சூஃபி இலக்கியம், நாகர்கோயில் நிகழ்வு
சென்ற 10 செப்டெம்பர் 2025 அன்று பெங்களூரில் வாழும் எழுத்தாளர் எச். முகம்மது சலீம் அவர்கள் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாகர்கோயில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நிகழ்ந்தது. நண்பர் ஹமீம் முஸ்தபா நூல்வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நண்பர் ஷாகுல் ஹமீது வண்டி ஓட்ட நான் காலை பத்துமணிக்கு கிளம்பிச் சென்றேன்.
நூலை நான் வெளியிட்டேன், மதிப்புக்குரிய மூத்தபடைப்பாளி பொன்னீலன் பெற்றுக்கொண்டார்.விழாவில் நண்பர் நிஷா மன்ஸூர் சூஃபி மரபு பற்றியும், தமிழக சூஃபி இயக்கத்தைப் பற்றியும் விரிவாக அறிமுகம் செய்து நூலின் கருத்தமைப்பு மற்றும் உணர்வுநிலை பற்றிய உரை ஒன்றை ஆற்றினார்.ஹோலி கிராஸ் தமிழ்த்துறைத் தலைவி வரவேற்புரை வழங்க, ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் தலைமையுரை ஆற்றினார். நான் வெளியீட்டுரை ஆற்றினேன்.
நீண்ட நாட்களுக்குப்பின் பொன்னீலனைப் பார்த்தேன். அவருடன அவருடைய மூத்த மகள் வந்திருந்தார். மகள் உதவியுடன் செந்தீ நடராசன் வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் பேரா.ஜனார்தனனை பார்த்தேன். அனீஷ்கிருஷ்ணன் நாயர் வந்திருந்தார். தக்கலை ஹலீமா, அனந்தசுப்ரமணியம், ஜி.ஜவகர் என பல நண்பர்களை பார்த்தேன். நெல்லையில் இருந்து கவிஞர் மதார், மற்றும் அழிசி பதிப்பகம் நடத்திவரும் ஶ்ரீனிவாச கோபாலன் என பல நண்பர்கள் வந்திருந்தார்கள்.
நான் உரைக்குப்பின் விடைபெற்று கிளம்பினேன். நிஷா மன்ஸூரும் என் இல்லத்திற்கு வந்தார். ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிச்சென்றார். ஒரு மகிழ்ச்சியான நாள்.
சூபி நிகழ்வில் என் உரை பதிவுசெய்யப்படவில்லை. என் நினைவிலிருந்து சுருக்கத்தை இவ்வாறு அளிக்கிறேன்.
சூபி மரபு, குமரியின் சூஃபிகள் மற்றும் நான்.
நண்பர்களே, நாங்கள் நண்பர்களுடன் இணைந்து குரு நித்யா பேரில் நடத்திவரும் முழுமையறிவு என்னும் கல்வி இயக்கத்தில் சூஃபி மெய்யியல் பயிற்றுவிக்கும் நண்பர் நிஷா மன்ஸூர் சிறப்பான ஓர் உரையை ஆற்றினார். இங்கே நான் அழைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று முழுமையறிவு வகுப்புகள் என நினைக்கிறேன். அதன்பொருட்டு நன்றி.
