ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள்
எங்கள் மூத்தவர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியை தருகின்றது. என்னால் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க முடியவில்லை. நேற்று நள்ளிரவு வரையில் நண்பர்களுடன் கைபேசியில் உரையாடி தன்னிறைவடைந்தேன்.
இலக்கியத்திற்கான அத்தனை விருதுகளுக்கும் தகுதியானவர் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்கள் என்பதை இலக்கியம் அறிந்த எவரொருவரும் மறுக்கப்போவதில்லை. அவருடைய படைப்புகள் எல்லையற்று உலகெங்கும் சென்றிருக்க வேண்டும்!. அதுவும் நிகழும் என்ற நம்பிக்கையையும் விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு செய்தி தந்திருக்கின்றது.
ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகின்மேல் இருந்த குறை ஒன்று சரிசெய்யப்பட்டுள்ளது. என்போன்ற பலருடைய நீண்ட கால ஆதங்கம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் சாத்தியமாக்கிய விஷ்ணுபுரம் அமைப்பில் அங்கம் வகிக்கும் நண்பர்கள் அனைவரின் கைகளையும் பேரன்புடன் பற்றிக்கொள்கிறேன். நன்றி!.
வாசு முருகவேல்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ரமேஷ் அவர்களின் இலக்கியப் பங்களிப்பு ஐயத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று. உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ச்சியாக இலக்கியப்படைப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார். புகழ் , அங்கீகாரம் அனைத்துக்கும் அப்பால் ஆக்ரோஷமாக தன்னை வெளிப்படுத்துவதொன்றையே செய்துகொண்டிருக்கும் கலைஞர் அவர்.
ஆனால் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனம்கசந்து சில கடும் கண்டனங்களை தனிவாழ்க்கை சார்ந்து எழுதியபோது அதை ஒரு வம்பாக ஆக்கி கொண்டாடியவர்களில் பத்தில் ஒருவர் கூட அவருக்கு இப்படி ஒரு விருது அளிக்கப்பட்டபோது ஒரு வாழ்த்து தெரிவிக்கவில்லை. எழுத்தாளர்களிலேயே அந்த வாழ்த்தைத் தெரிவித்தவர்கள் மிகச்சிலர்தான். ஒரு விருதுக்கு சக படைப்பாளிகள் மரியாதை நிமித்தம் வாழ்த்துவதுகூட நம் சூழலில் அருகிவிட்டிருக்கிறது. இது என்ன நாகரீகம் என தெரியவில்லை. இன்றைய சமூக ஊடகச்சூழல் அனைவரையும் வம்பு மட்டுமே பேசுபவர்களாக ஆக்கிவைத்துள்ளது.
ரமேஷ் இந்தச்சூழலிலும் எழுதும் படைப்புகளில் அவருடைய இலக்கியப்பார்வை, அவர் எடுக்கும் வடிவங்கள்மேல் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நா.பத்மநாபன்
உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
