செயற்கைநுண்ணறிவு மொழி, மொழிச்செயல்பாடுகள், கனவுகள்

 

சுசித்ரா ராமச்சந்திரன் தமிழ் விக்கி இயந்திர மொழியாக்கம், இனிவரும் சவால்கள்..

‘இந்த செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் மொழியாக்கத்தை ஓர் இயக்கமாக முன்னெடுப்பது முட்டாள்தனம் இல்லையா?’ என்று தெரிந்தவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்பதுண்டு ஒரே பதில்தான். மொழிகள், தனி மொழிகள், அகமொழிகள், நமக்கே ஆன தனிவழிகள் பேணப்பட வேண்டும் என்றால் அதைச் சிலரை என்றும் மூளைப் பழக்கமாகவும் கைப்பழக்கமாகவும் பயின்று தொடர்ந்துவரும் தலைமுறைகளுக்கு கையளிக்க வேண்டும்.

எனக்குள் அந்த தனிமொழிக்கான திறன் உள்ளது. இனறு நல்ல வெகுமானமாக மாறக்கூடிய கணித மூளையும், பகுப்பாய்வுத் திறனும், துறை அனுபவமும் நிறையவே உண்டென்றாலும் அவற்றைவிட என் மொழித்திறன் பலபடிகள் மேலானது ,தனித்துவமானது என்று  நம்புகிறேன் . மேலும் இந்த அறிவியல்சராசரித்தன்மையின் யுகத்தில்மனிதத்தன்மை பேணப்படபோவதூயர்சிந்தனையிலும் தனிமொழி வெளிப்பாட்டிலும்தான் என நம்புகிறேன். ஆகவே வேறு எதிலும் என்னால் மையல் கொள்ள முடியவில்லை.

செயற்கை மொழியின் சூழல் வரப்போகும் எதிர்காலத்தில் இல்லை. நாம் இப்போதே ஒரு சராசரிச் செயற்கை மொழிக்குள்தான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அன்றாட ஆங்கிலம் மட்டுமல்ல, இலக்கியவகை ஆங்கிலம் கூட உலகம் முழுக்க ஒரு தரப்படுத்தப்பட்ட செயற்கைத் தன்மையை அடைந்து விட்டது. ஏனென்றால் உலக ஆங்கிலப் புத்தகச்சந்தை என்பது ஒன்றுதான். அதற்கு ஒரே மொழிதான் தேவை. அந்தச் சந்தைக்கு ஏற்ப தரப்படுத்தப்பட்ட பொதுமொழிக்குள்  சின்னச் சின்ன வேறுபாடுகளை உருவாக்குவதுதான் உண்மையில் இன்று ரசிக்கப்படுகிறது. சிந்தனைக் கட்டுமானமும் ஒன்றுதான். இந்த சராசரித் தன்மையால் சலிப்புக்கு தான் தமிழ் வாசிப்பிற்குள்ளேயே நான் வந்தேன். இங்கு வேறு வகையான கூத்துகள். ஆனால் என் தேடல் கூர்மை அடைந்துள்ளது.

யோசித்துப் பார்த்தால் என்னை மொழியாக்கத்திற்குள் முதன் முதலாக ஈர்த்தது ‘பெரியம்மாவின் சொற்கள்’ என்ற கதை என்பது இப்போது வியப்பாகவோ தற்செயலாகவோ தோன்றவில்லை .இந்த விஷயங்களை குறித்த ஒரு fable போலத்தான் தோன்றுகிறது அந்த கதை. (பெரியம்மாவின் சொற்கள். சர்வதேசப்பரிசு பெற்ற ஆங்கில மொழியாக்கம்)

பெரியம்மா தனக்கான மொழி கொண்டவர். அவரை பொதுமொழிக்குள் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. ஆனால் அதிலிருந்தும் அவர் தனக்கான ஒரு தனிமொழி ஒன்றைத்தான் உருவாக்கிக் கொள்கிறார். Love என்று ஆங்கிலச் சொல்லின் புழங்கு அர்த்தம் அவரை சந்தேகம் கொள்ளச் செய்கிறது .ஆனால் அங்கிருந்து அது bond என்ற இடத்தை அடைகிறார் . You is bond, You is kind என்று கண்டடைகிறார். த்ன் நெஞ்சில் கை வைத்து self என்று சொல்லும்போது பெரியம்மா உணர்வது தான், தன்இடம் என்பதைத்தான்.