இந்த அவையில் ஒரு நூலை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். ‘சூஃபியிசம் ஓர் எளிய அறிமுகம்’ என்னும் நூல் முனைவர் ஃபரீதா கானம் எழுதியது. மொழியாக்கம் மீரா. (குட்வேர்ட் புக்ஸ்). இந்நூல் சூஃபி மரபைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆனால் மிக முழுமையான அறிமுகம். நான் வழக்கமாக மொழியாக்க நூல்களைப் பரிந்துரைப்பதில்லை, மொழியாக்கங்கள் படிக்கவே முடியாதபடிச் செய்யப்படுவது வழக்கம். இந்நூல் மிகச்சிறப்பான நடையுடன் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நூலில் ஃபரீதா சூஃபி மரபின் தொடக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறார். சூஃபி என்னும் சொல் திண்ணை, கம்பிளி, வரிசை என்னும் வேறுவேறு சொற்களில் இருந்து உருவாகி வந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அரேபியாவுக்கு வெளியே பாரசீகத்திலும் கீழைநாடுகளிலும்தான் இது ஒரு பெரிய இயக்கமாக உருவெடுத்தது. நபியின் திண்ணைத்தோழர்கள் என்னும் மாணவர் அணி அவர் வாழ்வுடனேயே பிற உடைமைகளோ, பிற வாழ்க்கையோ இல்லாமல் பயணித்தது. அவர்களிடமிருந்தே சூஃபி என்னும் மனநிலை உருவாகி வந்தது.
சூஃபி இயக்கம் கீழைநாட்டில் மிகப்பெரிய பண்பாட்டுச் செல்வாக்கைச் செலுத்திய ஒன்று. ஆன்மிக நோக்கம் கொண்டு அதை அணுகலாம். மதநம்பிக்கை சார்ந்தும் அணுகலாம். இவை ஏதும் இல்லாதவர்களுக்குக் கூட அவ்வியக்கம் முக்கியமான ஒன்று. அதன் மூன்று தளங்கள் முக்கியமானவை. அறிவார்ந்ததும் தத்துவம் சார்ந்ததுமானதுமான முதற்தளம் கீழைச்சிந்தனையை, இந்திய சிந்தனையை அறிய முயலும் எவருக்கும் தவிர்க்கமுடியாது. அதன் பங்களிப்பின்றி கீழைச்சிந்தனை என்பதே இல்லை. இரண்டாவது தளம், உணர்வுபூர்வமானது, கலை சார்ந்தது. வேறு எதன்பொருட்டு இல்லை என்றாலும் சூஃபி இசையின் பொருட்டாவது அதை ஓர் அறிவியக்கவாதி அறிந்திருக்கவேண்டும். மூன்றாவது தளம் அதன் மெய்யியல், மெய்ஞானத்தளம்.
என் மகன் அஜிதன் இதைப்பற்றி பேச என்னைவிடவும் தகுதியானவன். படித்தேயாகவேண்டிய ‘ஐம்பதாயிரம் பக்கங்கள்’ என சூஃபி தத்துவம் பற்றி பேசும்போது ஒரு முறை குறிப்பிட்டான். மேலைநாட்டு பிளேட்டோவிய கருத்துமுதல்வாதத் தத்துவத்துடனும், கீழைநாட்டு மெய்யியல் மரபுகளுடனும் விவாதித்து விரிந்த ஒரு தத்துவப்பெரும் பரப்பு அது. நாம் சூஃபிகளை தத்துவம் கடந்தவர்கள், மெய்ஞானிகள் என நினைக்கிறோம். அது சரிதான். ஆனால் அத்தகைய நுண்ணிய அகப்பயணத்தை கருத்துநிலையாக ஆக்கும்போது உயர்தத்துவம் இயல்பாக உருவாகி வருகிறது. அதற்கான உருவகங்களும் உருவாகி வருகின்றன. (பாலைவனத்தை கடத்தல் என்னும் அனுபவத்தை சூஃபி உருவகமாக கொண்டு அஜிதன் எழுதிய மருபூமி இந்த தளத்தில் தமிழில் எழுதப்பட்ட மகத்தான ஆக்கங்களில் ஒன்று)
