை அடையும் போது இயேசுவாகிறான். வீடு நோக்கிய பயணத்தைத் தொடங்கும்போதே அவன் இயேசுவாகி விடுகிறான். ஆதாம் தான் முதல் மனிதன் இயேசு கடைசி மனிதன், ஆதாம் தொடக்கமாகவும் இயேசு முடிவாகவும் இருக்கிறார்கள், ஒரு வட்டம் அங்கே முழுமைமடைகிறது.”

இவ்வரிகளுக்கும் சிகண்டி நாவலின் நாயகன் தீபனிற்கும் நிறைய பொருத்தம் இருக்கின்றது.

தன் அம்மாவோடு சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் பதினைந்து வயது தீபனின் பாதையில் முன்னும் பின்னும் நகர்கின்றது கதை. லூனாசில் இருந்து கிளம்பியவன் தனது தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்து சௌவாட்டிலும் காராட் பஜாரிலும் இயங்கும் இருண்ட உலகிற்கு அவனது ஆசைகளும் பேராசைகளும் எவ்வாறு அவனை இழுத்துச் செல்கிறது என்பதும், அங்கே சரா என்னும் திருநங்கையை பெண் என நினைத்துக் காதலித்து, பின் ஒரு கட்டத்தில் அவள் ஒரு திருநங்கை என அறிந்து அவளைப் புறக்கணிக்க எண்ணியும், அவனது ஆண்மையை இழந்து, அதை மீட்டெடுக்கும் பொருட்டு அவன் மேற்கொள்ளும் இருண்ட பாதையும் எங்கு அவனை இட்டுச் செல்கிறது என்பது தான் கதையின் சாராம்சம்.

சிறுகதையோ நாவலோ வாசிக்கும் பொழுது நாம் வாழாத ஒரு வாழ்க்கையை வேறொரு நிலப்பரப்பில், வேறு மனிதர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்துவிட்ட அனுபவங்களை அடைய முடியும் எனில், அந்தப் படைப்பு ஒரு சிறந்த படைப்பிற்கான உதாரணம்.

அப்படியான அனுபவங்கள் அனைத்து படைப்புகளும் அளிக்கின்றனவா என்றால், இல்லை என்று தான் நினைக்கின்றேன். சில படைப்புகளை வெறும் Bird’s view-ல் இருந்து கூட வாசித்திருப்போம்.

ஆனால் சிகண்டியின் வாசிப்பின் வழி நான், தீபனாக, சராவாக, ஈ.புவாக, நிஷாம்மாவாக என்னால் வாழ முடிந்தது.

இந்நாவலின் அடித்தளம் ஈபு. ஈபு ஒரு மாபெரும் ஆளுமை. தனது சேவல்களைக் காக்கும் பகுச்சரா மாதாவின் உருவம் ஈபு. தாயம்மாகை என்ற முறையில் தன் ஆண் குறியை அறுவடை செய்து கொண்டு, தன்னை ஒரு பெண் என நிலைநிறுத்தியவர். சௌவாட்டில் தன்னை நாடி வரும் திருநங்கையினர்களுக்கு அறுவடை செய்து கொள்ள உதவியும், அவர்கள் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறார்.

பகுச்சரா மாதா தனது சேவல்களை வஞ்சிப்போருக்குத் தரும் தண்டனை மிக நூதனமானது. அவளது உருவமான ஈபுவும் தனது பாதுகாப்பில் இருக்கும் திருநங்கைகளை அவ்வாறே காத்து வருகிறார்.

சிறுபான்மையினரைக் காக்கும் தலைவனுக்கென்று ஒரு அறம் உண்டு. நாட்டின் அரசனாகினும் தனது நிலத்திற்கும் மக்களுக்கும் ஒரு ஆபத்தென்றால் அதை எதிர்த்துப் போராடுவதும், வேண்டுமெனில் கொலை செய்வதும் தான் அந்த அரசனிற்கு உரிய தர்மமாகவே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆளுமை தான் ஈ.பு.