பெரியம்மா அந்த கதையில் உணரும் சுயம் அவர்தான். அது அவர் தன் மொழி வழியாக அடைந்த ஒன்று. உலகம் அவரை சுற்றி உடைந்து உருமாறிக் கொண்டிருக்கிறது. அவர் மொழியும் நெம்பி நெகிழ்த்தப்படுகிறது. ஆனால் அதை நேர்மையாக, தன் உண்மை அன்றி வேறொன்றையும் கைக்கொள்ளாமல் சந்திக்கும் இடத்தில் அவர் தனக்கான தனிமொழியை, ‘தன்னிடத்தை’ கண்டடைகிறார் .

இந்த கதையை கதை என்பதை மீறி, என் சொந்த வாழ்க்கைப் பயணத்தோடு இணையும் ஒரு தரிசனமாகவே உணர்கிறேன். இந்த கதைக்கு ஓர் ஆன்மீகம் உள்ளது. அதை எனக்கானதாக, எந்னை அறியாமல் தொட்டு ஏற்றுக் கொண்டிருப்பதை இப்போது உணர்கிறேன். என் செயல்களுக்கு, விழுமியங்களுக்குப் பின்னால் உள்ள ஒரு நம்பிக்கை ஒரு வகையில் இந்த கதையை நான் சந்தித்த இடத்தில் உருவானது.

அதை ‘மொழி’ சார்ந்த இலட்சியவாதம் என்பதை விட தான் தான் சார்ந்த இலட்சியவாதம் என்று இன்று கூற துணிவேன். இது சிக்கலான இடம். இங்கே நான் ‘தான்’ என்பதை பால் ,இன, மத, மொழி சார்ந்த அடையாளத் தன்னிலையைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தவில்லை. இவ்வம்சங்கள் ஒரு தனனிலையை வடிவமைப்பில் பங்கு கொண்டாலும் அதன் வழியாக உருவாகி வரும் சுவையாகிய ‘தான்’ என்பதில் உருவாகிவரும் தெய்வம் இன்னொன்று. இதை என்னால் முழுவதும் வகுத்துரைக்க முடியவில்லை ,ஆனால் உணர்கிறேன் .இனறு என் தேடல் அந்தத் தானே சேர்ந்ததாகவே உள்ளது.

செயற்கை நுண்ணறிவின் மொழிக்கு ‘தான்’ அல்லது ‘தன்னிடம்’ இல்லை. செயற்கை நுண்ணறிவால் மொழியின் சாயலை நகலெடுக்க முடியும். அந்த மொழிச் சூழலுக்கு உள்ளே ஒரு புதிய மொழியை உருவாக்க முடியாது.

இந்த தேடல் பகுதியாக உருவான அமைப்பிற்கு மொழி என்று பெயர் அமைந்ததும் ஆச்சரியமான ஒன்றாக தோன்றவில்லை. மொழி மொழியாக்கத்தை ஊக்குவதற்கான உருவாக்கப்பட்ட ஒரு தளம் என்றும், ஒரு வகையான கொள்கை பரப்பு ஊடகம் என்றும் இலக்கியத்திற்குள்ளேயே பல நண்பர்கள் பேசிக் கேட்டதுண்டு இந்த விஷயங்கள் செயல்பாடு சார்ந்து மட்டுமே நிறுவப்படும் என்று அறிவேன் என்பதனால் நான் அவர்களுடன் வாதித்ததில்லை.

