பொன்னி, அரு.பெரியண்ணன் -ஒரு விழா

நான் நடத்தும் இந்து தத்துவ வகுப்புகள் பல அணிகளாக நடந்துகொண்டே இருக்கின்றன.முதலாவது தத்துவ வகுப்பின் ஏழாவது அணி சென்ற வாரம் நிகழ்ந்தது. இம்முறை 95 பேருடன். அது ஒரு மூன்று நாள் விழா. நான் உடனடியாக அமெரிக்க செல்ல இருப்பதனால் அடுத்த வாரமே ஐந்தாவது நிலை தத்துவ முகாமின் நான்காவது அணியையும் நிகழ்த்தலாம் என்று தோன்றியது .அதற்கும் 60 பேர் வரவிருக்கிறார்கள். இந்த இடைவெளியில் நாகர்கோவிலுக்கு சென்று வர வேண்டாம் என்று அங்கேயே தங்கி விட்டேன். அமெரிக்கா செல்வதற்கு முன்பு எழுதி முடிக்க வேண்டிய சில வேலைகளும் மிஞ்சி இருந்தன. அவற்றை தீவிரமாக எழுதலாம் என்று எண்ணினேன்.

உண்மையில் அங்கே குடும்பத்துடன் ஒரு நான்கு நாட்கள் தங்கலாம் என்றுதான் எண்ணினேன். அருண்மொழி, அஜிதன், சைதன்யா எவருமே வரமுடியாத நிலை. வெவ்வேறு பணிகளில் அவர்கள் சிக்கிக் கொண்டதனால் நான் மட்டுமே அங்கு தங்கும்படியாக இருந்தது. நல்ல வேலையாக ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் கிருபாலட்சுமியும் அனைவரையும் விட மேலாக மானசாவும் அங்கே வந்தார்கள். ஒரு குழந்தை ஓர் இடத்தை எந்த அளவுக்கு அழகுறச் செய்யும் என்பது மனசா அங்கு வந்தபோதுதான் தெரிந்தது. மிகப் பெரிய வெளி அந்த இடம். அதை முழுக்கவே அந்த கைக்குழந்தை நிரப்பி இருப்பது போல் இருந்தது. அவளுடைய ஒளி நிறைந்த காற்று, ஒளி நிறைந்த மரங்கள். ஒளிர்ந்து நிறைந்த சூழல். எங்கிருந்தோ அவளுடைய பாடும் குரல் பேசும் குரல் ட்டுக் கொண்டே இருந்தது.

நடுவே ஒரு சிறு பயணமாக சென்னை வர வேண்டி இருந்தது. என்னுடைய திட்டத்திலேயே அது இல்லை. அது சற்று கடுமையான பயணமும் கூட. மலைப்பகுதியிலிருந்து ஈரோடு வந்து இறங்கி, ஈரோட்டில் இருந்து சென்னை வந்து, சென்னையிலிருந்து அன்றே திரும்பி மீண்டும் ஈரோடு வந்து, மீண்டும் காரில் மலைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அந்த கடுமையான பயணத்தை நான் செய்ததற்கு காரணம் அரு.பெரியண்ணன் என்னும் இதழியல் முன்னோடி ஒருவரின் நூற்றாண்டு விழாவை அவருடைய குடும்பத்தினர், குறிப்பாக அவருடைய பெயரன் கார்த்திக் சிதம்பரம் கொண்டாடுவதுதான்.

தமிழகத்தில் அவ்வாறு இலக்கிய முன்னோடிகள், இதழியல் முன்னோடிகளின் வாரிசுகள் அவர்களை நினைவு கூர்வதோ மதிப்பதோ மிக அரிதானது. அதிலும் அண்மைக் காலத்தில் அமெரிக்காவில் அல்லது பிற நாடுகளில் குடியேறிய பிறகு தங்களுடைய பெற்றோரையோ தங்களுடைய முன்னோரையோ எந்த வகையிலும் இந்த இளைஞர்கள் எண்ணிக் கொள்வதில்லை. தங்களுக்கென்று ஒரு மரபு இருப்பதையே அவர்கள் நினைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் முழுமையாக இந்தியாவுடன் எல்லா அடையாளங்களை வெட்டி விடவே முயல்கிறார்கள். வருவதே பிடிப்பதில்லை. ஆனால் சென்ற இடத்தில் மொழி சார்ந்தும், சாதி சார்ந்தும், மதம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் ஒரு சிறு குழுவையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏனென்றால் அங்கே அவர்கள் தனியாக இருக்க முடிவதில்லை. சேர்ந்து சாப்பிடுவதற்கும் அரட்டை அடிப்பதற்கும் வம்புகளுக்கும் ஒரு குழு தேவையாகிறது.