சூஃபி இசை பற்றி நான் பேசத் தகுதியானவன் அல்ல. என் அறிதல் மிகக்குறைவானது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ஒரு தனிநபரின் குரல்வழி மீட்டலாக, அகவெளிப்பாடாக நீளும் ‘மெலடி’ என்னும் இன்னிசை மரபே கீழைநாட்டு இசை. அந்த இசையில் குரல்வழியாகவே ஒரு சேர்ந்திசை (ஆர்கெஸ்ட்ரல் தன்மை) உருவானது சூஃபி இசைமரபு வழியாகவே. அதுவே இந்து மரபுக்குள் பஜனை சம்பிரதாயமாக வந்தமைந்தது. அஜ்மீரில் மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் தர்காவில் அதைக் காணலாம். ஒருவர் பாட பலர் இணைந்துகொள்வார்கள். பாட்டு சென்றுகொண்டே இருக்கும்.பாடுபவர்கள் கிளம்பிச்செல்வார்கள், புதியவர்கள் வந்து அமர்வார்கள். (அஜிதனின் அல்கிஸா என்னும் நாவலில் இந்த அனுபவம் அற்புதமாகக் நிகழ்த்தப்பட்டுள்ளது)
ஃபரீதா சூஃபி மரபின் இரண்டு மனநிலைகளை குறிப்பிடுகிறார். அதை சூஃபியிசத்தின் அடிப்படையாகவே கொள்ளலாம். ஒன்று, ‘நபியின் கால்தூசிக்கு நிகரல்ல உலகியல்’ என்னும் வரி. இரண்டு ‘எல்லா பொழுதும் இறைவனுக்கே’ என்னும் வரி. அவைதான் சூஃபிகளின் ஆதாரசிந்தனையாக உள்ளது. சூஃபி இயக்கம் அந்த இரண்டு மனநிலைகளின் நீட்சியே.
ஃபரீதா தன் நூலில் சிஷ்டி மரபு. காதிரியா மரபு, சுஹ்ரவர்தியா மரபு, நக்ஷ்பந்தி மரபு, ஃபிர்தௌசி மரபு ஆகிய ஐந்து மரபுகள் சூஃபி இயக்கத்தில் இந்தியாவில் உள்ளன என்று குறிப்பிடுகிறார். தமிழகத்திலும் அந்த மரபுகள் உள்ளன. இங்கே காதிரியா மரபே (முகையிதீன் ஆண்டவர்) முதன்மையாக உள்ளது என அறிந்துகொண்டேன்.
நண்பர்களே, இன்னொரு நூலை நான் இங்கே குறிப்பிடவேண்டும். சூஃபி மரபு பற்றிய என் சிந்தனையை வகுத்தளித்த நூல்களில் இதுவும் ஒன்றி. The Foundations of the composite culture in india. என்னிடம் உள்ள பிரதியை காட்டுவதற்காகக் கொண்டுவந்துள்ளேன். நூலாசிரியர் மாலிக் முகமது அவர்கள் பத்மஶ்ரீ விருது பெற்றவர். கோழிக்கோடு பல்கலை துணைவேந்தராக இருந்தவர். நான் அவரை ஒருமுறை சந்தித்ததுண்டு, ஓரிரு சொற்கள் பேசினேன். அவர் நாகர்கோயிலில் வாழ்ந்தார், 2007ல் கொள்ளையர்களால் அவரும் மனைவியும் கொல்லப்பட்டார்கள். (செய்தி).
மாலிக் முகம்மது அவர்கள் தன் நூலில் சூஃபி மரபு இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் ஆற்றிய பங்களிப்புகளை சுருக்கமாகச் சொல்கிறார். (சூஃபி மரபு பற்றிய அவருடைய இன்னொரு நூல் விரிவானது). இஸ்லாமிய ஆட்சியாளர்களின் போர்கள், அதிகாரப்போட்டிகள் வழியாகவே நாம் அவர்களை அறிந்துள்ளோம். அது சூழ்ச்சி என நான் நினைக்கவில்லை, அதுவே பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாற்றெழுத்து முறை. ஆனால் ஐம்பதாண்டுகளாக உருவாகி வந்துள்ள வரலாற்றெழுத்துமுறை என்பது மக்கள் வாழ்க்கையை அளவீடாகக் கொண்டு வரலாற்றை எழுதுவது. அந்நோக்கில் மாலிக் முகமது முகலாயர் கால ஆட்சிமுறை, சமூகமுறையை மதிப்பிடுகிறார்.
