வேதாந்தம் என்னும் மழை
வேதாந்தம் பிரம்ம தத்துவத்தினூடாக இந்த பெருநிலத்திலிருந்த பல்லாயிரம் தெய்வவழிபாடுகளை ஒன்றாகக் கோர்த்தது. பிறிதொரு கட்டுரையில் ஒரு பொற்பட்டு நூல் என்று வேதாந்தத்தை நான் வரையறுக்கிறேன். அவ்வாறு கோர்ப்பதனூடாக ஒவ்வொரு தரிசனத்திற்கும் ,தத்துவ மரபிற்கும், வழிபாட்டு மரபுகளுக்கும் இருந்த முரண்பாடுகளை அது களைந்தது. மோதல்களை அறிவார்ந்த தளத்திற்கு எடுத்துச்சென்று வழிபாட்டுத்தளத்தில் ஒருமையை உருவாக்கியது. அந்த மாபெரும் ஒருமைப்பணியினூடாக உருவாகி வந்ததே இந்துமதம். பிறிதொரு விரிந்த நோக்கில் இந்தியப் பண்பாடு என்றும் நாம் சொல்வது இந்த மாபெரும் கட்டமைப்பையே. அது அடிப்படையில் வேதாந்தத்தின் கொடை.
இந்து மதத்தின் உள்முரண்பாடுகள் அல்லது உள்விவாதங்கள் உருவாக்கும் நுட்பமான தத்துவ மாறுபாடுகளை வேதாந்தம் எனும் ஒற்றைத் தரிசனத்தை முன்வைப்பதனூடாக நான் மறுதலித்து விடுகிறேன் என்ற ஒரு குற்றச்சாட்டு ஒவ்வொரு முறை வேதாந்தத்தைப் பற்றி நான் சொல்லும்போதும் உருவாகி வருவதுண்டு. தனிப்பட்ட முறையில் எந்தவகையான ஒற்றைப் படைத்தன்மைக்கும் நான் எதிரானவனாகவே இருந்து வருகிறேன். ஆகவே வேதாந்தத்தை ஒருபோதும் ஒற்றைமையமாக முன்வைக்க மாட்டேன். வேதாந்தத்தை முழுமையாக மறுக்கும் சாங்கிய, யோக, நியாய, வைசேஷிக மரபுகளை இணையான முக்கியத்துவத்துடன் முன்வைக்கிறேன்.
ஒற்றைப்படைத்தன்மை என்பது படைப்பூக்கத்திற்கும் ,மானுட ஞானத்தின் தன்னியல்பான விரிவிற்கும் எதிரானது என்பது என்னுடைய கருத்து. மானுட ஞானம் என்பது ஒரு மரம் கிளைவிட்டு பிரிவது போல, இலைகளாக செழிப்பது போல வளரும் தன்மை கொண்டது. அதை ஒற்றைக் கல்தூணாக மாற்றும் எச்செயல்பாட்டுக்கும் எதிரானவனாகவே இருந்து வருகிறேன். ஆகவே நான் ஒருபோதும் அனைத்தும் வேதாந்தமே என்று சென்று முடிக்க விரும்புவதில்லை. ஒவ்வொன்றையும் இணைப்பதில் வேதாந்தத்திற்கு இருக்கும் பெரும் பங்களிப்பை மட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன். வேதாந்தம் உருவாக்கும் ஒத்திசைவையே முன்வைக்க விரும்புகிறேன்.
வேதாந்தம் அனைத்தையும் மறுத்து தன்னை நிறுத்தும் ஒரு தரிசனம் அல்ல என்பதுதான் என் பார்வையின் அடிப்படை. அனைத்தையும் மழுங்கடித்து, தனித்தன்மைகளை மறைத்து, அது அந்த இணைப்பை நிகழ்த்துவது இல்லை. மாறாக ஒவ்வொரு தனித்தன்மையையும் அடையாளம் கண்டுகொண்டு அதை வளர்த்தெடுக்கவே அது முயல்கிறது. விளைவாக வேதாந்தம் ஒவ்வொரு வழிபாட்டு முறைக்குள்ளும் தன்னுடைய ஒரு புதிய வடிவை சாத்தியமாக்கிக் கொள்கிறது. வைணவம் எனும் வழிபாட்டு முறைக்குள் வேதாந்தம் ஊடுருவியதன் விளைவே விசிஷ்டாத்வைதம். அதேபோல சைவம் எனும் தொன்மையான வழிபாட்டு முறைக்குள் வேதாந்தத்தின் ஊருடுவலே சைவ சித்தாந்தம்.
அங்கு சைவத்தின் எந்த தனித்தன்மையையும் வேதாந்தம் அழிக்கவில்லை. மாறாக சிவன் எனும் உருவத்திற்கு மேலும் பேருருவம் கொண்ட பிரபஞ்ச வடிவம் ஒன்றை அளிக்கிறது அது. அருவமான சிவம் என்ற ஒன்றை சிவன் எனும் வழிபாட்டுத் தெய்வத்திலிருந்து உருவாக்கி அளிக்கிறது. பசு, பதி, பாசம் எனும் மும்மையை அது உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது. அதனூடாக வேதாந்தத்தைச் சார்ந்து நிலை நிற்கவேண்டிய தேவை கூட இல்லாத தனித்த ஒரு முழுமையான சிந்தனைமுறையாக சைவ சித்தாந்தம் உருத்தெளிந்து வருவதற்கும் வேதாந்தமே வழிவகுக்கிறது.
உலக மெய்ஞானத்தில் பௌத்தமும் வேதாந்தமும் மட்டுமே இவ்வாறு தொட்டவை அனைத்தையும் வளர்க்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பார்த்தால் தரிசனத்திற்கு இரண்டு முகங்கள் உண்டு. நெருப்பின் முகம், நீரின் முகம். தொட்ட அனைத்தையும் எரித்தழித்து தான் மட்டுமே நிற்பது தீயின் குணம். தொட்ட அனைத்துக்குமே உயிரூட்டி வளர்த்து அனைத்திற்குள்ளும் ரசமாகி நிற்பது நீரின் குணம். எரித்தழித்து நின்றிருக்கும் தரிசனங்கள் பல உண்டு. மார்க்ஸியமேகூட அவ்வாறான ஒன்றுதான். மாறாக, வேதாந்தமும் யோகாசார பௌத்தமும் நீரின் தன்மை கொண்டவை. அவற்றை விருஷ்டி (மழை) என்று நான் சொல்வேன். விருத்தி என்பதன் இன்னொரு வடிவம் விருஷ்டி. வளர்ப்பவள், வாழச்செய்பவள், அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்யும் அருள்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
