என் மொழிகளும் மொழித்திறனும்
ஏறத்தாழ ஒரே வார்ப்பிலமைந்தவை போல நாலைந்து கடிதங்கள். எல்லாமே ‘ஆங்கிலம் பற்றி உனக்கு பேச என்ன தகுதி?’ ‘உனக்கு மட்டும் ஆங்கிலம் தெரியுமா?’ ‘அவரு யாரு தெரியுமா?’ பாணி வசைகள். புன்னகையுடன் கடந்துசெல்லவேண்டியவைதான். ஆனால் நம் பொதுமனநிலை சார்ந்த சில விஷயங்களை அதையொட்டிச் சொல்லமுடியும் என்பதனால் இந்தக் குறிப்பு.
நான் என் மொழித்திறன் பற்றி எப்போதுமே எந்த பெருமையையும் முன்வைப்பதில்லை. முதன்மையாகப் பன்மொழிப்புலமை பற்றி. ஐம்பது அறுபது ஆண்டுகளாக மொழியிலேயே வாழ்ந்தும்கூட எனக்கு மொழிப்புலமை சார்ந்த சந்தேகம் எப்போதும் உண்டு. எல்லா படைப்பிலக்கியவாதிகளுக்கும் தன் மொழி பற்றியும் பொதுவாக மொழி என்பது பற்றியும் ஒரு சந்தேகம் அரித்துக்கொண்டேதான் இருக்கும் என நினைக்கிறேன். நான் நினைப்பதை, உணர்வதை, கனவுகாண்பதை தன் மொழி வெளிப்படுத்துகிறதா என்ற சந்தேகம். மொழியை சரியாகப் பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம்.
மொழி எப்போதும் சிந்தனையுடன் இணைந்தே உள்ளது. கனவைக்கூட சிந்தனையாக மாற்றித்தான் அது வெளிப்படுத்துகிறது. மொழியிலுள்ள இந்தச் சிந்தனையம்சத்தை உதறத்தான் இலக்கியவாதி மொழிநடையில் எதையெதையோ முயன்றுகொண்டிருக்கிறான். மனமும் கனவும் ‘அப்படியே’ மொழியில் வந்துவிடாதா என்று ஏங்குகிறான். அதன்பொருட்டு மொழியை உடைக்கவும் திருகவும் முயல்கிறான். மொழியை விரித்துக்கொண்டே இருக்கிறான்.ஆனால் அந்த முயற்சியே சிந்தனை சார்ந்ததுதான். இது ஒரு முரணியக்கம்.
மொழிக்கு ஒர் ‘சராசரிப் பொதுத்தன்மை’ உள்ளது. அது இருந்தால்தான் மொழியால் தொடர்புறுத்த முடியும். இலக்கணம் என்பதும், சொற்களின் குறைந்தபட்சப் பொருள் என்பதும் அதுதான். ஆனால் அதை நம்பி தனக்கான ஒரு புனைவை எழுத்தாளன் எழுத முடியாது. பிழையற்ற, தெளிவான பொதுமொழி அல்லது சராசரி மொழி கொண்டவர்கள் சராசரிப்படைப்பாளிகள். நல்ல படைப்பாளிக்கு எனஓர் அகமொழி உண்டு. அது அவனுக்குள் ஓடிக்கொண்டே இருப்பது. அதன் வண்ணங்களையே அவன் எழுதமுடியும். அதற்காக சராசரிப் பொதுத்தன்மையை உடைத்துச்சென்றுதான் ஆகவேண்டும். ஆகவே இலக்கணமீறல் இல்லாமல் படைப்புமொழி சாத்தியமே இல்லை. இதை எதுவரைச் செய்வது? முழுச்சராசரி மொழி பெரிய இரும்புச்சட்டகம். முழு அகமொழிக்கு எந்தப் பொருளுமில்லை. இரண்டுக்கும் நடுவே எந்தப்புள்ளியில் நடை அமையவேண்டும்?இது இன்னொரு முரணியக்கம்.
