எங்கே அந்த ஓநாய்?

அன்புள்ள ஜெ,
அண்மையில் லோகா -சந்திரா 1, சினிமாவை ஒட்டி உங்களுடைய நீலி- யட்சி கதைகளைப் பற்றி நண்பர்களிடையே ஓர் ஆர்வம் உருவாகியது. ஆகவே பல கதைகளைப் பற்றி பேசினோம். எத்தனை ஆற்றல் கொண்ட கதைகள் என்னும் எண்ணம் உருவாகியது. குறிப்பாக ஓநாயின் மூக்கு. ஒரு அற்புதமான சினிமாவாக ஆகியிருக்கும், இன்னொரு நாட்டில் என்றால். இங்கே நாம் சினிமாவைப் பற்றிப் பேசுவோம், சினிமா எடுக்க மாட்டோம். இங்கே சினிமா நடிகர்களின் கைகளில் உள்ளது. அவர்கள் அவர்களுக்காக குக் செய்யப்படும் கதைகளை மட்டும்தான் ஓகே சொல்வார்கள். சினிமா உலகில் எட்டாண்டுகளில் நான் கற்றுக்கொண்ட உண்மை இது.
நான் அந்த ஓநாயின் மூக்கு கதையை மீண்டும் வாசித்தேன். அதில் தொடக்கத்தில் ஔசேப்பச்சன் ஒரு உண்மையான சமகால கேஸ் சொல்லி, அதை ஒட்டி ஒரு நினைவைச் சொல்கிறார். கேரளத்தில் கரமனை பகுதியிலுள்ள கூடத்தில் என்ற மிகப்பெரிய குடும்பத்தில் அத்தனைபேரும் வரிசையாக கொல்லப்பட்ட வழக்கு அது. முழு சொத்தும் ரவீந்திரன் நாயர் என்ற காரியஸ்தன் பெயருக்கு மோசடியாக மாற்றி எழுதப்பட்டுள்ளது. கடைசியாக ஜயகிருஷ்ணன் என்பவர் சாவில் சந்தேகம் எழுந்தபோதுதான் சொத்துக்களை ரவீந்திரன் நாயர் விற்றிருப்பது தெரியவந்தது. பெரிய பரபரப்பை 2019ல் உருவாக்கிய வழக்கு இது.
ஓநாயின் மூக்கு கதையில் ஔசேப்பச்சன் இப்படிச் சொல்கிறார். “இப்போது விசாரணை எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா?… விசாரணை நிலையில். ஆனால் விசாரணை பல ஆண்டுகள் இழுக்கும். அதன்பிறகு எவருக்கும் நினைவிருக்காது. அப்படியே போகும். எந்த நிலையிலும் ரவீந்திரன் நாயர் தண்டிக்கப்படமாட்டார். ஆனால் முக்கால்வாசிச் சொத்துக்கள் அவரிடமிருந்து கைமாறப்படும், அவ்வளவுதான் வேறுபாடு”.
உண்மையிலேயே அப்படியே அந்த வழக்கு தேங்கிவிட்டது. சாட்சிகள் தடம் மாறிக்கொண்டிருந்தனர். வழக்கை போலீஸ் அப்படியே மூடிவிடவே முயல்கிறது. சொத்துக்களின் மதிப்பு 200 கோடிக்குமேல் என்கிறார்கள். அதெல்லாம் உரியமுறையில் கைமாற்றம் செய்யப்பட்டிருக்கும். ஒரு போலீஸ் அதிகாரி அந்த நிலத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸே கட்டியிருப்பதாக ஔசேப்பச்சன் சொல்கிறார்.
இதேதான் பலிக்கல் கதையைப் பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. அந்த பழி உண்மையில் உண்டா? ஒரு பரிதவிப்புதான் ஏற்பட்டது. எப்போதும் சரித்திரம் இப்படித்தான் செல்கிறது. உண்மையில் ஓநாயின் மூக்கு தொடர்ந்து வருகிறதா என்ன?