உண்மையில் மொழி அமைப்பில் நாங்கள் உத்தேசிப்ப்து மொழி வழியாக, இலக்கியம் வழியாக, தனக்கான மொழியை தானே கண்டறிந்தவர்களை முன்னிறுத்துவதுதான்.இப்படிப்பட்டவர்கள் இயல்பாகவே தங்களுக்கான அழகியல் சார்ந்த அளவீடுகள் கொண்டுள்ளதை காண்கிறோம். அது எப்படியோ அவளுடைய ஆளுமையை வகுக்கும் அளவிடாகவும் உள்ளது.

கே.சி.நாராயணன்

மொழி இணைய தளத்தில் தற்போது மலையாள விமர்சகர் கே.சி நாராயணனுடன் ஒரு நீண்ட பேட்டி வெளியாகி உள்ளது. கே.சி அவர்களை தன்னிடத்தை (மலையாளத்தில் அது தன்றேடம். தன் இடம், துணிவு, கம்பீரம் ஆகிய பொருட்கள் கொண்ட சொல்) தன் மொழி வழியாகவும் கலை வழியாகவும் அடைந்த ஒருவராகவே இந்த நேர்காணல் வழியாக கண்டடைந்தோம். அவ்வாறே அவரை அறிமுகம் செய்கிறோம்.

‘எனக்கும் இருத்தலியல் சிக்கல் உண்டு ,ஆனால் கலைகளில் அபத்தம் என்பது இல்லை’ என்று கே.சி கூறுமிடத்தில் அவரை எவரென்று கண்டு கொண்டோம். ஊடகவியலாளர், வாசகர், விமர்சகர் கே.சியைத் தாண்டி கதகளி வழியாக செண்டை மேளம் வழியாக நாங்கள் கண்டடைந்த கே.சி எங்களுக்கு மேலும் அணுக்கமானவர்.  அது ஒரு வகையில் ஆழமான வேரை பின்தொடர்ந்து சென்ற பயணம். அந்த அறிதல் கே.சியின் ஆளுமையும் பணியை மேலும் துலக்கம் கொள்ளச் செய்தது.

அழகியமணவாளன்

இதே இதழில் மொழிபெயர்ப்பாளராகிய அழகியமணவாளனுடன் ஒரு பேட்டி இடம்பெற்றுள்ளது. இளம் வயதுக்காரர் என்றாலும் மொழி வழியாகவும், மாற்றுப் பண்பாடு ஒன்றில் ஆழ்ந்ததின் வழியாகவும் தன் இடத்தை கண்டறிந்த ஒருவர் என்பதனாலேயே நாங்கள் அவரை முக்கியமானவராகக் கருதுகிறோம். ‘கலைமனம் கொண்டவன் வேரற்றவனாக இருக்க முடியாது’ என்கிறார் மணவாளன். ஆனால் அந்த வேர் பிறந்த மரபில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை .பிகே பாலகிருஷ்ணன் பின்தொடர்ந்து சென்று மணவாலன் அவருடைய உலகத்தில் தன்னை கண்டறிந்தார் .தனக்கான தன்றேடமான மொழி என்று உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேர்காணல்கள் மூன்று மொழிகளில் மொழியாகி உள்ளன .பிற மொழிகளிலும் வெளியாகும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் ஒரு புதிய தலைமுறை வாசகர் பரப்பை திரட்டி உரையாடுவது எங்கள் நோக்கம் .முழுக்க முழுக்க மனிதமொழிச் செயல்பாடு இது. தனித்துவமான மொழியும் அறிதலும் கொண்ட மனிதர்களை முன்வைப்பது. செயற்கை நுண்ணறிவின் தரப்படுத்தல் மொழிக்கு முற்றிலும் எதிரானது.