இந்த முரணியக்கங்கள் கொண்ட படைப்பாளியின் உள்ளம் மொழிகளைக் கற்று, ‘மொழித்தேர்ச்சி’ அடையமுடியாது. மொழியினூடாக வேறெங்கோ செல்பவன் அவன். ஆகவே மொழியில் அவனால் நின்றிருக்க முடியாது. வைக்கம் முகமது பஷீருக்கோ புதுமைப்பித்தனுக்கோ இருந்த சிக்கல் இதுதான். எனக்கும்தான்.
என் மனமொழி தமிழ். என்னால் தமிழில் மட்டுமே சிந்திக்கமுடிகிறது, எழுதமுடிகிறது. என் மனமொழியை நான் தீட்டிக்கொண்டே இருக்கிறேன், அளைந்துகொண்டே இருக்கிறேன். அதன்பொருட்டே தினமும் எழுதுகிறேன். ஆகவேதான் என்னால் அகத்தூண்டல் அடைந்ததும் சட்டென்று எழுத முடிகிறது. மொழி இயல்பாக உடன் வருகிறது. சொல்லப்போனால் மொழிதான் முதலில் வரும். அந்த மொழியிலிருந்தே கற்பனைகளும் சிந்தனைகளும் வருகின்றன. ஒரு சொற்றொடர்போதும், ஆயிரம்பக்க நாவலை எழுத ஆரம்பித்துவிடலாம்.
ஆகவே என் தாய்மொழி மலையாளமே எனக்கு அன்னியம்தான். அதில் நிறைய எழுதியிருக்கிறேன். தமிழ் அளவுக்கோ, அதைவிடவோ புகழுடன் இருக்கிறேன். எனக்கான தனி மலையாள மொழிநடை உண்டு. மலையாளத்தின் தனித்த இலக்கிய நடைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் என்னையும் விமர்சகர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த மொழிக்கு நான் என் தமிழாலான அகமொழியைக் கொண்டுசெல்லவேண்டும். பெரும்பாலும் ஒரு தற்செயலாகவே அது நிகழ்கிறது. நிகழ்ந்தபின் நான் எந்த மொழியில் எழுதுகிறேன் என தெரிவதுமில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் எழுதும்போதும் பேசும்போதும் நான் திணறுகிறேன். என் அண்ணாவிடம் பேசவே நாவில் மலையாளம் வரவில்லை. குடும்ப விழாக்களில் அதிகம் பேசாமல் இருந்துவிடுவேன்.
50 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் வாசிக்கிறேன். என்னளவு வாசித்த சிலரையே சந்தித்திருக்கிறேன். மிகப்பழைய மொழிநடை கொண்ட பதினேழாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்துக்களை வாசித்த இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் சந்தித்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை. என் நூல்களிலேயே என் விரிவான வாசிப்பை இன்னொரு நல்ல வாசகர் எளிதாகக் கண்டுகொள்ளலாம். மிகச்சம்பிரதாயமான சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட வேதாந்த நூல்களை வாசிக்கிறேன். ஐரோப்பிய – கிறிஸ்தவ மெய்யியல் சார்ந்தும் வாசிக்கிறேன். அவை என் அறிவுக்காக அல்ல, என் ஆன்மிகப்பயணத்துக்காக. (தமிழிலக்கியவாதிகளில் அவற்றை எவரும் வாசிப்பதாக நான் அறிந்ததில்லை).
முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே பல ஆங்கில இதழ்களில் எழுதியிருக்கிறேன். இண்டியன் எக்ஸ்பிரசில் தொடர் எழுதியிருக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் நடை உருவாகவில்லை- என் மனதின் அடியிலிருப்பது தமிழ்தான். நான் இண்டியன் எக்ஸ்பிரசில் எழுதும் காலத்தில் அசோகமித்திரன் சொன்னார், ஆங்கிலத்தில் மனம் புழங்க தொடங்கினால் தமிழில் என் அசல் நடை இல்லாமலாகிவிடும் என்று. அன்று முதல் ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். ஆங்கிலம் பேசுவதை அறவே தவிர்த்தேன். என் நாவிலிருந்தே ஆங்கிலத்தை அகற்றினேன். இன்றைக்குப் பேசவேண்டியிருக்கிறது. ஆனால் கடினம்தான். தமிழில் இருந்து ஆங்கிலம் எழவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மொழி சிக்கலாகிறது. தமிழின் சொற்றொடரமைப்பை யோசித்து ஆங்கிலமாக ஆக்கவேண்டியிருக்கிறது. எங்காவது தடுக்கிவிட்டால், அதை நானே உணர்ந்துவிட்டால் அவ்வளவுதான்.