சரா, ஈ.பு வை அம்மா என்றும், நிஷாம்மாவை சின்னம்மா என்றும் அழைக்கிறாள். ஈ.பு என்றால் ‘அம்மா‘ என்று பொருள். தன்னிடம் அடைக்களம் நாடி வரும் திருநங்கைகளுக்கு எல்லாம் அவர் “அம்மா” தான்.  இந்நாவல் திருநங்கையினரின் வாழ்வின் வழி உணர்த்தும் ஒன்று, தாய்மை என்கின்ற தகுதியை அடைய ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றோ, ஒரு உயிரைக் கருவில் சுமக்க வேண்டும் என்றோ கட்டாயம் ஏதும் இல்லை என்பது. தாய்மை என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வு ஒரு ஆணிற்குள் மேலோங்கி இருப்பினும் அதற்குப் பெயர் ‘தாய்மை’ தான் என்றும், அது பெண்மைக்கு உரியதென்றும் நிலைநாட்டும் கதைமாந்தர்கள் தான் ஈபுவும், நிஷாம்மாவும், சராவும்.

ஈ.பு எவ்வாறு பகுச்சரா மாதாவின் பிம்பமோ, சரா, கருணையின் மாதாவான குவான் யின்–ன் பிம்பம். உடைந்த பொருட்கள் எவற்றையுமே தூக்கி எறியாமல், தன்னுடைய கைவண்ணத்தினால் அவற்றை ஒன்றிணைத்து உயிர் தரும் அவளுடைய குணம், உடைந்த ஒவ்வொன்றிலும் அவள் தன்னையே காண்கிறாள் என்பதனைக் காட்டுகிறது. மேலும், அவற்றுக்கு வேறொரு வடிவம் தந்து, அவள் தன்னையே உயிர்ப்பித்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட குணம் கொண்டவளால் எப்படி தீபனை தண்டிக்க முடியும். 

தன் கடவுள் முன் மாத்திரம் அவள் ஆடும் அப்ஸரஸ் நடனத்தை தீபனிற்கும் அவள் காட்டுவதில், தீபனின் மேல் அவளுக்கு இருக்கும் அன்பின் ஆழம் வேறு என்று காட்டுகின்றது.

நான் இந்த உலகில் பயப்படும் முதல் மனிதர்கள், மன்னிக்கின்ற குணம் கொண்ட மனிதர்களை. தனது உடலைத் தாண்டி ஆன்மாவை நொறுக்கியவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் மனங்களை. ஒருவரை எத்தனை முறை மன்னிக்கலாம் என்று இயேசுவைக் கேட்டால் ‘ஏழு எழுபது முறை’ என்கிறார்.

சோனியாவால் மட்டும் தான் ரஸ்கோல்னிகோவிற்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். நெக்கில்யுதோவை மன்னிப்பதின் வழி மட்டும் தான், தன்னை மீட்டுக்கொள்ள முடியும் என்று மஸ்லோவா சொல்கிறாள்.

அதே வழியில் சராவால் மட்டும் தான் தீபனுக்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். இறுதியில், “உன்ன சாவடிக்கத் தான் நான் வந்தேன்?” என்று தீபன் கூறும் தருணத்தில், அவனுடைய ஆன்மா மாசடையக் கூடாதென்று, சரா மேற்கொள்ளும் முடிவில் அவள் தேவதை ஆகின்றாள். அக்கணம் தீபனிற்கு அவனது ஆண்மையைத் திருப்பித் தந்து அவள் தன்னை அப்ஸரஸ் என்றும் குவான்–யின் என்றும் நிறுவுகிறாள்.

என் நிஜ வாழ்வில் என்னால் இந்த அளவு ஒருவனை நேசிக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது என்னுள்.

ஆனால் நாவல் அப்படியொரு சுதந்திரத்தை அந்தரங்கமாக வழங்குகின்றதே. சராவாக உருமாறி தீபனை என்னால் நிபந்தனைகளின்றி நேசிக்கவே முடிந்தது. மன்னிக்கவும் முடிந்தது.

அதே சமயம் தன் மகளை அழிக்கத் துணிந்தவனை மகளே மன்னித்தாலும் தாயால் மன்னிக்க முடியாது. ஈ.புவாகவும் நிஷாம்மாவாகவும் என்னுடைய பயணத்தில் என்னால் தீபனை ஒரு இம்மி அளவு கூட மன்னிக்க முடியவில்லை.

பொதுவாக, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று வாதாடுவது மிக சுலபமான ஒன்று. நாவல் நெடுகிலும் சௌவாட்டிலும், காராட் பஜாரிலும் இயங்கும் இருள் உலகையும், திருநங்கைகளுடயை இருண்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசப்பட்டாலும், என்னை மிகவும் பாதித்தக் கதாப்பாத்திரம் “தீபன்” தான்.

