சைவசித்தாந்தமும் வேதாந்தமும்

அண்மைக்காலமாக சைவசித்தாந்தம் வேறு வேதாந்தம் வேறு என்னும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இருபதாண்டுகளுக்கு முன்புவரை ஒட்டுமொத்த இந்துமதமே சாக்கடை, அழியவேண்டிய தீமை என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று சைவசித்தாந்தம் தூய்மையானது, அதை வேதவேதாந்த மரபிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும் என பேச ஆரம்பித்துள்ளனர்.

அவர்களுக்கு இந்து மெய்யியலில் உள்ள பயிற்சி என்ன, அவர்களின் ஆசிரியர்கள் எவர் என்ற கேள்வி எழுவதே இல்லை. அவர்களுக்கு மெய்ஞானத்தில் ஏதேனும் ஈடுபாடுள்ளதா என்பதுகூட கேட்கப்படுவதில்லை. அதைப் பேசுபவர்கள் நாக்கை விற்பனை செய்யும்  வெறும் அரசியல்வாதிகள். அந்த தரப்பும் ஓர் அரசியல் என்பதனால் அந்த அரசியல் சார்பு கொண்டவர்கள் அதை ஏற்றுக்கொண்டு மேலும் பேசத் தொடங்கியுள்ளனர். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் உண்மையில் சைவர்களே. சைவம் அடிப்படையில் ஒரு மெய்ஞானம், வீடுபேறுதான் அதன் இலக்கு. அதை ஒரு தெருச்சண்டை அரசியலாக ஆக்குபவர்களைப் பற்றி சைவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வேதாந்தம் இந்து மதத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானது, பொதுவானது. இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தின் வெவ்வேறு வழிபாட்டுப்பிரிவுகள், தத்துவப்பிரிவுகள் ஆகியவற்றுக்கிடையே ஓர் இணைப்பாக இருப்பது வேதாந்தமேயாகும். வேதாந்தம் இந்து மெய்யியல் முறைமைகள் அனைத்துக்கும் வேர்நீராக மண்ணுக்குள் நிறைந்திருக்கிறது.

தமிழகத்தில் மதநம்பிக்கை கொண்டவர்களிடையே கூட வேதாந்தத்தின் இடம் என்ன என்பது தெளிவாக இல்லை. வேதாந்தம் என்னும் சொல்லை மிகச்சரியாக புரிந்துகொண்டவர்களே மிகக்குறைவு என்பதே உண்மை. 

வேதாந்தம் என்பது பிரம்ம தத்துவத்தை முன்வைக்கும் ஒரு தூய தத்துவப்பார்வை என்று வரையறுக்கலாம். இந்து மதத்தின் எல்லா தெய்வங்களுமே அறுதியாக பிரம்மம் என்றே வரையறை செய்யப்படுகின்றன. இப்பிரபஞ்சமாகவும், பிரபஞ்சம் கடந்ததாகவும், தானன்றி பிறிதொன்றிலாததாகவும், அனைத்தும் தானேயாகவும் இருக்கும் ஒன்று என்று பிரம்மம் வேதாந்தத்தால் வரையறை செய்யப்படுகிறது. அதாவது முதல்முழுமை (Absolute). அதுவே இந்து மதத்தின் அத்தனை மெய்ஞானப்பிரிவுகளுக்கும் பொதுவான அருவ இறைஉருவகமாகும். இந்து மதத்தின் எல்லா மெய்யியல்கொள்கைகளையும் முழுமுதன்மைவாதம் (Absolutism) என வரையறுத்துவிடலாம்.

ஆகவே சிவனும் விஷ்ணுவும் துர்க்கையும் மட்டுமல்ல, உள்ளூரில் சாலையோரம் அமர்ந்திருக்கும் சிறுதெய்வமும் பிரம்ம சொரூபம் என்றே வழிபடப்படுகிறது. நான் காலை நடை சென்றுவரும் வழியில் செருப்பு தைக்கும் செம்மான் சாதியினருக்குரிய  குலதெய்வக்கோயில் ஒன்று உள்ளது .அந்த அம்மனின் பெயர் பிரம்ம சக்தி அம்மன். அது ஒரு நாட்டார் தெய்வம். அதன் பிறப்பு, திருமணம், இறப்பு பற்றிய தெளிவான கதைகள் உள்ளன. தெய்வமான பின் அதுவும் பிரம்ம வடிவம்தான். ஒரு தெய்வம் பிரம்மம் என வரையறுக்கப்பட்டாலே அது வேதாந்த விளக்கம் அளிக்கப்பட்ட ஒன்று என்று பொருள். 

