ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
சில ஆண்டுகளுக்கு முன்பு விமலாதித்த மாமல்லன் ரமேஷ் பிரேதனுக்கு நிதிச்சேகரிப்பு ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த நிதியெல்லாம் பிரேமா என்பவருக்குச் செல்கிறது என்றும் பிரேமாவுடன் ரமேஷுக்கு தொடர்பு உள்ளது என்றுமெல்லாம் விரிவாக எழுதி, ரமேஷை சாக்கடை என்றெல்லாம் வசைபாடினார். அந்தக் கட்டுரைகள்தான் இப்போது நாம் தேடும்போது உடனடியாகக் கிடைக்கின்றன. (வசைகளை எழுதி அவற்றை பிரபலப்படுத்துவதில் மாமல்லன் ஒரு நிபுணர். அவருடைய ஒரே இலக்கியப்பங்களிப்பும் அதுதான் என நினைக்கிறேன்). நீங்கள் ரமேஷுக்கு அளித்த பணமும் அப்படி வீணடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். நான் இந்த விஷயத்தில் உங்களுடைய எதிர்வினையை அறிய விரும்புகிறேன்.
ராம.சங்கரநாராயணன்
அன்புள்ள சங்கரநாராயணன்,
ரமேஷ் பிரேதனுக்கு விருது அறிவிக்கப்பட்டபின் எந்த அளவுக்கு வாழ்த்துக்கடிதங்கள் வந்தனவோ அதைவிட கூடுதலாகவே வம்புவிசாரிப்புகளும் வந்தன. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. அவர் இங்கே உத்தேசித்ததே நம் சமூகமனதிலும், ஒழுக்கவியலிலும் ஒரு நிலைகுலைவைத்தான். அந்த நிலைகுலைவு அவருடைய படைப்புகளுக்குள் செல்வதற்கான ஓர் அழைப்பு, அவரை புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கம். ஆகவே அது நல்லதுதான்.
பொதுவாக இன்னொருவர் வாழ்வை விசாரிப்பது அநாகரீகம். ஓர் உதவியை நிபந்தனையுடன் செய்வது அராஜகம். இன்னொருவர் வாழ்வின்மேல் நிபந்தனை விதிக்க எவருக்கும் உரிமையில்லை.
ரமேஷ் அவர்களுக்கும் பிரேமா அவர்களுக்குமான நட்பு பற்றி நான் நேரில் அவரிடம் கேட்டு அறிந்தேன். அவர் ரமேஷின் பள்ளித் தோழி. அவர் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக ஆனபின்னர்தான் பிரேமா ரமேஷை மீண்டும் சந்திக்கிறார். பத்தாண்டுகளாக ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ரமேஷை வந்து பார்த்து, உடல்தூய்மை செய்து, அறையைச் சீரமைத்து கவனித்துக்கொள்கிறார். ரமேஷ் எடைமிக்கவர். அப்பணிவிடைகளை செய்வது எளிதல்ல.
நமக்கே தெரியும், இன்று குடும்பங்களில்கூட நோயுற்றவர்களை நீண்டகாலம் இப்படி எவரும் கவனித்துக்கொள்வதில்லை. இன்னொருவருக்கு எவரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. பல லட்சரூபாய் ஊதியமாக அளித்தால்கூட இதற்கு இன்று ஆள் கிடைப்பது அரிதினும் அரிது. மனிதர்களுக்கிடையே மிகமிக அரிதாக உருவாகும் நட்பு இது. முன்பு நகுலனுக்கு மட்டுமே அத்தகைய ஒரு தூய நட்பு அமைந்தது. அதை மிக எளிதாகக் கொச்சைப்படுத்தும் மலின உள்ளங்களை நவீன இலக்கிய வம்புச்சூழல் உருவாக்கியுள்ளது.
பிரேமாவுக்கு தமிழிலக்கிய உலகம் கடன்பட்டிருக்கிறது. நகுலனை கவனித்துக்கொண்ட பிறுத்தா அம்மையாருக்குக் கடன்பட்டிருப்பதுபோல. விஷ்ணுபுரம் விழாவில் அவரையும் மேடையேற்றி ஒரு மலர்ச்செண்டு அளிக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். மகத்தானவை சில இங்கே நிகழும் என்பதை நமக்கு நாமே உறுதிசெய்து கொள்வதற்காகவும்தான்.
ஜெ
பாண்டிச்சேரியில்… ரமேஷ் ஒரு கடிதம்உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