தன் வீட்டை விட்டு வெளியேறி, ‘தாய் மாமன் வீட்டில் தஞ்சம் புகுந்து, பிறகு காராட் பஜாரில் திருட்டுப் பொருட்களை கூவி விற்பவனாக, பிறகு பாலியல் விடுதிக்குக் காவலனாக, போதைப் பொருள் விற்பவனாக, மேலும் திருநங்கையனரின் இருள் வாழ்வில் சிக்கிக் கொள்கிறான். பின்பு ஒரு கட்டத்தில் இந்த மொத்த இருளில் இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு வீடு திரும்பும் நோக்கத்தில் ஓடுகிறான். அந்த ஓட்டத்தின் நடுவில் ஒரு கணம் நின்று யோசிக்கின்றான். அவன் உண்மையில் எதனைக் கண்டு ஓடுகிறான் என்று, ஒரு கேள்வி அவனுள் எழும். புறத்தில் அவனைச் சுற்றி இயங்கும் இருள் உலகைத் தவிர்த்து அவன் தனக்குள்ளேயே திரும்பிப் பார்த்த கணம் அது. அவனுள் இருக்கும் இருளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே செல்ல, அவ்விருளின் அடிமட்டத்தில் “க்காவா” என்ற ஒலி கேட்கின்றது. தீபனின்

நண்பனது மூளை வளர்ச்சி குன்றிய தங்கையின் குரல் அது. அவளுக்கு எல்லா மொழியும், உணர்வும் ‘க்காவா’ என்பது மாத்திரமே. தீபனால் வன்புணரப் பட்ட போதிலும் அவள் எழுப்பியது “க்காவா” என்ற ஒலி மாத்திரமே. 

நாம் எல்லோருமே பிறந்த பொழுது இருந்த குழந்தைத் தனத்துடன் வாழ முடிகின்றதா? ஆம் என்றால் எது வரை ? ஏவால் தந்த ஆப்பிளை ஆதாம் உண்ணும் வரை தான். அவ்வகையில் தீபன் எனக்கு ஒரு ஒட்டுமொத்த உணர்வின் பெட்டகமாகத் தான் தெரிகின்றான். அவனுக்குள் இருக்கும் இருளுக்கும் ஒளிக்கும் மாறிக் கொண்டே இருக்கின்றது அவனுடைய பிம்பம்.

அம்மாவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன் தான், அதே அம்மாவிற்காக ஏங்குகிறான். அம்மாவின் மடி போதும், அம்மாவின் மன்னிப்பு போதும், அவனுக்கு மீட்பு கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறான்.

பாலியல் விடுதியில் உடல்நிலை சரியில்லாத பெண்ணோடு உக்கிரமாக உறவு கொள்ளச் சொல்வது அவனுள் இருக்கும் இருள். அதே சமயம் அந்தப் பெண் வாடி வதங்கி இருக்கின்றாள் என்று அவள் மீது ஒரு துளி கருணை காட்டுவது அவனுள் இருக்கும் ஒளி.

சராவிற்குள் இருக்கும் பெண்ணிற்கும் ஆணிற்கும் அவன் அல்லாடும் பொழுது அவன் மீது பரிதாபம் தான் வந்தது எனக்கு. சராவைக் கொல்வதொன்று தான் அவன் தப்பிக்க ஒரே வழி என்று அவன் மேற்கொள்ளும் பயிற்சிகள் யாவும் ஒரு வித அச்சத்தைக் கிளர்த்தியது என்னுள். உதாரணமாக ஒரு சிறு கருங்குரங்கினை அவன் கொன்ற விதம். அப்பார்ட்மெண்டில் கண்ணன், தினம் விளையாடும் பூனையினை தீபன் கொன்ற அந்தத் தருணம். அதனைக் கொன்று விட்டு தனது போர்வைக்குள் ஒழிந்து கொண்டு அவன் சிந்திய ஏளனச் சிரிப்பு அவன் மீது அத்துனை கசப்பை உண்டாக்கியது. எத்தனை குரூரம் அவனுக்குள் இருக்க வேண்டும் என்று  கோபம் எழும் பொழுது அடுத்த கணமே அந்த பூனைக்காக வருந்தும் கண்ணனை எண்ணி வருந்தும் தீபனையும் காண முடிந்தது.

