இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி.

மலையாள எழுத்தாளர் பி கே பாலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் சொன்ன வரி சட்டென்று இந்த பின்னிரவில் நினைவுக்கு வந்தது. ஒரு படைப்பை படித்து முடித்த கணம் அந்த மேஜை எப்படி இருக்கிறது என்பது எப்படியோ அந்த படைப்பு உருவாக்கும் மனநிலையுடன் சம்பந்தப்பட்டது. சல்மான் ருஷ்தியின் Victory City நாவலைப் படித்து முடித்தவுடன் என்னுடைய மேஜையை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அருண்மொழி ஊரில் இல்லை. அவள் வீட்டில் இல்லாத போது வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் மேஜை இருக்கிறது. அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு திறந்த குப்பைக் கூடை. அதன் நடுவே இந்தப் புத்தகம். மிக அழகாக தயாரிக்கப்பட்ட புத்தகம் பற்றி எனக்கு சாதகமாக ஏதேனும் சொல்வதற்கு இருக்கிறது என்றால் முதன்மையாக அது இது மட்டும்தான்.

இந்த நாவலை இப்படி சொல்லலாம், நான் இத்தாலிக்கு அல்லது ஸ்பெயினுக்குச் அங்கிருக்கும் பண்பாட்டை பற்றி அங்கு இருக்கும் நூல்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து சில செய்திகளை மேலோட்டமாகத் திரட்டி கொண்டு, அந்தத் தரவுகளைக் கொண்டு என்னுடைய இந்திய மனநிலையை ஒட்டி, என் இந்திய பொதுச்சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவ்லை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த நாவல். இந்நாவலில் முற்றிலும் விடுபடுவது என்னவென்றால் ‘இந்தியத் தன்மை’ அல்லது ‘அசல் தன்மை’. இந்நாவல் இந்தியாவின் வரலாறு பற்றி, அல்லது இந்தியப்பண்பாடு பற்றி எந்த நுண்பார்வையையும் கொண்டிருக்கவில்லை. இந்தியக்களத்தை முன்வைத்து மானுடம் சார்ந்த எந்த அடிப்படைக் கேள்வியையும் எழுப்பிக்கொள்ளவில்லை. ஆகவே இது ஓர் எளிய புனைவு விளையாட்டாகவே எஞ்சுகிறது. காலாவதியாகிப்போன ஒரு விளையாட்டு.

சல்மான் ருஷ்டியின் இந்த நாவல் விஜயநகரப் பேரரசின் எழுச்சி- வீழ்ச்சியை குறித்த ஏதோ ஒரு சாதாரணமான புத்தகத்தை மட்டுமே சார்ந்து எழுதப்பட்டது. ஆகவே மிகமேலோட்டமான சில வரலாற்று நிகழ்வுகளை வேறொருவகையில் இது நகலெடுக்கிறது. அதன் கற்பனை என்பது லத்தீன் அமெரிக்கா மாய யதார்த்தவாதப் புனைவுகளைப் போலி செய்து அடையப்பட்டது. ருஷ்தியின் ஆங்கில விளையாட்டுத் தன்மை இந்த நூலின் நடையை சுவாரசியமாக வாசிக்கச் செய்கிறது. வீட்டில் எவருமில்லாததனால் இரண்டு நாட்களில் படித்து முடித்த நாவல் இது. இந்த ‘படிக்கவைக்கும் தன்மை’ என்பது தான் இந்நாவலின் ஒரே தனிச்சிறப்பு என்று நினைக்கிறேன். மிக விரைவான வாசிப்பு அனுபவத்தைத் தருவது ருஷ்தியின் இயல்பான ஒழுக்கு கொண்ட மொழிவிளையாட்டு.

The first circle of hell was right there in the council chamber, where Bukka Raya I was plunged in to the inferno of impossible choices – to support his wife and outlaw his children, or to protect the little princes and alienate Pampa Kampana ,may be permanently- while all around him were the members of the council, looking his direction trying to decide which way they would jumb after he had made his unhappy leap. 

(இந்த வகையான் சொற்சுழற்சி ஆங்கிலத்தை அழகாக ஆக்குவது. இங்கே எவரேனும் இதை தமிழாக்கம் செய்கிறேன் என்று ஆரம்பித்து, இந்த மூலச் சொற்றொடர் அமைப்பை தமிழுக்கு அப்படியே மாற்ற தொடங்கினால் இது புதிர்ப்பாதை விளையாட்டாக மாறிவிடும். ஏனென்றால் தமிழின் எழுவாய் பயனிலை அமைப்பும் கூட்டுச்சொற்றொடர் அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்து முற்றாக வேறுபட்டவை. இந்தப் புரிதலற்றவர்கள் ஆங்கிலத்தில் எளிமையாக உள்ள கூட்டுச்சொற்றொடர்களே அப்படியே ‘தமிழ்ப்பெயர்த்து’ வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் படிக்கும் பழக்கம் இல்லாத உள்ளூர் எளிய வாசகர்கள் அந்த சொற்றொடர்ச் சிக்கல்தான் உயர் இலக்கியம் போலிருக்கிறது என்று பரவசம் அடைந்து, அதேபோல தமிழில் சொற்குதறல்களாகவே எழுதும் அபத்தம் இங்கே ஓர் இலக்கிய வகைமையாகவே ஆகியுள்ளது.

