மெய்ஞானமும் இன்றைய ஞானமும்
என் வாழ்க்கையின் மொத்தப்பார்வையையும் மாற்றியமைத்தது நீங்கள் ஆற்றிய கீதை உரை. அதை இப்போது நூலாகவும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னை மீட்டமைத்த புத்தகம் அது.
என் வாழ்க்கையில் பல சிக்கல்கள். தொழில்வீழ்ச்சி. அதையொட்டி குடும்பச்சிக்கல்கள். மனம் சோர்ந்து எதிலும் பிடிமானமில்லாமல் இருந்தேன். எனக்கு மரபான மதம், பக்தி எதுவுமே ஒத்து வரவில்லை. அவையெல்லாமே வெறும் சடங்குகளாகப் பட்டன. என் தர்க்கபுத்தியை அவை சீரமைக்கவில்லை. என் வாழ்க்கைக்கான பொறுப்பை ஏதோ ஒரு கண்காணா சக்தியிடம் ஒப்படைத்துவிட்டுச் சும்மா இருப்பதும் சரியாகப்படவில்லை.
அப்போதுதான் கீதையுரையைக் கேட்க நேர்ந்தது. எங்கே என் கடமை இருக்கிறது, அதன் எல்லை என்ன, எங்கே நான் பிரபஞ்ச சக்தியிடம் என்னை அளிப்பது என்ற கோடு அந்த உரையிலேதான் தெளிவடைந்தது. என்னை நம்பவேண்டும், ஆனால் என்னை மட்டுமே நம்பி அகங்காரம் கொள்ளவும் கூடாது. நீங்கள் ஓரிடத்திலே சொல்வதுபோல வாளை இறுகப்பிடிக்கவேண்டும், அது கையை விட்டு நழுவிவிடக்கூடாது, ஆனால் மிக இறுக்கமாகவும் பிடிக்கக்கூடாது, அடி கையிலேயே விழும்.
அந்த ஞானம் என்னை மீட்டது. என் வேலையை முழுவேகத்துடன் செய்ய ஆரம்பித்தேன். அதிலே சலிப்பு இல்லாமல், சோர்வு இல்லாமல், செய்யவேண்டியதைச் செய்தேயாகவேண்டும் என்னும் பிடிவாதத்துடன் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சரியாகிவிட்டது. இன்றைக்கு மீண்டு வந்துவிட்டேன். ஆனால் இன்று எல்லாம் என் சாதனை என்ற திமிர் இல்லாமல் இருக்கிறேன்.
இங்கே வாழ்வதற்கு நமக்கு லௌகீகம் தேவை. உலகவெற்றி தேவை. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. அதற்கப்பால் நாம் யார் என்பதும் நமக்கு முக்கியம். இங்குள்ள மிகப்பெரிய ஒரு பிரவாஹத்திலே நாம் எங்கே உள்ளோம் என்ற ஒரு புரிதலும் முக்கியம்.
நீங்கள் நாவலாசிரியர். நிறைய எழுதுகிறீர்கள். ஆனால் இந்த ஆன்மிக நூல்கள் நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய கொடை. இதை எத்தனைபேர் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று உண்மையில் தெரியவில்லை. பலர் இவற்றைப் படிப்பதே இல்லை. நீங்கள் எழுத்தாளர் என்ற நிலையில் நின்று இவற்றை எழுதுவதனால் உங்களை எழுத்தாளராக மட்டுமே பார்க்கிறார்கள். இவற்றை நீங்கள் ஒரு காவியை கட்டிக்கொண்டு, தாடி வளர்த்துக்கொண்டு சொல்லியிருந்தால் மாபெரும் மெய்ஞானமாகக் கொண்டாடியிருப்பார்கள்.
நம் ஆன்மிக குருக்கள் எல்லாம் மகத்தானவர்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் பல எல்லைகள் உள்ளன. அவர்களால் நம் அன்றாடவாழ்க்கையை அமைத்துள்ள அறிவியல் மற்றும் சிந்தனைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்வது வேறொரு உலகிலுள்ளது. நீங்கள் அறிவியலும் நவீனச்சிந்தனையும் கற்ற ஒருவனின் தர்க்கத்துக்கு உகந்த் முறையின் நம்முடைய தொன்மையான மெய்ஞானத்தைச் சொல்கிறீர்கள்.
உங்களுக்கு என் வணக்கம்.
ஆர். ராமநாதன்
அன்புள்ள ராமநாதன்,
உண்மையில் தாடி– காவி எல்லாம் உண்டு. எனக்கல்ல, என் ஆசிரியருக்கு. நான் அவர் குரல்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
