காஃப்காவின் நிழல்
பெஞ்சமின் பாலிண்ட்டின் Kafka’s Last Trial: The Case of a Literary Legacy புத்தகத்தைப் படிக்கும் போது அது காஃப்காவின் விசாரணை நாவலைப் போலவே இருப்பதை உணர முடிகிறது.

காஃப்காவின் படைப்புகள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நீதிமன்ற வழக்கு பற்றிய இப்புத்தகம் ஜெருசலேமில் ஒரு கோடை காலத்தின் காலை நேரத்தில் முற்றிலும் கறுப்பு நிறத்தில் உடையணிந்த 82 வயதான ஈவா ஹோஃப், இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தின் வளைந்த மர பெஞ்சில் தனது கைகளைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார் எனத் துவங்குகிறது
நீதிமன்றத்தில் கறுப்பு அங்கி அணிந்த ஒன்பது வழக்கறிஞர்கள் அரை வட்ட மேஜையில் அமர்ந்திருந்தனர். மூன்று தரப்பினருக்கு குரல் கொடுக்க அவர்கள் காத்திருந்தனர் உயரமான மேடையில் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு குழு அமர்ந்திருந்தது.

ஈவா தன்னைச் சந்திக்க வரும் பத்திரிகையாளர்களைத் தவிர்த்தார் அவர்கள் தன்னைப் பொய்யாகச் சித்தரிப்பதாகக் கருதினாள்..எட்டு வருட காலம் நடந்த வழக்கு விசாரணை 2016ல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. விசாரணையின் ஆரம்பக் கட்டங்கள் – சட்ட நெறிமுறை, பதிப்புரிமை மற்றும் அரசியல் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தன.
காஃப்கா இன்று அடைந்திருக்கும் புகழை அவர் தனது வாழ்நாளில் அடையவில்லை. அவரது முக்கியமான படைப்புகள் யாவும் மரணத்திற்குப் பின்பே வெளியாகின. அதற்கு அவரது நண்பர் மேக்ஸ் பிராடிற்கு நன்றி சொல்கிறார்கள். அவர் தான் காஃப்காவின் கையெழுத்துப்பிரதிகளைப் பாதுகாத்து வைத்து வெளியிட்டவர்.
காஃப்கா, தனது நண்பரான மேக்ஸ் பிராடிடம், தனது மரணத்திற்குப் பின்பாக வெளியிடப்படாத அனைத்து கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள் மற்றும் ஆவணங்களை எரித்துவிடும்படியாகச் சொல்லியிருந்தார். பிராட் அதனைச் செய்யவில்லை.

மேக்ஸ் பிராடிடம் சில கையெழுத்துப் பிரதிகளை மட்டுமே ஒப்படைத்திருந்ததாகவும் காஃப்காவின் மரணத்திற்குப் பிறகு அவரது மேஜை மற்றும் அறையிலிருந்த கையெழுத்துப் பிரதிகளைப் பிராட் தானாக எடுத்துக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். இருவருக்கும் இடையில் அவ்வளவு நெருக்கமான நட்பு இருந்தது. நீதிமன்றத்தில் எந்தக் கையெழுத்துப்பிரதிகளைப் பிராட் தானாக எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. அவற்றைத் துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை.
நாஜி அச்சம் காரணமாகத் தனது நாட்டைவிட்டு வெளியேறும் போது பிராட் அவற்றை ஒரு பெட்டியில் வைத்து எல்லை கடந்திருக்கிறார். அப்படிக் கடத்திவரப்பட்ட கையெழுத்துபிரதிகளுடன் இஸ்ரேலில் வசித்திருக்கிறார்.
ஜெருசலத்தில் பிராடின் உதவியாளராகவும் காதலியாகவுமிருந்த எஸ்தர் ஹோஃப் காஃப்காவின் சில கையெழுத்துப் பிரதிகளைத் தனதாக்கிக் கொண்டு. அவற்றின் முழுஉரிமை தனக்கு மட்டுமே சொந்தம் என அறிவித்தார். இதன் காரணமாகக் காஃப்காவின் படைப்புகளை வெளியிடுவதில் நெருக்கடி ஏற்பட்டது.
காஃப்காவின் மூன்று சகோதரிகள் நாஜி முகாமில் கொல்லப்பட்டடார்கள். அவரது உறவினர்களில் பலரும் உலகப்போரில் இறந்து போனார்கள். ப்ராட் இறந்தபோது , காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளைத் தனது இரண்டு மகள்களிடம் விட்டுச் சென்றார், அவர்களில் இளையவர் தான் ஈவா. அவர் தான் இந்த வழக்கின் நாயகி.
ஜெருசலேமில் உள்ள தேசிய நூலகம் மற்றும் மார்பாக்கில் உள்ள ஜெர்மன் இலக்கிய ஆவணக் காப்பகம் இரண்டும் காஃப்காவின் படைப்புகளுக்கு உரிமை கோரின.
காஃப்கா யூதர் என்பதால் அவரது படைப்புகள் இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்றது தேசிய நூலகம் – காஃப்கா ஒரு ஜெர்மன் எழுத்தாளர், அவர் இஸ்ரேலில் ஒருபோதும் கால் பதிக்கவில்லை. ஆகவே அவர் ஜெர்மனிக்கே சொந்தம் என்றது ஜெர்மனி ஆவணக் காப்பகம் . ஈவா ஹோஃப் அந்த இருவருக்கும் எந்த உரிமையும் கிடையாது. யாவும் தனக்கே சொந்தம் என்றார், இதனால் மும்முனைப் போட்டி உருவானது.

காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் கடிதங்கள். ஆவணங்கள் என இருபதாயிரம் பக்கங்கள் வரை இருந்தன. ஈவா அவற்றைச் சூரிச் மற்றும் டெல் அவிவில் உள்ள வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது காஃப்கா தன்னை யூதராக அடையாளப்படுத்திக் கொள்ளவேயில்லை என்ற வாதம் முன்வைக்கபட்டது, படைப்பின் உரிமை குறித்த பல்வேறு சட்ட நுணுக்கங்கள் விசாரணையின் போது முன்வைக்கபட்டன.
காஃப்காவின் சகோதரிகளைக் கொன்றது நாஜி ஜெர்மன் அரசு. ஆகவே அவரது படைப்புகள் ஜெர்மனிக்கு சொந்தமானதில்லை என்ற வாதமும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கபட்டது. காஃப்காவின் காதலி மிலேனா ஜெசென்ஸ்கா, ரேவன்ஸ்ப்ரூக் வதை முகாமில் கொல்லப்பட்டார் ஒருவேளை காஃப்கா வாழ்ந்திருந்தால், அவரும் ஒரு முகாமில் அடைக்கபட்டு கொல்லப்பட்டிருப்பார் என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்கள்.
எஸ்தர் காப்காவின் கையெழுத்துப் பிரதிகளைப் பலருக்கும் விற்றுப் பணம் சம்பாதித்திருக்கிறார். 1988 ஆம் ஆண்டில், விசாரணை நாவலின் கையெழுத்துப் பிரதியை கிட்டத்தட்ட $2 மில்லியனுக்கு ஏலம் விட்டிருக்கிறார். ஆகவே அவருக்குத் தார்மீகமாக இதனைப் பாதுகாக்கும் உரிமை கிடையாது என இஸ்ரேலின் தேசிய நூலகம் சார்பில் வாதம் முன்வைக்கபட்டது. .
பல ஆண்டுகளுக்கு முன்பாக இதே பிரச்சனை எழுந்த போது மாவட்ட நீதிமன்றம். ஈவாஹோஃப் தனது வாழ்நாளில் இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அவருக்கு முழு உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்தது. ஆகவே தற்போதைய நடவடிக்கைகள் அனைத்து தேவையற்றவை என்றும் நீதிபதிகள் முன் ஈவாவின் வழக்கறிஞர் ஜோஹர் வாதிட்டார்.
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தேசிய நூலகத்திற்கு வந்து, அங்குப் பாதுகாத்து வைக்கபட்டுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் கையெழுத்துபிரதிகளைப் பார்வையிடுவதாகவும், காஃப்காவின் ஆவணங்கள் தங்களின் ஒப்படைக்கபட்டால் அவை முறையாகப் பாதுகாக்கபடும் பயன்படுத்தபடும் என்று தேசிய நூலகம் சார்பான வழக்கறிஞர் தெரிவித்தார்
மேக்ஸ் பிராட் 1884 இல் பிராகாவில் இருந்த ஒரு யூத நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார், சட்டக்கல்லூரியில் அவர் பயின்ற போது உடன் படித்தவர் தான் ஃபிரான்ஸ் காஃப்கா. இருவரும் இருந்த தத்துவ ஈடுபாடு மற்றும் ரசனை ஆழமான நட்பை உருவாக்கியது. அவர்கள் தினமும் ஒன்றாகச் சுற்றினார்கள். இலக்கியம், தத்துவம் குறித்து விவாதித்தார்கள்.
ஃபிரான்ஸ் காஃப்காவிடம் அசாதாரணத் திறமை இருப்பதாகப் பிராட் நம்பினார். அவர்கள் ஒன்றாகச் சினிமா பார்த்தார்கள். ஆற்றில் நீந்தினார்கள். பயணம் செய்தார்கள். இலக்கிய விவாதம் செய்தார்கள். மேக்ஸ் பிராட் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றைக் காஃப்கா கையெழுத்திலே வாசித்து விமர்சனம் செய்திருக்கிறார். காஃப்காவின் படைப்புகளை அச்சில் கொண்டுவர வேண்டுமென விரும்பி அவரை முக்கியப் பதிப்பகம் ஒன்றிடம் அறிமுகம் செய்து வைத்தவர் பிராட். காஃப்காவின் காதல். திருமண முறிவு. தந்தையோடான கசப்பான உறவு. சுய குழப்பங்கள் இவற்றைப் பிராட் நன்கு புரிந்து கொண்டிருந்தார். ஆகவே தான் காஃப்காவின் மரணத்திற்குப் பின்பு அவரது கையெழுத்துப் பிரதிகளை எரிக்கவில்லை.
ஒரு திரைப்படத்தினைப் போலவே பெஞ்சமின் பாலிண்ட்டின் புத்தகம் நீதிமன்ற தீர்ப்பு நாளில் இருந்து துவங்குகிறது. ஈவாவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர். வழக்கின் விபரம். நடைபெற்ற முக்கிய விசாரணைகள். சாட்சிகள் எனத் துப்பறியும் கதையைப் போலப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது
விசாரணையின் முடிவில் இஸ்ரேல் அரசு வென்றது. காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் உட்பட அனைத்தையும் ஈவா ஹோஃப் இஸ்ரேல் தேசிய நூலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கு ஈடாக அவருக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது என்றும் தீர்ப்பளித்தது.