இதற்கு விதிவிலக்காக கார்த்திக் சிதம்பரம் இருக்கிறார். வெற்றிகரமான ஒரு தொழில் நிபுணராக இருந்தபோதிலும் கூட இந்தியா திரும்பி இங்கும் ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டதும் சரி, தன்னுடைய தாத்தாவின் பண்பாட்டு கொடையை மதித்து அதை முன்னெடுக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சரி, மிக மிக அரிதான ஒரு செயல்.  முன்னுதாரணமான ஒன்று .நானறிந்தவரை இது இன்று நகரத்தார் சமூகத்தில் மட்டுமே இருந்து கொண்டிருக்கும் ஓர் உயர் பண்பு .

தமிழ் பண்பாட்டுக்கே நகரத்தார் சமூகத்தின் கொடை என்பது மிக முக்கியமான ஒன்று.  ஒருமுறை கேரளத்தில் ஒரு விவாதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி (எழுத்தச்சன்) மலையாள பண்பாட்டுக்கு அளித்த மிகப்பெரிய கொடையைப் பற்றிய விவாதத்தில் அதை விடவும் அதிகமான கொடை அளித்த சமூகம் என்று தமிழகத்தில் நாட்டார் நகரத்தார் சமூகத்தைச் சொல்ல முடியும் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். இங்கு வருவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது அதுதான். சென்ற முறை இதேபோல வாணிமகாலில் பழ. கருப்பையாவுக்கு அவர் மகன் கரு.ஆறுமுகத்தமிழன் எடுத்த விழாவிலும் கலந்துகொண்டேன்.

வாணி மஹாலில் விழா நிகழ்ந்தது .காலை 10 மணி விழாவிற்கு அரங்கு நிறைக்கும் அளவுக்கு பெரும் கூட்டம். என்னுடைய உரைக்காக வந்த பலரை கண்டேன். என் நண்பர்களையும் பார்த்தேன். அங்கும் என்னைச் சந்தித்து கையெழுத்து நூல்களில் வாங்கிக் கொள்வதற்கு வாசகர்கள் வந்தது என்பது ஆச்சரியமான விஷயம்தான். பெரும்பாலானவர்கள் அரு.பெரியண்ணன் அவர்களின் குடும்பம், சுற்றம். அரு.பெரியண்ணன் அவர்கள் மு.கருணாநிதி அவர்களுக்கு நீண்டகாலம் நெருக்கமாக இருந்தவர். முரசொலி பெரியண்ணன் என்றே அறியப்பட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாறு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னுரையுடன்தான் வெளிவந்துள்ளது.

முதல்முறையாக நான் இளமையிலேயே படித்திருந்த லேனா தமிழ்வாணன் அவர்களை பார்த்தேன். அதே மாறாத இளமையுடன் இருந்தார் என்று தோன்றியது. அமைச்சர் ரகுபதி பேசினார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் பொன்னி இதழ்களை எண்ணிம வடிவத்தில் சேமிப்பதற்கான பணிகளை செய்து இருக்கிறார்கள் . அரு.பெரியண்ணனின் பேரன் கார்த்திக் சிதம்பரம் தொகுத்த இரண்டு நூல்கள் அங்கு வெளியிடப்பட்டன. ஒன்றுபொன்னி இதழ்களின் தொகுப்பு. இன்னொன்று அரு.பெரியண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு. நூல்களை அமைச்சர் திரு ரகுபதி வெளியிட அதை பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா  பெற்றுக்கொண்டார்.

திருச்சி சிவா எம் பி யின் பேச்சு சுவாரசியமாக அமைந்தது. அவர் அந்த நூல்களை படித்து விட்டு வந்து பேசியது ஆச்சரியமாக இருந்தது .பொதுவாக அரசியல்வாதிகள் அவர் செய்வதில்லை என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய குரல், தோரணை ஆகியவற்றில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் ஒருவருடைய சொல்விளக்கத்தைப் பார்த்தேன். அறிமுகம் செய்து கொண்ட போது ‘உங்களைப் பற்றி கேட்டிருக்கிறேன். ஏராளமான கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. கடுமையான கருத்துக்களை நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுத்தாளர், உங்களுக்கு செல்வதற்கு உரிமை இருக்கிறது’ என்றார். ஒரு திமுக விழாவில் என்னைப்போன்ற ஒருவன் சிக்கலின்றிக் கலந்துகொள்வதற்கான காரணமும் இந்த பண்பாட்டுப்பார்வைதான்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.