இது தமிழ்ச் சூழலில் இருந்து கிளம்பியுள்ள ஓர் இயக்கம். ஆனால் தமிழில் இருந்து ஓரிருவர் தவிர எவரும் இதைக் கவனித்ததாக தெரியவில்லை. ஒரு நாலாந்தர மொழிபெயர்ப்பைப் பற்றிய வாக்குவாதத்தில்தான் அனைவருடைய கவனமும் குவிந்திருக்கிறது. சரிதான், செயல்கள் பொன்னைப் போன்றவை. தங்கள்  மதிப்பை அவை தாங்களேதான் நிறுவ வேண்டும் என்று சமீபத்திய காணொளி நீங்கள் சொன்னதாக நினைவு. அதைத் தலைக்கொள்கிறேன் மகிழ்ச்சி.

சுசித்ரா ராமச்சந்திரன்

மொழி இணைய இதழ் கே.சி.நாராயணன் பேட்டி அழகிய மணவாளன் பேட்டி

அன்புள்ள சுசித்ரா,

நீங்கள் உயிரியலில் முதுமுனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவிலும் சுவிட்சர்லாந்திலும் உலகின் முதன்மை ஆய்வகங்களில் முதுநிலை அறிவியலாளராகப் பணியாற்றிவிட்டு, அறிவியலை உதறிவிட்டு முழுநேர இலக்கியப்பணிக்கு வந்தபோது நான் சிலவற்றை கொஞ்சம் கறாராகவே சொன்னேன் என நினைக்கிறேன். அதையெல்லாம் மீண்டும் சொல்கிறேன். உங்களைப்போல, பிரியம்வதாவைப்போல, நேரடியாகவே ஆங்கிலக் கல்வி கற்று, ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்பை அடைந்து, அதன்பின் சலிப்புற்று , நுணுக்கமான கலாச்சார உட்கூறுகளைத் தேடி தமிழிலக்கியத்திற்கு வரும் புதுத்தலைமுறை வாசகர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். குறிப்பாக அமெரிக்காவில். (ஆச்சரியமாக மிகச்சிலர் தவிர அனைவருமே பெண்கள்). அவர்கள் அனைவருக்குமாக நான் சொல்வன இவை.

தமிழிலக்கியம் சிற்றிதழ் சார்ந்தே நீண்டகாலமாகச் செயல்பட்டது, அதற்கான சரித்திரக்காரணங்கள் பல உண்டு. புறக்கணிக்கப்பட்டு, வாசகர்களே இல்லாமல் இது இயங்கியது. ஓர் எழுத்தாளருக்கு இன்னொரு எழுத்தாளரே வாசகர். ஆகவே இங்க நட்புக்குழுக்கள், பகைக்குழுக்கள் மிக அதிகம். ஆனால் வாசகர்கள் இலக்கியத்திற்கு எப்போதுமே கட்டாயம் இல்லை. வாசகர்கள் இல்லை என்றால் எழுத்தாளன் தன் கனவுக்கும் தேடலுக்கும் மட்டுமே தன்னை முழுதளிக்கவும்கூடும். ஆகவே இதற்குள் சில மகத்தான இலக்கியங்கள் உருவாயின. அந்த இலக்கியச் சாதனைகளுக்காகவே ஒரு புதிய தமிழ்க்குழந்தை தமிழிலக்கியத்தை வாசிக்கவேண்டும். உங்களைப்போன்றவர்களால் அது உலகவாசகர்களை நோக்கிக் கொண்டுசெல்லப்படவும் வேண்டும்.

ஆனால் அதேசமயம் இச்சூழலுக்குள் இரண்டு எதிர்மறை அம்சங்களும் உண்டு. ஒன்று வம்பு. இது ஒரு சிறுகுழு ஆனதனால் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்திற்குள் உள்ள ஓயாத வம்புச்சண்டை இங்குண்டு. வம்பின் பொருட்டு மட்டுமே உள்ளே வந்து, எதையுமே படிக்காமல் உள்ளேயே உழல்பவர்கள் பலர் உண்டு. சலிக்காமல் வம்புகளை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். பெரிய இலக்கியச் சூழலுக்குள் இவர்களின் இடம் பொருட்படுத்தப்படாது, ஆனால் இங்கே தொடர்ச்சியாக இருந்துகொண்டிருந்தால்போதும் இவர்களுக்கும் இடம் உருவாகிவிடும். மிக அற்பமான, அபத்தமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே இருந்தால்கூட, விடாப்பிடியாக இருந்தால் ஒரு பத்தாண்டுகளில் இலக்கியவிமர்சகர், இலக்கியச் செயல்பாட்டாளர் என்றெல்லாம்கூட அடையாளம் வந்துவிடும்.

