குற்றமுகங்கள் 23 தாம்பே
குற்றத்தின் காரணவியல் என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆர்.ஜே. பிராங் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதில் இரண்டு ஆண்டுகள் தென்னிந்தியாவில் களஆய்வு செய்ததாக நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இவரது ஆய்வின் நோக்கம் எந்தப் பருவ காலத்தில் எது போன்ற குற்றங்கள் அதிகமாகின்றன என்பதைக் கண்டறிவதாகும். அவர் தனது கள ஆய்வில் விசித்திரமான பல உண்மைகளைக் கண்டறிந்தார். இந்தியாவில் அதிகபட்ச கொலைகள் வெப்பமான மாதங்களில் நடைபெறுகின்றன ஆகஸ்ட் மாதத்தில், கிராமப்புற தீ விபத்துகள் அதிகமாகின்றன. அக்டோபர் முதல் ஜனவரி வரை, சாலைகளில் நடைபெறும் குற்றங்கள் அதிகமாகின்றன என்று பட்டியலிடுகிறார். இந்த நூலின் பின் இணைப்பாகச் சில குற்றவாளிகளையும் அவர்களின் விசித்திர இயல்புகளையும் தொகுத்தளித்துள்ளார். அதில் ஒருவராகத் தாம்பே குறிப்பிடப்படுகிறார்.
தாம்பே என்றொரு நகல்குற்றவாளியிருந்தான். அவனது பிரச்சனை என்னவென்றாவ் அவனால் எந்தப் புதிய குற்றத்தையும் செய்ய முடியவில்லை என்பதே. உலகின் எல்லாக் குற்றங்களும் முன்னதாக யாராலோ செய்யப்பட்டிருக்கின்றன. அதைத் திரும்பத் திரும்ப நகலெடுக்கிறார்கள். புதிய குற்றம் என்பது ஒரு கண்டுபிடிப்பு. அதை நிகழ்த்தும் போது அறிய முடியாது. தொடரப்படுவதன் வழியே அது முதல்குற்றமென்ற அங்கீகாரத்தைப் பெறும்.

தாம்பே புதிய குற்றம் ஒன்றை செய்ய விரும்பினான். அதற்காக நிறைய யோசித்தான். இரண்டுவகைக் குற்றங்களை ஒன்று கலப்பதன் மூலம் ஒரு குற்றத்தை புதிதாக உருவாக்கிவிடலாம். ஆனால் அதனை அவன் விரும்பவில்லை. அசலாக ஒன்றை செயல்படுத்த நினைத்தான். பல குற்றங்கள் வயதாகி தளர்ந்துவிட்டதை அவன் அறிவான். இப்போது தீவட்டி கொள்ளையர்கள் எங்கேயிருக்கிறார்கள்.
நகல் குற்றவாளியாக இருப்பதை நினைத்து எவரும் வருத்தப்படுவதில்லை. ஆனால் தாம்பே வருத்தப்பட்டான். ஆகவே புதிய குற்றத்தினைக் கண்டறிய அவன் பழைய குற்றவாளிகளுடன் உரையாடினான். அவர்கள் செய்ய விரும்பிய குற்றங்களைக் கேட்டறிந்தான். அதில் ஏதாவது புதியது இருக்கக் கூடுமோ என ஆராய்ந்தான். பேசப்படும் போது குற்றம் வளர்ந்துவிடுகிறது. அதன் தோற்றம் விசித்திரமாகி விடுகிறது.
இந்தத் தேடுதலில் அவன் ஒரு துறவியைச் சந்தித்தான். துறவி அவனைப் பார்த்து சிரித்தபடியே சொன்னார்
“நீயும் நானும் பிறந்ததே நகலெடுப்பு தானே. குற்றத்திற்கு மூன்று தாயிருக்கிறார்கள். ஒருவர் இருட்டு. மற்றவர் பசி. மூன்றாமவர் சுகம். இவர்கள் தான் குற்றத்தை உருவாக்குகிறார்கள். அவர்களிடம் கேட்டுப்பார் பதில் கிடைக்கும்“
துறவியின் பதில் தாம்பேயிற்குப் புரியவில்லை. அவன் சந்தை வணிகனிடம் சென்று தனது சந்தேகத்தைக் கேட்டான்
“வேடிக்கையாக இருக்கிறது உனது கேள்வி. அனுமதிக்கபட்ட எதுவும் குற்றமில்லை. சந்தர்ப்பம் அனுமதிக்கப்பட்டதையும் குற்றமாக்கும் என வணிகர்கள் அறிவார்கள். குற்றத்திற்கு மூன்று தந்தையிருக்கிறார்கள். பேராசை என்ற ஒருவர். அதிகாரம் என்ற இன்னொருவர். சந்தர்ப்பம் என்ற மூன்றாவது நபர். இவர்களே குற்றத்தை உருவாக்குகிறார்கள். ஒருவேளை உன் கேள்விக்கான விடை அவர்களுக்குத் தெரிந்திருக்ககூடும்“ என்றார்
தாம்பே இந்தப் பதிலாலும் ஏமாற்றமே அடைந்தான். இரவொன்றில் கணிகை ஒருத்தியை சந்தித்தான். அவள் தான் பதில் சொல்வதற்கு முன்பாகத் தனது கால்விரல்களையும் பாதங்களையும் அழுத்திவிடச் சொன்னாள். அப்படி எவரும் தாம்பேயிடம் கேட்டதில்லை
“திருடர்களின் கைகளுக்கு விநோத சக்தியிருக்கிறது. அவர்கள் கால்களை அமுக்கிவிட்டால் கிடைக்கும் சுகம் அலாதியானது“ என்றாள்.
இரண்டு தாமரைமொக்குகள் போலிருந்த அந்தப் பாதங்களைத் தாம்பே மெதுவாக அமுக்கிவிட்டான். விரல்களை நீவிவிட்டான். கண் அயர்ந்தவள் போல இருந்த கணிகை சொன்னாள்
“உடல் தான் குற்றத்தின் கேந்திரம். குற்றத்திற்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். ஒருத்தியின் பெயர் சஞ்சலம், மற்றொருத்தியின் பெயர் வேட்கை. மூன்றாவதாக இருப்பவள் அகங்காரம். இவர்களே குற்றத்தை உருவாக்குகிறார்கள். அவர்களிடம் கேட்டுப்பார்“ என்றாள்
தாம்பே குழப்பமடைந்தான். அவனால் புதிய குற்றம் எதுவெனக் கண்டறிய முடியவில்லை. முடிவில் தனக்கு உரிமையான பொருட்களைத் தானே திருடிக் கொள்ளத் துவங்கினான். அப்போது அவனைப் புத்தி பேதலித்தவன் என்று சிலரும் ஞானி என்று சிலரும் அழைக்கத் துவங்கினார்.
தாம்பே போன்றவர்களை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. அவனைப் புரிந்து கொள்வதும் எளிதானதில்லை என்று டாக்டர் ஆர்.ஜே. பிராங் குறிப்பிடுகிறார்,
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
