எழுத்தாளனின் சாவின் நிறைவு
அன்புள்ள ஜெயமோகன்,
இணையத்தில் ஓர் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களின் இறுதி நிகழ்வு ‘மிகச் சிறப்பாக’ நடைபெற்றது என்று எழுதியிருந்தார். அதை இணையத்தில் சில விடலை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் நையாண்டி செய்திருப்பதை கண்டேன். அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் அவ்வாறே சொன்னார். அது சிறப்பாக நடைபெற்றது என்று சொல்லலாகாது என்றும், அது அந்த சாவை கொண்டாடுவது போல ஆகிவிடும் என்றும், துயரத்தை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும் சொன்னார். உங்களுடைய கட்டுரையிலும் ஒரு மெல்லிய நிறைவு தென்படுவது போல் இருந்தது. ஆகவேதான் இதை உங்களுக்கு எழுதலாம் என்று நினைத்தேன்,
எம்.சசிக்குமார்
அன்புள்ள சசிகுமார்
பொதுவாக எழுத்தாளர்கள், இலக்கியத்தில் செயல்படுபவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பது வெளியே இருப்பவர்களுக்கு புரிவதில்லை. அவர்களின் உலகம் முற்றிலும் வேறு .ஒருவர் இறந்ததுமே மிகையான துயர வெளிப்பாடுகளை தெரிவிப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும் ,சம்பிரதாயமான சொற்களை அள்ளி இறைப்பதும், சில நாட்களிலேயே முழுமையாக மறந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதும் அவர்களுடைய வழக்கம். அதையெல்லாம் எழுத்தாளர்கள் ஒருவித ஒவ்வாமையுடன்தான் பார்ப்பார்கள். ஒரு தலைவர் இறந்ததுமே பகுத்தறிவுப்புலிகள் கூட “திரும்பி வா தலைவா!” என்று கதறுவதை தமிழகத்தில் பார்க்கலாம். “ஏன் சென்றாயோ” என்றும், “நானும் வருகிறேன்” என்றும் சுவரொட்டிகள் அச்சிட்டு தெருத் தெருவாக ஓட்டும் மரபு நமக்கு உண்டு. ‘வானில் வாழ்கிறாய்’ என்றும், ‘மீண்டும் பிறந்து வா’ என்றும் இங்கு வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்படாத நாளே இல்லை.
இலக்கியவாதியின் சாவை இலக்கியவாதிகள் வேறொரு வகையிலேயே பார்க்கிறார்கள்.அவர்களுக்கு பொதுச்சூழலில் சாவு சார்ந்து நிகழும் sycophancy என்பது ஒரு விதமான மனச்சிக்கலாகவே தோன்றும். அது பழைய நிலப்பிரபுத்துவகால மனநிலையின் நீட்சி. எழுத்தாளர்களைப் பொருத்தவரை ஓர் எழுத்தாளரின் சாவு என்பது அவன் தன்னை விடுவித்துக்கொண்டு, தன் எழுத்துக்களை மட்டுமே நீடிக்க விட்டு, இங்கிருந்து மறைவது மட்டும்தான். அவன் உடல் சார்ந்த ஆளுமை மறைகிறதே ஒழிய அவனுடைய படைப்பாளுமை மறைவதில்லை. இதை நீங்கள் கண்கூடாகவே பார்க்கலாம். எழுத்தாளர்கள் இறந்த பிறகு அவர்களைப் பற்றிய பேச்சு எவ்வகையிலும் குறைவதில்லை. இக்கணம்வரை நாம் புதுமைப்பித்தன் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் . அவரைப்பற்றி நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெயகாந்தனை ,சுந்தர ராமசாமியை பேசிக் கொண்டிருக்கிறோம். அவ்வப்போது வசைபாடவும் செய்கிறோம். அவர்களின் நினைவுநாளில் மட்டுமல்ல அனேகமாக தினமும்.
அவர்களை அறியாத ஒருவர் இப்போது அவர்களைப் பற்றிப் பேசப்படுவதை மட்டுமே பார்த்தால் அவர்கள் உயிரோடு எங்கோ இருப்பதாகவே நினைத்துக் கொள்வார். இந்த நிரந்தரத் தன்மை பிறருக்கு கிடையாது. சாமானியர்கள் மறைந்தால் அவர்களுக்கு வேண்டியவர்களிடம் வெறும் நினைவாக சிலகாலம் எஞசுவார்கள். அரசியல் முகங்கள என்றால் அரசியல் குறியீடுகளாக மாற்றப்பட்டு சுவரொட்டிகளில், சிலைகளில் வாழ்வார்கள். எழுத்தாளர்களுக்கு தமிழகத்தில் நினைவகங்கள் அரிது, ஆனால் இருக்கும் நினைவகங்கள் புழுதி படிந்து மறக்கப்படுகின்றன, நூல்கள் வாழ்கின்றன. ஏனென்றால் எழுத்தாளனின் ஆளுமை என்பது அவனுடைய எண்ணங்கள்தான். அவன் வாழ்வது அவற்றில்தான். அவை அவ்வண்ணமே நூல்களில் நீடிக்கின்றன. எனவே அவன் வாழும் ஆளுமையாகவே என்றும் திகழ்கிறான். இந்த வேறுபாடை எழுத்து, இலக்கியம் என்னும் வட்டத்திற்கு வெளியே உள்ள பிறர் புரிந்து கொள்வது கடினம்.