இங்கே இலக்கிய விவாதங்களில் எவருக்கும் சொந்தத் தரப்பு பெரும்பாலும் இருப்பதில்லை. ‘என் கருத்து வேறு’ என்பார்கள். சரி அதைச் சொல்லு என்றால் பம்மிவிடுவார்கள். எந்த நூலைப்பற்றியும் எதுவுமே எழுதப்பட்டிருக்காது. மூத்த எழுத்தாளர்கள் பற்றிக்கூட ஒரு சில நல்ல கட்டுரைகளைக் காணமுடியாது.ஏன், ஓயாது சினிமா பார்ப்பார்கள், ஆனால்  நல்ல சினிமா பற்றிக்கூட இங்கே ஓரிரு வரிகளுக்குமேல் எதுவுமே வாசிக்கக் கிடைக்காது. இங்கே தனிநபர் சார்ந்த பற்றும் காழ்ப்பும் மட்டுமே அணிசேரலுக்கும் அடிப்படை. வம்புகள் அதைச் சார்ந்தே. என்னை வெவ்வேறு காரணங்களுக்காக பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் அது பிழை, எனக்கு எதிராக எவர் என்ன சொன்னாலும் அதெல்லாம் சரி. அவ்வளவுதான் இவர்களின் அறிவுத்தளம்.

இரண்டாவது விஷயம், பாவனைகள். மிகக்குறைவாக படித்த ஒருவர் பெரும்படிப்பாளி போல இச்சூழலுக்குள் பாவனைகாட்டி இருபது முப்பது ஆண்டுகளை ஒட்டிவிடமுடியும். பிறரை மட்டம்தட்டும் பாவனை உட்பட அதற்கான தோரணைகளைக் காட்டிக்கொண்டாலே போதும். இங்கே ஒரு  பழைய சிற்றிதழுடன் சம்பந்தப்பட்டிருந்ததனால், ஓரு மூத்த எழுத்தாளரை அடிக்கடிச் சந்தித்ததனால் மட்டுமே ஒருவர் மூத்த இலக்கியவாதியாக திகழமுடியும். இங்கே எந்த நூலைப்பற்றியும் பெரிதாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. ஆனால் நூல்களின் பெயர்கள் மட்டும் புழங்கிக்கொண்டே இருக்கும். அத்துடன் மொழிபெயர்ப்பு என்றபேரில் நிகழும் கூத்துகள். அந்த அபத்தமான மொழிநடையை நகலெடுத்து எழுதப்படும் அசட்டுப்படைப்புகள். அதற்கும் ஒரு நாலுபேரை இந்த சின்ன வட்டத்திற்குள் திரட்டிவிடமுடியும்.

இங்கே எதையுமே படிக்காமல் அங்கே இங்கே தட்டிச்சேர்த்து கட்டுரைகளை எழுதி நூல்களை வெளியிட்டு அறிஞராக இங்கே திகழமுடியும். அப்படி பலபேர் உண்டு. (எப்போதாவது மொழியாக்கம் செய்தால்தான் மாட்டிக்கொள்வார்கள், மொழியே தெரியவில்லை என்று வெளிப்பட்டுவிடும்). இதை அமெரிக்கச் சூழலில் செய்யமுடியாது. அங்கே FSG போன்ற பிரசுரநிறுவனங்கள், அதன் நிபுணர்கள் உண்டு. அவர்கள் வடிகட்டிவிடுவார்கள். இந்தக்கூட்டம் அங்குமிருக்கும், ஆனால் வெளியே தெரியாது.

