தூரன் விழா, கருத்துப்பதிவு

ஜெ

வாழ்த்துக்கள்! இத்துடன் அச்சுருக்க உரையை தங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். 

 பெரியசாமி தூரன்  தமிழ்.wiki விழா 2025 

தொகுப்புரை என் புரிதலின் சுருக்கம்:

பேராசிரியர் வசந்த் ஷிண்டே அவர்களின் உரையில் இந்தியா முழுவதுமே இப்பொழுதும் அப்பொழுதும்  எப்பொழுதும்  பல மொழிகளும் பல பண்பாடுகளும் கூடி ஒன்றாக தொல் வரலாற்றுக் காலத்திலிருந்து இக் காலம் வரை வாழ்வு முறை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளதாக வரலாற்று மற்றும்  அகழ்வாய்வுகளின் தரவுகள் படி அறியப்படுகிறது என்றார்.  

ஹரப்பா நாகரிகம் அழிவுறும்  நிலையில்  கி.மு.900 ஆண்டு வாக்கில் பரந்து விரிந்த நிலங்களான ஹரியானா முதல்  ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட மகாராஷ்டிரம் வரை அதேபோன்ற நாகரிக வளர்ச்சி இருந்து வந்துள்ளது என்றார். 

அதுபோன்று வரலாற்றில் பொற்காலமோ இருண்ட காலமுமோ இல்லை என்பதை , குப்தர் காலத்து ஆய்வுகளை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார். இலக்கியவாதிகளை

 ஊக்கி வைத்து அரசர்கள் ஏற்றி  உயர்த்தி  எழுத வைத்திருப்பார்கள் எனவும் கள ஆய்வில் தரவுகள் அதற்கு ஒப்பாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

டாக்டர் வெ வேதாசலம் அவர்களின் கள ஆய்வு முடிவுகளும் எழுத்தும் உரைகளும் மேற்சொன்ன கருத்துக்களை தமிழகம் இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசிய நிலப்பரப்பிலும் அறியப்படுவதாக கூறினார்.

மூத்த ஆய்வாளரும் கல்வெட்டு இயலாளருமான முனைவர் திரு சுப்புராயலு அவர்களின் உரையில் எவ்வாறு திரு வெ வேதாசலமுடன் இணைந்து செயல்பட்டபோது,பாண்டி நாடு முழுவதும் உள்ள முக்கியமான வரலாற்று முக்கியமான ஊர்களை சென்று களப்பணியில் ஆய்வறிந்ததையும் அதன் பயனாக அவர் படைத்த பாண்டிய நாட்டு “நாடுகளும் ஊர்களும் “என்ற புத்தகத்தினையும் அதில் அவர் கம்ப்யூட்டர் உதவியால் அருமையாக வரைந்து படைத்த நிலப்படத்தையும் குறிப்பிட்டார்.

திரு வெ வேதாசலம் தொல்லியல் வரலாறு கல்வெட்டியல் ஆகியவற்றில் தான் மட்டுமல்லாமல் தன் குடும்ப உறுப்பினர்கள் மனைவி மகள் மகன் என்ற அனைவரையும் ஊக்கப்படுத்தி ஈடுபட வைத்தார் என்றார். அவர் தன் மகளுடன் சேர்ந்து “ஜேஷ்ட்டா “தேவிப் பற்றிய முக்கிய ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார் என்றார்.

மேலும்,  தொல் அகழாய்வு எவ்வாறு அங்குலம் அங்குலமாக நிதானமாக மெல்லமாக நடக்க வேண்டியதன் அவசியத்தையும் , அதன் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டதையும் அதன்மேல் கொண்ட கருத்துகளையும் முடிவுகளையும் மிகவும் அதே நிதானத்துடன் வெளியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

டாக்டர் வெ வேதாசலம் அவர்கள் தனது  விருது  ஏற்புரையில் முதலாக , எவ்வாறு தன்னை இவ்விருதுக்கு தேர்ந்தெடுத்தது முதல்,  உலகம் முழுவதும் தன் முகத்தையும் ஆக்கங்களையும் வெளிக்கொணர்ந்தது என்பதை நகைச்சுவையுடன்னும்  நன்றியுடன்னும்  குறிப்பிட்டார். மேலும் இந்த காலத்தில் தான் தன்னுடைய புத்தகங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு  நிறைய விற்று தீர்ந்தன என்பதை மகிழ்வுடன் தெரிவித்தார். 

இவ் விருதினை அளித்த , தன்னிச்சையாகக் கூடித் தானே அமைந்து  எழுந்த  குழமமான  விஷ்ணுபுரம் வட்டத்தின் வாசகர்களையும் செயல் வீரர்களையும் , அவர்களது சித்திரம் போல் அரங்கில் அமர்ந்து அமைந்து ஆற்றும் அறிவார்ந்த வாசக ஈடுபாட்டினையும் வியந்து,  இந்த விருத பெறுநரைப் பற்றி அலசி ஆராய்ந்து அளித்தமைக்கும் நன்றி பாராட்டினார்.

