ரமேஷ் பிரேதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அறிந்து மகிழ்கிறேன். என்னுடன் அணுக்கமாகவும் நட்புடனும் உரையாடும் எழுத்தாள நண்பர்கள் உரையாடலில் அவர் தத்துவார்த்தமாக உரையாடுவார் என்று குறிப்பிடுவார்கள். Kevin Kartner-ன் The Virtue and the Little Girl புகைப்படத்தை முன்வைத்து அவர் எழுதிய “கழுகின் அறம்” கவிதைதான், ரமேஷ் பிரேதன் என்றால் என் நினைவுக்கு வரும். ‘அவன் பெயர் சொல் ‘ நாவலை வாசித்திருக்கிறேன். அவரது அகம் இயங்கும் தளத்தை புரிந்துகொண்ட வாசகனாக வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் நூல்களை மதுரை புத்தகக் கண்காட்சியில் யாவரும் அரங்கில் வாங்கினேன். அவரைப் பற்றி ஓரிரு பேட்டிகள் வழியாக அறிந்திருக்கிறேன். இனிமேல்தான் தீவிரமாக வாசிக்கவேண்டும். தமிழில் பின்நவீனத்துவ எழுத்துமுறையை கொண்டுவந்தவர் என்றும், அதை கடந்து தமிழர்மெய்யியல் சார்ந்து ஒரு பயணத்தை முன்னெடுத்தவர் என்றும் கேள்விப்பட்டேன். அவருக்கு விருது அளித்ததன் வழியாக தமிழில் அவரை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ராஜன் சண்முகசுந்தரம்
அன்புள்ள ஜெயமோகன்
ரமேஷ் பிரேதன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். உங்களுடைய கட்டுரைகள் வழியாக அந்த இறுதி நாட்களைப் பற்றிய ஒரு சித்திரம் உருவாகியது .ஒரு படைப்பாளி சக படைப்பாளிகளால் கொண்டாடப்பட்டு மரியாதை செய்யப்பட்டு இறுதிச் சடங்கு நிகழ்ந்தது நிறைவளிக்கிறது. அவர் பொதுமக்களுக்கான எழுத்தாளர் அல்ல என்ற வகையில் பொதுமக்கள் அவரை தேடி வராததில் வியப்பதற்கும் இல்லை .எழுத்தாளர்களால் கொண்டாடப்படுவது சிறப்புதான் .அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வணக்கம்.
சிவ. முத்தையா
அன்புள்ள ஜெயமோகன்,
ரமேஷ் பிரேதன் மறைவுச் செய்தி அறிந்தேன். எழுத்தாளர்கள் கூடி அவருக்கான வழியனுப்புச் சடங்கு நிகழ்ந்தது சிறப்பு. அது என் வண்ணம் நிகழ வேண்டுமோ அவ்வாறு நிகழ்ந்தது என்று நீங்கள் எழுதியதை படிக்கும்போது அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டேன். ஒரு சாதாரணச் சாவு அல்ல அது. நீண்ட காலம் அவர் நோயில் இருந்தார். சாவு அவருடைய விடுதலையாக இருக்கும். ஆனால் ஒரு எழுத்தாளனின் சாவு என்பது ஒரு முழுவாழ்க்கையின் முடிவு. நம்மை நோக்கி திருப்பி வைத்த ஒரு கண்ணாடி இல்லாமல் ஆவது. நமது உள்ளமும் வாழ்க்கையும் அந்த கண்ணாடியின் பிம்பங்களாக நம்முடன் இப்போது எஞ்சி இருக்கின்றன .
ஒரு எழுத்தாளர் புறக்கணிக்கப்படும் போது ஒரு சமூகம் தன்னுடைய அசட்டுத்தனத்தை அல்லது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று நான் நினைப்பதுண்டு. ரமேஷ் அவர்களின் சாவு நிகழ்ந்த அதே நாளில் தான் ஒரு நடிகனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி முண்டி அடித்து ஒருவரை ஒருவர் மிதித்து கொன்றுகொண்டிருக்கிறார்கள். இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல தெரிகிறது ஒரு யதார்த்தத்தில் இரண்டு முனைகள் . ஒன்றை இன்னொன்று சரியாக நிரப்புபவை. எங்கே எழுத்தாளன் தோற்க்கிறானோ அங்கே கண்மூடித்தனம் வெல்கிறது.
அங்கே இறந்து போன மக்களின் அந்த பேதை முகங்களை பார்க்கையில் தமிழ் சமுதாயத்தை எண்ணி பெரும் இரக்கம்தான் ஏற்படுகிறது. கண்மூடித்தனம், அறியாமை, திரும்பத் திரும்ப தங்களை தாங்களே அழித்துக் கொள்ளும் மூடத்தனம். எந்த ஒரு அறிவுக்கு எதிராகவும் பாமரத்தனத்தை கொண்டுவந்து நிறுத்தும் நம்முடைய கட்சிசார்ந்த அறிவுஜீவிகளும் இந்த அழிவில் ஒரு பங்கு வகிக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஓர் எழுத்தாளனையும் சிந்தனையாளனையும் ஏதேனும் ஒரு காரணத்தினால் அவதூறு செய்யும், இழிவுபடுத்தும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சாவில் பங்கு உண்டு. அவர்கள் தங்களுடைய கட்சிச் சார்பையோ மதச்சார்பையோ ஓர் எழுத்தாளர் எதிர்க்கும்போது அவரை இழிவு படுத்தி அவர் அழிய வேண்டும் என்று பேச ஆரம்பிக்க்கிறார்கள். அப்போது ஒட்டுமொத்தமாகவே எழுத்துக்கும் வாசிப்புக்கும் எதிரான ஒரு மனநிலையை உருவாக்குகிறார்கள். அதுதான் இந்த சமுதாயத்தை இந்த இடைத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது .தங்களுடைய அரசியல் தரப்பு தான் சரி, மற்ற எல்லாமே அறிவின்மை என்று சொல்லும் ஒவ்வொருவரும் ஒரு மூடத்தனத்தை வெறியை விதைக்கிறார்கள். அந்த விதை இவ்வாறு முளைத்திருக்கிறது.
ரமேஷுக்கு அஞ்சலி
ஞா. திருவுடையான்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