வேதம் வெவ்வேறு இறையுருவகங்கள் வழியாக சென்றடைந்த ஒரு தரிசனம் என்று பிரம்ம தத்துவத்தை சொல்லலாம். அனைத்துத் தெய்வங்களும் ஒன்றே எனும் பேருணர்விலிருந்து ‘ஒன்றேயான அது’ எனும் தரிசனத்தை வேத ஞானிகள் சென்றடைந்தனர். அது வேதத்தின் இறுதியில் நிகழ்ந்த தரிசனம் என்பதனால் வேதாந்தம் எனப்பட்டது. அந்த பிரம்மத்தை வரையறை செய்துகொள்வதில்தான் ஒவ்வொரு தத்துவ மரபும் சிறு சிறு வேறுபாடுகளை உருவாக்கிக்கொண்டன. 

அந்த வேறுபாடுகளின் அடிப்படையில் வேதாந்தத்திற்குள்ளேயே பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. அவ்வாறு ஒரு உட்பிரிவுதான் விசிஷ்டாத்வைதம், பிறிதொன்று துவைதம். அவ்வாறு துவைதாத்வைதம், சுத்தாத்வைதம் என பற்பல பிரிவுகள். சைவசித்தாந்தமும் அவ்வாறு வேதாந்தத்திற்குள் வருவதேயாகும். சைவத்துக்குள் சைவசித்தாந்த மரபு அல்லது சித்தாந்த சைவம் என்பது ஒரு துணைப்பிரிவுதான். சைவசித்தாந்தத்தை மறுக்கும் பல சைவப்பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் தத்துவ அடிப்படை இல்லாத வழிபாட்டுமுறைமைகள் மட்டுமே. சித்தாந்த சைவம், வீரசைவம் இரண்டும் மட்டுமே சைவத்தின் தெளிவான தத்துவக் கொள்கைகள்.

சித்தாந்த சைவம் வேதாந்தத்துக்கு எத்தனை அணுக்கமானது என்பதை சைவ ஞானிகள் பலரும் எழுதியுள்ளனர். வேறுபாடு உண்டு, அந்த வேறுபாடு தத்துவத் தளத்தில் மிக முக்கியமானது. தத்துவம் செயல்படுவதே அந்த நுணுக்கமான வேறுபாட்டை முன்வைத்து விரிவாக்கம் செய்வதனூடாகத்தான். ஆகவே வேறுபாடு இல்லை என நான் சொல்லவரவில்லை. வேறுபாடுகளை மழுப்பவும் முயலவில்லை. ஒருமையை சுட்டவே முயல்கிறேன்.

இன்று ஆழ்ந்த கல்வியோ, முறையான ஆசிரியர் மரபோ இல்லாதவர்கள் வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு என்று வரையறுப்பதைக் காண்கிறோம். சித்தாந்தம் என்பதை தவறான உச்சரிப்பை அளித்து சித்தம் என்பதுடனும் சித்தர் என்பதுடனும் இணைக்கிறார்கள். சித்தாந்தம் என்பதன் நேரடி பொருள் “கொள்கை”என்பதுதான். சித்தித்த அந்தம். சென்றடையப்பட்ட முடிவு. வேதாந்தம் என்பது ஓர் ஒட்டுமொத்தப்பார்வை, அதாவது தரிசனம். அதற்குள் உள்ள ஒரு கொள்கையை சித்தாந்தம் எனலாம். வேதாந்தத்திற்குள்ளேயே அப்படி பல வேதாந்த சித்தாந்தங்கள் உள்ளன. 

வேதாந்தத்திலிருந்து சைவ சித்தாந்தம் வேறுபடுவது அடிப்படையில் பிரம்ம சொரூபமான சிவத்தை அது சிவசக்தி என இரண்டாகப் பகுக்கிறது என்பதனால் தான். அதேபோன்று விசிஷ்டாத்வைதம் சாராம்சமும்  முழுமையுமான பிரம்மத்தை சாமான்யம் விசேஷம் என இருதளங்களில் பிரித்து, சாமான்ய தளத்தில் அதற்கு உருவமும் இயல்பும் அளித்து, அவ்வுருவத்தை வழிபடும் வழிபாட்டு மரபையும் அம்மரபை கடைபிடிக்கவேண்டிய ஆசாரங்களையும் வரையறுத்துக்கொள்கிறது. இந்த இரட்டைத்தன்மையினால் அது விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. பிரம்மத்திலிருந்து ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் குடியேறும் தன்னிலை முற்றிலும் வேறுபட்டது என்றும், அந்தத்தன்னிலையில் இருக்கும் தீய இயல்புகளாகிய காம -குரோத- மோகங்கள் ஒருபோதும் பிரம்மத்திடமிருந்து தோன்றியிருக்க முடியாது என்றும் வாதிடுவதனால் த்வைதம் தனிப்பாதையை காண்கிறது.

