ரமேஷ் வாழ்த்துக்கள்
ரமேஷ் பிரேதன் பற்றி விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பிறகுதான் அறிந்தேன். இணையத்திலே நான் வாசித்தவற்றில் 90 சதவீதம் வாழ்த்துக்களும் அன்பால் சொல்லப்பட்டவை. வாசிப்பனுபவத்தில் இருந்து வந்த வாழ்த்துக்கள் மிகக்குறைவாகவே வெளிவந்துள்ளன. இந்த மாதிரியான சூழலில் வெவ்வேறு வாசகர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தை எழுதுவதென்பது அவசியமான ஒரு செயல்பாடு. அதன் வழியாகவே நாம் அவர் உலகுக்குள் நுழைய முடியும். ஒரு படைப்பாளி யுனீக் ஆன ஓர் உலகத்தை உருவாக்கினார் என்றால் அதற்குள் நுழைவது கடினம்தான். அதற்கு கூட்டான வாசிப்பு உதவியானது. ஆகவே வாசிப்பவர்கள் அவரைப்பற்றி எழுதினால் அது உதவியானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
சா.ராமதாஸ்.
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்தேன்.அவருடைய படைப்புகளில் சில கதைகளை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அவற்றைப் பற்றிய என் எண்ணம் இது. அனுபவங்கள், உணர்ச்சிகள், கருத்துக்கள் ஆகியவை அவர் படைப்பில் ஒரு அந்தரங்கமான தீவிரத்துடன் உள்ளன. ஆனால் அவற்றை அவர் நேரடியாக முன்வைப்பதில்லை. அவருக்கு ஒரு வாசகர் உள்ளார். ஓர் அந்தரங்கமான வாசக உருவகம் அது. அந்த வாசகருடனான ஒரு புதிர்விளையாட்டாக அவர் அந்த அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். அந்த வாசகன் தன்னை கண்டுபிடிக்கவேண்டும் என விரும்புகிறார். ஆனால் எளிதாகக் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று முக்கால்வாசி ஒளித்தும் வைக்கிறார். அவரை ஒரு காட்டில் இலைகளுக்குள் பதுங்கியிருந்து கண்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கும் ஒரு விலங்கு என்று நான் உருவகம் பண்ணி வைத்திருக்கிறேன். அந்த விளையாட்டு வழியாக நாம் கொஞ்சம் அவரை அறிகிறோம். கொஞ்சம் அவரை கற்பனைசெய்துகொள்கிறோம். அப்படி எங்கும் காட்டிக்கொள்ளாமல் திகழும் கலை உடைய எழுத்து அவருடையது என்று படுகிறது.
சாரநாதன் ஜெயசீலன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