இங்கே இலக்கியம் வாசிக்கவரும் 30 வயதுக்குக் குறைவானவர்கள் இங்குள்ள இந்த பாவனைகளைக் கண்டு முதலில் அரண்டுபோவதும், ஓரிரு ஆண்டுகளில் சலிப்புற்று எரிச்சலுடன் பேச ஆரம்பிப்பதையும் காண்கிறேன். சக சிற்றிதழாளர்களிடம் பாவலா காட்டுவதற்காக படிப்பாளி வேடமிடுபவர்கள் இந்த இளைய தலைமுறைக்கு முன் கோமாளிகள் ஆகிறார்கள், ஆனால் அவர்களுக்கு அது தெரிவதே இல்லை.

இந்த வம்புகள், பாவலாக்களை ஒரு சிறு குழுவாக இலக்கியம் இயங்கியமையின் எதிர்விளைவுகளாகவே காணவேண்டும். இவற்றை முழுக்க உதாசீனம் செய்து உண்மையான படைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை மட்டுமே தமிழிலக்கியம் என பொருட்படுத்தி வாசிப்பதே செய்யக்கூடுவது. அது ஏற்கனவே உலக இலக்கியத்தின் படைப்புகளை வாசித்து விட்டு இங்கே வருபவர்களுக்கு ஒன்றும் கடினமாக இருக்கப்போவதில்லை.

ஆகவே இந்த வம்பாளர்கள் உங்கள் அரியமுயற்சிகளை அடையாளம் காணவில்லை என்பதை ஒரு பொருட்டாக நினைக்கவேண்டியதில்லை. அவர்கள் அல்ல தமிழிலக்கியம், அது வேறு. அதன் வாசகர்களும் வேறு.அந்த வாசகர்களையும் மிக எளிதாக அடையாளம் காணமுடியும். அவர்களிடமே நீங்கள் பேசுகிறீர்கள் என எண்ணிக்கொண்டால் போதுமானது.

செயல் குறித்த கனவுகள் எப்போதுமே சற்று அவநம்பிக்கையுடன் மட்டுமே பார்க்கப்படும். அது மானுட இயல்பு. செயலின் வெற்றி ஒன்றே அதற்கான பதில். அதிலும் பெண்கள் தொடங்கும் ஓர் இயக்கத்தை தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலை இன்னும் ஒரு படி கூடுதலான அவநம்பிக்கையுடன், உதாசீனத்துடன் மட்டுமே எதிர்கொள்ளும்.

மொழி அமைப்பின் தொடர்செயல்பாடுகளால் இன்று தமிழிலக்கியத்திற்கு இந்திய அளவில் ஒரு கவனம் வந்துள்ளது. நேற்றுவரை இங்கே நவீன இலக்கியம் என ஒன்று உண்டு என்பதே இந்திய இலக்கியச் சூழலில் ஏற்கப்படாத ஒன்றாக இருந்தது. உங்களைப்போன்ற இளைய தலைமுறையினரின் பணிகள் அதை மாற்றத்தொடங்கியுள்ளன. அப்பணிகளை தென்னிந்தியாவை உள்ளடக்கி முன்னெடுப்பது மேலும் வீச்சு கூட்டும் என நினைக்கிறேன்.

இந்திய ஆங்கில இலக்கியச் சூழலில் இன்று இதழாளர்களே விமர்சகர்கள் என அறியப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த, சமூகவியல் சார்ந்த எளிய உள்ளடக்கப்பார்வையையே கொண்டிருக்கிறார்கள். அல்லது வெறுமே மேலை அழகியயல் கோட்பாடுகளை எழுதும் பேராசிரியர்கள். இச்சூழலில் முதன்மையான அழகியல் விமர்சகர்களின் அசலான குரலை முன்வைத்து ஒரு அடிப்படையான உரையாடலை உருவாக்க முன் வந்திருக்கிறீர்கள். எந்தச் செயலும் அதன் தீவிரத்தால், தொடர்ச்சியால் மட்டுமே வெற்றிநோக்கிச் செல்கிறது. வாழ்த்துக்கள்.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.