அவர்கள் இவ்வாறு இதை ‘தமிழில்’ வாசிக்கலாம். ‘நரகத்தின் முதல் வட்டம் கவுன்சில் அறையில் இருந்தது, அங்கு புக்க ராயன் I சாத்தியமற்ற தேர்வுகளின் நரகத்தில் மூழ்கடிக்கப்பட்டார் – அவரது மனைவியை ஆதரிப்பது மற்றும் அவரது குழந்தைகளை சட்டவிரோதமாக்குவது, அல்லது சிறிய இளவரசர்களைப் பாதுகாப்பது மற்றும் பம்பா கம்பனாவை நிரந்தரமாக அந்நியப்படுத்துவது – அவரைச் சுற்றிலும் கவுன்சில் உறுப்பினர்கள் அவரது திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர், அவர் தனது மகிழ்ச்சியற்ற பாய்ச்சலைச் செய்த பிறகு அவர்கள் எந்த வழியில் குதிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முயன்றனர்.’ (கூகிள்).உண்மையில் தமிழில் வெளிவந்துள்ள பல மொழியாக்கங்களை விட இந்த கூகிளாக்கம் பல மடங்கு மேல்.

*

சல்மான் ருஷ்டியின் இந்த நூலில் உள்ள மாய யதார்த்தவாதத்தன்மைதான் இந்த நூலுக்கு எந்த வகையிலும் அசல் தன்மையை அளிக்காமல் இதை ஓர் எரிச்சல் ஊட்டும் அனுபவமாக ஆக்குகிறது. மாய யதார்த்த வாதம் என்பது ஒரு குறிப்பிட்ட அழகியல்முறை. அது லத்தீன் அமெரிக்காவுக்குச் சொந்தமானது. அதற்கு அவர்களுக்கு என சில பண்பாட்டு வேர்கள் உள்ளன.ஒன்று, அங்கே உள்ள பழங்குடிக்கதைகள், மற்றும் நம்பிக்கைகள். ஏற்கனவே ஃபாக்னர் போன்றவர்கள் அதையொட்டிய நுணுக்கமான புனைவுகளை எழுதிவிட்டனர். இப்போது வாசிக்கையில் அமெரிக்க யதார்த்தத்தை கறாரான மொழியில் எழுதிய ஜாக் லண்டனிலேயே லத்தீன் அமெரிக்க எழுத்தின் தொடக்கங்களைக் காணமுடிகிறது.

இரண்டு ஐரோப்பிய மாலுமிக்கதைகள். ஐரோப்பியக் கடலோடிகளின் நவீனத்தொன்மங்களுக்கு ஐரோப்பிய இலக்கியத்தில் ஒரு நீண்ட வரலாறு உண்டு. முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பியர்கள் உலகம் எங்கும் கடற்பயணம் செய்து வருகிறார்கள். அவர்கள் சென்ற கீழைநாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நிலஙகளை பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு மிகக் குறைவானது. அந்த நாடுகளின் அனுபவங்களை அவர்கள் தங்கள் ஐரோப்பிய உள்ளத்தைக் கொண்டு ‘புரிந்து கொள்ள’ முயன்றபோது  உருவான மாயங்கள் அவை.ஐரோப்பாவில் ஒரு காலகட்டத்தில் மாலுமிக் கதைகள் பல வகையான புனைவுகளாக பெரும் புகழ் பெற்றிருந்தன. சாகசக் கதைகள், சிறுவர் கதைகள் அவ்வரிசையில் வரும். அதன் தொடக்கங்களை கலிவரின் பயணங்களிலோ, ராபின்ஸ் குரூஸோவின் சாகசங்களிலோ ,டிரஷர் ஐலேண்ட் போன்ற சாகசங்களிலோ தேடிச் செல்லமுடியும்தான்.

மேற்குறிப்பிட்ட இரு சரடுசுளும் நவீன எழுத்தின் கூறுமுறையால் மறுஆக்கம் செய்யப்பட்டபோது உருவான ஒரு நவீன இலக்கிய வடிவம் என்று மாய யதார்த்தவாதத்தைச் சொல்லலாம். அதன் வகைமாதிரிகள் வெவ்வேறானவை. கார்லோஸ் புயன்டஸ், போர்ஹெ போன்ற சிலர் தவிர பொதுவாக பெரும்பாலான லத்தின அமெரிக்கப் படைப்பாளிகள் ஒரு பொது வாசிப்புக்குரிய படைப்பு அளவுக்கே சரளமான வாசிப்புத் தன்மை கொண்ட படைப்புகளையே எழுதி இருக்கிறார்கள். அவர்களில நோபல் பரிசு பெற்ற லோசா போன்றவர்களை எந்த வகையிலும் இலக்கியத்தரமானவர்கள் என்று என்னால்  சொல்ல முடிந்ததில்லை. யுவான் ருல்போவின் பெட்ரோ பரோமா போன்ற சில படைப்புகள் அவற்றின் கவித்துவத்தால் காலம கடந்து செவ்வியல் ஆக்கங்களாக நிலை கொள்கின்றன.