அவர் ஓர் இரட்டைநிலை ஆட்சியை உருவகிக்கிறார். அதை இப்படிச் சொல்லலாம். காஸி- சூஃபி முறை. காஸிகள் இஸ்லாமிய நீதிபதிகள் மற்றும் நிதியதிகாரிகள். அவர்கள் மரபார்ந்த இஸ்லாமிய ஆட்சியை அரசப்பிரதிநிதிகளாக நின்று நிகழ்த்தினர். இஸ்லாமிய மதக்கொள்கைகளை செயல்நெறிகளாகக் கொண்டனர். சூஃபிகள் நெகிழ்வான பார்வைகொண்டவர்கள், அமைப்பு சாராதவர்கள். அவர்கள் இஸ்லாமிய மையப்போக்கைக் கடந்துசென்றவர்கள். அதிகாரத்திற்கு வெளியே எளிய மக்களுடன் வாழ்ந்தவர்கள். பிற மதங்களுடன் இசைவை உருவாக்கியவர்கள். அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கருத்தியல் ஏற்பை உருவாக்கினார்கள். ஆகவே இஸ்லாமிய ஆட்சி அவர்களை ஆதரித்தது. இந்தியாவின் சமூகத்தை ஒருங்கிணைவும் ஒத்திசைவும் உள்ளதாக ஆக்க சூஃபிகளே பெரும்பங்காற்றினர்.
தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள் என்னும் இந்நூலில் முகம்மது சலீம் அவர்கள் குமரிமாவட்ட சூஃபி இறைநேசச்செல்வர்கள் பற்றிய ஆய்வுகளை தொகுத்துள்ளார். குமரிமாவட்ட சூஃபி ஞானிகளில் முதன்மையானவரும் மூத்தவருமான தக்கலை பீர்முகம்மது அப்பா பற்றி மூன்று கட்டுரைகள் உள்ளன. பீர்முகம்மது அப்பா அவர்களை ஒரு கவிஞராக முன்னிறுத்தும் கட்டுரைகள் முக்கியமானவை. அவர் ஞானி, ஆனால் என்னைப்போன்ற ஒருவருக்கு எந்த ஞானமும் இலக்கியம் வழியாகவே வந்துசேரமுடியும்.

ஞானியார் அவர்களைப் பற்றியும், ஆலிப்புலவரின் மிகுறாஜ் மாலை பற்றியும் கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அந்த ஞானிகளின் வரலாறு மட்டுமல்ல அவர்களின் கவித்துவம் ஆகியவற்றை முன்வைப்பவையாக உள்ளன.
ஹாமீம் முஸ்தபா அவர்கள் மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் முற்றோதல் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. அதை அவர் நூலாகவே விரிவாக்கலாம்.
முற்றோதல் என்பது இஸ்லாமிய மரபிலிருந்து, சூஃபி மரபிலிருந்து, வந்து சைவம் வரை இன்று பரவியுள்ளது. முற்றோதல் என்றால் முழுக்க வாசிப்பது மட்டும் அல்ல. கூட்டாகக் கூடி ஒரு நூலை வாசிப்பது. அதிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் கொள்வது. கூடுதலாக சொல்லிணைவின் எல்லா வகைப்பாடுகளையும் கொண்டு பொருள்கொள்ள முயல்வது. அரபு மொழியின் சொற்களை வெவ்வேறாக இணைத்துப் பொருள்கொள்ளலாம் என அறிந்துள்ளேன். அந்த மரபு இன்றும் நீடிக்கும் ஒன்று.

