விஷ்ணுபுரம் விருது, கடிதம்.
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதுக்கான அளவீடுகள் பற்றி சொல்லமுடியுமா? அவருடைய உடல்நிலையை கருத்தில்கொண்டுதான் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. (அவர் உடல்நிலை மோசமாக இருப்பதனால் என்று) அதனால்தான் இதைக் கேட்கிறேன்.
ரவி அமிர்தன்
அன்புள்ள ரவி,
விஷ்ணுபுரம் விருதுகளிலுள்ள வரிசை, எவருக்கு விருது அளிக்கப்படும் என்பது, இலக்கியவாசகர்கள் எவரும் சொல்லிவிடக்கூடியதுதான். ஏனென்றால் இங்கே இலக்கியம் சிறியது. உண்மையில் ஏதேனும் பங்களிப்பாற்றியவர்கள் மிகக்குறைவு. அவர்களின் பெயர்களை எந்த ஒரு வாசகனும் பட்டியலிட்டு வரிசைப்படுத்திவிட முடியும். ஆகவேதான் எங்கள் விருதுகள் எல்லாமே கேள்விக்கு அப்பாற்பட்டவையாக ஏற்கப்படுகின்றன.
இந்த விருதுக்கான அளவுகோல் என்பது ஒரு நபர், அல்லது குழுவுக்குரியது அல்ல. இப்பட்டியல் பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இலக்கியவாசகர்களிடையே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. அதை தமிழிலுள்ள இலக்கிய அழகியல் மதிப்பீட்டு மரபு எனலாம். வயதுவரிசையை மட்டுமே நாங்கள் கருத்தில்கொள்கிறோம்.
இதில் சில பெயர்கள் விடுபடும், சிலபெயர்கள் முந்தி வரும். காரணங்களும் வெளிப்படையானவை. தவிர்க்கப்படுபவர்களுக்கு முக்கியமான பிறவிருதுகள் (குறிப்பாக இயல், சாகித்ய அக்காதமி) கிடைத்திருக்கும். அதைப்போன்ற ஏற்புகள் அமைந்திருக்கும்.
மிக அரிதாக உடல்நிலையையும் கருத்தில்கொள்வதுண்டு. ரமேஷ் எங்கள் தொடர்பில்தான் இருந்தார். முன்பு அவர் உடல்நிலை மிக நலிந்திருந்தது. இப்போது சற்று மேம்பட்டிருக்கிறார். கோவைக்கு வரமுடியும். ஆகவே இந்த ஆண்டு அவருக்கு அளிக்கப்பட்டது.
விருது பெரும்பாலும் ஜூன் ,ஜூலை வாக்கிலேயே முடிவாகிவிடும். அப்போதே விருது பெறுபவரிடம் தகவலைத் தெரிவித்தும் விடுவோம். ஜூனில் ரமேஷிடம் அவருக்கான விருது தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர் உடல்நிலைக்கான சிறப்புச் சிகிழ்ச்சைக்கும் சென்றுவரத் தொடங்கினார். வழக்கம்போல தூரன் விருது விழா முடிந்து, அதற்கான வாசகர்கடிதங்களும் வெளியாகி முடிந்தபின் அறிவிக்கப்பட்டது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