இறுதிக் கட்டத்தில் ஊரை விட்டு ஓட முற்படும் முன்பு கண்ணனுக்காகத் தன் மாமாவின் கடனை அடைத்துவிட்டுத் தான் கிளம்புகிறான்.

தீபனின் கதாபாத்திரத்தை நவீன் அவர்கள் ‘நான்‘ என்ற நிலையிலிருந்து ஏன் எழுதினார் என்று என்னுள் கேள்வி எழுந்தது. பொதுவாக அது ஆசிரியருடைய குரல் என்று எடுத்துக் கொள்வோம்.

ஆனால் இந்த நாவலில் ‘நான்’ என்கிற நிலையில் இருந்து எழுதி, எழுத்தாளர் நவீன் அவர்கள், அவருடைய வாசகர்களுக்கு விடுக்கும் ஒரு மாபெரும் சாவல் என்று எனக்குத் தோன்றுகிறது..

தீபன் கண்ட அனைத்துமே அவனுக்குள் இருக்கின்ற இருள் மட்டும் தானா?. அப்படியான இருண்ட பக்கங்களும் இருண்ட அறைகளும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கலாம் தானே?. நவீன் அவர்கள் தீபனின் கதாபாத்திரம் வழியாக வாசகருக்கு விடுக்கும் பெரும் சவால் அது தான் என்று எனக்குத் தோன்றுகிறது.

நம்முள் மண்டிக் கிடக்கின்ற இருளை உலகுக்கு அறிக்கை இடத் தேவையில்லை. குறைந்த பட்சம் ஒருமுறையேனும் நம்முள் திரும்பிப் பார்க்கின்ற தைரியம் இருக்கின்றதா என்று நம்மை சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஆசிரியரின் குரல் என்று தப்பித்துக் கொள்ளாமல் தீபனாக உருமாறி சிகண்டி நாவலைப் பிரவேசிக்க முடியுமெனில் நம்முடைய இருளைக் காண்பதும் சாத்தியம் என்று தான் நினைக்கின்றேன்.

திருநங்கையை மையப்படுத்தி, சு. வேணுகோபால் அவர்கள் எழுதிய பால்கனிகள் எனும் குறுநாவல் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமானதொரு மைல் கல். அதிலருந்து ம.நவீன் அவர்களின் சிகண்டி ஒரு மாபெரும் பாய்ச்சல்.

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் டெத் வேலி நேஷனல் பார்க் (Death Valley National Park) என்கிற இடம் உள்ளது. 3.4 மில்லியன் ஏக்கரில் அமைந்துள்ள இவ்விடத்தில் எண்ணற்ற பெரிய அபூர்வு மலைகளைக்  காண முடியும். பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பெரும் நிலப்பரப்பில் உயர்ந்து, அகன்று, பரந்து இயற்கை செதுக்கி இருக்கும் சிற்பங்களாக மலைகளின் கூட்டம் அவ்விடம். அவைகளில்  ஒன்று, Badwater Basin என்ற இடத்தில் அமைந்துள்ள கருப்புமலை(Black Mountains). அம்மலையின் கருமை என் மனதை ஒருவகையான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியது. அவ்வளவு பெரிய அடர்ந்த கருமையை என்னால் என்னுள் ஏற்றி நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்தேன். அம்மலை ஏதோ இவ்வுலகின் ஒட்டுமொத்த இருளையும் தன்னுள் நிரப்பிக் கொண்டது போல வீற்றிருந்தது. அம்மலையைக் காணக் காண என்னுள் பெயர் தெரியாத உணர்வலைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலை போல எழும்பிக் கொண்டே சென்றது. அத்துணை கார் இருளை என்னால் தாளமுடியவில்லை. அதே இருளாக, அதே உணர்வாக, அதே கனமாகத்தான் சிகண்டி நாவல் என்னுள் பரவி இருக்கின்றது.

முடிவாக, ஒஷோவின் கூற்றுப்படி ஆதாம் ஆக வீட்டை விட்டு வெளியேறியவன் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப வேண்டுமெனில் அவன் இயேசுவாகினால் மட்டுமே அது  சாத்தியம். அதுவே இந்நாவலின் முடிவும் ஆகும்.

–மலர்விழி மணியம்.

சிகண்டி வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.