ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள்
2025-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு என்கிற அறிவிப்புடன் இன்றைய பொழுது புலர்ந்தது. இது இந்த வரிசைத் தொடரில் 15-வது விருது.
நிறுவப்பட்ட தொடக்க ஆண்டுகளில் ஆ, மாதவன், தெளிவத்தை ஜோசப், ஞானகூத்தன் ஆகியோருடன் குறிப்பாக அபி, விக்ரமாதித்யன், வண்ணாதாசன், சீ.முத்துசாமி ஆகியோர் தங்களின் 75-வது வயதுக்குப் பிறகு இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். சாருவுமேகூட எழுபதை தொட்டு விட்டிருந்தார்.
மற்றபடி அதற்கடுத்த நிரையில் ஒருவர் விடாமல் அனைவருமே (விஷ்ணுபுர) விருதைப் பெற்ற போது அறுபது வயதைக் கடந்து விட்டிருந்தனர். ஒருவகையில் விஷ்ணுபுரம்தான் அவர்கள் பெற்ற முதல் அங்கீகாரமாகும். (2018-ன் விருதாளரான) பேராசிரியர் ராஜ் கௌதமன் கூட தன் கடைசி காலங்களிலேயே இவ்வாறான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
இவை எந்தளவுக்கு படைப்பாளியை, இலக்கியவாதியைக் கொண்டாட தமிழ்ச் சமூகம் தாமதப்படுத்தி வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியங்களாகும்.
யுவன் சந்திரசேகரன் விருதைப் பெற்றபோது ஜெ.வின் சம காலத்தவருக்கு அங்கீகாரம் என்று பேசினர், ஆனால் யுவன் ஜெ.வைவிட வயதில் சில ஆண்டுகளேனும் மூத்தவர். ஆனல் அந்த விமர்சனத்தை ஒரு பிரிகோடாக கொண்டு பார்த்தால் ஜெ.வைவிட ஓரளவு இளையவரான ரமேஷ் பிரேதன் தேர்வாகியிருப்பது இன்னொரு கட்டத்தின் தொடக்கம் என கொள்கிறேன்.
1980-களின் இடைக்காலத்தில் எழுதத் தொடங்கியபோது ரமேஷுக்கு வெறும் 22 வயது, இந்த 2025-ல் கிட்டத் தட்ட நாற்பது ஆண்டுகள் சிறுகதை, நாடகம், கவிதை எனவும் தலித், விளிம்புநிலை எழுத்தின் மீது பெருமளவு கவனக் குவிப்பையும் செய்தவர் ரமேஷ்.
இரண்டு தனிநபர்கள் ஒன்று சேர்ந்து எழுதுவதும், பிற்காலங்களில் தனி வழியை கண்டடையும் சூழலில் – அந்த கூட்டுப் பிரதியில் ஒருவரின் பங்கை மதிப்பிடுவதில் வாசகனுக்கு சிக்கல் எழுவது இயல்பானதே. எனினும் தலித், விளிம்புநிலை குறித்து ரமேஷ் எழுதியவை காத்திரமானது, தொடர்ச்சியானது, Gen-z எனப்படும் தலைமுறையினரில் இன்று எழுதிக் கொண்டிருக்கும் பலர் மீது இவருடைய செல்வாக்கு எத்தகையது என்பது தனி ஆய்வுக்குரியது.
இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுமானவரை ரமேஷின் படைப்புலகை இன்னும் நெருக்கமாக படிக்க இந்த விருது ஒரு காரணமாகும், அந்த வகையில் ரமேஷுக்கு வாழ்த்துக்கள், விஷ்ணுபுரம் அமைப்புக்கு பொதுவாகவும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் என் நெஞ்சார்ந்த நன்றி. விழா நாட்களில் கோவையில் சந்திப்போம்.
கொள்ளு நதீம், ஆம்பூர்.
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது. இதுவரை விருதுபெற்றவர்களில் அவரே வயதில் இளையவர், 61 அகவை நிறைவடைந்தவர். அவருடன் எழுத வந்தவர்களில் தேவி பாரதி, சோ.தர்மன், சு.வெங்கடேசன், ஜோ.டி.குரூஸ் போன்ற பலர் சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றுவிட்டனர். பாவண்ணன், சுகுமாரன் என பலர் இயல் விருதையும் பெற்றுவிட்டனர். (சாகித்ய அக்காதமி விருது இன்றைக்கு தமிழில் பலகோடி ரூபாய் பெறுமானமுள்ளதாக ஆகிவிட்டது) ரமேஷ் பிரேதன் பிரபஞ்சன் விருது போன்ற சில விருதுகளையே பெற்றுள்ளார். அவர் பெறும் முக்கியமான விருது இது. தமிழ்ச்சூழலில் கௌரவிக்கப்படாத படைப்பாளிகள் ஒவ்வொருவரையாகத் தேடி விருதை அளித்துக்கொண்டிருக்கிறது விஷ்ணுபுரம் அமைப்பு.
ரமேஷ் பிரேதனின் சொல் என்றொசு சொல், பொந்திஷேரி ஆகிய நூல்களை வாசித்துள்ளேன். அவருடைய படைப்பு ஆழமான வாசகர் கவனத்தைக் கோருவது. அந்த வகையான படைப்புக்களை அவற்றை எப்படி வாசிப்பது என்னும் ஒரு கூட்டுவிவாதம், பயிற்சி வழியாகவே வாசிக்கமுடியும். அத்தகைய வாசிப்புக்கு இந்த விருது வழிவகுக்கும் என நினைக்கிறேன். யாவரும் பதிப்பகம் அவருடைய பெரும்பாலான நூல்களை வெளியிட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள். அவர் நூல்களை வாசித்து விவாதிக்கவிருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எஸ்.ராமச்சந்திரன்
உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