சூஃபி மரபின் இலக்கியத்தன்மையை இவ்வாறு வகுத்துக்கொள்ளலாம் என இந்நூல் காட்டுகிறது. ஒன்று, அவர்கள் மக்களுடன் மக்களாக இருந்தனர். ஆகவே மக்கள் மொழியில் எழுதினர். அவர்களின் பாடல்கள் எல்லாமே நாட்டார் அழகியல்கொண்டவையாக உள்ளன. செவ்வியல் ஆக்கம் ஒன்றுகூட இல்லை. மாலை, கண்ணி, ஏசல், கும்மி, குறத்திப்பாடல் என்னும் நாட்டுப்புற வகைகளிலேயே அவர்கள் எழுதினார்கள்.
சூஃபி மரபின் இன்னொரு தனித்தன்மை அவற்றின் வட்டார இயல்பு. குமரிமாவட்ட சூஃபி மரபைச் சேர்ந்த பாடல்களை ஆரல்வாய்மொழிக்கு அப்பாலுள்ளவர்கள் முழுக்க அறிந்துவிடவேண்டும் என்றால் கடும் முயற்சி எடுக்கவேண்டும். அவை அத்தனை தூரம் இப்பகுதியின் வட்டாரப்பண்பாட்டிலும் மொழியிலும் ஊறியவையாக உள்ளன. இந்த தனித்தன்மை சமய இலக்கியங்களில் சூஃபி படைப்புகளுக்க மட்டிலுமே உள்ளது.
அத்துடன் அவற்றின் சமயம் கடந்த தன்மையைச் சுட்டவேண்டும். சமயம் கடந்த என்றால் சமய மறுப்பு அல்ல. சமயம் சாமானியர்களுக்குரியது. ஆகவே சராசரித்தன்மை கொண்டது. அந்த சராசரித்தன்மையை தன் ஞானத்தேடலால் கடந்துசெல்வது என சூஃபி மெய்ஞானத்தைச் சொல்லலாம். ஆகவே அவை அனைவருக்கும் உரியவையாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவையாகக்கூட உள்ளன.
நண்பர்களே, இன்று சூஃபி மரபைப் பற்றிய பேச்சுக்கள் வலுவடைந்து வருகின்றன. அவற்றிலுள்ள சமயம் கடந்த தன்மை, மதஒற்றுமைநோக்கு, அடித்தள மக்கள்சார்பு போன்ற பண்புகளே முன்வைக்கப்படுகின்றன. அவை அரசியல் நோக்குடன் விவாதிக்கப்படுகின்றன. அவை இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் சூஃபி மரபு என்பது உண்மையில் அது மட்டும் அல்ல.

அது மெய்ஞானம் சார்ந்தது. அகப்பயணம் வழியாகக் கண்டடைவது. நான் அஜ்மீர் செல்லும் அடியார்களில் ஒருவன் என்பது அனைவரும் அறிந்தது. என் இருபத்திரண்டாவது வயதில் முதன்முறையாக அங்கே சென்றேன். என் தாயும் தந்தையும் தற்கொலை செய்துகொண்டு, நான் உச்சகட்ட உள அழுத்ததுடன் வாழ்ந்த நாட்களில் ஒரு கனவு கண்டேன். இடுங்கலான தெருக்களினூடாக சென்றுகொண்டே இருக்கிறேன். தெரு எல்லைக்கு அப்பால் ஒளி.
அந்த இடம் அஜ்மீர் என தெரிந்ததும் கிளம்பிச் சென்றேன். சிலநாட்கள் அங்கே இருந்தேன். என் கொதிக்கும் தலை குளிர்ந்தது. அங்கே நான் அடைந்தது என்ன என்று இங்கே சொல்லப்போவதில்லை. சொல்லவும்கூடாது. இங்கே பலதரப்பட்டவர்கள் இருக்கலாம். நாத்திகர்கள்கூட இருக்கலாம். அவர்கள் உணரக்கூடியது அல்ல. அது எனக்கு மட்டுமேயான ஒரு தரிசனம்.
அந்த மெய்ஞானமே சூஃபிகள் நமக்கு அளிப்பது என நினைக்கிறேன். நன்றி.
*
புகைப்படங்கள் ஜி.ஜவகர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
