செயற்கை நுண்ணறிவுமொழி, கடிதங்கள்

அன்புள்ள ஜெ
நான் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவன். மொழியாக்கம் பற்றிப் பேசும் போதெல்லாம் எனக்குப் பள்ளியில் படித்த அறிவியல் பாடங்கள் தான் நினைவில் வரும். அந்த வயதில் அது மொழியாக்கம் என்று கூட அறிந்ததில்லை. ஆனால் பல நாவல்களை ஒரே மூச்சில் வாசிக்க முடிந்த எனக்கு, அந்த மொழிநடை மிகவும் கடினமாக இருக்கும். உள்ளே சென்று புரிந்து கொள்வதற்குள் சக்தி எல்லாம் போய்விடும்.
இது போன்ற இடங்களில் இயந்திர மொழியாக்கம் ஒரு வர பிரசாதம். உலகில் உள்ள அனைத்து அறிவியல், பொருளாதார கட்டுரைகளையும் இனி ஒரு நொடியில் மொழி பெயர்த்து எவரும் படித்து விடலாம், படிப்பார்கள். இப்போதே தினமணி தினமலர் செய்திகள் பலவும் அப்படித் தான் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
சுற்றிலும் இயந்திர மொழி சூழ்ந்து இருக்கும் பொது இலக்கியம் மட்டும் எப்படி தப்பிக்கும் ? அதுவும் நவீன இலக்கியத்தின் மீது எந்த மதிப்பும் இல்லாத சமூகத்தில் ?
ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில பத்தாண்டுகளில் அமெரிக்காவின் கலாச்சார ஆதிக்கம் உலக அளவில் குறையும் என்றே நினைக்கிறேன். அப்போது அறிவாளர்கள், மெத்தப் படித்தவர்கள் மத்தியில் இந்த மேற்கத்திய அடிமை மோகம் குறைந்து, தாய் மொழி மீது புது மோகம் வருமானால் மீதமிருக்கும் மொழியையேனும் காப்பாற்ற முடியும். இல்லாவிடில், மெல்லத் தமிழ் இனி தான் :-(
நன்றி
ரத்தன்
அன்புள்ள ஜெ
இனிவரும் காலங்களில் இலக்கிய மொழியாக்க நூல்களின்மேல் நாம் ஒரு க்யூஆர் கோடின் வழியாக நாம் ஒரு சோதனையைச் செய்யவேண்டும். சில வலைத்தளங்களுக்குச் செல்லும்போது ‘நீங்கள் ரோபோ அல்ல என்று நிரூபியுங்கள்’ என்று ஒரு கோரிக்கை வருமே அதுபோன்ற ஒரு கோரிக்கையை வைக்கவேண்டும். அந்த கோடு ஓகே சொன்னால் அந்நூலை வாங்கலாம். அத்துடன் இந்த மொழிபெயர்ப்புப் பேராசிரியர்கள், தழுவல் பேராசிரியர்கள், மற்றும் திருகல்நடை எழுத்தாளர்களிடமும் ‘நீங்கள் ரோபோட் அல்ல என்று நிரூபியுங்கள்’ என்று தனிப்பட்ட முறை சந்திப்புகளிலும் கேட்கலாம். குறிப்பாக இவர்கள் இலக்கியவிழாக்களுக்கு வரும்போது உள்ளே நுழையும் வாசலில் நிறுத்தி இப்படி கேட்டு அவர்கள் நிரூபித்தபின் உள்ளே விடலாம். எளிமையான கேள்விகள் போதும். ‘நிகனோர் பார்ரா– இங்கே பார்ரா என்ன வேறுபாடு’ ‘ சாக்கு தெரியுதா?- ழாக் தெரிதா என்ன வேறுபாடு?’ இந்த மாதிரி கேள்விகளைக் கேட்கலாம். என் தாழ்மையான அபிப்பிராயம்.
ராம்ஜி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