ஆம், எழுத்தாளனின் சாவு ஒரு வகையில் ஒரு மங்கல நிகழ்வுதான். ‘சிறப்பாக’ நிகழவேண்டிய ஒன்றுதான். அழுவாச்சிக்கூத்து அல்ல, நிறைவூட்டும் ஒரு நினைவுதான். அதில் துயரம் உள்ளது. குடும்பத்தினருக்கும், நெருக்கமானவர்களுக்கும் இழப்பும் வலியும் இருக்கும்தான். நமக்கும் ஆழ்ந்த உளஅழுத்தத்தையும் அளிக்கும்தான். ஆனால் அது கூடவே ஒரு நிறைவையும் அளிக்கத்தான் செய்கிறது. அவனுடைய படைப்பு அவ்வளவும் நம்முடன் இருக்கின்றன என்ற நிறைவு. தன்னை அவன் விட்டுச்சென்றான் என்னும் எண்ணம் அளிக்கும் ஆறுதல். அதுவே ரமேஷ் பிரேதன் போன்றவர்களின் சாவின் போதும் நமக்கு தோன்றுகிறது. அவருடைய சக எழுத்தாளர்களால் மட்டுமே நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்தது அது.அது இவ்வாறு நிகழ்வதுதான் முறை என்றும் தோன்றுகிறது. அந்நிகழ்வில் பங்குகொண்டஅவர்கள் அனைவருக்கும் உரிய முறையில் அவரை வழியனுப்பி வைத்தோம் என்னும் நிறைவு ஏற்படும் என்றுதான் நினைக்கிறேன் .
நானும் எழுத்தாளனே. இன்னும் சில ஆண்டுகளில் நான் மறைவேன். அன்று என்னை எண்ணி என்னுடைய தோழர்களோ உற்றாரோ துயரக் கூப்பாடு போட்டால், சம்பிரதாயச் சொற்களை அள்ளி இறைத்தால், அது எனக்கு இழைக்கப்படும் அவமானம் என்று எண்ணுவேன். அவர்கள் அடையவேண்டியது நிறைவே. நான் இங்கே வெறுமே உண்டு, உறங்கி, உழன்று மீளவில்லை. எதன்பொருட்டு வந்தேனோ அதை இயற்றி மீண்டிருக்கிறேன் என்று அவர்கள் உணரவேண்டும். இக்கணம் வரை எந்தக் கடமையையும் தவறவிட்டதில்லை- உற்றார் நண்பர் எவருக்கும். எவருடனும் அவர் துயரக்காலத்தில் உடனிருக்காமல் இருந்ததில்லை. என் கனவுகள் அனைத்தையும் அடைய முழுமையாக என்னை அளித்திருக்கிறேன். ஒரு பொழுதையும் வீணாக்கியதில்லை. எண்ணிய பலவற்றை இயற்றியிருக்கிறேன். என்னை என் படைப்பாற்றலை முழுக்கத் திரட்டி வெளிப்படுத்தியிருக்கிறேன். என் வாழ்க்கை குறித்து எனக்கு முழுநிறைவே.
ஆகவே அன்று என் பொருட்டு என் நண்பர்கள், வாசகர்கள் நிறைவடையலாம். அவர்கள் என் படைப்புகளை எண்ணிக் கொள்ளலாம். அவற்றை மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கலாம். என் மீதான வாசிப்புகளை மறுதொகுப்பு செய்யலாம். நேற்று வரை ‘ரமேஷ் வாழ்ந்து நீ செத்திருக்கலாமே’ என்று பன்னிரண்டு மின்னஞ்சல்கள் எனக்கு வந்தன.அன்றும் அவ்வாறு நிறைய வசைகள் வரும், இடக்கரடக்கல்கள் எழும். அவை என்றுமிருக்கும் உணர்வுநிலைகள், அவை எவற்றுக்கும் எவரும் எந்த எதிர்வினையும் செய்யலாகாது. அதுவும் எழுத்துவாழ்க்கை என்னும் இந்த ‘பேக்கேஜில்’ அடங்கும்.
எனக்கான இறுதி ஊர்வலத்திலேயே என் நண்பர்கள் என்னுடன் இருந்த மகிழ்ச்சியான நேரங்களை எண்ணி, அப்போது நிகழ்ந்த வேடிக்கைகளைப் பேசிச் சிரிப்பார்கள் என்றால் அது என் வெற்றி என்றே கொள்வேன். என் வாசகர்கள் அன்றிரவு நல்ல உணவு உண்ணலாம். இசை கேட்கலாம். அரட்டையடிக்கலாம். குடிப்பவர்கள் என்னை எண்ணி நல்ல மதுவைக் குடிக்கலாம். அப்போது அந்த மேசையில் எனக்கும் ஒரு கோப்பை (சீனி இல்லாத) கொக்கோகோலா பரிமாறியும் வைக்கலாம்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
