ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதை அறிந்த பிறகுதான் அவரைப்பற்றி தேடிப் படித்துப் பார்த்தேன். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அவருடைய குடும்பம் பற்றிய கருத்துக்கள் எல்லாம் அறிந்தேன். அவர் தன்பால் புணர்ச்சி பழக்கம் கொண்டிருந்தார் என்று அவரே எழுதியுள்ளார். அவர் அதை அறிவித்துள்ளார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
(இஸ்லாமிய வழக்கப்படி அது மிகப்பெரிய பாவம். ப்ரேம் இப்போது மனம்திரும்பி அந்தப் பாவத்தை ஏக இறைவன் முன் அறிக்கையிட்டு மன்னிப்பு கோரி இஸ்லாமியராக ஆகியுள்ளார். அந்த வாழ்க்கையை அவர் நிராகரித்துப் பேசிவருகிறார். இஸ்லாமிய நெறிகளின்படி வாழ்கிறார்)
எஸ். ஷாகுல் ஹமீது
அன்புள்ள ஷாகுல்,
நான் தனிப்பட்ட வாழ்க்கைச்செய்திகளை தேடித்தேடி பின்தொடர்வதில்லை. நீங்கள் பிரேம் பற்றிச் சொன்னவை எனக்குப் புதியவை, ஆனால் எனக்கு அதில் அக்கறையில்லை.
நான் எனக்கான ஒழுக்கம், அறம் சார்ந்த புரிதல்கள் கொண்டவன். ஆனால் திரும்பத் திரும்ப நான் சொல்வது ஒன்றுண்டு. இன்னொருவரை ஒருபோதும் நான் ஒழுக்கம் சார்ந்து மதிப்பிடுவதில்லை, தீர்ப்பு சொல்வதில்லை. அவர்களின் அறிவுப்பங்களிப்பும் அகமுன்னேற்றமும் மட்டுமே என் அளவுகோல். இதை பலமுறை எழுதியுள்ளேன். தாங்கள் பரந்தமனம் கொண்டவர்கள், முற்போக்கானவர்கள் என நம்பும் பலரும் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்ததும் தராசும் வாளுமாக இன்னொருவரை தண்டிக்க வருவதை கோணங்கி பற்றிய விவாதத்தின்போதுகூட கண்டேன். அப்போதும் என் நிலைபாடு ஒன்றே.
ரமேஷ் – பிரேம் இருவரும் எனக்கு அறிமுகமானது 1989 ல். 1997 முதல் அவர்கள் என் குடும்ப நண்பர்கள். பத்மநாபபுரத்திலும் பார்வதிபுரத்திலும் என் வீட்டுக்கு வந்து பலநாட்கள் அவர்கள் தங்கியதுண்டு. எப்போதும் ரமேஷை நான் முக்கியமான படைப்பாளுமையாகவே எண்ணி வந்துள்ளேன். அவருடைய தனிவாழ்க்கை, அதைச்சார்ந்த கொள்கைகளை நான் விவாதித்ததில்லை. அவை அவர் படைப்புகளில் எப்படி கலையாக ஆகின்றன என்பது மட்டுமே எனக்கு முக்கியம். அந்த உருமாற்றத்தின் மாயத்தை மட்டுமே கவனிக்கிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
