கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்
தக்ஷசிலா பல்கலைக்கழகம் திண்டிவனம் அர்கே ஓங்கூர் என்னும் இடத்திலுள்ளது. ஓங்கூர்சாமியை சிலர் நினைவுகூரலாம். ஜெயகாந்தனின் புகழ்பெற்ற விழுதுகள் நாவல் இங்கே நிகழ்ந்தது. அதன் நாயகனாகிய ஓங்கூர் சாமிதான் தமிழிலக்கியம் உருவாக்கிய முதன்மைக் கதாபாத்திரம் என்பது என் எண்ணம். அங்கே ஓங்கூர்சாமியை சந்தித்து உடனிருந்ததை ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். தனக்கு கஞ்சாப்பழக்கம் அந்த ‘மட’த்தில் இருந்தே வந்தது என்றும்.
2019ல் நிறுவப்பட்ட தனியார் பல்கலைக் கழகம் தக்ஷசிலா. நீண்டகாலமாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நிகழ்ந்துவந்த மருத்துவம், பொறியியல், மற்றும் கலைக்கல்லூரிகளின் இணைப்பாக இந்தப் பல்கலை உருவாகியுள்ளது. ஐந்து துறைகளில் 13 கல்விகள் கொண்டது. 55 பட்டப்படிப்புகளும் , வெவ்வேறு முதுநிலைபடிப்புகளும் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் மானுடஅறிவியல் துறைகளில் இதன்கீழ் உள்ளன.
தக்ஷசிலா பல்கலையின் தாளாளர் திரு தனசேகரன் மகாலிங்கம் முப்பதாண்டுகளாகவே என் வாசகர், என் எழுத்துக்களில் இருந்து செயல்படுவதற்கான ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர் என்று குறிப்பிடுபவர். அவருடைய பொறுப்பில் இப்பல்கலை உருவானதுமே அதன் முதல் கௌரவ முனைவர் பட்டத்தை (Honorary Doctorate Degree )எனக்கு அளிக்கவேண்டும் என்று விரும்பி தெரிவித்தார். ஒரு தரமான கல்விநிலையத்தின் ஏற்பு என்பது ஒரு கௌரவம் என நான் ஏற்றுக்கொண்டேன்.
25 செப்டெம்பர் 2025 அன்று பல்கலையின் பதிவாளர் பேராசிரியர் முனைவர். எஸ்.செந்தில் அவர்கள் சென்னையில் அக்கார்ட் விடுதியில் என்னைச் சந்தித்து துணைவேந்தர் பேராசிரியர் விவேக் இந்தர் கோச்சார் அவர்களின் முறையான அறிவிப்பை அளித்து எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற்றுக்கொண்டார். வரும் 19 நவம்பர் 2025 அன்று பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழவிருக்கிறது.
அருண்மொழியிடம் ‘இனிமேல் உனக்கான எல்லா சிகிச்சையையும் நானே செய்வதாக இருக்கிறேன்’ என்று சொன்னேன். நண்பர்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேன்.
அரசு சார்ந்த எந்த விருதையும் பரிசையும் ஏற்பதில்லை என்னும் முடிவில் இருந்தேன். பத்மஶ்ரீ விருதை நான் மறுத்தபோது என் அண்ணா வருத்தப்பட்டார். ‘நீ படிப்பை முறைப்படி முடிக்கவில்லை. அது அப்பாவை எந்த அளவுக்கு வருத்தப்படவைத்தது என்று எனக்குத் தெரியும். அப்பா இன்று இல்லை. ஆனால் நீ அந்த விருதைப் பெற்றிருந்தால் அப்பா எங்கோ இருந்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
அதன்பின் சிங்கப்பூர் நான்யாங் பல்கலையில் வருகைதரு பேராசிரியராக இருக்கையில் என் அறைக்கு வெளியே எனக்கான பெயர்ப்பலகை ‘ஜெயமோகன் பாகுலேயன் பிள்ளை’ என்று இருப்பதைக் கண்டபோது மறைந்த பாகுலேயன் பிள்ளை கொஞ்சமாவது நிறைவடைந்து, கல்லூரிப்படிப்பை விட்டு ஓடிய என்னை மன்னித்திருப்பாரா என்று எண்ணிக்கொண்டேன். இப்போது உறுதியாக மன்னித்துவிடுவார், வழக்கம்போல என்னை பார்க்காமல் வேறெங்கோ பார்த்து கொஞ்சம் புன்னகை புரியவும்கூடும் என நினைத்துக்கொள்கிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
