வளநிலம்

29-12-2007 ல் நாஞ்சில்நாடனுக்கு அறுபது வயது நிறைவடைந்தபோது நான், அருண்மொழி செலவில், எம்.வேதசகாயகுமார் உதவியுடன், நாகர்கோயிலில் ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். நாகர்கோயில் செட்டிகுளம் ஏபிஎன் பிளாஸா அரங்கில் அந்த விழா நடைபெற்றது. அந்த குளிர்சாதன அரங்கில் நிகழ்ந்த முதல் இலக்கிய விழா அது. கூட்டம் நிறைய வந்தமையால் அரங்கின் ஒரு சுவராக அமைந்த தட்டியை கழற்றி இரண்டு அரங்குகளை இணைக்கவேண்டியிருந்தது. நாஞ்சில் நாடன் ஈட்டியிருந்த அன்பு அத்தகையது. அவ்விழாவை ஒட்டி நான் எழுதிய நூல் தாடகை மலையோரத்தில் ஒருவர். இன்று எனக்கு அறுபத்திமூன்று வயது அமைகையில், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு மறுபதிப்பாகிறது. இதுநாள் வரை மின்னூலாகக் கிடைத்துக்கொண்டிருந்தது.
அந்தக் காலம். நாஞ்சில்நாடன் கிடைத்த பேருந்தில் தொற்றிக்கொண்டு மாதம் இருமுறையாவது நாகர்கோயில் வந்துகொண்டிருந்தார். இங்கே அவருடைய சொந்தத்தில் திருமணம், காதுகுத்து என எந்த விழாவும் அவர் இல்லாமல் நடைபெறாது. .அவர் வருவதை எங்களுக்கு அறிவிப்பார். நான், வேதசகாயகுமார், குமரிமைந்தன் என ஒரு கும்பல் அழையா விருந்தாளிகளாக எல்லா விழாக்களுக்கும் செல்வோம். பலசமயம் முந்தையநாள் இரவே கல்யாணமண்டடபம் சென்று விடிய விடிய இருப்போம். இலக்கியச் சர்ச்சைகள், நையாண்டிகள், சிரிப்புகள். வேதசகாயகுமாரையும் குமரிமைந்தனையும் இன்று பெருமூச்சுடன் எண்ணிக்கொள்கிறேன்.

நாஞ்சில் அன்றுமுதல் இன்று வரை என்றும் இனியவர். காலந்தோறும் பழகினாலும் துளி கசப்பு எஞ்சாத ஆளுமை. சிரிப்பன்றி எதுவும் இல்லாத பெருந்தருணங்களை இளையவர்களுக்கு அளிப்பவர். ஒரு நவீன இலக்கியவாதியாகத் தொடங்கி, இன்று தன் முன்னோர்களைப் போலவே கம்பராமாயணத்தில் தோய்ந்து, கனிந்திருக்கிறார். அவருடைய கம்பராமாயண உரைகள் இன்று சர்வதேச அளவில் மாணவர்களைக் கொண்டுள்ளன.
நாஞ்சில்நாடனின் கதைகளிலும் அந்தக் கனிவு நிகழ்ந்து அது ஒருவகை மெய்ஞானமாக திரண்டுள்ளது. தமிழில் எழுதத் தொடங்கிய களத்தில் இருந்து அவ்வண்ணம் மேலும் முன்னகர்ந்து இன்னொரு உச்சத்தை எட்டிய எழுத்தாளர்கள் மிக அரிது. பூனைக்கண்ணன் கடத்திய அம்மன் போன்ற ஒரு மகத்தான கதையை அவர் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்க முடியாது.
அவருடைய படிநிலைகளை கதைகளைக் கொண்டே மதிப்பிடலாம். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் கசப்பற்ற நையாண்டியும், சமூகவிமர்சனப் பார்வையும் கொண்ட நாஞ்சில்நாடனைக் காட்டுகிறது. யாம் உண்பேம் அடுத்த முன்னகர்வு. அதில் உலகுக்கே அமுதுடன் உளம்கனிந்த நாஞ்சில்நாடன் வெளிப்படுகிறார். பூனைக்கண்ணன் கடத்திய அம்மன் இந்த அத்தனை நாடகங்களையும் அப்பால் நின்று பார்க்கும் சித்தனின் அருகே அமர்ந்திருக்கும் நாஞ்சில்நாடனைக் காட்டுகிறது. மூன்று கட்டங்களிலும் நாஞ்சில்நாடனிடம் இருப்பது சிரிப்பு. அது கேலியில் இருந்து முதிர்ந்த அங்கதமாக உருமாறியிருக்கிறது.
இத்தருணத்தில் நாஞ்சில்நாடனை இளையோனாக அடிபணிந்து வணங்கி வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்கிறேன். இந்நூலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு நன்றி.
ஜெ தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் நாஞ்சில்நாடன் அறுபது பதிவுJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
