ரமேஷ், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளமை அறிந்து மகிழ்ந்தேன். தமிழில் அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்ற அளவிலேயே வாசிக்கப்பட்டுள்ளார் என நினைக்கிறேன். வெவ்வேறு எழுத்தாளர்கள் அவரைப்பற்றிப் பேசியுள்ளனர். ஆனால் வாசகர்கள் குறைவாகவே அவரை வாசித்துள்ளார்கள். இந்த விருது அவருக்கு மேலும் அதிக வாசகர்களைப் பெற்றுத்தர வழிவகுக்கும் என நினைக்கிறேன்.
வாசகர்கள் இல்லாமல் எழுதும்போது எழுத்தாளர் உண்மையில் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். தானே சிந்தனை செய்தவற்றுக்கும், தானே எழுதியவற்றுக்கும் அவரே எதிர்வினை ஆற்ற ஆரம்பிக்கிறார். அது ஒரு சுழல் போல ஆகிவிடுகிறது. உண்மையில் எழுத்து என்பது ஓர் உரையாடல். வாசகருடன் எழுத்தாளர் உரையாடுகிறார். அந்த வாசகர் ஒரு திரள் அடையாளம்தானே ஒழிய உண்மையில் இருக்கும் ஒருவர் அல்ல. அந்த எதிர்வினைகளில் இருந்தே அவர் மேலே செல்லவேண்டும். அந்த வாசகர் என்பவர் சமூகம் அல்லது சமூகத்தின் அறிவு என்று சொல்லலாம்.அந்த உரையாடல் வழியாக நகரும் எழுத்து தீவிரம் அடைகிறது. ஆனால் பல பெரிய எழுத்தாளர்களுக்கு நீண்டகாலம் கழித்தே அந்த உரையாடல் அமைகிறது. ரமேஷ் அந்த உரையாடலுக்குள் வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஆர். அர்விந்த்
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதனுக்கு அளிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது செய்தி அறிந்து மகிழ்ச்சி. இந்த விருதை ஒட்டி மேலதிக வாசிப்புகள் நிகழும் என நினைக்கிறேன். நான் அவருடைய எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியப் பண்பாடு சிலைகளின் பண்பாடு என்று சொல்லலாம். இத்தனை சிலைகளை நாம் ஏன் உருவாக்கிக் கொள்கிறோம்? இந்த சிலைகளில் ‘சாமுத்ரிகா லட்சணம்’ என்று ஒன்று உண்டு. அது ஓர் ஐடியல். அந்த ஐடியல் உடல்தான் நம் தெய்வங்கள். ஆனால் இங்கே மனிதர்களில் அந்த லட்சணத்துக்கு சாயல் கொண்ட மனித உடல்களே கம்மி. அப்படியென்றால் இங்கே நாம் செய்வது என்ன? நாம் செய்வது உடல்நிராகரிப்பு. ஒரு ஐடியலை முன்வைத்து அத்தனை உடல்களையும் நிராகரிக்கிறோம். பெண் உடலை வர்ணிக்கும் கவிதைகள் எல்லாமே உண்மையில் 90 சதவீதம் பெண்களின் உடல்களை இழிவுசெய்கின்றன இல்லையா? இந்த உடல் ஒடுக்குமுறையை தமிழ்ச்சூழலில் ஆக்ரோஷமாகப்பேசியவர் என்று ரமேஷ் பிரேதனை மட்டும்தான் சொல்லமுடியும். அவ்வகையில் அவர் ஒரு தனிக்குரல். அந்தக்குரலுக்கு ஏற்பு நிகழ்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.
ஸ்டேன் ஜெகந்நாதன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