அது போன்ற ஒரு வேறுபட்ட பார்வை என்று தான் சைவ சித்தாந்தத்தை சொல்லவேண்டும். எப்படி வேதாந்தத்தின் ஒரு வளர்ச்சியே விசிஷ்டாத்வைதம் என்று சொல்கிறோமோ அதேபோலவே வேதாந்தத்திற்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் இருக்கும் வேறுபாடு முக்கியமானதே என்று சொல்கிறோம். அதேபோல சைவ சித்தாந்தம்  என்பதும் பிரம்மவாதமான வேதாந்தமேதான் என்று கூறும்போதே சைவ சித்தாந்தம் கொண்டுள்ள வேறுபாடும் மிக முக்கியமானதென்றே கொள்ள வேண்டும்.

இந்த இருமை நிலைபாட்டை தான் சைவ சித்தாந்தத்திற்கு அதிகாரத்துவம் கொண்ட தமிழகத்தின் முதன்மையான சைவ மடங்களும் கொண்டுள்ளன என்பதை அவர்கள் எழுதிய நூல்களிலிருந்து நாம் காண முடியும். அவர்கள் எவரும் வேதத்தையோ, வேதாந்தத்தையோ  மறுத்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் வேதாந்தத்திலிருந்து கிளைத்த பிற தரப்புகளை மறுத்து தங்கள் வேறுபாட்டை வலியுறுத்துகிறார்கள். வேதாந்தத்திலிருந்து தாங்கள் முன்நகர்ந்து அடைந்த தரிசனத்தை வேதாந்தத்தின் தலைசிறந்த வடிவமாக முன்வைக்கிறார்கள், அதுவே சைவசித்தாந்தம். ஆகவே வேதாந்தம் இந்திய மெய்ஞான மரபுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு மையத்தரிசனமாகவே உள்ளது.

வேதாந்தத்தை மறுக்கும் மெய்ஞானத் தரப்புகளே இல்லையா? உண்டு. சைவத்தின் மறைஞானப் (தாந்த்ரீகப்) பிரிவுகள் பலவற்றையும் வேதமறுப்பு நோக்கு கொண்டவை என்று சொல்லமுடியும். ஆனால் அவை தெளிவான தத்துவக்கட்டமைப்பு கொண்டவை அல்ல. சொல்லப்போனால் தத்துவத்திற்கு எதிரான செயல்முறை நோக்கு கொண்டவை. சாதகனையும் சாதனையையும் மட்டும் முன்வைப்பவை. அதன்பொருட்டு குறியீடுகளையும், நுண்மொழியையும் உருவாக்கிக் கொண்டவை.

வேதவேதாந்த மறுப்புகொண்ட இந்து தத்துவங்கள் உண்டா? உண்டு. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகியவை அடிப்படையில் வேதமறுப்பு நோக்கு கொண்டவை. சார்வாகம், தார்க்கிகவாதம் போன்றவையும் அவ்வாறே. ஆனால் அவை தத்துவார்த்தமான தொடர்வளர்ச்சியை அடையவில்லை. ஒரு கட்டத்தில் வளர்ச்சி குன்றி, பின்னர் வேதாந்தத்தை நோக்கி நகர்ந்தன. இன்று அவற்றுக்கு மெய்ஞானத் தளம் இல்லை, தத்துவ நோக்கு மட்டுமே உண்டு.

வேதாந்தத்தின் ஒரு அறிவார்ந்த வடிவம என்று சொல்லத்தக்க அத்வைதம் அதன் முதன்மை தரிசனம் என்று நான் சொல்வேன். அதை மறுக்கும் தரப்புகளை வேதாந்தத்தின் பிற  கொள்கைகளாக ஏற்பதிலும் எனக்கு மறுப்பு ஏதுமில்லை. வேதாந்தம் அதன் அனைத்தையும் அணைக்கும் தன்மையினால் எல்லா வழிபாட்டு மரபுகளுக்கும் தன்னில் இடம் கொடுக்கிறது. ஆனால் அத்வைதம் அறிவார்ந்த தூய்மைவாதத்தை முன்வைப்பதன் வழியாக வழிபாடுகளையும் அதை ஒட்டிய இறை உருவகங்களையும் முழுமையாக நிராகரிக்கிறது. அது வேதாந்தத்தின் அறிவுத்தரப்பு அல்லது வேதாந்தத்தின் அறிவு மட்டுமேயான தரப்பு என்று மட்டும் தான் கொள்ள முடியும். 

வேதாந்தம் இன்றி இந்து மதம் நிலை கொள்ள முடியாது இந்து மதத்தின் எப்பிரிவும் தத்துவார்த்தமாக முன்நகரும் எனில்  அது வேதாந்தத்தை நோக்கியே செல்லும். வேதாந்தமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும். இன்று சுடலை மாடன் அல்லது கருப்பசாமி வழிபாடுகளைக்கூட தத்துவார்த்தப்படுத்துகையில் அவ்வாறு மாறுவதைப்பார்த்துக் கொண்டிருக்க்றோம். வேதாந்தத்தின் கொடையும் அதுதான். 

 

 

மரபிலக்கியம்- சைவத்திருமுறைகள் அறிமுகம்

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி

நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.