தன் குடும்ப உறுப்பினர்கள் இடையறாது அளித்த  ஆதரவுக்கும், மனைவியின் தொடர் அனுசரணைக்கும் நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அவர்கள் இல்லையேல் தன்னுடைய படைப்பு ஆக்கங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்காது என்றார். 

இளமையில் தன் நவீன இலக்கிய ஈடுபாடுகளிலிருந்து அரசு தொல்லியல் கல்வெட்டு இயல் பணியில் சேர்ந்தவுடன் விலக நேர்ந்ததையும் , துறை சார்ந்த படிப்பில் நாட்டம் மேற்கொண்டதாகவும் , மற்றும் ராணுவத் தனமாக வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறினார். 

பணியில் இருந்த காலங்களில் அவமானங்கள் பலப்பல சந்தித்ததையும் , அபூர்வமாக துறை நிர்வாகத்திடம் இருந்து தன் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைத்ததையும் கூறினார்.

 அரசுப் பணியில் இருந்ததால் புத்தகங்களை வெளியிட முடியவில்லை என்றும் பணி மூப்பிற்குப் பிறகு சரமாரியாக தொகுத்து வைத்திருந்த அனைத்து புத்தகங்களையும் தன்னுடைய பணி மூப்பில் கிடைத்த பணத்திலிருந்து தானே வெளியிட்டதாகவும் கூறினார். இதே சமயத்தில் இலங்கையில் ஆண்டுதோறும் ஒன்பது ஆண்டுகளுக்கு  மாணவர்களுக்கும் தொல்லியல் வரலாறு கல்வெட்டு இயல் சம்பந்தமாக பாடங்களை எடுத்ததாகவும் , அதேபோன்று இன்று வரை சமூக பங்களிப்பாக கிராமங்கள் தோறும் சென்று அந்தந்த ஊரின் வரலாற்றினை மக்களிடையே கள ஆய்வாக நடத்தி அவர்களை வைத்தே அதை எழுதியும் படித்தும்  பதிவும் செய்தார் என்றார்.

தனது சமூக கடமையாக தான் நமது வழித் தோன்றல்களுக்கு ஒரு இளம் ஆசிரியராக  வரலாறு மற்றும் பண்பாட்டுச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் முகமாகத் தன் செயல்பாடுகள் இருந்தது இருக்கிறது இருக்கும் என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்  தன் உரையில் ஈரோட்டைச் சேர்ந்த திரு பெரியசாமி தூரனின் தமிழுக்கு அளித்த பங்களிப்பையும் அவர் தொண்டின் பெருமையையும் அவர் நினைவாக ஆண்டுதொறும் வழங்குப்படும் தமிழ்.wiki பரிசு பற்றியும் இவ்வாண்டு 2025 பரிசு பெறும் தொல்லியல் வரலாறு கல்வெட்டு இயல் சார்ந்த திரு. வெ வேதாசலம் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளார் என்பதை கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், 

வரலாறு முக்கியம். அதைவிட வரலாறுகள் மிக மிக முக்ககியம் என்றார்.

இவ் வரலாற்று ஆய்வு  ஆசிரியர்களின்  கொடை தான்

இலக்கிய வாசகர்களின் எழுத்தாளர்களின் கனவுகளை பெருக்குவதும் , பரந்த விரிந்த நவீன நாவல்களாக பெருக்கெடுக்க வைப்பதும் ஆகும்.

இந்தப் பார்வை கொண்டுதான் இத் தமிழ்.wiki பெரியசாமி தூரன் 2025 ஆண்டுக்கான பரிசை  தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் அளப்பரிய தொண்டு ஆற்றி வரும்

தமிழக கல்வெட்டு வரலாற்று ஆய்வு ஆசிரியரான  திரு. வெ . வேதாசலத்திற்கு சமர்ப்பித்து ஏற்று சிறப்பித்து அருளுமாறு வேண்டப்பட்டது என்றார்.

இக் கனவுகள் மெய்ப்பட  எங்கள் ஊர் ஏரியை  தமிழ்ச்சமண காலதத்திற்கு முன்பிருந்தே காத்து வரும் ஏழு அன்னையர்களும் , மலைநாட்டில் மலைமுகட்டில் என் இடர் கலையத் தரிசனம் அளித்த மூத்த தேவியும் தமிழ் பண்பாட்டினை முன்னெடுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும்

அருள் புரிய வேண்டுகிறேன் என்றார்.

முத்துகிருஷ்ணன் வே

சென்னை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.