இரா.வேல்முருகன்
அன்புள்ள வேல்முருகன்,
இலக்கியம் அன்றாடயதார்த்தத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால் அதன் பேசுபொருள் அன்றாடம் அல்ல. அன்றாடம் கடந்த ஓர் அர்த்தம் உண்டா என்று அது தேடிச்செல்கிறது. நாம் இங்கே வாழும் வாழ்க்கை என்பது ஒன்றோடொன்று தொடர்பற்ற நிகழ்வுகளாலான ஒரு பெரும் பெருக்கு. அதில் உயிர்கள் ஒன்றையொன்று வென்றும் கொன்றும் தாங்கள் வாழவும், தங்கள் வாரிசுவரிசை பெருகவும் போட்டியிடுகின்றன. இதற்கப்பால் இங்கே உள்ள வாழ்வுக்கு ஏதேனும் பொருள் உண்டா? இந்த கண்கூடான பரப்புக்கு அடியில் இந்நிகழ்வுகள் ஏதேனும் வகையில் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளனவா? இந்த உதிரிப்புள்ளிகளுக்கு அர்த்தமளிக்கும் ஒரு அடித்தள நெசவுப்பரப்பு உண்டா?
இலக்கியத்தின் தேடல் எப்போதும் அதுதான். அப்படிச் ஓர் இணைப்புவலை இருந்தது என்றால் அது நம் எளிய அறிவுக்கு முழுமையாக அறியக்கூடுவதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி பல இணைப்புவலைகள் உண்டு என்றும், அவற்றின் ஒத்திசைவில் பெருந்திட்டங்கள் வெளிப்படுகின்றன என்றும் அறிவியல் காட்டியிருக்கிறது. இங்குள்ள உயிர்களெல்லாமே உயிர்களின ஒத்திசைவு என்னும் பெருந்திட்டத்திற்குள்தான் உள்ளன. டி.என்.ஏ என்னும் மாபெரும் திட்டம் உயிர்வலைக்கு அடியிலுள்ள அறியாப் பெருந்திட்டம். பிரபஞ்சத்தின் கால-வெளி இணைவு ஒரு பெருந்திட்டம். நுண்துகள்களின் மின்னேற்பும் விலக்கமும் உருவாக்கும் இன்னொரு மாபெரும் திட்டம். அதைப்போல இங்கே நிகழும் மானுடத்தின் செயல்கள் மற்றும் விளைவுகளாலான ஒரு நுண்ணிய பெருந்திட்டம் உண்டா? இங்குள்ள மானுடத்துயர்களுக்கான காரணம் என ஏதேனும் உண்டா?
மெய்யியல் அதைக் கண்டடைந்து முன்வைக்கிறது. அது கிருஷ்ணனோ , வர்த்தமானரோ, புத்தரோ, ஏசுவோ, நபியோ வள்ளுவரோ ஏதோ ஒருவகையில் அதைச் சொல்லியிருக்கிறார்கள். ஊழ் என்றோ, இறைநெறி என்றோ ஏதோ ஒரு சொல் அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் அதை நுணுக்கமான அக அறிதல்களாக உணர்கிறது. அந்த அறிதல்புள்ளிகளை தன் கற்பனை வழியாகக் கோலமாக பின்னி விரித்துக் காட்டுகிறது. திரும்பத் திரும்ப உலக இலக்கியங்கள் அனைத்தும் காட்டுவது ‘வாழ்க்கை ‘அர்த்தமற்றதற்செயல்களின் பெருக்கு அல்ல’ என்பதைத்தான். அதற்கொரு காரண-காரிய தொடர்பு உண்டு என்பதைத்தான். அது புனைவு என நான் நினைக்கவில்லை, அது மெய்மையின் புள்ளிகளைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு நெசவு என்றே நினைக்கிறேன்.
ஆகவே ஓநாய் உண்டு, அது கொஞ்சம் பொறுமையானது. சட்டென்று வந்துவிடாது. ஆனால் அது விடவே விடாது.
ஜெ
குமரித்துறைவி வாங்க வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க வாசிப்பின் வழிகள் வாங்க ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க மைத்ரி நாவல் வாங்க ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க கதாநாயகி ஆன்லைனில் வாங்க ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க அனல் காற்று ஆன்லைனில் வாங்க வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க ஞானி ஆன்லைனில் வாங்க நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க விசும்பு ஆன்லைனில் வாங்க வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