இன்னொரு சிக்கலும் உண்டு. என் மனமொழி நாவில் எழும்போது எனக்கே அது அன்னியமாக உள்ளது. ஆகவே தமிழிலும் தங்குதடையில்லாமல் பேசமுடியாது. பேசும்போது சட்டென்று பிழையாக சொல்லோ சொற்றொடரோ வந்து நா தயங்கிவிடுகிறது. இன்றைக்கும் ‘சொல்வல்லார்’ சிலரைக் கண்டால் கொஞ்சம் பொறாமைதான்.
இறுதியாக ஒன்று, நான் குமரிமாவட்டத்தவன். என் வட்டாரமொழி என்னுள் உண்டு. அதற்கான சொற்கள், சொலவடைகள். அவை என் செந்நடையிலும் வந்துகொண்டிருக்கும். மேடைப்பேச்சிலும் அந்த ‘நெடி’ இருக்கும். அதைக் களையவேண்டும் என்றும், சொற்களை நான் சராசரித்தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தவேண்டும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது என் அடையாளம், என் தனிமொழி, என் மனம். அதை நான் மாற்றப்போவதில்லை. இன்று அஜிதன் எழுதுவதில் அப்படி பல குமரிமாவட்ட சொல்லாட்சிகள் இயல்பாக இருப்பதைக் காண்கிறேன். அது உன் அடையாளம், எங்கே எழுதினாலும் என்றுதான் அவனிடம் சொல்வேன்.
தமிழுடன் முழுமையாக இருத்தல் என் பலம் என நான் நினைக்கிறேன். ஆனால் இதை அடுத்த தலைமுறைக்குச் சொல்லமுடியவில்லை. சொல்லியிருக்கிறேன், ஆனால் அவர்களுக்கு இந்த உலகமயச் சூழலில் அது ஒத்துவருமா என்று தெரியவில்லை. அஜிதன் அவன் நாவலை (அல் கிஸா) அவனே ஆங்கிலமொழியாக்கம் செய்து, அந்த மொழியாக்கம் அபாரமாக உள்ளது என்று சொல்லப்பட்ட போது எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். ஆனால் எல்லாமே வேறொன்றாகிவிட்ட காலம். நான் ஒன்றும் சொல்லமுடியாது.
என்னால் ஆங்கிலத்துக்குள் செல்லமுடியவில்லை, செல்லக்கூடாதென்ற எச்சரிக்கையையும் விடமுடியவில்லை. குறிப்பாக ஆங்கில உச்சரிப்புக்கு முயலவே கூடாது என என் இலக்கிய முகவரே சொல்கிறார், அது ஆங்கிலத்தேய்வழக்குகளுக்குக் கொண்டுசெல்லும், என் மூலமொழியை சிதைக்கும் என்றார். ஆங்கில உச்சரிப்புடன் ஓர் இந்தியர் பேசுவது பலசமயம் கேலிக்குரியதாகவும் ஆகிவிடும் என்றார். (ஒரு வெள்ளையர் கொங்கு வழக்கில் பேசுவதுபோல)
ஆனால் இதோ இந்தக் காலையில் எழுந்து ஆங்கிலத்தில் ஒரு அரசியல்கட்டுரையும், மலையாளத்தில் ஓர் இலக்கியக் கட்டுரையும் எழுதிவிட்டு அமர்ந்திருக்கிறேன். அடுத்தவாரம் ஒரு கன்னட இலக்கிய விழாவுக்குச் செல்லவிருக்கிறேன். பெரும்பாலும் கன்னடம் தெரியும். கொஞ்சம் முயன்றால் பேசிவிடலாம். ஆனால் பேசவேண்டுமா என்ற தயக்கம் ஆட்கொண்டிருக்கிறது. பலமொழி தெரிவதென்பது இலக்கியவாதியின் தகுதி அல்ல என்ற எண்ணத்தை உதறவே முடியவில்லை.மொழியில் அல்ல, அதற்கு அப்பால்தான் என்னுடைய உலகம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்லமாட்டேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