காஃப்கா இறந்து 92 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படைப்புகளின் உரிமை தீர்மானிக்கப்பட்டது. தனது எதிர்ப்பை காட்டும்விதமாக ஈவா தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டார். அவரது மேல்முறையீடு நிராகரிக்கபட்டது. ஈவாவின் பொறுப்பில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கபட்டிருந்த ஆறு பெட்டிகள் பலத்த காவலுடன் இஸ்ரேலிய தேசிய நூலகத்தை வந்து அடைந்தன. அவற்றில் இருந்த கடிதங்கள். கதைகளின் கையெழுத்துபிரதிகள். நாட்குறிப்புகளைத் தனியே பிரித்தார்கள். அதன்பிறகு காஃப்கா உலகிற்குச் சொந்தமானவராக மாறத் துவங்கினார்.
இந்த விசாரணையின் போது ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அவரது சொந்த தேசத்தில் தான் பாதுகாக்கபட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. நாட்டைவிட்டு வெளியேறிய ரஷ்ய மற்றும் பிறதேச எழுத்தாளர்கள் அதனை விரும்பவில்லை. ஆகவே எழுத்தாளர் விரும்பும் நாட்டில் அவரது படைப்புகள் பாதுகாக்கபட வேண்டும் என்பதே சரி என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இன்று நோபல் பரிசு பெற்ற மார்க்வெஸின் படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பிரதிகள். குறிப்பேடுகள் அமெரிக்கப் பல்கலைகழங்களால் பாதுகாக்கபட்டு வருகின்றன.
எழுத்தாளனின் கையெழுத்துப் பிரதிகள். குறிப்பேடுகள் கடிதங்கள் வெறும் பரிசுப் பொருட்களில்லை. ஆகவே அவற்றைக் கையாளத் தெரியாதவர்கள் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று இலக்கியவாதிகள் பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் இன்றும் சர்வதே அளவில் நடக்கும் ஏலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரின் கடிதம் ஏலத்திற்கு விடப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அதனை வாங்கிய எவரோ ஒருவர் தனது அலங்கார அலமாரியில் வைத்துப் பெருமை அடைகிறார்.
காஃப்காவின் படைப்புகளைப் பதிப்பிக்கும் பணியும் எளிதாகயில்லை. அவரது திருத்தங்களை முறையாகக் கண்டறிந்து பதிப்பிக்கவும் ஆங்கில மொழியாக்கத்தைச் செம்மைப்படுத்தவும் போராட வேண்டியிருந்தது. இன்றும் அவரது படைப்புகளுக்குப் புதிய மொழிபெயர்ப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
காஃப்கா தனது காதலிகளில் ஒருவரான மிலேனா ஜெசென்ஸ்காவுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, ஆனால் மிலேனாவின் கடிதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
காஃப்கா தனது படைப்புகளை எரித்துவிடச் சொன்னதற்கு எந்த நேரடி சான்றும் கிடையாது. அது மாக்ஸ் பிராடால் உருவாக்கபட்ட கற்பனை. ஒருவேளை அவர் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு நாடகத்தை உருவாக்கியிருக்கலாம் என்ற விமர்சனம் இன்று வரை மறைமுகமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒருமுறையும் காஃப்காவின் படைப்புகள் குறித்த ஒரு புதிய புத்தகம் ஏதேனும் ஒரு மொழியில் வெளியிடப்படுகிறது என நியூயார்க்கர் தகவல் தருகிறது. அது உண்மையே.
காஃப்காவின் எழுத்துகள் பெற்ற கவனத்தை, புகழை மேக்ஸ் பிராடின் படைப்புகள் பெறவில்லை. அவர் இன்றும் காஃப்காவின் நிழலாகவே கருதப்படுகிறார். அதற்காகவே கௌரவிக்கபடுகிறார். நிச்சயம் அது மேக்ஸ் பிராடிற்கு வருத்தம் தருவதாகவே இருந்திருக்கும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