லத்தீன் அமெரிக்க யதார்த்தம் என்பது இந்த மாய யதார்த்தத்தால் மட்டுமே சொல்லத் தக்க சில அக உண்மைகள் கொண்டது. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் ஐந்து புரட்சிகள் நடக்கும் என்றால் அதை யதார்த்தவாதத்தால் விளக்கமுடியுமா என்ன?  லத்தின அமெரிக்காவின் மாய யதார்த்த கதைகள் அனைத்துமே அங்குள்ள மெய்யான அரசியல் சூழலை, அதனுள் உறைந்திருக்கும் அபத்தத்தை நோக்கித் திறப்பவை. அவற்றின் கலையமைதி  அந்த மெய்நோக்கிய பயணத்தால்தான் உருவாகிறது. நாங்கள் நடத்திய சொல் புதிது இதழில் கப்ரியேல் கர்ஸியா மார்க்விஸின் உறைபனியின் உனது குருதியின் தாரை என்னும் கதையை செங்கதிர் (பின்னர் ராஜஸ்தான் ஐபிஎஸ் அதிகாரியானார்) மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருந்தார். மார்க்யூஸின் மொழிவிளையாட்டையே தமிழிலும் ரசிக்கும்படிச் செய்திருந்தார்.அந்தக் கதையை ஒரு மகத்தான காதல் தோல்விக் கவிதையாக வாசிக்க முடியும். சிண்ட்ரெல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, பியூட்டி ஆன்ட் பீஸ்ட் என  பல தொன்மங்கள் முயங்கிய அழகியல் கொண்டது அது.  அதை வெறும் கதைச்சூழ்ச்சி என புரிந்து கொண்ட ஒருவர் என்று சல்மான் ரஷ்யை நான் பார்க்கிறேன்.

ருஷ்தியின் முதல்நாவலில் மட்டுமே நேர்மையான இலக்கியத்திற்குரிய அகம் வெளிப்பட்டது. மற்ற எல்லா நாவல்களும் வெவ்வேறுவகையான சீண்டல்கள், மேலைநாட்டு வாசகர்களுக்கு விந்தையாகத் தென்படும் செய்திகளை சேகரித்து விளையாட்டாக அடுக்குதல்,மொழிவிளையாட்டு ஆகியவற்றுடன் சிறந்த சந்தைப்படுத்தல் வழியாக இலக்கியத்தில் ஓர் இடத்தை அடைந்துவிடலாம் என்னும் அவருடைய நம்பிக்கையின் வெற்றிச்சின்னங்கள் மட்டுமே.அவருடைய முந்தைய நாவல்களிலும் அந்த மாய யதார்த்தவாதம் வழியாக அவர் அடைய நினைப்பது என்ன என்று பார்த்தால் சலிப்பூட்டும் வெறுமையே எஞ்சியது. இந்நாவலிலும்தான்.

இதிலுள்ள இந்தியப்பின்னணி, அதனுடன் இணைந்த மாயங்கள் வழியாக ருஷ்தி வெளிப்படுத்தவோ கண்டடையவோ முற்படுவது என்ன? அக்கேள்வியுடன் இந்நாவலுக்குள் சென்றால் அவர் முன்வைப்பவை மிகமிகமிக எளிய அன்றாட அரசியல்சரிநிலைகள் மட்டுமே என்றும், அவற்றை ஒரு கலகக்காரரின் பாவனையுடன் சீண்டலாக முன்வைக்கிறார் என்றும் தெரியவருகிறது. இந்திய இலக்கியத்தில் இந்த எளிய சீண்டல்கள் எல்லாம் நிகழ்ந்து அரைநூற்றாண்டுகள் கடந்துவிட்டிருக்கிறது என அவர் இன்னமும் அறியவில்லை. இந்நாவலில் ஒரு மேலைநாட்டு வாசகருக்கு எளிய அறிதலின் வியப்பை அளிக்கும் தகவல்களைச் சொல்வதிலேயே அவருடைய கவனம் குவிகிறது. உதாரணமாக செரெல்தா லி  பாம்பாவிடம் மன்மதனின் ஐந்து அம்புகளிலுள்ள ஐந்து மலர்களின் இயல்பை விவரிக்குமிடத்தைச் சொல்லலாம். இந்திய வாசகனுக்கு அது மேலும் கவித்துவமாக மேலெழாவிட்டால் அது வெறும் செய்திதான். ஆனால் அத்தகைய எளிய செய்திகளை திரட்டிவைத்துச் செல்கிறது இந்நாவல்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.